periyar03

"காங்கரஸ் ஆட்சியில் எழுத்துச் சுதந்தரமும் பேச்சுச் சுதந்தரமும் தாராளமாக அளிக்கப்படும்" என்றும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் அவை அளிக்கப்படவில்லை என்றும் அதற்கு மாறாக அடக்கு முறைகள் கையாளப்பட்டனவென்றும் தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்களே பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.

அதற்கு அனுசரணையாக காங்கரஸ்காரர் பிரிட்டிஷ் அரசாங்கத் தினிடம் சரணாகதி அடைந்து ஆச்சாரியார் பதவிக்கு வந்தவுடன் ஏற்கனவே ராஜத்துவேஷப் பேச்சுக்கும் சட்டம் மீறியதற்கும் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்த சில அரசியல் கைதிகள் விடுதலையாக்கபட்டார்கள். ஜாமீன் வாங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளுக்கு ஜாமீன் வாப்பீஸ் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த சில புத்தகங்கள் திருப்பிக்கொடுக்கப் பட்டதுடன் அப்புத்தகங்கள் பொது ஜனங்களுக்குள் பரவவும் அனுமதிக்கப்பட்டன.

ஆனால் இப்போது இவைகள் அவ்வளவும் வெறும் வேஷம் என்றும் பாமர மக்களை ஏமாற்ற தற்கால சாந்தியாக செய்யப்பட்ட சூழ்ச்சிகள் என்றும் தங்கள் இனத்தாருக்கும் தங்கள் கூலிகளுக்கும் மாத்திரம் சலுகைகாட்டி லாபம் சம்பாதித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பாரபக்ஷ செய்கை என்றும் நன்றாக விளங்கிவிட்டன.

எப்படி எனில் பத்திரிகைகளுக்கு சர்க்கார் ஜாமீன் வாங்கப் பட்டதில் "தினமணி" முதலிய பத்திரிகைகளின் ஜாமீன் மாத்திரம் வாப்பீஸ் செய்யப்பட்டனவே ஒழிய "குடி அரசு" முதலிய பத்திரிகைகளுக்கு வாங்கப்பட்ட ஜாமீன்கள் இன்னும் வாப்பீஸ் செய்யப்படவில்லை. காங்கரஸ் பார்ப்பனர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பொறுத்த வரையில்தான் பறிமுதல் செய்த ஆர்டர்கள் கேன்சில் செய்யப்பட்டனவே ஒழிய "குடி அரசு" பதிப்பகத்திலிருந்தும் பகுத்தறிவு புத்தக பதிப்பகத்தில் இருந்தும் பதிப்பிக்கப்பட்ட 4, 5 புத்தகங்கள் பறிமுதல் செய்யப் பட்டவை கேன்சில் செய்யப்படவில்லை என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம்.

காங்கரஸ் மந்திரிகள் சில புத்தகங்களின் பறிமுதல் உத்திரவுகளை கேன்சில் செய்த பிறகு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்திலிருந்து வெளியான "குடிஅரசு கலம்பகம்" என்னும் புத்தகத்தை பறிமுதல் செய்த உத்திரவை கேன்சில் செய்து பறிமுதல் செய்து கைப்பற்றிய புத்தகங்களை வாபீஸ் கொடுக்க வேண்டும் என்று கழக பிரசிடெண்டினால் கேட்டுக் கொண்டதற்கு முடியாது என்று சர்க்காரார் உத்திரவு வந்து விட்டதாகத் தெரிகிறது.

குடி அரசு கலம்பகம் என்னும் புத்தகம் எந்த ஒரு தனிநபராலும் எழுதப்பட்டதோ அல்லது ஒரு தனி விஷயத்தைப் பற்றியதோ அல்லது சர்க்கார் மீது துவேஷத்தைக் கற்பிக்க கூடியதோ அல்ல என்பதை வாசகர்கள் முதலில் அறிய வேண்டியே அப்புத்தகத்தைப் பற்றி சில விஷயங்கள் கூறுகிறோம்.

அதாவது, குடி அரசு கலம்பகம் என்னும் புத்தகம் "குடி அரசு" பத்திரிகையில் வந்த சில தலையங்கங்களும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சில சொற்பொழிவுகளுமேயாகும். இந்த சொற்பொழிவுகளும் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்த சேதிகளேயாகும். அவைகளின் தலைப்புகளாவன.

1. சுதேச சமஸ்தானங்கள். (இது 3.8.33 குடி அரசு தலையங்கம்)

2. ஜமீன்களும் ஜமீன் குடிகளும். (இது 19.8.33-ல் சேலம் ஜில்லா ஜமீன்தார்கள் அல்லாதார் மகாநாட்டில் ஈ.வெ.ரா.பேசியது)

3. சுதேசி வர்த்தகம். (இது ஈரோடு சுதேச வர்த்தக சங்கத்தில் சர்.ஆர்.கே.ஷண்முகம் தலைமையில் ஈ.வெ.ரா.பேசியது)

4. நமது லôயம். (இது திருப்பத்தூர் வட ஆற்காடு ஜில்லா சு.ம. மகாநாட்டில் ஈ.வெ.ரா. பேசியது)

5. தொழிலாளர் நிலை. (இது 1933 மே 5,10,15 தேதிகளில் கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடுகளில் தலைமை வகித்து ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுகள்)

6. கூட்டுறவு வாழ்க்கை. (இது 4.11.33-ல் அகில கூட்டுறவாளர் தினத்தில் ஈ.வெ.ரா. பேசியது)

7. பொது உடமை. (இது 10.9.33 குடி அரசு தலையங்கம்)

8. கதர். (இது 16.7.33 குடி அரசு தலையங்கம்)

9. யந்திரத்தின் பெருமை. (இது 13.8.33 குடி அரசு தலையங்கம்)

10. மதக்கிறுக்கு. (இது 8.1.33 குடி அரசு தலையங்கம்)

என்கின்றதான விஷயங்கள். ஆகவே இவைகள் எல்லாம், 1933-ம் வருஷத்தில் "குடி அரசில்" வந்தவைகளாகும். அக்காலங்களில் "குடி அரசு"க்கு ஆசிரியராய் இருந்தவரும் தோழர் ஈ.வெ.ராமசாமியேயாகும். எனவே தோழர் ராமசாமியால் எழுதப்பட்ட, பேசப்பட்ட விஷயங்களை காங்கரஸ்காரர்கள் ராஜத் துவேஷமானது என்றோ, சர்க்காருக்கு எதிரானதென்றோ, பணக்காரர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் விரோதமானதென்றோ எப்படிச் சொல்லமுடியும்?

ஏனெனில் "தோழர் ராமசாமி சர்க்கார்தாசர்" என்றும் "ஜமீன்தாரர் பின்னால் திரிபவ" ரென்றும் "பணக்காரருக்கு வக்கீல்" என்றும் "சர்க்காரையும் மந்திரிகளையும் ஆதரித்து வருகின்றவ"ரென்றும் இதுவரை காங்கரஸ் காரர்கள் சொல்லிவந்து இப்போது மாத்திரம் அவர் அக்காலத்தில் எழுதியதும், பேசியதும் சர்க்காருக்கும் பணக்காரருக்கும் ஜமீன்தாரர்களுக்கும் விரோத மானதென்று எப்படிச் சொல்லமுடியும்? ஆகவே காங்கரஸ்காரர்கள் பதவிக்கு வந்ததும் சர்க்காரையும், பணக்காரரையும், ஜமீன்தாரர்களையும் காப்பாற்ற முனைந்து நிற்பதோடு அந்த சாக்கைச் சொல்லிக் கொண்டு தங்களுக்கு விரோதமானவர்கள் மீது பழிவாங்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்பதில் ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்கிறோம். "குடி அரசு" சர்க்காருக்கு அனுகூலமாய் மந்திரிகளுக்கு வாழ்த்துக்கூறிக் கொண்டிருக்கிற சேவை செய்கிறது என்று சொன்ன காங்கரஸ்காரர்கள் இப்போது பதவிக்கு வந்தவுடன் "குடி அரசி"னிடம் ஜாமீன் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம்.

தவிர 124-ஏ பிரிவு சட்டப்புத்தகத்திலேயே இருக்கக் கூடாது என்று பேசிய காங்கரஸ்காரர் இன்று தோழர் பாட்லிவாலா அவர்களை ராஜத்துவேஷப் பேச்சுக்காக அரஸ்ட்டு செய்திருப்பதோடு அவரை ஜாமீனில் விடக்கூட காங்கரஸ் அரசாங்கம் மறுத்துவிட்டது.

கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியாருடன் ஒரு இ.ஐ.ஈ. போனதற்கு சகல பத்திரிக்கைகளும் கூப்பாடு போட்டன. இது கனம் ஆச்சாரியார் மந்திரியாவதற்கு 10 நாள்களுக்கு முன் நடந்த சம்பவம். தோழர் ஆச்சாரியாரும் இதை வெகு பலமாகக் கண்டித்து பேசி விளம்பரம் பெற்றார். அப்படி இருக்க, இப்போது தோழர் ஈ.வெ.ராவுக்கும் மற்றும் சிலருக்கும் மறுபடியும் இ.ஐ.ஈ. சுருக்கெழுத்து தொல்லை எதற்காக ஏற்படுத்த வேண்டும்? அவர்கள் பேசுவதும் செய்வதும் தெரியவேண்டுமானால் பத்திரிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாமல்லவா?

மற்றும் தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களிலும் தொண்டர்கள் ஊர்வலங்களிலும் பழயபடியே போலீஸ் தடியடி ராஜ்யத்திற்கு ஆளாவானேன்? சென்ற வாரம் கள்ளிக் கோட்டையில் ஒரு மந்திரி முன்பாகவே இக்காரியம் நடைபெற்றிருக்கிறதாம்.

மேலும் மதராஸில் கர்னாட்டிக் மில் ஸ்ட்ரைக்கின் போது போலீசார் தொழிலாளிகளை தடிகொண்டு தாக்கி இருக்கிறார்களாம்.

ஆகவே காங்கரஸ் ராஜ்யம் எந்த வகையில் மாறுதலடைந்திருக் கிறது என்று கேட்கிறோம். காங்கரஸ்காரர் பதவி வகிப்பதற்கு முன்பு மேற்கூறப்பட்ட இலாகாக்கள் அவ்வளவும் இரட்டையாட்சி முறையில் சர்க்காரின் நேர் பார்வையில் இருந்ததேயொழிய ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இருக்கவில்லை. அப்படியிருந்தும் காங்கரஸ்காரர்கள் கூலிகளையும், காலிகளையும் எச்சிலைப் பத்திரிகைகளையும் ஏவி விட்டு இவைகளுக்கு ஜஸ்டிஸ்காரர்கள் மீது பழிபோடச் சொன்னார்கள்.

ஆனால் இவ்வளவு காரியங்களையும் இப்போது காங்கரஸ் மந்திரிகள் கைப்படவே செய்யும்போது இக்காலிகளும் கூலிகளும் எச்சிலைப் பத்திரிகைகளும் அவர்களைப் புகழ்கின்றன. ஆகவே காங்கரசின் இழிதன்மைக்கும் அவர்களை ஆதரிக்கும் ஆட்கள் பத்திரிகைகள் ஆகியவற்றின் மானங்கெட்ட யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம். ஆகையால் பொது ஜனங்கள் இனியாவது எக்காரியத்தையும் சுயபுத்தியோடு கூடிய பகுத்தறிவுடன் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 24.10.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: