நில அடமான கடன்களுக்கென்று சர்க்கார் பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து பணம் எடுத்து நில அடமான பாங்கிக்கு முதலாகக் கொடுத்து நிலச் சொந்தக்காரர்களுக்குக் கடன் கொடுத்து குடியானவர்களை அதிக வட்டிக்கடன் தொல்லையிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்திருப்பது யாவரும் அறிந்ததேயாகும்.

அதன் மூலம் உண்மையாகவே சில குடியானவர்களுக்கு சௌகரியமும் ஏற்பட்டு வருவதை யாரும் அறிந்திருக்கலாம்.

ஜஸ்டிஸ் கட்சியாருடைய பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமியால் ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டம் என்று சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் "விவசாயிகளுடைய கடன்களைக் குறைப்பதும் இனி கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுமான காரியங்கள் செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அத்திட்டங்களில் சில அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்த விவசாயிகள் கடன் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்காக ஏற்கனவே ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இப்போது மறுபடியும் (2500000) இருபத்தைந்து லக்ஷ ரூபாய் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரி கனம் ராஜன் அவர்கள் முயற்சித்து இவ்வார சட்டசபையில் அரசாங்கத்தில் இருந்து பணமும் ஒதுக்கப்பட்டாய் விட்டது. இப்பணம் ஒதுக்குவதற்கு நடந்த வாக்குவாதங்கள் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். என்னவெனில்,

நில அடமான பாங்கு இலாகா பார்ப்பனமயமாயிருக்கிறதென்றும், அதிலுள்ள பார்ப்பனரல்லாதார்கள் பெயரளவில் பார்ப்பனரல்லாதார்கள் ஆனாலும் காரியத்தில் பார்ப்பன பக்தர்களேயாகும் என்றும், அதற்கு ஒதுக்கப்படும் பணம் பார்ப்பன ஆதிக்கத்துக்கே பெரிதும் பயன்படும் என்றும், கடன்கொடுக்கும் காரியத்தை அரசியல் கட்சி நலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறதென்றும் குறைகூறி அப் பணத்தை நிபந்தனை இல்லாமல் கொடுக்கக் கூடாது என்று ஜஸ்டிஸ்கட்சி அங்கத்தினர்கள் வலியுறுத்தினார்கள்.

அதன் பயனாய் மந்திரி கனம் ராஜன் அவர்கள் நில அடமான பாங்கி காரியதரிசி பதவிக்கு ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரை (டிப்டி கலைக்கட்டரை) நியமித்துக்கொள்ள நில அடமான பாங்குகாரர்கள் சம்மதித்தால் மாத்திரமே இந்தப் பணம் கொடுக்கப்படும் என்று வாக்களித்து கிராண்டை பாசாக்கிக்கொண்டார்.

தோழர் ஈ.வெ. ராமசாமியார் ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது "கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுத்து அவற்றின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளியாக சர்க்கார் உத்தியோகஸ்தர்களை நியமிக்க வேண்டும்" என்பதாகும்.

கூட்டுறவு ஸ்தாபனங்கள் எவ்வளவு நன்மை பயக்கும் படியான தன்மையைக் கொண்டவையானாலும் அதைக் கைப்பற்றுகிறவர்கள் பெரிதும் அரசியல் கட்சி நலத்துக்கு பயன்படுத்தி பக்ஷபாதம் முதலியவை செய்து ஸ்தாபனங்களின் கருத்து முழுவதும் நிறைவேறாமல் செய்துவிடு கிறார்கள். அனேக பட்டணங்களில் கூட்டுறவு ஸ்தாபனங்கள் பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்டு மானிய சொத்துப்போல் ஒரு வகுப்பாரே ஏகபோகமாய் பயன் அனுபவிக்கும்படியாயும் ஸ்தல ஸ்தாபனம் முதலிய தேர்தல்களுக்கு தங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்படியும் செய்து கொள்ளுகிறார்கள். உதாரணமாக சென்ற அசெம்பிளி தேர்தல்களில் இரண்டொரு ஸ்தாபனங்கள் கோவாப்ரேட்டிவ் ஸ்தானம் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காரணமாகவே வேறு யாதொரு தகுதியும் இல்லாதவர்கள் வெற்றி பெற முடிந்தது. தேர்தல்களுக்கு இந்த இயந்திரத்தை தயவு தாக்ஷண்ணியம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதானது மிகவும் வெளிப்படையான காரியமாகும். இதைப்பற்றி "குடி அரசி"ல் முன்னமேயே பல தடவை குறிப்பிட்டிருக்கிறோம். ஆதலால் கோவாப்ரேட்டிவ் ஸ்தாபனங்களின் டைரெக்டர்கள் பொதுஜன பிரதிநிதிகள் என்பவர்களாய் இருந்தபோதிலும் காரியதரிசிகள் கண்டிப்பாய் சர்க்கார் அதிகாரிகளாகவே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டதுபோல் காரியத்திலும் செய்ய முன் வந்ததிற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம்.

கோவாப்ரேட்டிவ் இலாக்கா மந்திரி கனம் ராஜன் அவர்கள் இந்த முறை ஒரு சமயம் ஜனநாயகத்துக்கு விரோதமோ என்று மயங்கினார் என்றாலும் முனிசிபாலிட்டிகளுக்கு கமிஷனர் போட்டிருப்பதுபோலவும், பஞ்சாயத்து ஆபீசர்கள் ஹெல்த் ஆபீசர்கள் முதலியவர்கள் சர்க்காரால் நியமிக்கப்பட்டு சர்க்காருக்கு பொறுப்பாளிகளாய் இருப்பதால் எப்படி ஜனநாயத்தன்மை கெட்டுப்போகவில்லையோ அதுபோலவும் கூட்டுறவு இலாக்காவுக்கு சர்க்கார் நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதால் ஜனநாயகத்தன்மை கெட்டுவிடாதென்று தோழர் சி.டி. நாயகம், எம்.எல்.சி. அவர்கள் எடுத்துக்காட்டியதுடன் ஏற்கனவே ஜஸ்டிஸ்கட்சியார் தோழர் ஈ.வெ. ராமசாமி திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதையும் ஞாபகமூட்டி மந்திரியாரை திருப்தி செய்தார்.

இக்காரியங்கள் சில தேசபக்தர்களுக்கு பிற்போக்கான முறையாய் காணப்படலாம். ஆனால் தேசபக்தர்கள் என்கின்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கூட்டுறவு இலாக்காவில் நடந்துகொண்ட யோக்கியதைகளை உத்தேசித்தே இம்மாதிரி செய்யவேண்டியேற்பட்டதே ஒழிய பிற்போக்கான காரியம் செய்ய வேண்டியதற்காகவல்ல என்பதை பொதுஜனங்கள் உணர்வார்களாக.

கூட்டுறவு, நில அடமானம், வீடு கட்டுதல், நிலம் திருத்துதல், யந்திரசாலை வைத்தல் முதலிய காரியங்களுக்குப் பணம் கடன் கொடுத்தல் ஆகியவைகளுக்கு இலாக்காக்கள் ஏற்படுத்தி அவற்றை சர்க்காராரே தங்கள் சிப்பந்திகள் மூலம் நேரிட நிர்வாகம் செய்து வருவார்களானால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஏழ்மைத் தன்மையையும் ஒரு அளவுக்கு நீக்க தாராளமாய் வசதி ஏற்படலாம். ஆனால் இப்பொழுதோ கூட்டுறவு முதலிய இலாக்காக்கள் நிர்வாகத்தைக் கைப்பற்றுபவர்களின் பெருமைக்கும் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவ காரியங்களின் வெற்றிக்குமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆதலால் இந்தக் குறை ஒருவாறு நீங்க இப்போதாவது ஜஸ்டிஸ் கட்சியார் தைரியமாய் நில அடமான பாங்கி நிர்வாகத்துக்கு சர்க்கார் உத்தியோகஸ்தரை காரியதரிசியாய் போடத் துணிந்ததற்குப் பாராட்டுகிறோம். மற்ற பாங்கிகளுக்கும் இது போல் ஏற்படுத்த சட்டம் கொண்டு வருவார்களாக.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 06.12.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: