திடீரென்று தொழிலாளர் செய்யும் வேலை நிறுத்தங்களுக்கு தண்டனையாக 13 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று தோழர் மோடி இந்தியச் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றிய திருத்தம், இப்பொழுது 8 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று ராஜாங்க சபையில் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்த தோழர் பி.என். சாப்ரூவின் யோசனையை சர்.பிராங்கு நாய்ஸ் ஒப்புக் கொண்டதுடன் இவ்விஷயத்தில் அக்கரைகொண்ட அங்கத்தினர்கள் எல்லாம் அதை ஆதரிப்பதாயும் சொன்னாராம். தொழிலாளர் பிரதிநிதிகளான தோழர்கள் ஜோஷியும், கிரியும் தீராப் பொறியாக இந்தத் திருத்தத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், தொழிலாளர் உரிமை பறிபோவதை நம்மால் ஆதரிக்க முடியாது. 13 நாள் சம்பளத்துக்கு பதிலாக 8 நாள் சம்பளம் பிடிப்பதினால் தொழிலாளருக்கு 5 நாள் சம்பளம் இலாபம் ஏற்படலாம். ஆனால் காசை விட உரிமையே முக்கியம். தமது உரிமைகளையும், மானத்தையும் காப்பாற்றும் பொருட்டு திடீர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் தொழிலாளருக்கு உண்டாகக் கூடும். ஆகவே திடீர் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளருக்கு இருந்துதான் தீரவேண்டும். தோழர் சாப்ரு திருத்தத்தினால் தொழிலாளர் திருப்தியடையவே கூடாது. கட்டுப்பாடாகக் கிளர்ச்சி செய்தால் இந்தத் திருத்தத்தையும் ரத்து செய்ய முடியும். சென்னைத் தொழிலாளர் சங்கத்தார் விழிப்படைந்து இவ்விஷயமாகச் சிறிது சுறுசுறுப்புடன் வேலை செய்வது பாராட்டத்தக்கதே. அவர்கள் வெளியிட்டிருக்கும் வெளியீடுகள் தொழிலாளர் நிலைமையை பொதுஜனங்களுக்கு விளக்கிக் காட்ட மிக்க உதவி புரியக்கூடும். எனினும் சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் பலர் இப்பொழுதும் காங்கிரசில் நம்பிக்கை வைத்திருப்பது பெரிய அதிசயமாகவே இருக்கிறது. அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்திருப்பது பகிரங்கமான பிறகும் அவர்கள் காங்கிரசை நம்புவது பைத்தியகாரத் தனமல்லவா?

(1) " தொழிலாளர்களுடைய நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதை காங்கிரஸ் தனது வேலைத்திட்டத்தில் ஒரு முக்கிய அமிசமாகச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் காங்கிரஸ் கட்சியினர், பொறுக்குக் கமிட்டியிலிருந்து வெளியான மசோதாவைத் தீரப் பரிசீலனை செய்து திருத்தப் பிரேரணைகள் விஷயத்தில் எவ்விதம் நடந்து கொள்வ தென்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். எனினும் அவர்கள் அந்தக் கடமையை அலக்ஷ்யம் செய்து விட்டனர். (2) தோழர் ஜோஷீயின் திருத்தப் பிரேரணைகள் பலவற்றின் மீது ஓட்டெடுத்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒரு சாரார் பிரேரணைகளுக்குச் சாதகமாக ஓட்டுச் செய்வதும் மற்றொரு சாரார் நடுநிலைமை வகித்திருப்பதுமான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. (3) தோழர் மோடி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகேனும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். (4) முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் இந்தத் திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கு கட்டுப்பாடான வழியில் முயற்சி செய்யாமலிருந்தது மிகவும் வருந்தத்தக்கதாகும்"

என்றெல்லாம் காங்கிரசை எப்பொழுதும் ஆதரிக்கும் சுதேசமித்திரன் குற்றம் சாட்டுமானால் காங்கிரஸ்காரர் செய்த துரோகம் எவ்வளவு பயங்கரமான தென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆகவே தொழிலாளர்களும் தொழிலாளர் தலைவர்களும் காங்கிரசை நம்புவதினால் பலனேற்படாதென்பதே நமது கண்டிப்பான அபிப்பிராயம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 01.03.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: