சென்னை மாகாணத்து மிராசுதாரர்களுக்கு பூமி வியாபாரத்தில் ஆதாயமில்லாமல் போய்விட்டதாம். அதனால் மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் நில வரியைக் குறைக்க வேண்டும் என்று "மகாநாடுகள்" கூட்டி சர்க்காரைக் கேட்கிறார்கள்.

சர்க்காராருக்கு தாங்கள் வைத்துக் காப்பாற்றும் உத்தியோகஸ்தர் களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வேண்டும். ஆதலால் நிலவரியைக் குறைக்க முடியாது என்கின்றார்கள். இது விஷயமாய் ஒரு போலி யுத்தம் சுமார் 2, 3 வருஷகாலமாகவே நடந்து வருகின்றது.

காங்கிரசுக்காரர் என்பவர்கள் இப்போது இந்திய சட்டசபையில் சிறிது "ஆதிக்கம்" பெற்றவுடன் இதற்கு ஒரு மத்தியஸ்தர் வழியைக் கண்டுபிடித்து மிராசுதாரர்களுக்கு அதிக லாபம் வரும்படியாகவும் சர்க்காருக்கு தங்கள் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருக்கவும், வேண்டுமானால் இன்னும் அதிக சம்பளம் கொடுக்கக்கூட வசதி இருக்கும்படியாகவும் செய்து இருக்கிறார்கள்.

அது என்னவென்றால் அதுதான் தொழிலாளிகள், கூலிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் வாயிலும், வயிற்றிலும் மண்ணைப் போட்டு, அவர்களுடைய பட்டினியால் மிராசுதாரர்கள் நஷ்டத்தையும், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் நஷ்டத்தையும் சரிக்கட்டும் படியான மார்க்கமாகிய அரிசி அதாவது உணவுப் பொருளுக்கு வரி விதிப்பது என்கின்ற காரியமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உணவுப் பொருளாகிய அரிசி, அரிசிக் குருணை (நொய் அரிசி) ஆகிய தானியங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குச் சிறப்பாகச் சென்னை மாகாணத்துக்கு இறக்குமதியாகி வருவதால் உள்நாட்டு அரிசி விலை குறைந்து விட்டதாம். இதனால் மிராசுதாரர்களுக்கு விவசாய வியாபாரத்தில் இலாபம் குறைந்து விட்டதாம். அதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி யாகும் அரிசி, குருணை ஆகிய தானியத்தை அடியோடு நிறுத்தியோ, அல்லது அவ்வரிசிக்கும், குருணைக்கும் இறக்குமதி வரி போட்டு அரிசி விலையை உயரும்படியாகவோ சர்க்காரார் செய்துவிட்டால் மிராசுதாரர்களின் நெல்லுக்கு அதிகவிலை கிடைத்து விடுமாம். இதனால் மிராசுதார்கள் கஷ்டம் ஒழிந்து வரியைச் செலுத்தி விடுவார்களாம். ஆகவே பெரிய, பெரிய சம்பளமாகிய 100, 500, 1000, 5000 ரூபாய்கள் வீதம் மாதச் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் சர்க்கார் சிப்பந்திகளின் சம்பளத்தில் ஒரு அம்மன் காசுகூட குறைக்க வேண்டிய கஷ்டமும் சர்க்காருக்கு ஏற்படாதாம். இதுதான் காங்கிரஸ்காரர்களின் புதிய மத்தியஸ்த மார்க்கமாகும்.

ஆகவே நமது காங்கிரஸ்காரர்கள் ஏழைக்கூலி, தொழிலாளி ஆகிய மக்களுக்குப் பிரதிநிதிகளா? அல்லது மிராசுதாரர்கள், சர்க்கார் உத்தி யோகஸ்தர்கள் ஆகிய பிரபுக்கள் சமூகத்துக்கு பிரதிநிதிகளா? என்பதை இதிலிருந்து யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.

நிற்க, மிராசுதாரர்களுக்கு உண்மையிலேயே நெல் விவசாயத்தில் போதிய விளைவில்லையா? கட்டுபடி இல்லையா? இதனால் ஆதாயம் இல்லையா? அவர்களுக்கு வரி கொடுக்கத்தக்க வரும்படி இல்லையா? என்பது போன்ற காரியங்களை முதலில் யோசிக்க வேண்டும்.

நமது மாகாணத்தில் இரண்டொரு ஜில்லாக்களைத் தவிர மற்ற எல்லா ஜில்லாக்களிலும் சிறிய விவசாயிகள் அதாவது பூமியைத் தாங்களே உழுது பயிரிடும் விவசாயிகள் தங்களுக்குக் கட்டுப்படி இல்லை என்றோ வரி கட்டுவது கஷ்டமாயிருக்கிறது என்றோ கூச்சலிடுபவர்களைக் காண முடியவில்லை. சர்க்காராவது ஒரு கமிட்டியை நியமித்து ஒரு பூமியின் விளைவு எவ்வளவு? அதற்கு முட்டுவழிச் செலவு எவ்வளவு? அதன் கிறயம் எவ்வளவு? உழுது பயிரிடுபவர்கள் ஜீவனத்துக்கு போதவில்லையா? என்பனவாதியவைகளை நிர்ணயமாயும் உண்மையாயும் கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும் என்பதை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் மிராசுதாரர்களுடைய கூச்சலும் அவர்களிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் பத்திரிக்கைகாரர்களுடைய கூப்பாடுகளும், மிராசுதார்கள் தயவால் சட்டசபைக்குச் சென்ற (மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய) சட்டசபை அங்கத்தினர்கள் கூச்சலுமேதான் இன்று (ஏழை மக்களை பட்டினியிலும் துன்பத்திலும் ஆழ்த்தும்படியான) அரிசி விலை ஏறும்படி செய்ய வேண்டும் என்கின்ற கூச்சலாய் இருக்கின்றதே தவிர மற்றபடி உண்மையிலேயே விலை உயர்த்தப்படவேண்டுமா? அது மக்களுக்கு நன்மை பயக்குமா? என்பதை அறிய யாதொரு ஆதாரத்தையும் காண முடியவில்லை.

பூமிகள் எல்லாம் சர்க்காரை சேர்ந்ததாகும் என்பதும், சர்க்காரார் அந்தப் பூமிகளை பிரஜைகளுக்கு உழுது பயிரிட்டுக் கொண்டு, தாங்கள் செய்த பயிர்ச் செலவுக்கும், பட்ட தேகப் பிரயாசைக்கும் ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டு மீதியை சர்க்காருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுமே நம் நாட்டு பூமிகளுக்கும், பிரஜைகளுக்கும் உள்ள சம்பந்தமாகும்.

இதுதான் உண்மையான ஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட யோக்கியமான ஆட்சியின் தன்மையுமாகும்.

அந்த முறையிலேயேதான் இன்று பூமி சம்பந்தமான சர்க்கார் ரிக்கார்டுகளும் இருந்து வருகின்றன.

ஆனபோதிலும் சர்க்கார் தங்கள் பொறுப்பைச் சரியாய் உணராத தன்மையினாலோ பூமிகளை அடமானம் செய்யும்போது ஒருவன் உண்மையாய் உழுது பயிரிடுபவனா? அல்லவா? என்பதை உணராமலும் ஒருவன் நேரில் தானே உழுது பயிரிடுவதற்கு எவ்வளவு பூமி வேண்டுமோ, அதற்கு மேல் ஏன் கொடுக்க வேண்டும் என்பதை லட்சியம் செய்யாமலும், நேரில் தானே உழுது பயிர் செய்யாமல் இருக்கும் குடியானவனுக்கே அதிக பூமி சேரும்படியாக அனுமதித்தும், நேரில் உழுது பயிரிட்டு வந்த விவசாயி களின் பூமிகள் நாளாவட்டத்திலும் உழுது பயிரிடாத கூட்டத்துக்கே போய்ச் சேரும்படியானதுமான பல பொறுப்பும், பொருத்தமுமற்றதுமான முறைகளால் இன்று இப்பிரச்சினை தோன்றி இருக்கின்றதே ஒழிய மற்றபடி இன்று விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுகின்றதென்றோ கஷ்டம் ஏற்படு கின்றதென்றோ சொல்லுவதற்கு யாதொரு காரணமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.

புதிய புதிய அணைகள், நீர்த் தேக்கங்கள் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் காலங்களில் எல்லாம் சர்க்கார் அந்நீர்த் தேக்கங்களால் பயனடையும் (நஞ்சையாகும்) பூமிகளை சாதாரண விலை கொடுத்தாவது வாங்கிக் கொண்டு பிறகு அந்தப் பூமிகளை நேரில் உழுது பயிரிடுபவர் களைப் பார்த்து அடமானம் செய்யப்பட்டிருக்குமானாலும்கூட இன்று இருந்து வரும் மிராசுதாரர்களின் தொல்லை அடியோடு இல்லாமல் இருந்திருக்கும்.

இன்று அரசாங்கத்தார் விவசாய சம்பந்தமாகவும், பூமி சம்பந்தமாகவும், நீர்பாசன சம்பந்தமாகவும் செய்யப்படும் சகல காரியங்களும், பெரிதும் மிராசுதாரர்களுக்கே பயன்படக் கூடியதாக இருக்கின்றனவே யொழிய பயிரிடும் குடியானவனுக்கு யாதொரு பலனும் ஏற்பட முடியாமலே போய்விடுகின்றன. அப்படி இருந்தும் மிராசுதாரர்கள் கூச்சல் வானத்தைப் பிளக்கின்றது.

இதற்குக் காரணம் நமது ஆட்சி முறையில் உள்ள கோளாறு என்றுதான் சொல்ல வேண்டுமே யொழிய, அகவிலை அறிய முடியாதவர் களும் அதன் பலாபலனை அறிய முடியாதவர்களுமான (மாம்ச பிண்டங்கள் என்று சொல்லத்தக்க) மிராசுதாரர்கள் மீது பழி சுமத்துவது அதர்மம் என்று கூட சொல்லலாம்.

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய நிலையில் அரிசி விலை இப்பொழுது இருப்பதைவிட உயர்வாகும்படி செய்யலாமா? அதனால் மக்கள் கஷ்டப்பட மாட்டார்களா? வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் அரிசி, நெல் ஆகிய தானியங்களைத் தடுத்து விட்டால் இந்த நாட்டு மக்களுக்குப் போதுமான அளவு அரிசி கிடைத்து விடுமா? என்கின்ற விஷயங்களை யோசிக்க வேண்டியது அரிசி இறக்குமதியை தடைப்படுத்த வேண்டுமென்கின்றவர்களின் கடமையாகும்.

இன்று அரிசி பட்டணம் படி 50 கொண்ட மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை இருந்து வருகின்றது. இது ரூ.1க்கு பட்டணம்படியில் 5 படி முதல் 4 படி வரை கிடைப்பதாக ஆகும். மட்ட அரிசி ஒரு சமயம் 6 படியும் கிடைக்கலாம். வெளிநாட்டில் இருந்து சென்ற ஒரு வருஷத்தில் 57194 டன் அரிசி அதாவது 571940 அய்ந்தே முக்கால் லட்சம் மூட்டை அரிசி இறக்குமதி ஆகியும் ரூ.1க்கு 4 படி 5 படி வீதமே அரிசி விற்கின்றதென்றால், இனி இதைக் கட்டுப்படுத்திவிட்டால் ரூ.1க்கு எத்தனை படியாகக் குறைந்துவிடும் என்பதையும், இந்த நாட்டு மக்களுக்குப் போதுமான அரிசி கிடைத்துவிடுமா என்பதையும் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

அன்றியும் இப்போது ரூபாய் ஒன்றுக்கு 4 படி, 5 படி, 6 படி அரிசி விற்பதென்பது மிகக் குறைவான விலையா என்றும் கேட்கின்றோம்.

அரிசி விலை ஏறும்படியாகச் செய்ய வேண்டும் என்றால் அதை வாங்கிச் சாப்பிடும் ஏழை மக்கள் தலையில் வரி ஏற்படுத்த வேண்டும் என்பது தானே அதன் பொருளாகும்.

இந்த நாட்டு மக்களுக்குப் போதிய அரிசி இந்த நாட்டில் விளை கின்றது என்று அரசாங்கத்துப் புள்ளி விபர நிபுணர்கள் கணக்கிலிருந்து விளங்குவதாகச் சொல்லுகிறார்கள்.

இந்தக் கணக்கை நம்புவது "காளை மாடு கன்று போட்டது" என்று சொன்ன உடன் "பிடித்து கொட்டத்தில் கட்டு" என்று சொல்வதுபோல தான் ஆகுமேயொழிய உண்மை கண்டு கொண்டதாக ஆகிவிடாது. அரிசி விஷயமாய் கணக்குப் போட்ட நிபுணர்கள் கவனித்ததெல்லாம், இந்த நாட்டில் வெளிநாட்டு அரிசி இறக்குமதி இல்லாதபோது எவ்வளவு நெல் விளைந்ததோ அவ்வளவு நெல் இப்பொழுதும் விளைந்து இருக்கிறது என்பதேயாகும். நெல் விளைந்த கணக்குச் சரியாய் இருக்கும் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், வெளிநாட்டு அரிசி இறக்குமதி ஆகாத காலத்தில் அரிசி சாப்பிட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இப்போது அரிசி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த குத்துப் புள்ளி நிபுணர்கள் கவனித்தார்களா அல்லது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் காங்கிரஸ்காரர்களாவது கவனித்தார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

இந்த பத்து வருஷ காலத்தில் அரிசி சாப்பிடும் ஜனங்கள் 100க்கு 200 வீதம் அதிகமாகி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

10 வருஷத்துக்கு முன் கிராமங்களில் 3 ஆம் தர விவசாயக் கூலிகள் முழுவதும் மற்றும் கல் வேலைக்காரர்கள், கட்டட வேலைக்காரர்கள், எடுபிடி ஆளுகள், ரோட்டு கூலிகள் முதலிய எல்லோரும் கேப்பை, கம்பு, தினை, சோளம், சாமை ஆகிய கருந் தானியங்களைச் சாப்பிட்டு வந்தார்கள்.

கரைவழி ஓரம் என்று சொல்லப்பட்ட நஞ்சை பூமியுள்ள இடங்கள் தவிர, மற்ற மேட்டாங்காட்டுப் (புஞ்சை தேசம்) பூமியுள்ள இடத்தில் உள்ளவர்கள் மிராசுதாரர்கள் உள்பட 100க்கு 7580 பேர்கள் முன்பு கருந் தானியமே சாப்பிட்டு வந்தார்கள். இப்பொழுது அவர்கள் அத்தனை பேரும் அரிசியே சாப்பிட்டுப் பழகிவிட்டார்கள். பட்டணங்களில் உள்ள மக்கள் 100க்கு 100 பேரும் முனிசிபல் தோட்டிகள் முதல் எல்லோருமே அரிசி தான்யமே தான் சாப்பிட்டுப் பழகி விட்டார்கள்.

கேப்பை, சோளம், கம்பு சாப்பிடுவதை எல்லோரும் குறைவாகவும், ஏழ்மையாகவும் கருதுகிறார்கள் என்றால் மற்றபடி வேறு சமாதானம் என்ன வேண்டும் என்பது விளங்கவில்லை.

ஆகவே அரிசி சாப்பிடும் ஜனத்தொகை இந்த 10 வருஷ காலங்களில் அதிலும் இந்த நான்கைந்து வருஷ காலங்களில் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக சில இடங்களில் நான்காகவும் பெருகிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் கூலி அதற்கு ஏற்றாற்போல் இந்த 10 வருஷத்தில் பெருகி விடவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த 10 வருஷமாக சிறப்பாக இந்த நாலைந்து வருஷமாக பணமுடை காரணமாய் கூலிக் காரர்களுக்குக் கூலி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்திருப்பதோடு வியாபார மந்தம் என்னும் காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வந்து இப்போது கூலிபோதாமலும் குடும்பத்தோடு வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிற ஜனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகின்றது.

பார்ப்பனர்கள், ஆங்கிலம் கற்றவர்கள், உத்தியோகஸ்தர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகள், வீட்டு வாடகைக்காரர்கள் என்று சொல்லப்பட்ட கூட்டங்களாகிய மொத்த ஜனத் தொகையில் 100க்கு 10 அல்லது 15 பேர்கள் போக, பாக்கி 85 விகிதம் பேர்கள் இந்த நாட்டில் ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்கள் தலையில் வரிப்பளு ஏற்படும்படி அரிசி விலையை இன்னமும் உயரும் படியாகச் செய்வதென்றால் இது ஏழை மக்களுக்குத் திமிர் வரி (பியூனிடி போலீஸ் வரி) போடுவதுபோல் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

காங்கிரசுக்காரர்கள் ஏழைகளிடம் சென்று ஓட்டு கேட்கும்போது அரிசி விலை ஏறினதற்கு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்தான் பொறுப்பாளிகள் என்று அயோக்கியத்தனமானதும், போக்கிரித்தனமானதுமான பிரசாரத்தைச் செய்து ஓட்டுப் பெற்றுவிட்டு இன்று (ஜஸ்டிஸ் கட்சியாரின் ஆட்சி காலத்தில்) அரிசி விலை மிகக் குறைவாய் இருப்பதால் அதை உயர்த்தி விற்க வேண்டுமென்று இதே காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் போய் பேசுகின்றார்கள் என்றால் இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா? பணக்கார மிராசுதாரர்களுடைய பிரதிநிதிகளா என்று கேட்கின்றோம்.

சென்னை மாகாணத்தில் சிறப்பாக கோயம்முத்தூர், சேலம், வடஆற்காடு ஜில்லாக்களின் பிரதிநிதியாகச் சென்ற கோவை தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் என்பவர் சிறிதாவது நெஞ்சில் ஈவு இரக்க மில்லாமல் "சென்னை மாகாணத்தில் அரிசி விலை அதிகமாகக் குறைந்து விட்டது. அன்னிய நாட்டு அரிசி இறக்குமதியைத் தடுத்து (அரிசி விலை ஏறும்படியாக) உடனே கவர்மெண்டார் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" என்று தனது முதலாளித் தன்மையை காட்டி டெல்லி சட்டசபையில் பேசி இருக்கிறார். இந்தப் பிரபு காங்கிரசுக்காரர்களால் அனுப்பப்பட்டவர்.

கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஜில்லாவில் மொத்த விஸ்தீரணத்தில் 100ல் ஒரு பங்கு பூமியாவது நெல் விளைகின்றதா என்று கேட்பதுடன் மொத்த ஜனத்தொகையில் 100ல் ஒரு பாகம் ஜனங்களாவது கேப்பை (கேழ்வரகு), கம்பு, சோளம் சாப்பிடுகின்றவர்கள் இன்று உண்டா என்று கேட்கின்றோம்.

அதோடு இன்று கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்களில் பட்டணம்படி 50 கொண்ட அரிசி மூட்டை 10 ரூபாய் முதல் 12லீ ரூபாய் வரை விலை இல்லையா என்று கேட்கின்றோம்.

இந்த மூன்று ஜில்லாக்களிலும்தானே இத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவு குறைந்த கூலி அதாவது "நாள் ஒன்றுக்கு ஒரு அணா கிடைத்தாலும் போதும் என்று கருதி கிராமக் கூலிகள் கதர் நூற்க வருகிறவர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லப்படவில்லையா என்றும் கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட ஜில்லாக்களில் இப்படிப்பட்ட மக்களின் பிரதிநிதியாய்ச் சென்ற முதலாளி ஒருவர் தைரியமாய் "எங்கள் நாட்டில் அரிசி விலை குறைந்து விட்டது" என்றும் "சர்க்கார் அதை உயரும்படி செய்ய வேண்டும்" என்றும் சொல்லுகிறார் என்றால், நமது மக்கள் பிரதிநிதிகளை அனுப்பும் யோக்கியதையும், பிரதிநிதிகளாய் போகின்றவர்களின் பிரதிநிதித்துவ யோக்கியதையும் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம்.

இதுபோலவே கொல்லங்கோடு ராஜா அவர்களும், ஆந்திர நாட்டுத் தோழர் என்.ஜி. ரங்கா அவர்களும் பேசியிருப்பதாகத் தெரிய வருகின்றது. இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா? இவற்றை நினைக்கும்போது வயிறு பற்றி எரிகிறது. இந்தக் கூட்டத்தாரைவிட பிரிட்டிஷ் சர்க்கார் 1000 மடங்கு யோக்கியமும், நாணையமும், ஏழைகள் விஷயத்தில் கவலையு முள்ளவர் களாவார்கள். கள்ளுக்கு வரி, உப்புக்கு வரி, கட்டும் துணிக்கு வரி, குடிக்கும் தண்ணீருக்கு வரி ஒருபுறம் இருக்க இனி சாப்பிடும் அரிசிக்குக் கூடவா வரி விதிக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம். அதுவும் ஏழைப் பங்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் தானா இந்த வரியை விதிக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

இது இப்படி இருக்க நமது சர்க்கார் இந்த "ஏழை பங்காளர்"களாகிய காங்கிரசுக்காரர்களுக்குப் பதில் சொல்லும் முறையில் தாங்கள் யோசிக்கப் போவதாகவும், சில அறிக்கைகள் விட்ட பிறகு அதைப் பார்த்துக் கொண்டு அரிசி வரவைத் தடுக்கப் போவதாகவும் கருத்துக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது.

அந்தப்படி ஏதாவது அரசாங்கத்தார் செய்வார்களானால் அது மிகவும் அநீதியான காரியம் என்றே சொல்லுவோம். 50 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 25 வீதமும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 50 வீதமும், 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 75 வீதமும் குறைத்துக் கணக்குப் போட்டுப் பார்ப்பார்களேயானால் அரிசி விலை மிகக் குறைந்து விட்டது என்பதை சர்க்காரார் உணர்ந்தவர்களாவார்கள். அப்படிக்கில்லாமல் ரூ. ஒன்றுக்கு 2 படி, 2லீ படி அரிசி விற்கும் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சம்பளங்களை அப்படியே வைத்துக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் இருந்து கொண்டு, அரிசி விலை, அகவிலை குறைந்து விட்டது. ஆதலால் அரிசிக்கும், நொய்க்கும் வரி போட்டு விலையை உயர்த்த வேண்டும் என்று சொன்னால் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை ஆதாரமாய்க் கொண்டு நடைபெறுகின்றதா அல்லது பணக்காரர்கள் கூச்சலை ஆதாரமாகக் கொண்டு நடைபெறுகின்றதா என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

தோழர் பெரியர் -குடி அரசு - தலையங்கம் - 17.02.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: