இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் சம்பளப் பட்டுவாடா மசோதாவில், முதலாளிகள் பிரதிநிதி தோழர் மோடி கொண்டு வந்த திருத்த விஷயமாகக் காங்கிரஸ் அங்கத்தினர் நடந்து கொண்ட தோரணையினால் இந்தியத் தொழிலாளர் பிறப்புரிமை பறிமுதலாகியிருக்கும் உண்மையைத் தொழிலாளர் உணர்ந்து கொண்டு விட்டது பாராட்டத்தக்கதே. சென்னையிலும், கோவையிலும் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களினால் இவ்விஷயத்தில் தொழிலாளர் கொண்டிருக்கும் மனக்கொதிப்பு நன்கு வெளியாகிறது. தோழர்கள் சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் நடு நிலைமை வகித்ததினாலேயே, தோழர் மோடி திருத்தம் நிறைவேறிய தென்றும், மற்ற காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் எல்லாம் தோழர் மோடி திருத்தத்துக்கு விரோதமாகவே வோட்டுக் கொடுத்தார்கள் என்றும், சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் வியாபாரத் தொகுதியின் பிரதிநிதி களாதலால் அத்தொகுதி வாக்காளர்கள் விருப்பத்தின்படி நடக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும், கோவை டவுன் ஹால் மைதானக் கூட்டத்தில், ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் ஒரு நொண்டிச் சமாதானம் கூறி, காங்கிரஸ்காரர் செய்த துரோகத்தின் கொடுமையை மறைக்க முயன்றிருப்பதாகத் தெரிகிறது. தோழர் மோடி திருத்தத்துக்குச் சாதக பாதகமாக வோட்டுக் கொடுத்தவர்களின் பெயர் விபரம் பத்திரிகைகளில் வெளிவராதிருக்கையில் அப்பார்ப்பனர் கூற்றுக்கு ஆதாரம் என்ன என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. காங்கிரஸ்காரர்கள் மோடி திருத்தத்துக்கு எதிரிடையாக வோட்டுக் கொடுத்திருந்தால், தங்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வெளிவரும்படி செய்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்களா? காங்கிரஸ் மெம்பர்களின் புரட்டை மறைப்பதற்கு ஆகவே சாதக பாதகமாக வோட்டுக் கொடுத்தவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை.

மற்றும் ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்கத்தக்கது என்னவென்றால் வர்த்தகத் தொகுதி வாக்காளர் விருப்பப்படி நடக்க தோழர்கள் சாமி வெங்கடாசலமும் தாசும் கடமைப்பட்டிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால் தொழிலாளர் விருப்பப்படி நடக்கத் தொழிலாளர் பிரதிநிதிகளான தோழர்கள் ஜோஷியும், கிரியும் கடமைப்பட்டே இருக்கிறார்கள். அக்கடமையைச் செய்ய அவர்கள் முயன்றும் இருக்கிறார்கள். ஆயினும் சொந்தக் கட்சி பலமில்லாததினால் அவர்களது முயற்சி பயன்பெறவில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் இதர கட்சிகளின் உதவியினாலேயே அவர்களது கோரிக்கை நிறைவேற வேண்டியதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மெஜாரட்டி கட்சியாக இருப்பதினால், தொழிலாளர் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டியது அவர்கள் கடமையல்லவா? தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் சமதர்மவாதியான தோழர் ரெங்கா ஒருவரே முன்வந்திருக்கிறார். ஏனைய காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. இந்த ஒரு உதாரணத்தினால் முதலாளி தொழிலாளி தகராறுகள் ஏற்பட்டால் காங்கிரஸ்காரர் தொழிலாளர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகவில்லையா? தொழிலாளர்களின் உண்மைப் பிரதிநிதிகள் நாங்களே என்று காங்கிரஸ்காரர் சொல்லிக் கொள்வதற்குப் பொருளே இல்லையென்பது தெளிவாக வில்லையா? இனி, தொழிலாளர் பிரதிநிதி என்று பெருமையடித்துக் கொள்ள காங்கிரஸ் காரருக்கு உரிமை யுண்டா?

மேலும், தோழர் மோடி திருத்தத்தை காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சிகள் இருக்கின்றன. தோழர் மோடி கொண்டு வந்த திருத்த பிரேரணையை சரியான முறையில் தவறில்லாமல் எழுதிக் கொடுக்கும்படி சட்ட மந்திரி சர். என்.என். சர்க்காரை, காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் கேட்டதாகவும், அதன்படி தாம் எழுதிக் கொடுத்ததாகவும் சட்ட மந்திரி சர். என்.என். சர்க்காரே இந்திய சட்ட சபையில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதனால் தோழர் மோடி திருத்தத்துக்கு தோழர் புலாபாய் தேசாய் ஆரம்பத்திலேயே ரகசியத்தில் ஆதரவு அளித்துவிட்டார் என்பது விளங்க வில்லையா? தோழர் தேசாய், பம்பாய்வாசி யானதினாலும், முதலாளிகள் நண்பன் ஆகையினாலும் தோழர் தேசாயும் முதலாளிகள் பிரதிநிதி மோடியும் கலந்தே இந்தத் திருத்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்று யூகிப்பது தவறாகாது. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருத்தத்தை ஆதரித்ததனாலேயே காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் திருத்தத்தை எதிர்த்துப் பேசவே இல்லை. தோழர்கள் ரெங்காவும் கிரியும் திருத்தத்தை எதிர்த்துப் பேசியிருக்கையில் வாயாடி மெம்பர்களான தேசாய், சத்தியமூர்த்தி போன்றவர்கள் மௌனமாக இருக்கக் காரணம் என்ன?

ராஜன், அவினாசிலிங்கம், முத்துரங்கம், ராஜா, ஆரான் போன்ற தென்னாட்டு "வீரர்கள்" ஏன் வாய் திறக்கவில்லை? காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் கட்டுப்பாடாக எதிர்த்திருந்தால் தோழர் மோடி திருத்தம் நிறைவேறியிருக்குமா?

"ஒரு சூழ்ச்சி முறையால் சர்க்கார், புலாபாய் தேசாய் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டது" என்று தோழர் ரெங்கா பகிரங்கமாக இந்தியச் சட்ட சபையில் கூறியிருக்கிறாரே! இதனால் மோடி திருத்தத்தை தேசாய் கம்பெனியார் பரிபூரணமாக ஆதரித்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கவில்லையா?

அன்றியும் தொழிலாளர் சம்பளத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமென்று தோழர் ஜோஷி கொண்டு வந்த திருத்தத்தை தோழர்கள் கிரியும், ரெங்காவும் ஆதரித்துப் பேசியிருக்க ஏனைய காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் மௌனமாக இருந்ததேன்? மேற்கூறிய விஷயங்களினால் காங்கிரஸ்காரர்கள் தொழிலாளர் நண்பர்கள் அல்லவென்பது விளங்க வில்லையா? "தொழிலாளருடன் எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் ஒன்றுபட்டுழைக்க முடியாது" என்று காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் முன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதின் உட்பொருளை இப்பொழுதாவது தொழிலாளர்கள் உணர்ந்துகொள்வார்களா? காங்கிரஸ் முதலாளிகள் நண்பனாக இருந்து வருவதினால் "இன்றைய காங்கிரஸின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை" என்று தோழர் சுபாஷ் சந்திரபோஸ் கூறியிருப்பதைத் தொழிலாளர்கள் கவனிப்பார்களா? தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்கள் வோட்டு காங்கிரஸ்காரர்களுக்கு அவசியந்தான். ஆனால் வோட்டைவிட அதிக முக்கியமானது பணம். காங்கிரஸ் வேலைகளுக்கும் காங்கிரஸ் வாலாக்கள் பிரயாணச் செலவுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் முதலாளிகளே பொருளுதவி செய்து வருகிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியமல்ல.

கோவைத் தொழிலாளர் யூனியன் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கும் மூன்று தீர்மானங்களையும் சர்க்கார் ஒப்புக்கொண்டு சம்பளப் பட்டுவாடா மசோதா திருத்தப்பட்டால்தான் தொழிலாளர்கள் குறைகள் நீங்கும். அதற்காக தொழிலாளர்கள் தீவிரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டு மென்று விரும்புகிறோம்.

கடைசியாக, கோவை டவுன்ஹால் மைதானக் கூட்டத்தில் கூறிய ஒரு பார்ப்பனரின் அபிப்பிராயத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டியது நமது கடமையென எண்ணுகிறோம்.

"சர்க்கார் தங்கள் விசேஷ அதிகாரத்தைக் கொண்டு எதையும் சட்டமாக்கும் சக்தி பெற்றிருக்கும் வரையில் தீர்மானங்கள் தோற்றாலும் வெற்றியுற்றாலும் ஒன்றேதான்" என்று கூறினாராம்.

ஆம். வாஸ்தவமே. இந்திய சட்டசபை பொதுஜனப் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல. அதனாலேயே சர்க்காரை எதிர்த்துத் தற்காலம் எதையும் சாதிக்க முடியாதென்றும் ஏனைய கட்சியாரைவிட காங்கிரஸ்காரருக்கு எதையும் அதிகமாகச் செய்துவிட முடியாதென்றும் நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம்.

அதை இப்போது ஒப்புக்கொள்ளும் இந்தக் கூட்டத்தாருக்கு அப்பொழுது இந்தப் புத்தி எங்கு போயிற்று? "காங்கிரஸுக்கு வெற்றி, வெற்றி மேல் வெற்றி" என்று காங்கிரஸ் வாலாக்களும் பத்திரிகைகளும் கூச்சல் போட்டனவே. அவைகளுக்கு என்ன அருத்தம்?

"நாங்கள் சட்டசபைக்குப் போனால் சர்க்காரை ஆட்டி விடுவோம்" என்று சொன்னதின் கருத்து என்ன?

காங்கிரஸ்காரர் சட்டசபைக்கு போனபிறகு சர்க்காருக்கு எத்தனையோ தோல்விகள் ஏற்பட்டிருந்தும் சர்க்கார் அதன் போக்கில் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது.

எனினும் தாம் ஏதோதோ சாதிக்கப் போகிறதாக காங்கிரஸ்காரர் மேலும் மேலும் தீர்மானங்களும் ஒத்திவைப்பு அவசர பிரேரணைகளும், மசோதாக்களும் கொண்டுவந்து கொண்டே இருக்கிறார்கள். அவைகளால் பயன் விளையாது என்று தெரிந்திருந்தும் பொது மக்களை ஏய்ப்பதற்காக வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் மெம்பர்கள் பின்னால் விளையக்கூடிய பலாபலன்களை லக்ஷ்யம் செய்யாமல் மற்ற தீர்மானங்களின் மேல் நடந்து கொண்ட மாதிரியாகவே மோடி திருத்தத்தையும் எதிர்த்து ஏன் தோற்கடித்திருக்கக்கூடாது. தோற்கடித்த திருத்தத்துக்கு தன் விசேஷ அதிகாரத்தினால் சர்க்கார் ஆதரவளித்தால் அந்தப் பழியை சர்க்கார் மீது போட்டு விடலாமல்லவா?

கண்ணைத் திறந்து கொண்டு பட்டப் பகலிலே வெட்ட வெளிச்சத்திலே இந்தியச் சட்டசபையில் கண்ணாம் பூச்சி விளையாடும் காங்கிரஸ் வாலாக்கள், தோழர் மோடி திருத்த விஷயத்தில் மட்டும் பெரிய காரியக் காரனைப்போல் மீன மேஷம் பார்த்தார்கள் என்றால் கிழவிகளும் கூட சிரிக்க மாட்டார்களா! சிரித்தால்தான் என்ன? காங்கிரஸ் வாலாக்களுக்கு வேண்டியது பணம் தானே! பணம் முதலாளிகளிடம் தானே இருக்கிறது! அப்படி இருக்க காங்கிரஸ்காரர் ஏழைத் தொழிலாளிகளை எப்படி கவனிக்க முடியும்? தேர்தல்களின் போது தொழிலாளர் "தலைவர்களுக்கு" பணம் கொடுத்தால் தொழிலாளர்கள் இடையில் காங்கிரஸ் பிரசாரம் நடந்துவிடும் என்கின்ற தைரியம் காங்கிரஸ்காரர்களுக்கு உண்டு.

குடி அரசு துணைத்தலையங்கம் 23.02.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: