தொழிலாளரியக்கம் குறித்துப் பெரியாரவர்கள் கொண்டிருக்கும் கருத்து இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகளைப் பொருத்து இன்றைக்குக் கூறுவதன்று. 1926ஆம் ஆண்டிலேயே பெரியாரவர்கள் கொண்டிருந்த கருத்த இந்நாளுக்கும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதை கருதி இதை வெளியிடுகிறோம்.

இது 25.5.26ஆம் நாள் நாகை தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாய் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பேசி, 30.5.26 ஆம் நாள் ‘குடிஅரசி’ல் (மாலை 2 மலர் 5) வெளிவந்ததாகும்.

ஓராண்டு கழித்து பெரியார் அவர்கள் கருத்துக்கு மாறாக நாகைத் தொழிலாளர்கள் எஸ்.அய்.ஆர்.ஒய். ஸ்ட்ரைக் என்னும் வேலை நிறுத்தம் செய்தனர், பொது நலனுக்குழைப்பதாகப் பேசும் காங்கிரசாரும் தொழிலாளர் தலைவரென வேஷம் போட்ட பிராமணோத்தமர்களும் தமிழ்நாட்டில் அக்காலத்திலிருந்த பிற தொழிலாளர் கட்சிகளும் இவ்வேலை நிறுத்தத்தை எதிர்த்ததையும், “சுயமரியாதை இயக்கமும்” ‘குடி அரசு’ ‘திராவிடன்’ என்ற இரு பத்திரிக்கைகளுமே வேலை நிறுத்தத்தை ஆதரித்து பேசியும் எழுதியும் வந்தன என்பதையும், அது சமயம் பெரியாரும் வேறு நண்பர் சிலரும் வேலை நிறுத்தத்தில் கலந்து சிறை சென்றதையும் திராவிட நாட்டு மக்கள் நன்குணர்வார்கள்.

இதை நாம் குறிப்பிடுவது எதற்காகவென்றால், இன்றைக்க மட்டுமல்ல, என்றைக்குமே காங்கிரசும் பார்ப்பனர்களும் தொழிலாளர் இயக்கத்தைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர் நலத்துக்கு விரோதிகளாயிருந்து வந்திருப்பதைக் காட்டுவதற்காகவேயாகும். பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்டு, காங்கிரசின் காலடி பணிந்து, உயிர் வாழ வேண்டிய நிலையிலிருந்து வரும் கம்யூனிஸக் கட்சியைச் சார்ந்த திராவிட இளைஞர்களும், திராவிட இனத்தினரான தொழிலாளிகளும் தயவு செய்து இதனைப் பண்முறை படிக்க வேண்டுகின்றோம். படித்து தெளிவடைய விரும்புகிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கமிடையே தரகன் ஆண்டவனுக்கும் அடியவனுக்குமிடையே தரகன் - வணிகனுக்கும் வாங்குபவனுக்கும் இடையே தரகன்- அது போல் முதலாளிகளக்கும் தொழிலாளிகளுக்குமிடையே, தரகராய் விளங்கும் தொளிலாளர் தலைவர்கள்.

இத்தகைய தரகர்கள் எத்துறையிலிருந்தாலும் நல்லதல்ல என்பதே அறிவுடமையோரின் கருத்து. அதுவே திராவிடர் கழகத்தின் கருத்துமாகும். ஆ-ர்)

“பொதுவாய் இன்றைய தொழிலாளர் சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுவதில்லை. ஏன் எனில் சில வெறும் வெளி ஆசாமிகள், அதைத் தங்கள் நன்மைக்கும் கீர்த்திக்கும் ஏற்படுத்திக்கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளி ஸ்தாபனங்களே கிடையாது.”

தொழிலாளர் யார்?  

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான். தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று, அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் மாத்திரமே அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி. நீங்கள் அப்படியில்லை. ஏதோ ஒரு முதலாளியின் கீழ் தினக்கூலிக்கு அமர்ந்து, உங்களுக்கு எவ்விதத் தொழில் சுதந்திரமும் இல்லாமல், முதலாளி சொல்லுகிறபடி வேலை செய்துவிட்டு, அவ்வேலையின் பலன் முழுவதையும் அவனே அடையும்படி செய்து, முதலாளி நிர்ணயித்த - உங்கள் ஜீவனத்திற்குக்கூடப் போதுமானதாய் இல்லாத கூலியை வாங்கிப் பிழைக்கின்றீர்கள். ஒரு முதலாளிக்குக்கீழ் அவன் சொல்லுகிறபடி வேலை செய்து கூலி வாங்குபவன் எவ்வளவு பெரிய கூலிக்காரனானாலும் அவன் கூலிக்காரன்தான், அதாவது அடிமைதான்.

தொழிலாளியும் தொழிலும்

தொழிலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் பலனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? தொழிலின் அருமை உங்களுக்கு எதாவது தெரியுமா? காலையில் பட்டறைக்குள் போய்ப் புகுந்தால் மாலை வரை அவன் சொல்லுகிறபடி உழைக்க வேண்டியது. வாரத்திற்கு ஒரு முறை கூலி வாங்கிக் கொள்ள வேண்டியது. தெருக்களில் கூலிக்கு மூட்டை தூக்கி அவ்வப்போது கூலி வாங்கும் நபருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள், தங்களுக்குக் கூலி போதாது, ஜீவனத்துக்கும் கட்டாது, அதிகப் பாரமாயிருக்கிறது, இன்னும் சேர்த்துக் கொடு, என்று முதலாளியைக் கேட்பதற்கும், நீங்கள் சங்கம் என்று பெயர் வைத்துக்கொண்டு செய்யும் தீர்மாணங்களுக்கும் என்ன வித்தியாசம்? சில சமயங்களில் கூலிக்காரனாவது தான் தூக்கும் பாரத்தையும், தூக்கிக்கொண்டு செல்லும் தூரத்தையும் அறிந்து கூலி அதிகம் கேட்கிறான். நீங்கள் அது கூட இல்லை. உங்கள் தொழிலின் அருமை இன்னதென்று கூட உங்களுக்குத் தெரியாமல் முதலாளியைப் பார்த்து, நீ இவ்வளவு ரூபாய் கொள்ளையடிக்கிறாயே? நீ இவ்வளவு சுகப்படுகிறாயே, என்கின்ற பொறாமையின் மேல், ஏன் எனக்கு இன்னும் கொஞ்சம் கூலி சேர்த்துக் கொடுக்கக் கூடாது என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுகிறீர்கள். தனித்தனியாய் கெஞ்சுவதற்குப் பதிலாய் நாலு பேர் சேர்ந்து கெஞ்சுவதைத் தொழிலாளர் சங்கம் என்கிறீர்கள். அதுவும் உங்களுக்குக் கெஞ்சிக்கேட்கச் சக்தியில்லாமல், உங்கள் தொழிலிலோ உங்கள் கஷ்டத்திலோ கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒருவரை உங்கள் சங்கத் தலைவராயும் காரியதரசியாயும் சில சமயங்களில் நிர்வாகஸ்தர்களாயும் வைத்துக் கொண்டு கூலியை உயர்த்தும்படி கேட்கிறீர்கள்.

தற்காலத் தலைவர்களால் பயனில்லை

 ஒரு முதலாளியிடம் வேறு ஒருவன் போய், “அய்யா உங்களிடம் உள்ள கூலிக்காரர்களுக்கு கூலி போதவில்லை கொஞ்சம் சேர்த்துக்கொடுங்கள்” என்று சொன்னால் அந்த முதலாளிக்குத் கூலிக்காரர்களிடம் என்ன மதிப்பு இருக்கும்? அதுபோலவே உங்கள் சவுகரியத்திற்கு வேறு ஒருவன் போராடுகிறான் என்றால் உங்களுக்கு, உங்களுடைய தேவை இன்னதென்று கூடத் தெரியவில்லை என்பதுதானே பொருள். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் உபாத்தியாரிடம் போய் எனக்கு வயிறு வலிக்குதென்று எங்கள் அம்மா சொன்னாள்; ஆதலால் இன்றைக்கு லீவு கொடுங்கள் என்று கேட்பது போலவே, நீங்கள் வேறொருவரை உங்கள் சங்கத்திற்குத் தலைவராக வைத்துக்கொண்டு அவர் சொல்லுகிறபடி காரியங்களைச் செய்வதும், உங்களுக்குச் சம்மந்த மில்லாதவைகளைப் பின்பற்றுவதுமாகும். வெளியிலிருந்து உங்களுக்குத் தலைவராய் வருகிறவர்களுக்கு முதலாவது வேலையிலுள்ள கஷ்டமும் உங்களுக்க இருக்கிற கஷ்டமும் அவாகளக்கு எப்படித் தெரியும்? உதாரணமாக, இது சமயம் நமது நாட்டுத் தொழிலாளர் சங்கத் தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காவது உங்கள் தொழிலின் அருமை தெரியுமா? அவர்களது கீர்த்திக்காக நலனுக்கு ஆக உங்களுக்குத் தலைவராயிருப்பார்கள். அவர்கள் ஒரு தொழிலும் செய்யாமல் மாதம் 500,1000,5000,10000 என்று பொது ஜனங்களின் பணத்தை உங்கள் முதலாளிகளைப் போலவே கொள்ளையடித்துச் சுகபோகம் அனுபவித்துக் கொண்டு தங்கள் சுயநலத்தை நாடிக் கொண்டிருப்பவராயிருப்பார்கள். அவர்களால், உங்களுக்கு எந்தத் துறையில் அனுகூலம் கிடைக்கக்கூடும்? அவர்களைக் கண்டால் உங்கள் முதலாளிமார்கள் எப்படி மதிக்கக்கூடும்? இதே முகாந்தாரங்களே நமது நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் என்பது இதுவரை உருப்படியாகாமல் போனதற்குக் காரணம்

வேலை நிறுத்தமும் தலைவர்களும்

அநேக இடங்களில் வேலை நிறுத்தம், வெளியேற்றம் நிகழ்கிறது. இவைகள் ஏற்பட்டு என்ன பலன் கிடைத்தது? அதன் பலனாய் எவ்வளவு தொழிலாளிகளுக்கு வேலை போய் கஷ்டமுண்டாயிற்று? இவற்றை எந்தத் தலைவர் கவனித்தார்கள்? பல தொழிலாளிகள், தலைவர்கள் வார்த்தையைக் கேட்டதின் பலனாய் வயிறாரக் கஞ்சியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நடத்தின தலைவர்கள் இன்றையத் தினம் முன்னிலும் அதிகமான கீர்த்தியுடன் வரும்படியுடனும் வயிறு வெடிக்கச் சாப்பிட்டுக் கொண்டும்தான் இருக்கிறார்கள். மற்றும் பல தலைவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உங்கள் முதலாளிமார்களிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போல், வெளியார்களை உங்கள் சங்கத் தலைவர்களாய் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தொழிலாளரும் அரசியலும்

அதுமாத்திரமல்ல, உங்கள் சங்கதியே உங்களுக்கத் தெரியாமல் இப்படித் திண்டாடும்போது, சூதாட்டத்திற்குச் சமானமான அரசியல் கட்சிகளில் உங்கள் சங்கங்களை நுழைத்துக் கொள்ளுகிறீர்கள், தனித்தனியாகவும் நுழைகிறீர்கள். கூலிக்காரனுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம், அரசியல் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வயிற்றுக்குக் கூலி கேட்கவே உங்களுக்குத் தெரியவில்லயானால் உலகத்துத் தேவையை நீங்கள் அறிவதெப்படி? உங்களுக்கு இருக்கும் வியாதி இன்னதென்று கண்டு பிடிக்க உங்களால் முடியுமல் இருக்கும்போது  நீங்கள் ஊராருக்கு வைத்தியம் செய்வதென்பது சிரிப்பாய் இருக்கவில்லையா? உங்களுடைய அரசியல் என்ன? முதலியாரை வண்டியில் வைத்து இழுக்கலாமா? நாயுடுவை வண்டியில் வைத்து இழுக்கலாமா? அய்யங்காரை வண்டியில் வைத்து இழுக்கலாமா? நாயக்கரை இழுக்கலாமா? என்பது போன்றவையும், யாரைச் சட்டசபைக்கு அனுப்பலாம்? யாருக்கு ‘ஜெ’ போடலாம், யாருக்கு ஓட்டுப் போடலாம் என்பது தானே. நீங்கள் வண்டிச் சவாரி செய்யலாமா? நீங்கள் சட்டசபைக்குப் போய் உங்கள் தேவைகளை கவனிக்கலாமா என்கிற கவலையே உங்களுக்கில்லையே. இப்பொழுது அரசியலில் உழலும் யாருக்காவது விடுதலை என்றால் என்ன? உரிமை என்றால் என்ன? சுயராஜ்யம் என்றால் என்ன? தொழிலாளர் விடுதலை என்றால் என்ன? என்பது தெரியுமா? எப்பொழுதாவது வாயைத் திறந்து சொல்லியிருக்கிறார்களா? வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகத்திற்கும் ‘உரிமை‘, ‘உரிமை‘. ‘சுயராஜ்யம்’, ‘சுயராஜ்யம்’. ‘தொழிலாளர்’, ‘தொழிலாளர்’ என்று கத்தினால் நீங்களும் அதில் சேர்ந்து கத்துவதா? உங்கள் நிலைமையை இன்னதென்று அறியாமல் இப்படி மோசக்காரர்களுடன் சேர்ந்து அவர்களை உங்கள் தலைவர்களாக்கிக் கொண்டு அவர்கள் பின்னார் திரிந்தீர்களானால், நீங்கள் மற்றவர்களை வண்டியில் வைத்து இழுக்கவும், உங்கள் கழுத்தில் கயிற்றைக் கட்டி உங்களைச் சந்தைகளில் கொண்டு போய் விற்கவும்தான் நீங்கள் ஆளாவீர்களே தவிர ஒருக்காலும் நீங்கள் மனிதர்கள் போல் வாழ முடியாது.

கண்டிப்பாய் நீங்கள் அரசியலில் சேரவே கூடாது. அரசியல்  உங்களிடம் வந்து சேரட்டும். அரசியல்காரர்கள் உங்களைத் தலைவர்களாகக் கொள்ளட்டும். அப்பேர்பட்ட நாளை எதிர்பாருங்கள்.

சங்கங்களைப் புதுப்பியுங்கள்

உங்கள் சங்கங்களுக்கெல்லாம் நீங்களே தலைவர்களாகுங்கள். உங்கள் நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள், பிறகு தொழிலாளர் கட்சி என்று ஒரு பொதுக்கட்சியை ஏற்படுத்துங்கள். அதில் உங்கள் தொழிலின் பலன் முழுவதையும் நீங்களே அடையத்தக்கதாகவும், தொழிலாளர்களுக்கு வேண்டிய நன்மைகளையும், பொது மக்களுக்கு வேண்டிய நன்மைகளையும் கொள்கையாக வைத்துப் பரப்புங்கள். அதில் எல்லோரையும் வந்து சேரும்படி செய்யுங்கள். தொழிலாளர் கட்சி நாட்டையாளும்படி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு எடுப்பார் கைப்பிள்ளையாய்த் திரிவது தொழிலாளர் உலகத்திற்கே மானக்கேடு. உங்கள் நிலை என்ன? மாடு கன்றுகளை வளர்க்கிறவர்களாவது, அவைகளை வேலை வாங்கின பிறகு, நிழலில் கட்டுகிறார்கள், வேளா வேலைக்குத் தண்ணீர் காட்டுகிறார்கள். உங்களக்கு அந்தச் சவுகரியங்கூட எங்கேயிருக்கிறது. பகலெல்லாம் உழைக்க வேண்டியது, கூலி வாங்க வேண்டியது, அதை குடிக்கோ, கூத்திக்கோ, சாமிக்கோ, சூதுக்கோ செலவு செய்ய வேண்டியது, பட்டினி கிடக்க வேடண்டியது, பெய்யும் மழையும் அடிக்கும் வெயிலும் உங்கள் மேலேயே படவேண்டியது என்கிற கேவல நிலைமையில் இருக்கிறீர்கள். உங்களில் இரண்டொருவர் சுகப்படுவதை நினைக்காதீர்கள். பெரும்பான்மையாக எப்படியிருக்கிறீர்கள்? இதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. உங்கள் ஓட்டுக்கு மாத்திரம் அதிகக் கிராக்கி, யாராவது பணம்கொடுத்து அல்லது யாருக்காவது பணம்கொடுத்து உங்கள் ஓட்டுக்களை வாங்கிப் பதவியைப் பெற்றுவிடுகிறார்கள்.

நீங்கள் தலைவராகுங்கள்

ஆதலால் இன்று முதல் அரசியலையும் அரசியல்காரரையும் மறந்து விடுங்கள். உங்கள் சங்கத்திற்கும் வருஷாந்திரக் கொண்டாட்டங்களுக்கும் தொழிலாளர்களையே தலைவர்களாய் ஏற்படுத்துங்கள். அவர்களக்குச் சக்தியில்லையே என்று குறை கூறாதீர்கள். அது உங்களுக்கு அவமானம். அதைவிட மோசமானவர்களை நீங்கள் தலைவர்கள் என்கிறீர்கள். அயோக்கியர்களைவிட முட்டாள்கள் நல்லவர்கள் என்றே சொல்வேன். இருக்கிறவர்களை வைத்தக்கொண்டு காரியங்களை நடத்துங்கள். கூடிய சீக்கிரம் எல்லாம் சரிப்பட்டுப்போகும். நான் ஒரு சிறு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்.- ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுள் ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்தாகவும், அம்மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் சென்று, எங்களுக்கு கொடுத்த தலைவர் உபயோகமில்லை என்று வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைத் தலைவராகக் கொடுத்தாகவும், அந்தப் பாம்பு தினம் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கித் தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டித் தங்கள் காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் தாங்களே பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல் உங்களிலேயே உங்களக்குத் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாகிகளும் கிடைக்கவில்லையானால், கண்டிப்பாய் உங்களுக்குச் சங்கம் வேண்டாம். இந்த நிலையில் நீங்களும் சங்கம் வைத்து நடத்த சக்தியற்றவர்கள். உங்களுக்குள் தலைவர் ஏற்பட்டு நடத்துவதற்குச் சக்தி வரும்வரை முதலாளிகளை அனுசரித்தே பிழையுங்கள். வீணாகக் குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு விட்டது போல் உங்கள் உழைப்பால் உங்கள் முதலாளிமார் பிழைப்பதோடல்லாமல், உங்களால் மோசக்காரர் பிழைக்கும்படி செய்து நீங்கள் கஷ்டப்படதீர்கள். நீங்கள் என்னைக் கூப்பிட்ட போதே இதைத்தான் சொல்ல நினைத்தேன். இதுதான் உங்கள் சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம்.

குடிஅரசு - சொற்பொழிவு - 18.10.1947

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: