இன்று (15.01.1948) காலை 9 மணிக்கு பிராட்வேயில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான பந்தலில் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு பெருமிதத்துடன் ஆரம்பமாயிற்று. பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமை தாங்கினார். நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார் துவக்கவிழா உரையாற்றினார். தமிழ்ப்பெரியார் திரு. வி. க. தனது வரவேற்புரை ஆற்றினார்.

மாநாட்டில் கட்சி, கருத்து வேற்றுமையின்றி தமிழ் அறிஞர்களும் உயர்தர அதிகாரிகளும், புலவர் பெருமக்களும், நடிப்புக் கலைஞர்களும், வழக்கறிஞர்களும் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் கடல் எனக் கூடியுள்ளனர்.

காலை 8 மணி முதற்கொண்டே மக்கள் மாநாட்டுப் பந்தலில் குழும ஆரம்பித்துவிட்டனர். பெரியார் அவர்களும் 8.15 மணிக்குள்ளாகவே வந்து பந்தலின் ஒரு பகுதியில் அமர்ந்து தோழர்களை வரவேற்று மகிழ்வுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

9.45 மணிக்கு நகைச்சுவை அரசு தோழர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தம் சகாக்களுடன் வந்து சேரவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையளித்து உபசரித்தார்கள்.

சரியாக 10.15 மணிக்கு பன்மொழிப் புலவர் டி.பி.மீனாட்சி சுந்தரனார் எம்.ஏ.பி.எல்., எம்.ஓ.எல்., அவர்கள் மாநாட்டுப் பந்தலையடையவும், பெரியார் அவர்கள் அன்னாரை வரவேற்று இருக்கையில் அமர்த்தினார்கள்.

சரியாக 10.30 மணிக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும், தோழர் டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்களும் மாநாட்டுப் பந்தலடையவே மாநாடு கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் அவர்களை வரவேற்று மேடையின்கண் அழைத்து வந்தார்.

மாநாட்டுச் செயலாளர் தோழர் சி.டி.டி.அரசு அவர்கள் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கத்தை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்று, திரு. சோமசுந்தர பாரதியார் அவர்களை மாநாட்டை திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிறகு, நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் துவக்கவிழா ஆற்றும் வகையில் கம்பீரமாக எழுந்து நின்று தமிழர்களின் தனிச்சிறப்பு விழாவான பொங்கல் விழாவிற்குப் பிறகு இம்மாநாடு கூட்டப்பட்டது சாலச் சிறப்பானது என்று எடுத்துக்கூறி, ஆரியக் கலாச்சாரத் திரட்டு என்று பலராலும் கருதப்பட்டு மனப்பாடம் செய்யப்பட்டு வரும் வள்ளுவர் குறளை, பண்டைத்தமிழனின் சிறந்த பண்புகளை எடுத்துக் கூறும் நூல் என்பதை விளக்கிக் காட்டுவதே இம்மாநாட்டின் நோக்கமென்று எடுத்துக்கூறினார். அவர் மேலும் பேசுகையில், திருக்குறள் தொன்மைத் தமிழ் நூல் என்பதற்கு ஆதாரமாக “தொன்மை நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இலக்கணப்படி வாழ்த்தியல் வகை நான்கும் முதல் நான்கு அதிகாரங்களாக அதாவது கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அதன் வலியுறுத்தல் என்று நான்கு அதிகாரங்களாகப் பாடப் பெற்றிருக்கிறது. அதோடு தொல்காப்பிய இலக்கணப்படி அறம், பொருள், இன்பம் என்ற மூன்றைப்பற்றி மட்டுமே பாடப் பெற்றிருக்கிறது. மேலும், திருக்குறள் இன்று சங்க நூல்கள் என்று வழங்கப்பட்டுவரும் யாவற்றிலும் கையாளப்பட்டும் இருக்கிறது. இப்படியான தமிழர் சால்பை விளக்கி எழுதப்பெற்ற இந்நூலை இடைக்காலத் தமிழ்ப் புலவர் ஏதும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர் போல் பாசாங்கு செய்து குறளை மனு முதலான வல்லுநர் வடமொழியில் கூறியிருப்பதைத் தமிழில் சாரமாகத் திரட்டித் தரும் நூல் என்று கூறி ஆரிய நூலாக்கிவிட்டனர்” என்று கூறி, இடைக்காலத் தமிழ்ப் புலவர்களின் போக்கை வெகுவாகக் கண்டித்தார். மேலும் பேசுகையில், “திருக்குறளைப் பாராட்டுவது தமிழைப் பாராட்டுவதாகும், தமிழர் பண்பைப் பாராட்டுவதாகும், தமிழ் சால்பைப் பாராட்டுவதாகும்” என்று கூறி தனக்கு இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருளிய பெரியாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, “கடன் என்ப நல்லவையெல்லாம் செய்தல்” என்ற தமிழ்ப்பண்பை ஒட்டி நாடு வாழட்டும், மக்கள் வாழட்டும், நல்லதெல்லாம் வாழட்டும் என்று வாழ்த்துக்கூறி, எல்லோரும் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழன் பெருமையுணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு மாநாட்டைத் திறந்து வைத்தார்கள்.

பாரதியார் பேசிக் கொண்டிருக்கையிலேயே தமிழ் பெரியார் திரு. வி. க. அவர்களும், திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்களும் வந்து சேரவும், நாவலர் பாரதியார் அவர்கள், மாநாட்டில் கலந்து கொண்டு தமிழைத் கெளரவம் செய்யும் அளவுக்காவது உடல் நலம் இடம் கொடுத்ததற்காக மகிழ்வடைவதாகத் தமிழ்ப் பெரியாரிடம் தெரிவித்து, தமது வணக்கத்தைத் தெரிவித்தார்.

நாவலர் பாரதியாரின் திறப்பு விழா சொற்பொழிவைத் தொடர்ந்து வரவேற்புக் கமிட்டித் தலைவர் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் தம் வரவேற்புச் சொற்பொழிவைத் துவங்கினார்.

தமிழ்ப் பெரியார் வரவேற்புரை

தமிழ்ப் பெரியார் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில் திருவள்ளுவரின் உண்மை வரலாறு திருக்குறளில்தான் காணப்படுகிறதென்றும், திருக்குறளில் உள்ளபடி அறிந்துகொள்ள Sexual Science - ம், Marxism - மும் நன்கு தெரிந்திருத்தல் அவசியம் என்றும், திருவள்ளுவர் உலகில் ஒரு ஒப்பற்றவர் என்றுக் கூறி, உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் அதிகநேரம் பேச இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு நம் மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவரான பெரியார் தொடர்ந்து வரவேற்புரையாற்றுவார் என்றும், பெரியாருடைய இயக்கம் எந்த ஒரு ஜாதிக்கோ, சமயத்திற்கோ, நிறத்திற்கோ, நாட்டுக்கோ உரிமையுடைத்தல்ல; உலகுக்கே உரியது அனைவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற உயர் நீதிக்காக பாடுபடும் இயக்கம் என்றும், அவ்வியக்கத்திற்கு ஆக்கந்தரும் சிறப்பான தமிழ் நூல் திருக்குறள் என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் பேருரை

பிறகு பெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் அதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்து பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

 

நண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி. பொ. வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் தோழர் பாவலர் அப்துல்காதர் அவர்களும், தோழர் டி. கே. நாராயணசாமி நாயுடு அவர்களும் தொடர்ந்து பின்மொழிய நீண்ட கைத்தட்டலுக்கிடையே பன்மொழிப் புலவர் தி. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தம் தலைமையுரையில் “வள்ளுவர் புலவர் உலகத்திலே இதுகாறும் வாழ்ந்தது போதும். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்ற பழமொழிக்கிணங்க வெறும் மேற்கோளுக்காக மட்டுமே இதுகாறும் புலவர்களுக்கு நம் குறள் பயன்பட்டு வந்தமை இப்போதேனும் மாய்ந்து போகட்டும்! கிறிஸ்தவன் ஒவ்வொருவனுக்கும் விவிலிய நூல் (பைபிள்) எப்படியோ, அதுபோல திருக்குறளும் தமிழனது திருமறை நூலாக விளங்கும் வாய்ப்பை அடையட்டும். மக்களெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தையே அடிப்படையாகக் கொண்டு பண்டைய தமிழனாகிய வள்ளுவனால் எழுதப்பட்ட நூல் பாமரர்களுக்கும் இனி பயன்படட்டும். அமெரிக்க பேரறிஞர் வில்கி அவர்கள் விரும்பிய ‘ஒரே உலகம்’ நம் திருக்குறள் மூலமேனும் இனிது வந்தடையட்டும்” என்று குறிப்பிட்டார்.

அனுபவ உண்மைகள் நிறைந்த குறள்

மேலும், திருக்குறளின் பலவான பெருமைகளை விளக்கிக் கூறுமுகத்தான் தலைவர் அவர்கள் “திருக்குறள் எந்த மதச்சார்பும் அற்ற நூல் எனவேதான் எல்லோரும் எல்லாக் காலத்திலுமே தமக்கேற்புடைத்து, தமக்கும் திருக்குறள் ஏற்புடைத்து என்றுப் போற்றிப் பாராட்டி வந்திருக்கின்றனர். திருக்குறள் பெரும் பெரும் அனுபவ உண்மைகளைக் கொண்டிருப்பதால்தான் முடிஅரசு காலத்தில் எழுதப்பட்ட நூலாயிருந்தும்கூட இன்றைய குடிஅரசு காலத்திலும், அது நம்மால் போற்றப்பட்டு வருகிறது. அழகிய அறப்பாக்களுடனும், அறிவு சான்ற பொருட்பாக்களுடனும் குறள் மிளிர்வதோடு, இலக்கியச் சுவை மிக்க இன்பப் பாக்களும் குறளை வெகுவாக அழகு செய்கின்றன. மேலும், சமுதாயத் தொண்டு செய்வதற்கு இனியதோர் தூண்டுகோலாகவும் திருக்குறள் அமைக்கப்பெற்றிருக்கிறது” என்று கூறியதோடு, “வானளாவிப் பறக்க வான ஊர்தி கண்ட மனிதனால், கடலின் ஆழத்திலெல் லாம் ஊடுருவிச் செல்லும் கப்பலைக் கண்டுபிடித்த மனிதனால், அனைத்தையும் அழிக்கவல்ல அணுக்குண்டையும் கண்டுபிடித்த மனிதனால் எதைத்தான் சாதிக்க முடியாது. எனவே, ஆற்றலுண்டு உங்கள் யாவருக்கும். அவ்வாற்றலைத் துணைகொண்டு வள்ளுவர் தந்த தமிழ் நூலாகிய திருக்குறளை மக்களுக்கெல்லாம் எடுத்து ஓதுங்கள். மனிதத் தன்மையில் அனைவருக்கும் பற்றுதல் ஏற்படப் பாடுபடுங்கள். எதிர்காலமேனும் இன்ப வாழ்வாக, அன்பு வாழ்வாக இருக்க அனைவரும் பாடுபடுங்கள்” என்றும் குறிப்பிட்டார்.

சரியாக 1.15 மணிக்கு தலைமையுரை முடியவும் மாநாடு நண்பகல் உணவுக்காக கலைந்து மறுபடி 3.30 மணிக்கு கூடியது.

பிற்பகல் நிகழ்ச்சி

தலைவர் வர சற்று காலதாமதம் ஆனதால் தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு மாநாடு மறுபடியும் 3.30 மணிக்கு இனிது துவக்கமாகியது.

திருக்குறள் முனுசாமி சுவைமிக்கப் பேச்சு!

தலைவரின் முன்னுரைக்கு பிறகு தோழர் திருக்குறள் முனுசாமி அவர்கள் திருக்குறள் நன்கு படித்து தெளிவாகத் தெரிந்து கொள்வது எப்படி என்று நகைச்சுவைத் ததும்ப அரிய சொற்பொழிவாற்றினார்கள். அச்சொற்பொழிவில் திருவள்ளுவர் சொற்களை மிகவும் வரம்பு காட்டியும் கையாண்டிருக்கிறார் என்றும், எனவே ஒவ்வொரு குறளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்து அவற்றின் பொருளை உரையாசிரியர் மூலம் தெரிந்துகொள்ள முயற்சிக்காமல், தன் அறிவு கொண்டே சிந்தித்துப் பார்த்துத் தெளிவுபெற முயற்சிக்க வேண்டுமென்றும், குறளில் கையாளப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் விரிவான அர்த்தம் குறளிலேயே ஏதாயினும் ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டே இருக்கிறதென்றும் பல உதாரணங்களோடு விளக்கிக் கூறினார்.

தலைவருள் தலைவர்

சுமார் 4.15 மணிக்கு திரு. தி. பொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் வந்து தலைவராகப் பதவியை ஏற்றுக் கொண்டதும், பெரும் புலவர் திரு. டி. எஸ். கந்தசாமி முதலியார் அவர்கள் அறப்பாலில் கூறப்பட்டுள்ள பாக்களில் பலவற்றை ஓதி, வள்ளுவர் பெருமை தெற்றென விளங்கும்படி அவற்றில் புதைந்து கிடக்கும் சொல் நயத்தையும், பொருட் செறிவையும் எடுத்துக்கூறி வள்ளுவர் கூறியுள்ள சிறப்பான பண்புகளைக் கடைபிடித்து நடந்து வருவதன் மூலமே எவனும் முன்னேற்றம் அடைதல் கூடும் என்பதை நன்கு விளக்கிக் காட்டியும், தலைவருள் தலைவனும் புலவருள் புலவனும் ஆன வள்ளுவர் தமிழ்க்கலையுள்ள ஓர் ஒப்பற்ற கலையாக திருக்குறளை இயற்றிக் கொடுத்துள்ளமையை வாழ்த்திப் பாராட்டிகூறி, அன்னாரின் திருக்குறளை யவரும் மாசறக் கற்றல் வேண்டும். அதன்படி நடத்தலும் வேண்டும் என்று கூறி திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்கள்.

பரிமேலழகர் உரை நிரந்தரமன்று

பிறகு, தலைவர் திரு. தி. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் முடிவுரையாக பரிமேலழகர் உரை எந்நாளைக்கும் இருந்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றும் இல்லையென்றும், அவர் அவர் காலத்திய மக்களுக்கேற்ப குறளுக்கு பொருள் தந்து அதைப் பயிலும்படி செய்தார் என்றும், இன்றைய மக்களின் அறிவு வளர்ச்சிக்கேற்பவும் அவ்வுரையை திருத்தம் செய்து வெளியிடவோ அல்லது புது உரையையே எழுதித் தரவோ யாரும் முயற்சிக்கலாமென்றும், இக்காலத்திய மக்கள் குறளுக்கு மெய்யுரை காணத் தகுதியுடையவர்கள் என்றும் கூறி, குறளைக் குறித்து சொற்பொழிவாற்றிய அறிஞர்களையும் பாராட்டினார்.

பிறகு, பெரியார் அவர்கள் அறிவுரை ஆற்றிய பெரும்புலவர் திரு. டி. எஸ். கந்தசாமிப் புலவர் அவர்களுக்கும், மாநாட்டின் தலைவராயிருந்து சிறப்பாக நடத்திக் கொடுத்த திரு. தி. பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கும் தம் மனமார்ந்த நன்றியறிதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

சங்க கால நாகரிகம்

வேறு அலுவல் நிமித்தம் தலைவர் அவர்கள் விடை பெற்றுச் சென்றதும் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமையில் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. பேராசிரியர் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் எந்த ஒரு நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் தெளிவாக அறிந்து கொள்ள அந்நூலாசிரியரின் காலத்தை அறிந்து கொள்ள வேண்டுவது அவசியம் என்றும், அவர் காலத்தில் மக்களின் பழக்க வழக்கங்களை நன்று அறிந்துகொள்வதன் மூலமே அந்நூலாசிரியரின் உள்ளக் கிடக்கையையே ஒழுங்குற அறிந்துகொள்ளல் கூடுமென்றும் உதாரணங்களோடு விளக்கிக் கூறி, சங்க இலக்கியங்களை நன்கு கற்றுள்ள பாரதியார் அவர்கள் குறளுக்கு விரிவுரை ஆற்றத் தக்கவர் என்றும் எடுத்துக்காட்டினார். அவர் மேலும் பேசுகையில், சங்க இலக்கியங்களை நன்கு பயின்றதன் பயனாக புலவர்களுக்குள்ளே இன்று பெருவிழிப்பு ஏற்பட்டிருக்கிறதென்றும், சங்க கால நாகரிகம் மறுபடியும் தமிழ்நாட்டில் தோன்றி நிலவ வேண்டுமென்றே எல்லோரும் விரும்புகிறார்கள் என்றும், புலவர்களின் இவ்வுள்ளச் சடக்கையே தமிழ்ப் பொதுமக்களின் உள்ளக் கிடக்கையாகவும் மாறுமானால் தமிழன் தன்னாட்சி பெற்றுத் திகழ்வதும், தமிழ்நாடு தனி நாடாகித் திகழ்வதும் விரைவில் கைகூடுமென்றும் தெரிவித்தார்.

வள்ளுவரும் பெரியாரும்

பிறகு, விருதுநகர் செந்தில்குமாரர் நாடார் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு. இலக்குவனார் அவர்கள் ‘இதனை இதனால் இவன் முடிக்குமென்று அதனை அதனால் அவன் கண் விடல்’ என்ற குறள் மொழிப்படி திருக்குறளை அனைத்துலகுக்கும் எடுத்தோதி, அதற்கு சிறப்பை உண்டாக்கித் தர இப்பெரியார் ஒருவராலேயே முடியும் என்பதை உணர்ந்தே இயற்கையானது திருக்குறளை பெரியார் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறதென்றும், இயற்கைகூட வள்ளுவர் கட்டளைப்படியே நடக்கிறதென்பது வள்ளுவர்க்கு பெருமை தருவதாகும் என்றும் எடுத்துக்கூறி, ஒன்றிரு புலவர்கள் தமிழனுக்கு தகுதியான நூல்கள் கம்பராமாயணமும், திருக்குறளும் என்று கூறி வருவது ஏற்புடைத்தல்ல என்றும், கம்பனையும், வள்ளுவனையும் ஒப்பிடுவது பாம்பையும் பசுவையும் ஒப்பிட்டுப் பார்ப்பதாகும் என்றும் உதாரணங்களோடு விளக்கிக்கட்டினார். மேலும் பேசுகையில், அவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்றும், “உழவர்க்கு எஞ்ஞான்றும் ஒப்பார் இல்” என்றும் உழைப்பாளிகளைப் போற்றியிருக்கின்றமை மார்க்ஸிஸத்தையே குறிப்பதாகும் என்றும், மார்க்ஸிய கொள்கைகளை விளக்க ஒரு லெனின் தோன்றியது போல் வள்ளுவருடைய கருத்துக்களுக்கு விரிவுரை வழங்க நமது பெரியார் அவர்கள் தோன்றியுள்ளார். எனினும் அரசியல் நெறியை எடுத்துக் கூறும்போதுகூட வள்ளுவர் அறம் வழுவாது உயர் நெறிகளை எடுத்தோதியிருக்கிறார் என்றும், இன்றைய சர்க்கார் உண்மையிலேயே மதச்சார்பு அற்ற சர்க்காராக நிலவ வேண்டுமானால் திருக்குறளை அதற்கு ஏற்ற வழிகாட்டி என்று கூறி பழந்தமிழனான வள்ளுவர், புரட்சித் தமிழ் மகனான வள்ளுவன், சீர்திருத்தக்காரனான வள்ளுவன் எழுதிய குறளை யாவரும் படித்து அதன்படி நடந்து இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டுமென்று கூறினார்.

ஒழுக்கத்தின் உயர்வு

பிறகு தலைவர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள், அந்தணர் என்பதும், பார்ப்பனர் என்பதும் வெவ்வேறு வார்த்தைகள் என்பது எடுத்துக்காட்டப்பட்ட உண்மையே என்றும், அந்தணர் பேட்டையும் பார்ப்பான் சேரியும் அடுத்தடுத்து இருப்பதே இதற்கு போதுமான சான்றாகும் என்று கூறி, திருக்குறள் வழிப்படி யாவரும் நடந்து வருவோமானால் நம்மை யாரும் குறை கூறமாட்டார்கள் என்றும், கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், நாம் ஒழுங்காக நடந்துகொண்டால் அதுவே போதுமான தென்றும் எடுத்துக்கூறினார்.

அஷ்டாவதானம்

பிறகு திரு. சுப்ரமன்யம் அவர்களின் அஷ்டாவதானம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல கேள்விகள் கேட்டு அவர் சரியாக விடை கூற மக்கள் யாவரும் அவரது நினைவு சக்தியைப் புகழ்ந்து பாராட்டினர். அவர் வெறும் தானக்காரர் மட்டுமல்ல என்பதை பல குறள்களுக்கு அறிவுசால் விரிவுரை கூறுமுகத்தான் நிரூபித்துக் காட்டி, மக்களின் போற்றுதலுக்கு ஒருக்கே உரியவராவார். அன்னாரது அஷ்டாவதாரம் சுமார் இரவு 8.15 மணி முடிவுறவும், நன்றியறிதல் கூறப்பட்டு மாநாடு மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு இனிது கலைந்தது.

 ‘விடுதலை’ - 15.01.1949 & 16.01.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: