1918 - வரை “ஐரோப்பாவின் நோயாளி” என்ற பழிப்புரைக்கு இலக்காயிருந்தது துருக்கி நாடு. துருக்கி சுல்தான்களின் சோம்பேறி ஆடம்பர வாழ்க்கையும் மதபோதகர்களின் அட்டூழியங்களுமே துருக்கியின் இழிவான நிலைமைக்குக் காரணம். துருக்கி சுல்த்தான்கள் மதாசிரியர்களுக்கு அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர். பகுத்தறிவற்ற பாமர மக்கள் மிகுந்த நாட்டிலே மதாசிரியர்களுக்குச் செல்வாக்குப் பெருகி யிருப்பது இயல்பு. எனவே துருக்கியிலே கிலாபத்தே கிரியாம்சையில் சுல்த்தான்களையும் அடக்கியாண்டு வந்தது. மதாசிரியர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தில் இயல்பாகவே விருப்பமிராது. அவர்கள் தமது செல்வாக்கு அழியாமல் இருப்பதற்குத் தேவையான காரியங்களையே செய்து வருவார்கள். எனவே சோம்பேறிச் சுல்த்தான்களும் சுயநல கிலாபத்தும் ஆதிக்கம் செலுத்திய நாடு “ஐரோப்பாவின் நோயாளி” என இகழ்ந்துரைக்கப்பட்டது ஆச்சரியமன்று. துருக்கியிலே மக்களுக்குள் ஒற்றுமை சூனியமாக இருந்தது. மேட்டுக்குடிப் பிரபுக்கள் சதா ஒருவருக்கொருவர் பூசலிட்டுக் கொண்டிருந்தனர். செல்வ வருவாய்க்குரிய மார்க்கங்கள் தடைப்பட்டன. இவ்வாறாக நாடு சீரழிந்து கிடந்த காலத்தில் ஐரோப்பிய மகாயுத்தம் உண்டாயிற்று. ருஷியாவுக்குப் பயந்து துருக்கி மத்திய ஐரோப்பிய தேசங்களுடன் கலந்து கொண்டது. ஜெர்மன் கட்சி தளர்ச்சியடைந்து ஐக்கிய நேச கட்சி வெற்றியடையும் அறிகுறிகள் தோன்றியபோது துருக்கியைப் பங்கு போட ஐக்கிய கட்சியார் பரஸ்பரம் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். இந்த ஆபத்தான தருணத்திலே நமது கெமால் பாஷா முன் வந்தார். காலி பொலியில் பிரிட்டிஷ் படையை எதிர்த்துத் தடுத்து நிறுத்தினார்; கிரேக்கர்களை புறமுதுகு காட்டியோடும்படி செய்தார். துருக்கிக்கு தன்னைத்தானே காத்துக் கொள்ள சக்தியுண்டென ஐரோப்பிய தேசங்களுக்குப் பிரத்தியட்சமாக விளக்கிக் காட்டினார். ஐரோப்பிய வல்லரசுகளைப் போல துருக்கியும் ஒரு வல்லரசே என நிலை நாட்டினார். ஐரோப்பாவின் நோயாளி என்ற துருக்கியின் இழிபெயரை அகற்றினார். துருக்கி மக்கள் எல்லாம் கெமாலை இரு கைகூப்பித் தொழுதனர். ஆடாடர்க் அல்லது துருக்கியின் தந்தையெனப் புனைபெயர் சூட்டினர்.

ஆம். நமது கெமால் துருக்கியின் உண்மைத் தந்தையே. அவர் மட்டும் அந்த ஆபத்து காலத்தில் தோன்றியிருக்காவிட்டால் துருக்கி நாடு பூண்டோடு ஒழிந்திருக்கும். ஐரோப்பிய தேசங்கள் அந்நாட்டைப் பங்கு போட்டுக்கொண்டிருக்கும். அக்காலத்திய சுல்த்தான்கள் அதற்கு தடைகூறவும் முன்வந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அவ்வளவு ஆண்மையற்றவர்களாயிருந்தனர். யுத்த பீடையிலிருந்து துருக்கியைக் காப்பாற்றிய பிறகு நாட்டைத் திருத்தியமைக்க கெமால் பாஷா முயன்றார். சுல்த்தானை வெருட்டியோட்டினார்; கிலாபத்தை யொழித்தார். குடி அரசு அரசியல் திட்டம் ஒன்று அமைத்து பார்லிமெண்டு ஏற்படுத்தி தாமே முதல் குடிஅரசுத் தலைவராகிக் கொண்டார். அவர் பெயரளவில் குடிஅரசுத் தலைவராயிருந்தாலும் கிரியாம்சையில் ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். குடிஅரசின் ஆரம்ப காலத்திலே தலைவர் ஓரளவு சர்வாதிகாரியாக இருந்தால்தான் தேச நிருவாகம் வெற்றிகரமாக நடைபெறும். மற்றும் குடிஅரசு முறை துருக்கிக்குப் புதியதாகையினால் துருக்கி மக்கள் குடிஅரசு நுட்பங்களைச் சரிவர அறியாதிருந்தார்கள். எனவே முதல் தலைவரான கெமால் பாஷா சர்வாதிகாரம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. ஆனால் கெமால் பாஷா முசோலினி ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியல்ல. முசோலினியும் ஹிட்லரும் மண்ணாசை பிடித்து வெளிநாடுகளை விழுங்கி வருவதுபோல் கெமால் அன்னிய நாடுகள் தலைமீது கை வைக்க முயலவில்லை. ஐரோப்பிய யுத்த நெருக்கடியில் துருக்கியிழந்த வெளிநாடுகளை மீண்டெடுக்கக்கூட அவர் முயலவில்லை. போனது போக மீதமாயிருந்த துருக்கியை விருத்தி செய்து வலுப்படுத்தவே அவர் முயன்றார். துருக்கி முன்னேற்றத்திற்காக அவர் செய்த சீர்திருத்தங்கள் அளவிடற்கரியன. அவைகளை இத் தலையங்கத்துக்குள் தொகுத்துரைப்பது சாத்தியமன்று. எனினும் முக்கியமானவை கீழ்வருமாறு:-

1. அரசியலிலிருந்து மதம் பிரிக்கப்பட்டது.

2. மத பாடசாலைகள் ஒழிக்கப்பட்டன.

3. ஜாதி, மத, கட்சிப் பிரிவு தகர்த்தெறியப்பட்டன.

4. மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. (தாடி, தொப்பி, அங்கி முதலியவை)

5. பெண்கள் முகமூடி அணிவதை நிறுத்தினார்.

6. பலதார மணம் தடுக்கப்பட்டது.

7. விவாகரத்து ஏற்படுத்தப்பட்டது.

8. சிறுவர் சிறுமியருக்கு 6 வயதிலிருந்து கட்டாயக் கல்வியளிக்கப்பட்டது.

9. மதுவிலக்கு அமலில் கொண்டு வரப்பட்டது.

10. மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.

11. ராணுவம் திருத்தியமைக்கப்பட்டது.

12. பழைய துருக்கி லிபியை ஒழித்து ரோமன் லிபியை அமலுக்குக் கொண்டு வந்தார்.

13. துருக்கி சர்க்கார் எந்த மத ஸ்தாபனத்துக்கும் ஆதரவு காட்டக் கூடாதெனச் சொல்லி மதாலயங்களையும், சங்கங்களையும் மூடினார்.

14. பத்திரிகைகளுக்கு சர்க்காரிலிருந்து பணமுதவ வேண்டுமென்று சட்டமியற்றினார்.

15. ஸ்திரீகளுக்கு அரசாங்கத்தில் தாராளமாக உத்தியோகங்கள் அளித்தார்.

 இன்று பெண்கள் போலீஸ், இராணுவம் முதலிய இலாகாக்களில் வேலை செய்து வருகிறார்கள். முதன் முதலில் துருக்கியில்தான் பெண் போலீஸ் ஏற்படுத்தப்பட்டது.

16. பார்லிமெண்டிலும் இதர ஸ்தாபனங்களிலும் பெண்களுக்கு ஸ்தானம் வழங்கப்பட்டன.

பன்னூற்றாண்டு காலம் குருட்டுப் பழக்க வழக்கங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் ஆழ்ந்து இருள் சூழ்ந்து கிடந்த துருக்கியிலே சுமார் 15 வருஷ காலத்துக்குள் இவ்வளவு மாபெரிய சீர்திருத்தங்கள் செய்வது அவ்வளவு சுளுவான வேலையா? மதவெறி கொண்ட மக்கள் வாழும் நாட்டிலே சீர்திருத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான வேலையே. ஆப்கான் அமீர் அமானுல்லாகானுக்கு நேர்ந்த கதியை உலகம் அறியாதா? எனினும் கெமால் பாஷாவின் சீர்திருத்தங்களை துருக்கி மக்கள் எதிர்க்கவில்லை. துருக்கியரும் ஆப்கானியரைப்போல மதவெறி கொண்டவர்களே. கெமால் பாஷாவின் சீர்திருத்தங்கள் வெற்றி பெற்றதற்கும் அமானலுல்லாவின் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்து கடைசியில் அவருக்கே ஆபத்து உண்டானதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. சீர்திருத்த வேலையைத் தொடங்குமுன் கெமால் பாஷா துருக்கி மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் முதலில் பெற்றுக் கொண்டார். ஐரோப்பிய தேசங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் நிலைமையிலிருந்த துருக்கியை ஆபத்திலிருந்து மீட்டெடுத்த கெமால் பாஷாவே துருக்கியின் காப்பாளர் என துருக்கியர் நம்பினர். துருக்கிப் புணருத்தாரனத்துக்காகவே கெமால் பாஷா தோன்றினார் என்றும் அவர்கள் உணர்ந்தனர். ஆகவே அவர் செய்வதெல்லாம் நாட்டின் நன்மைக்கே என எண்ணினர். கெமால் பாஷாவின் வெற்றிக்குக் காரணம் இதுவே. இவ்வண்ணம் துருக்கியின் தந்தையாக விளங்கிய கெமால் பாஷா மறைந்தது துருக்கிக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகுக்கே ஒரு பெரிய நஷ்டமாகும்.

நவம்பர் மாதம் 18-ந்தேதி வெள்ளிக் கிழமையன்று கெமால் தினம் எங்கும் கொண்டாட வேண்டுமென்றும் இதற்காக மாகாண ஜில்லா முஸ்லீம் லீக்குகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் எங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டுமென்றும் இந்திய முஸ்லிம்கள் கெமால் மரணத்துக்குக்காக துருக்கிக்குத் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் ஜனாப் ஜின்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் உலகத்துக்கு நேர்ந்த நஷ்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கும் பங்குண்டு. ஆகவே முஸ்லிம் லீக் தலைவர் கட்டளைப்படி முஸ்லிம்களும், பார்ப்பனரல்லாதாரும் நவம்பர் 18ந் தேதி கெமால் தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 13.11.1938 

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: