சென்னை, ஜன.16 இன்று காலை 9.30 மணிக்கே திரு. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்கு வந்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார்கள்.

சரியாகப் 10 மணிக்குப் பெரியார் அவர்கள் கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் அவர்களை அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து பின் மொழிய திரு. ராவ்பகதூர் ஏ. சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினர்.

தான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பிறகே தம் சொற்பொழிவைத் தொடங்கினார். அவர் தம்முடைய அரிய சொற்பொழிவில் திருக்குறள் எப்படி ஆரிய கலாச்சாரத்திற்கு நேர் விரோதமான நூல் என்பதைத் தொல்காப்பியத்தின் ஆதாரங்கொண்டும், ஆரிய வேதங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டும், மோகான்ஜதாரே கண்டுபிடிப்புகளின் ஆதாரங்களைக் கொண்டும் விளங்குமுகத்தான் திராவிடர்கள் எப்போதுமே யாகத்தையும், அதன் மூலம் பிராணிகளை பலியிடுதலையும் வெறுத்து வந்தவர்கள் என்பதையும், அதனால் ஆரியர்களால் விரோதிகள் என்றும், அடிமைகள் என்றும் தூற்றப்பட்டார்கள் என்றும் எடுத்துக்காட்டினார். யாகத்தை வெறுப்பவர்கள், பலியை வெறுப்பவர்கள், இந்திரனை வழிபடாதவர்கள், விரதங்களை அநுஷ்டிக்காதவர்கள், மிருதுவான சப்தமுடைய மொழியைப் பேசுபவர்கள் என்று தென்னாட்டில் இருந்த மக்களைக் கூறியிருப்பதிலிருந்தே திராவிடர் கலாச்சாரம், ஆரிய கலாச்சாரத்திற்கு விரோதமானது என்று காணக் கிடக்கிறதென்றும், வால்மீகி ராமாயணத்தில் யாகத்தை வெறுத்தவர்கள் ராட்சசர்கள், வானரங்கள் என்று கூறியிருந்தாலும், அவர்களையே பெரிய சாஸ்திரங்களில் வல்லுநர் என்றும், நிர்வாகத் திறமையும், அரசியல் அறிவும் பெற்றவர்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ராட்சசர்கள் என்று கூறப்பட்டிருப்பது திராவிடர்களையே குறிக்கிறதென்பது நன்கு பெறப்படுகிறதென்றும்,

மேலும் காட்டுமிராண்டிகள் என்று அவர்களை வர்ணித்திருந்தும் அவர்களிடத்து நடத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒன்றுகூட காணப்படவில்லை என்பதையும் எடுத்துக்காட்டி, பஜனர் ஒருவரால் எழுதப்பட்ட பத்ம புராணத்தை ஆதாரமாகக் காட்டி தமிழர்களின் பண்பாட்டின் மேன்மை எவ்வளவு ஆரிய கலாசாரத்திற்கு புறம்பானது என்று எடுத்துக் காட்டினார்.

மேலும் பேசுகையில் “வேதத்தில் காணப்படும் கலாச்சாரம் ஹிம்சையையே அடிப்படை யாகக் கொண்டது. ஆனால், திராவிட கலாச்சாரமோ அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

திருக்குறளில் யாகம் முதலாயன வெறுக்கப்பட்டிருப்பதும், உழவுத்தொழில் மேன்மைப் படுத்தப்பட்டிருப்பதும், பரத்தையர் நேசமும், மது உண்ணலும் வெறுக்கப்பட்டிருப்பதும் முற்றிலும் ஆரியத்திற்கு முரண்பட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு” என்று பலபலத் திருக்குறளின் மேன்மையை எடுத்துக்கூறி, திருக்குறளைத் திராவிடர்கள் பொக்கிஷம்போல் காப்பாற்றி, திருவள்ளுவர் வழிப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதன் மூலம் திராவிடநாட்டைக் காப்பாற்றி அதன்மூலம் இந்தியாவை ஏன் உலகத்தையே காப்பாற்ற வேண்டியது திராவிடனுடைய கடமை என்றும் குறிப்பிட்டதோடு,

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் வாழ்க்கையை அமைக்க பலவான சூழ்ச்சிகள் இன்று நாட்டில் நடைபெற்று வரும் இக்காலத்தில் “இந்து மதம் ஆனது அன்புவழி போதிக்கும் அறக்கோயில்களை கொலைகளமாக்கி வைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்” இது மிக மிக அவசியம். இந்நாடு உய்ய, இவ்வுலகு உய்ய திருக்குறள் ஆட்சி ஏற்படுவது தவிர வேறு வழியில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறி,

திருவள்ளுவர் அறத்துப்பால் ஆரியர்களின் வேதஸ்மிருதி வாக்கியங்களுக்கு முரண்பட்ட தென்றும், ஆரியர் காட்டிய கடவுள்கள் திருவள்ளுவரின் கடவுளுக்கு முற்றிலும் முரண் பட்டது என்றும், திருவள்ளுவரின் பொருளியல் பாக்கள் யாவும் கவுடல்ய அர்த்த சாஸ்திரத் திற்கு, முற்றிலும் மாறுபட்டதென்றும் அதில் விபசாரத்தொழில் வருமானமும், மது வருமானமும் குறிப்பிட்டிருக்கும் வள்ளுவர் இரண்டையும் கண்டித்திருக்கிறார் என்றும், திருவள்ளுவர் இன்பப் பாக்கள் யாவும் வத்சயனார், காமசூத்திரத்திற்கு, வெறும் ஆண் பெண் புணர்ச்சி லீலைகளைக் காட்டும் நூலுக்கு முற்றிலும் முரண்பட்டு தலைசிறந்த மனோத்த ஆராய்ச்சி நூலாக விளங்குகிறதென்றும் கூறினார்.

பின்னர் பெரியார் அவர்கள் சிறிதுநேரம் பேசிய பின் தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

நேற்றையவிட இன்று மக்கள் திரளாக மாநாட்டில் கலந்துகொண்டனர். கொட்டகை பூராவும் மக்கள் நிரம்பியிருக்கின்றனர். கோவை ராவ்சாகிப் திரு. சி. என். ராமச்சந்திர செட்டியார் அவர்களும், அறிஞர் அண்ணாதுரை அவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டார்கள். நாவலர் பாரதியார் அவர்களும் வந்திருந்தார்கள்.

நெடுஞ்செழியன் அவர்கள் பேசிய பிறகு தொடர்ந்து அன்பழகன் அவர்களும், விருதுநகர் திருக்குறள் சங்கத் தலைவர் வெள்ளச்சாமி நாடார் அவர்களும் திரு. கா. அப்பாதுரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். தலைவர் அவர்கள் வேறு அலுவல் நிமித்தம் வெளியில் செல்லுகையில் எனக்குப் பதிலாக நாவலர் பாரதியார் அவர்கள் தலைமை வகித்துத் தருவார் என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.

நேற்று போல் இன்றும் கோர் ஆபீஸர் தோழர் ரா. ஜெகதீஸ்வரன் தலைமையில் செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினர் 20 பேர் வந்திருந்தனர். சில சிறிய காயங்களுக்கு முதற் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 ‘விடுதலை’ - 

நண்பகல் 12.30 மணிக்கு தோழர் கா. அப்பாதுரை அவர்கள் வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்பு தோன்றியது வங்காளத்தில்தான் என்றும், அவ்வெதிர்ப்பின் தோற்றுதல்தான் பவுத்த மதமும், சமண மதமும் என்று எடுத்துக்கூறி, வாங்காளிகளும் திராவிடர்களே என்றும், திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சி அளிக்கப் பாடுபட்டு வருவோமானால், விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர்களின் ஆரிய மோகமும் மாய்ந்து பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.

பிறகு, “இராவண காவியம்” ஆசிரியர் புலவர் குழந்தை அவர்கள் வள்ளுவரது இன்பப்பாக்களின் காமத்துப் பாலில் கூறப்பட்டுள்ள குறள்களின் மேன்மையைப் பற்றி சிறிது நேரம் பேசிய பிறகு, தலைமை வகித்த நாவலர் பாரதியார் அவர்கள் காமம் என்ற சொல்லையே புலவர்கள் வடமொழிச்சொல் என்றே முடிவு கட்டத் துணிந்துவிட்டார்கள்போல் காணப்படுகிறது என்றும், காமம் தூய தமிழ்ச்சொல்தான் என்றும், வடமொழிதான் அதை தமிழனிடமிருந்து கடன் வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் எடுத்துக்கூறி, காமம் என்ற சொல் தமிழில் காதலையும், வடமொழியில் பொதுவாக எல்லா ஆசைகளையும் குறிக்குமென்றும் தெரிவித்தார்.

இத்துடன் முற்பகல் நிகழ்ச்சி இனிது முடிவுற்றது.

பிற்பகல் நிகழ்ச்சி

பகல் உண்விற்குப் பிறகு மாநாடு மறுபடியும் 3 மணி சுமாருக்கு நாவலர் திரு. சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் கூடியது. சேலம் இராசிபுரத்தில் இருந்து வெளிவரும் “திருக்குறள் ஆட்சி” யின் ஆசிரியர் தோழர் திரு. அரங்கசாமி அவர்கள், நாடெங்கணும் திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி சிறிதுநேரம் பேசினார்கள். பிறகு விடுதலை ஆசிரியர் தோழர் எஸ். குருசாமி அவர்கள், “இந்நாட்டில் விதியும் பார்ப்பனர்களும் தம் ஜாதி அகம்பாவத்தைக் கைவிட்டு திராவிடர்களோடு தனிநாடு காணும் முயற்சியில் ஒத்துழக்க வேண்டும் என்று கருதியே, குறள் மாநாடு போன்ற பொது மாநாடுகள் கூட்டப்பட்டும்கூட, பார்ப்பனர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள தவறியே வருகிறார்கள். பார்ப்பனர்கள் எப்போதும் போன்றே இன்னும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருந்து வருகிறார்கள். பார்ப்பனியம் அடியோடு அழிக்கப்படும் வரை இன்பத் திராவிடத்தைக் காண்பது இயலாது. ஆரிய மனுதர்மத்தின் நேர் எதிர் நூலாகிய வள்ளுவர் குறள் இதற்கு வெகுவாகப் பயன்படுமாதலால் அதன் கருத்துக்களைப் போற்றிப் பரப்ப வேண்டியது திராவிடன் ஒவ்வொருவனுடைய கடமையும் ஆகும் என்று எடுத்துக் கூறினார்.

பெரியார் பேச்சு

பிறகு, பெரியார் அவர்கள் பேச எழவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைகொட்டி பேராரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டனர். பெரியார் அவர்களும் புன்முறுவலோடு கைகூப்பி தமது வணக்கத்தையும் நன்றியறிதலையும் காட்டிவிட்டு, தமது சொற்பொழிவைத் தொடங்கினார்கள். அவர்தம் 2 மணி நேர உருக்கமான சொற்பொழிவை மக்கள் யாவரும் மிக மிக அமைதியாகக் கேட்டனர். சொற்பொழிவின் துவக்கத்திலேயே தான் எப்போதுமே தன் அறிவு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தவன் என்பதியும், அது ஒரு வேளை தவறாக முடியுமோ என்ற அச்சம் சில சமயங்கள் ஏற்பட்டபோதிலும், தாம் தொடர்ந்து உறுதியோடு அதையே ஆதாரமாகக் கொண்டு நடந்து வந்தமையையும் எடுத்துக்கூறி, அதையே காலையில் தலைவர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் ஒப்புக்கொண்டமை. தான் நடந்துகொண்ட வகையே சாலச் சிறப்புடைத்து என்பதைத் தெரிந்து கொண்டதாகவும், மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத்தக்கது என்றும், தன்னறிவு தனக்கு காட்டிக்கொடுக்கும் வரை சற்று தாமதம் ஏற்படினும், பொறுத்திருந்தே பார்த்து நடத்தலே மேலானது என்றும், அதனால் சற்று சங்கடம் ஏற்படினும், அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாதென்றும், இன்று திருக்குறளை தாம் புகழ்ந்து கூறுவதற்கும் தம்முடைய கருத்துக்கள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமோ அல்ல என்றும், அதில் தம் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க, தாம் எப்போதும் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார்.

குறளும் சுயமரியாதையும்

மேலும், அவர் பேசுகையில், திருக்குறளின் மேன்மை தம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே தமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், “இன்றைய நாள்வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாட்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டுவரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூடநம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால் தான் என்றும், இன்று சுயமரியாதைப் பிரசாரத்தால் மூடநம்பிக்கைகளும் ஆரிய மாயையும் பெரும் அளவுக்கு நீங்கி தாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துக்களை ஒப்புக் கொள்ளவும், அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரச்சாரம் வெற்றி பெற்று விட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்துவிட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்ப துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார்.

குறளைக் கொண்டு வாழ்க்கையை நிர்ணயிப்போம்

மேலும் பேசுகையில், சமுதாயத்தின் ஒழுக்கமும் நாணயமும் மிகவும் கெட்டுவிட்ட தென்றும், மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிக மிக மலிந்துவிட்ட தென்றும், இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும் மதமும் மாற்றப்பட்டாக வேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டதோடு, காந்தியார் வணங்கிய கடவுளும் போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும், அவருக்கே பயன்படாது போய்விட்டமை காரணமா கவேனும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், குறளை யார் எழுதியது? அவர் காலமென்ன? என்ற விசாரணையெல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டுவிட்டு நாம், குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின்படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.

உருவக் கடவுளைக் குறிப்பிட்டாரா வள்ளுவர்?

கடவுள் வாழ்த்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறுமுகத்தான் வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை என்றும், அவர் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல்வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் என்றும், உயர்வான மனிதத் தன்மை எதுவென்பதே அவ்வதிகாரத்தில் கூறப்பட்டிருகிறது என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அடுத்த அதிகாரமாகிய வான் சிறப்பைப் பற்றிப் பேசுகையில், மக்கள் ஒழுக்கமாயிருந்தால் மழை பெய்யும் என்ற இன்றைய மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து வள்ளுவர் மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ்தல் கூடும். கஷ்டமின்றி வாழ்தல் கூடுமானால்தான் மக்களிடையே ஒழுக்கம் நிலவமுடியும் என்று குறிப்பிட்டிருப்பதை எடுத்துக் காட்டினார்.

திருவள்ளுவர் பெண்களைப் பற்றி பெண்வழிச் சேரல் என்ற பகுதியில் கூறியிருப்பது சிலரின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டு திருவள்ளுவர் பெண்களை அய்ந்து வகையாக அதாவது தாய் தகப்பன் பாதுகாப்பில் கல்யாணமாகாமல் கன்னிகளாக இருந்துவரும் பெண்கள், கல்யாணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வாழும் பெண்கள், விபசாரத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் விலைமகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தாந்தோன்றித்தனமாக சுதந்திரமாக வாழ்ந்துவரும் பெண் என்று பிரித்தே பேசியிருக்கிறார் என்றும், பெண் வழிச்சேரல் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண்டிர் கடைசியாகக் கூறப்பட்ட சுதந்திரர்கள் என்றும், அவர் வழி சேர்ந்த ஆடவர்களுக்கு கேடு சம்பவிக்கும் என்றுதான் திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே ஒழிய, பெண்களைப் பற்றி இழுக்காக ஒரு வார்த்தைக் கூட திருவள்ளுவர் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வள்ளுவர் - பொதுவுடைமைக்காரர் மேலும், அவர் திருவள்ளுவர் காலம் பொது உடைமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக் காரராகவே விளங்குகிறார். அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார் என்று குறிப்பிட்டுவிட்டு, இத்தகைய புனித சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழவேண்டுமென்றும், நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துக்கள் பரப்பப்படவேண்டுமென்றும், ஆண்டுதோறும் இதுபோன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும் என்றும் கூறி, குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் என்றும், திருக்குறள் பிரசாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விரைவில் செயலாற்றத் துவங்குமென்றும், அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்றும் கூறி, மாநாட்டில் கலந்துகொண்ட புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார். (விவரம் பின்னால் வரும்)

என். எஸ். கிருஷ்ணன் அடுத்தபடியாகப் பேசிய நகைச்சுவை அரசு என். எஸ். கிருஷ்ணன், அவர்கள் குறளுக்கு தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்கு ஒரு சிறிது பயன்படாததாக இருக்கிறதென்றும் நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற் கான முடிவு இம்மாநாட்டின் கண் ஏற்படவேண்டுமென்றும் தெரிவித்துக்கொண்டு சில காங்கிரஸ் அறிவிலிகள் பெரியார் அவர்கள் வெறும் பெருமைக்காகவும், பதவிக்காகவும் பாடுபட்டு வருகிறார் என்று கூறி வருவதுபோல், தம்மால் வேறு எந்த அறிவுள்ள மகனாலோ கூற இயலாதென்றும், திராவிடன் தலைநிமிர்ந்து வாழவேண்டும், மக்கள் யாவரும் மனிதத் தன்மை பெற்று மனிதர்களாக வாழவேண்டுமென்றும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டுதான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டு ஆற்றி வருகிறார் என்றும், அவர் வாழ் நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தரவேண்டுமென்றும்கூறி “இடுக்கண் வருங்கால் நகுக” என்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்கவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

சி. என். அண்ணாதுரை

பிறகு, அண்ணாதுரை அவர்கள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்டவேண்டுமென்றும், குறளுக்கு நல்லதோர் உரைகாண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஓர் நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு அமைக்கப்படவேண்டுமென்றும், அச்செயற்குழுவுக்கு திரு. வி. க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைத் செயலாளராக இருக்கவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா. அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியவர்களை அங்கத்தினர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டும், அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக்கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்களைப் பிரேரேபிக்குமுகத்தான், மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார், அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூல்கள் பல தேடிப் பார்த்தபோது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத்கீதை, இராமாயணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் இவை யாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரிய பிரசாரத்தால் புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள், திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவைகள் இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டித் திராவிடர்களுக்கும் - எல்லா தமிழர்களுக்கும் தருகிறார் என்றும், இனி திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும், திராவிடன் கையில் குறளிருப்பதை பகவத்கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் கண்பார்களாயின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப்போவது நிச்சயம் என்பதை உணர்ந்து, நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல், தம் அகம்பாவத்தையும் மூட நம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறினார்.

நல்லதோர் செயல் திட்டம்

தளபதி அண்ணாதுரை மேலும் பேசுகையில், பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார் என்றும், அவர் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை கைவிட்டறியாத நாம், பெரியார் ஓர் நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்ல பண்ணையாளர்களாகிய நாம், அவர்தம் முயற்சி வெற்றிபெற எல்லாவகையாலும் பாடுபடுவோம் என்றும், திருக்குறளை துணைக்கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், நம் வாழ்வைக்கெடுக்கவேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படுமோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும் என்றும், கம்பருக்குத் திருவிழாக் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும் என்றும், விரைவில் வெற்றிமுரசு கொட்டி நமது பெரும்படைப் போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும்படை, ஒவ்வொரு போரிலும் வெற்றியே கண்ட நம் பெரும்படை திக்கெங்கணும் புறப்படும் என்றும், வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழ செயலாற்றும் என்றும் சூளுரை கூறி தம் சொற்பொழிவை முடித்தார்.

தீர்மானங்கள் யாவும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு தலைவரின் சுருக்கமான முடிவுரையுடன் கூட்டம் இனிது கலைந்தது.

 ‘சந்திரமோகன்நாடகம்

சென்னை 16.01.1949 இரவு 10 மணிக்கு தோழர் அண்ணாதுரை அவர்கள் குழுவினரால் “சந்திரமோகன்” என்கின்ற நாடகம் வள்ளுவர் மாநாட்டுப் பந்தலில் இனிது நடிக்கப்பெற்றது. நாடகத்தைக் காண வேண்டி மக்கள் 7.30 மணிமுதற்கொண்டே வந்து குழும ஆரம்பித்துவிட்டனர். 9 மணிக்குள்ளாகவே பந்தல் நிறைந்துவிட்டது. இடமின்றி வெகுபேர் நின்றுகொண்டே இருந்தனர். நாடகம் சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. தெருவிலும் சுற்றுப்புறத்திலும் ஏராள மக்கள் இருந்து கொண்டு நாடகத்தின் மூலம் விளக்கப்பட்டு பொருள் செறிந்த கருத்துக்களைக் கேட்கும் அந்த அளவுக்காவது தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று இன்புற்றிருந்தனர்.

ஆரியத்துக்கு அடிபணிந்த மன்னர்கள்

நாடகம் வெகு விமரிசையாகவும் மிக அமைதியாகவும் அப்பெரிய கூட்டத்திற்கிடையே நடைபெற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இம்மாதிரி பெருந்திரளான மக்களிடையே சென்னையில் நாடகம் நடைபெற்றிருக்க முடியாது என்பது வெளிப்படை. நாடகம் சுமார் 2 மணிக்கு முடியவும் பெரியார் அவர்கள் நாடகக் குழுவினரைப் பாரட்டு முகத்தான், இதுவரை இந்நாட்டில் பெருமையோடு நிலவிநின்ற அரசர்கள் யாவரும், தமிழ்நாட்டு மூவேந்தர் உட்பட யாவருமே சிவாஜியைப் போன்று ஆரியத்திற்கு அடிபணிந்தே, ஆரியக் கொள்கைகளை ஆதரித்து அவற்றை பிரசாரம் செய்தே தம் ஆட்சியை நடத்தி வந்திருக்கின்றனர் என்றும், ஆரியர்கள் எப்படி பலவகையாக சூழ்ச்சி செய்து அரசர்களைத் தம் அடிமையாக்கிக் கொண்டதன் மூலம் தம்மையும் தம் வஞ்சக வாழ்வையும் எப்படிப் பாதுகாத்துக் கொண்டனர் என்பதையும் எடுத்துக்காட்டுவதே இந்நடிப்பின் நோக்கமென்றும், இதை நம் மக்கள் யாரும் உணர்ந்து ஆரியம் அழிய பகுத்தறிவு ஓங்கப் பாடுபட வேண்டுமென்றும், இதுபோன்ற சீர்திருத்தக் கருத்துகளை உண்மையான சரித்திர ஆதாரங்கொண்ட கருத்துகளை எடுத்துக்காட்டப்படும் நடிப்புகளைப் பெரிதும் ஆதரிக்க வேண்டுமென்றும், புராணப் புரட்டுகளை மறைத்துக்காட்டும் புராண சம்பந்தமான நடிப்புகளை ஆதரிக்கக் கூடாதென்றும் தெரிவித்துக்கொண்டார்.

நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்!

பிறகு பேசிய அண்ணாதுரை அவர்கள், நாடகத்தில் தம்முடன் சேர்ந்து நடித்த மற்ற தோழர்களுக்கும், நாடகத்திற்கு வந்து கவுரவித்த பொதுமக்களுக்கும் நன்றி கூறுமுகத்தான் தம்மால் எழுதப்பெற்று நடிக்கப்பட்ட “சந்திரமோகன்” என்கின்ற நாடகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சரித்திர ஆதாரம் கொண்டதே என்பதற்கு ஆதாரமாக 15. 01. 1949 அன்று வெளியே “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகையில் பண்டிதர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் சிவாஜி சூத்திரன் என்ற காரணத்தால் முடிசூடத் தகுதியற்றவன் என்று கூறப்பட்டது, பிறகு காசி காகப்பட்டர் அவர்களால் ஓமத்தின் மூலமும், பிராமணர்களுக்கு சமாராதனை செய்யப்பட்டதன் மூலமும் சுத்தியடையச் செய்து சத்திரியனாக்கப்பட்டு முடிசூட்டப்பட்டதென்பது, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் ஒரு லட்சம் பார்ப்பனர்கள் தம் மனைவி மக்களோடு சிவாஜியின் நாட்டை வந்தடைந்து நாலு மாதம் உண்டு களித்தது ஆகியன கூறப்பட்டிருப்பதைப் படித்துக்காட்டி, தம் இந்நாடகத்தைத் தடை செய்ய நினைக்கும் இன்றைய நம் மாகாண அமைச்சர்கள் இதைக் கண்டேனும் தெளிவுபெற வேண்டுமென்றும் எடுத்துக்கூறினார்.

டி. கே. சண்முகம்

பிறகு நடிகர் டி. கே. ஷண்முகம் அவர்கள், பெரியாரின் விருப்பத்திற்கிணங்கி நடிகர்களைப் பாராட்டு முகத்தான் பரம்பரை நடிகர்களைக் காட்டிலும் மிகத் திறம்பட நடித்த தோழர்களை பொதுவாகவும், தோழர் சம்பத் அவர்களுடைய நடிப்பைச் சிறப்பாகவும் பாராட்டியதோடு “அறிஞர் அண்ணாதுரை” அவர்கள் பேச்சில் வல்லவர், எழுத்தில் வல்லவர் என்று மட்டுமே இதுகாறும் அறிந்திருந்தேன். இன்று அவர் தம் நடிப்பின் மூலம் நடிப்பிலும் தனக்கு ஒப்பானவர் இத்தமிழ்நாட்டின்கண் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் கூறியதோடு, இதுவரை எந்த நாடக அரங்கிலும் இவ்வளவு திரளான மக்களை தான் கண்டதில்லை என்றும், அவர்கள் மிகவும் அமைதியாக நடந்து கொண்டமை மிகவும் ஆச்சரியப்படத் தக்கதென்றும் இந்நாடகத்தின் தனிச் சிறப்பே இத்தனைக்கும் காரணம் என்றும் கூறி, தனக்கு இத்தகைய வாய்ப்பைத் தந்த பெரியாருக்கும் மாநாட்டினருக்கும் நடிக குழுவினருக்கும், தம் நன்றியறிதலை, தெரிவித்துக்கொண்டார்.

இறுதியாக தோழர் அன்பழகன் அவர்கள் மாநாட்டின் சிறப்புக் காரணமாயிருந்து உதவிய அனைவருக்கும், இடம் தந்து உதவினோர், திரைகள் தந்து உதவினோர், மின்சார வசதி செய்து தந்து உதவினோர், சொற்பொழிவாற்றி உதவினோர், தலைமை தாங்கி உதவினோர், தொண்டர்களாகவும் செயலாளர்களாகவும் இருந்து பணியாற்றி உதவினோர், நாடகம் நடித்து உதவினோர், திரளாக வந்திருந்து மாநாட்டைச் சிறப்பித்து உதவினோர் யாவர்க்கும் நன்றியறிதல் கூறியபின் இரவு 2.30 மணிக்கு மாநாடு நிகழ்ச்சி இனிது முடிவுற்றது.

மாநாட்டுக்குப் பெருந் திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டம் ஒழுங்குற அமர்ந்தும், நின்றும் நிகழ்ச்சிகளைக் கவனிக்க ‘பி’ டிவிஷன் போலிஸ் வெகு சாமர்த்தியமாக சமாளிப்பு முறைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்புலனஸ் குழுவின் தொண்டும் பணியும் மிக மிக பாராட்டத்தக்கது.

 ‘விடுதலை’ - 16.01.1949 & 17.01.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: