இந்நாட்டில் இன்று நடைபெறும் தேசீயம் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமென்றும் அப்போராட்டமானது ராமாயணக் கதையில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஏற்பட்ட போரில் ஆரியர்கள் மிருகப்பிராயமுள்ள காட்டு மனிதர்களான இழிகுல திராவிட மக்களை பல சூழ்ச்சிகளால் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு அனுமார் (குரங்கு) என்று பெயர் கொடுத்து திராவிட கூட்டத்தையும் அவர்களது அரசர்களையும் ஒழித்தது போல் இன்றைய பார்ப்பனர்கள் திராவிட மக்களில் மனிதத் தன்மையும் மானாபிமானமும் அற்ற சில இழிமக்களை பல சூழ்ச்சிகளால் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு மற்றத் தமிழ் மக்களை அழுத்தி ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருகிறார்கள் என்றும் பல தடவை தக்க புள்ளி விபரம், ஆதாரம் ஆகியவைகளுடன் எழுதி வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் பழஞ்சரித்திரம் என்னும் புராணங்களில் தேவர்கள் - ராக்ஷதர்கள் சண்டை என்றும் தேவர்கள் - அசுரர்கள் சண்டை என்றும் காணப்படுவதை சகல விதத்தும் ஒத்தது போலவே இன்று திராவிடர் என்றும் ஆரியர் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றும் சுமார் 100 வருஷகாலமாக பலவித போராட்டங்கள், கட்சிப் பிரதி கட்சிகள் மத சமுதாயங்களின் பேரால் நடந்து வந்து இன்று ஒரு அளவுக்கு மத சமுதாயப் பேரால் இனி போர் நடத்த முடியாது என்று உணர்ந்த பார்ப்பனர்கள் புதியதொரு வழி கண்டுபிடித்து அதன் பேரால் ஆதிக்கம் செலுத்தக் கருதிய சூழ்ச்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் இன்று உணர்ந்து பல வழிகளிலும் எதிர்த்தடிக்க துணிந்துவிட்டார்கள்.

என்றாலும் குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புகளான சில பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால் அந்தப் படைகளை வைத்துக் கொண்டு சிற்சில சமயங்களில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று மற்றவர்களின் முற்போக்கைத் தடுத்து விடுகிறார்கள்.

ஆகவே இதை வெளியாக்கி இப்போரை திறம்பட நடத்தி பார்ப்பன ஆதீக்கத்தை முறியடித்து வெட்டி வீழ்த்துவதையே கருமமாகக் கொண்ட நம் நிலை அடிக்கடி மிக்க தொல்லைப்படத் தக்கதாகவும் துன்பப்படத்தக்கதாகவும் ஏற்பட்டு வருவது வாசகர்கள் உணர்ந்ததேயானாலும் நமக்கு அவற்றின் பலன் முடிவில் வெற்றி முகத்தையே காட்டி வந்திருக்கிறது. இனியும் அது போல எவ்வளவோ தொல்லையும் துன்பமும் நமக்கு ஏற்பட்டாலும் அதன் மூலம் ஏற்படும் முடிவு வெற்றிக்கு ஆதாரமாய் இருக்குமென்று கருதியே ஒவ்வொரு தொல்லையையும் துன்பங்களையும் வெற்றிக்கறிகுறியாய்க் கொண்டு போரை நடத்திவருகிறோம்.

உதாரணமாக நீடாமங்கல நிகழ்ச்சி இன்று சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் கை கட்டி நின்று பதில் சொல்ல வேண்டிய நிலையை கொண்டு வந்து விட்டு விட்டது. மற்ற நமது தொண்டுகளும் இன்று பாமர மக்கள் முன்னிலையில் நம்மை மாபெரும் தேசத்துரோகியாகவும் செல்லுமிடங்களில் எல்லாம் எதிரிகளின் காலித்தனங்களுக்கு ஆளாக வேண்டியதாகவுமான நிலையைக் கொண்டு வந்துவிட்டு விட்டன.

மற்ற சாதாரண நிலைமையில் எவ்வித அசெளகரியங்களுக்கும் யாரையும் எவ்வளவுக்கும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நம் பொருளாதார நிலைமை இன்று நடக்கும் நமது போருக்கும் அதன் சைன்யங்களாகிய பத்திரிகைக்கும் பல கூட்டு வேலைத் தோழர்களின் நாணய வாழ்வுக்கும் பொது மக்கள் கையை எதிர்பார்க்கும் நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது.

எதிரிகளுக்கு ஸ்தாபனமுண்டு, பொறுப்பு உண்டு, கூட்டுக்கவலை உண்டு, பொது மக்களிடம் கோடிக்கணக்காய் பொருள் திரட்டும் தந்திரம் உண்டு.

நமக்கு என்ன உண்டு? சகலமும் நாமே தான் என்னும் ஆணவமும் - "அகம்பாவமும்" தான் உண்டு. ஏன் என்றால் அப்படிப்பட்ட ஆணவமும் அகம்பாவமும் கொண்டதால் தான் இவ்வளவு காலமாவது நாம் உயிர்வாழ முடிந்தது. "நமக்கென்ன குறை? எதற்கும் மற்றவர்கள் இருக்கிறார்கள்; ஸ்தாபனங்கள் இருக்கின்றன; கவலையும் பொறுப்புமுள்ள சக்தி வாய்ந்த தோழர்கள் இருக்கிறார்கள்" என்று சிறிதாவது கருதி இருந்திருப்போமானால் நமது உணர்ச்சியும் ஊக்கமும் குறைவு பட்டு தொட்டதிலெல்லாம் தோல்வியே தலைகாட்டி பொது வாழ்விலிருந்து விலகி மறைந்திருப்போம்.

ஆகையால் ஓய்வு ஒழிச்சல் சாந்தி சலிப்பு இல்லாமல் "நம் தலையில் தான் பாரம் இருக்கிறது. தலையை எடுத்துக் கொண்டால் சுமை முழுதும் கீழே விழுந்து விடும்" என்கின்ற பயத்துடன் சதா தலை கொடுத்த வண்ணமாய் இருப்போம்.

நமக்கு உதவியாய் நம்கூட தோள் கொடுப்பதற்கு ஆள் இல்லையென்றோ பொருள் கொடுப்பதற்கு ஆள் இல்லையென்றோ அந்தப்படி இதுவரை யாரும் தோளும், பொருளும் கொடுத்து வரவில்லை என்றோ நாம் சொல்லுவதாக யாரும் கருதிவிடக் கூடாது என்று நாம் வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். தோள் கொடுத்த பாரத்தில் கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நமக்காகவே தோள் கொடுத்தார்கள் - கொடுக்கிறார்கள். பொருள் கொடுத்த - கொடுக்கிற மக்கள் நமக்காகவே நம்மிடம் உள்ள அன்பு, தாட்சண்யம் நேச உணர்ச்சி ஆகியவற்றிற்கு ஆகவே உதவினார்கள் - உதவுகின்றார்கள் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம். அதாவது நமக்கு இத்தொண்டில் முழுப்பாரமும் இல்லை என்றால் உடனே விலகிக் கொள்ளவும் நம்மோடு ஏதோ சிறு பிணக்கு என்றால் உடனே மாறிக் கொள்ளவும் வேண்டியவர்களாகவே பெரிதும் நம் தோழர்கள் இருக்கக் கண்டு வருகிறோம்.

நம் 20 வருஷத்திய பொது வாழ்வில் தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட உணர்ச்சியில் செய்துவரும் தொண்டில் நம் தோழர்கள் யாரிடமாவது பொருளாதார விஷயமாய், உதவி எதிர்பார்த்திருக்கக் கூடுமா என்று பார்த்தால் இந்த ஒன்று இரண்டு வருஷகாலமாகத்தான் பிரசாரத்துக்காகவும், "விடுதலை" பத்திரிகைக்காகவும் சிலரிடம் உதவி எதிர்பார்க்கத் துணிந்திருப்பதாய்ச் சொல்லலாம். அவ்வெதிர்பார்ப்பில் நம் சொந்த நட்பு, செல்வாக்கு வேண்டுகோள்தான் தொண்டின் தன்மையைவிட தலை சிறந்ததாய் இருக்க வேண்டியிருந்தது என்று சொன்னால் அது மறுக்கக் கூடியதாகாது.

இங்ஙனமிருக்க பொருள் இல்லாமல் இனி எக்காரியமும் நடத்த முடியாது என்கின்ற இன்றைய நிலையில், மற்றும் இன்றைய நம் எதிரிகள் பொது மக்களிடம் கொள்ளை அடிப்பது போல் பணம் வசூல் செய்து தாராளமாய் அள்ளிக் கொடுத்தும் ஒவ்வொருவரையும் தங்கள் தங்கள் இஷ்டப்படி சக்திப்படி கொள்ளை அடித்துக் கொள்ள அனுமதியும் செளகரியமும் செய்து கொடுத்தும் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு நமக்கு தொல்லை கொடுக்கின்ற இன்றைய நிலையில் பொருளாதாரத்துக்குத் தக்க மார்க்கம் இல்லாமல் இனி மேலால் காரியம் நடப்பது என்பது பயப்படக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.

"விடுதலை" பத்திரிகை இந்த 7,8 மாதகாலமாய் நடந்து வந்ததற்காக இதுவரை ஏற்பட்டு வந்த மாதம் 500ரூ நஷ்டத்திற்கு வகை செய்து வந்தவர்கள் யார் என்று பார்ப்போமானால் சுயமரியாதைக்காரர்கள் மாதம் 300 போல் கொடுத்திருப்பார்கள். மற்ற பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர்கள் மாதம் 200 போல் தான் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இதுவும் அவர்களில் பலர் தாங்கள் செய்த வாக்குத்தத்தை துணிகரமாய் "இல்லை" என்று சொன்னவர்களும், "என்னமோ அப்போது வாக்குத்தத்தம் செய்தேன். இப்போது பொதுநல வாழ்வே வேண்டாம் என்று தோன்றுகிறது. இது விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தபின் யோசிக்கலாம்" என்று சொன்னவர்களும் எவ்வளவு கடிதம் எவ்வளவு தந்தி அனுப்பினாலும் பதிலே எழுதாமல் இருப்பவர்களும் வாக்குத்தத்தம் செய்துவிட்டு ஆரம்ப முதல் இந்த 8 மாதகாலமாய் விரக்கடைத் தவணை வைப்பவர்களும், வாக்குத் தத்தம் செய்த தொகையை பகுதியாக்கி, கால்வாசியாக்கி வருபவர்களுமாக இருப்பதையும் மற்ற நிலைமையும் பார்ப்போமானால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிலும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒரு பைசா அளவு பொருளாதாரமோ, மந்திரி பதவியோ ஜில்லாபோர்டு பிரசிடென்டோ பட்டம் பதவிகளோ வேறு பல குடும்ப சுயநலங்களோ பெறாதவர்களுமான சுயமரியாதைக் காரர்களுமாகத் தான் விடுதலை நஷ்டத்தையும் வேறு கஷ்டத்தையும் ஈடு செய்து வர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நீடாமங்கலம் கேசு ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் கேசு முடிவு எப்படி ஏற்படுவதானாலும் குறைந்தது 2000க்கு குறையாமல் 3000 ரூபாய் வரை செலவு செல்லும் என்பதாக எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது. கேசு "சுயராஜ்யத்தை"ப் பற்றியதாக இருந்தால் கோர்ட்டுக்கு ஆஜராவதற்கு கூட வாரண்டு வந்து சர்க்கார் செலவில் பிடித்துக் கொண்டு போகட்டும் என்று இருந்து சுலபத்தில் தேசீய வீரர் பட்டம் பெற்று விடலாம். ஆனால் நீடாமங்கலம் விஷயம் சுயமரியாதையைப் பொறுத்த விஷயமாக ஏற்பட்டு விட்டது. பொது மக்களுக்கு உண்மை விளங்கும்வரை போராடித் தீர வேண்டிய விஷயமாக ஏற்பட்டுவிட்டது. இவ்விவகாரத்தில் எது வரை சென்று எங்கு போய் முடிவையோ திருப்தியையோ சலிப்பையோ அடையப்போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த விசாரணையானது பத்திராதிபர், பிரசுரகர்த்தா என்கின்ற முறையில் எவ்வளவு தூரம் நமது வேலையையும் மற்ற நமது விவகாரங்களையும் பாதிக்கப் போகிறதோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் முடிவு வரை எதிர் வழக்காடித் தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதற்காக சமீபத்தில் ஒரு கமிட்டி ஏற்படுத்தவும் தொகை வசூலிக்கவும் தக்க முயற்சி சில தோழர்களால் நடந்து வருவது அறிந்து ஒரு அளவுக்கு மகிழ்ச்சி அடைவதோடு அத் தோழர்களுக்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிற்க, நாம் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களோடு போராடிவரும் இத்தொண்டு அவசியமானதா, அல்லது வெறும் துவேஷம், குறும்பு, முட்டாள்தனம் ஆகியவைகளால் செய்யப்படும் அநாவசியமான தொண்டா? என்பதை கவனித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தோழர்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம். இன்றைய தேசீயத்தையும் பார்ப்பனீயத்தையும் வன்மையாக எதிர்த்து அவற்றுடன் போராடும் காரணம் என்ன என்பதைப் பற்றி நம் தோழர்களுக்கு அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தேசீயமும் பார்ப்பனீயமும் மக்களையும் ஆட்சியையும் வருணாச்சிரம ராஜ்யத்துக்கும் புராதன கால ஆட்சிக்கும் மிருகப்பிராயத்துக்கும் கொண்டுபோக பாடுபடுகிறது.

நாமோ கொஞ்சமும் ஒளிமறைவோ தங்கு தடையோ இல்லாமல் வருணாச்சிரம முறையை அழித்து மக்கள் பழமைக்கு அடிமையாக்கப் படுவதை ஒழித்து அறிவுலகத்துக்கு கொண்டுவர பாடுபடுகிறோம். இதுதான் நமக்கும் தேசீயத்துக்கும் உள்ள அபிப்பிராய மாறுபாடாகும். உண்மையைப் பேச வேண்டுமானால் அந்நிய ஆட்சி என்றும் சைத்தான் ஆட்சியென்றும் அடிமைத்தன ஆட்சி என்றும் தேசியவாதிகளால் தேசீயத் தலைவர்களால் சொல்லப்படும் பிரிட்டிஷ் ஆட்சிதான் மனித சமூகத்தையும் இந்திய நாட்டையும் இந்த 200 வருஷகாலத்தில் இத்துறையில் திருப்பச் செய்து வந்திருக்கிறது. இப்போதும் செய்து கொண்டும் வருகிறது. இதை நாம் மாத்திரம் சொல்லுவதாக யாரும் கருதிவிடக் கூடாது. பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி பழம்பெரும் காங்கரஸ் தலைவர்கள், பண்டித மதன் மோகன் மாளவியா, தாதாபாய் நவ்ரோஜி முதலிய சுமார் 10, 20 காங்கரஸ் தலைவர்கள் இந்திய சிரேஷ்டர்கள் என்பவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது "இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகே நாம் கீழ்நாட்டு பழைய ஆட்சிகளாலும், முறைகளாலும் அடைந்து வந்த கொடுமைகளும் கஷ்டங்களும், நீங்கி முற்போக்கடையும் பாதையில் நடந்து போகிறோம் என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்கள். நாம் அதற்காக பிரிட்டீஷார்களே இந்நாட்டில் என்றென்றும் ஆட்சி செலுத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நாம் சொல்வதெல்லாம் மக்களை வருணாச்சிரம தர்ம முறைக்கும் காட்டுமிராண்டிப் பருவத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஒரு ஆட்சி அது யாருடையதானாலும் அப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமென்றுதான் போராடுகிறோம். இதற்கு ஆன திட்டம் எந்த தேசீயவாதி போடுவதானாலும் அதற்கு தலை குனியக் காத்திருக்கிறோம். அப்படிக்கில்லாமல் பரம்பரை தகப்பன் தொழிலை மகன் செய்யும்படியான கல்வியும் (வார்தா திட்டம்) சாஸ்திரங்களும் புராணங்களும் மனதில் பதியும்படி படிக்கத் தக்க பாஷையும் (ஹிந்தி) 26 உத்தியோகங்களில் 19 உத்தியோகம் பார்ப்பனர்க்கு கொடுக்கும் (மிருக வைத்திய டாக்டர் வேலை) "வகுப்புவாதமற்ற" தன்மையும் 215 மெம்பர்கள் இருக்கத்தக்க சட்ட சபையில் (சென்னை) ஒரு மனிதர் சொல்கிறபடியே எல்லோரும் தலை வணங்க வேண்டும் என்கின்ற "ஜனநாயக சுதந்தரமும்" ஏற்படுத்தத் தக்க, இருக்கத்தக்க ஆட்சியை கொண்டு வரவும் நிலைக்க வைக்கவும் தேசியவாதிகள் என்பவர்கள் பாடுபடுவதும் அதற்கு எதிரிடையானவர்களை தேசத்துரோகி வகுப்பு வாதி என்பதுமான காரியம் எதுவாயிருந்தாலும் அதை ஒழிக்க பாடுபடாமலோ அத் தொண்டில் உயிர்விடும் நிலை பெறாமலோ ஒரு வினாடியும் இரோம் என்பதை கண்டிப்பாய் தெரிவித்துவிட ஆசைப்படுகிறோம்.

நமது சமதர்ம தோழர்கள் பலர் இன்று காங்கரஸ் வீரர்களாய் இருக்கிறார்கள். காந்தியாருக்கு மனப்பூர்த்தியான தாசத்துவம் செலுத்தும் சிஷ்யர்களாய் இருக்கிறார்கள். காந்தி பிரசாரமே தங்கள் "இக பர" சாதனமாய்க் கருதி கருமம் செய்தும் வருகிறார்கள். ஆனால் காந்தியார் பச்சையாய் வெள்ளையாய் "நான் மக்களுக்கு சுதர்மம் (அவனவன் பரம்பரை வருணாச்சிரம முறைப்படி உரிமையுள்ள அந்தஸ்து அளிக்கும்) சுதர்மத்துக்கு ஆகவே சுயராஜ்யம் கேட்கிறேன். அதற்கு ஆகவே உயிர் வாழ்கின்றேன்" என்கிறார். காந்தியார் இப்படிச் சொல்லுவதை இந்த சமதர்ம வீரர்கள் முன்பும் உணர்ந்ததாகும், இப்போதும் தெரிந்ததாகும். இந்நிலையில் தான் காந்தியார் முயற்சியில் சமதர்மம் கிடைக்குமென்று காந்தீயத்துக்கு உதவி புரிகிறார்கள். காந்தியாரை சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.

சென்னை காங்கரஸ் தலைவர்கள் (பார்ப்பனத் தலைவர்கள்) வகுப்புவாதமற்றவர்கள் என்பது பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களுடைய கருத்தா சென்னை கார்ப்பரேஷனுக்கு ஒரு கல்வி அதிகாரியை தெரிந்தெடுப்பதில் அது சம்மந்தமான 3, 4 தேர்தலில் ஒரு பார்ப்பனரல்லாதார் (தோழர் சிவசைலம் பிள்ளை) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதற்காக அவ்வளவு தேர்தலும் பயனற்றுப் போய் விட்டது. கடைசியாய் தங்களால் வேறொருவரை தேர்ந்தெடுக்க முடியாமலும் போய்விட்டதே என்பதை உணர்ந்தவுடன் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தியாகம் செய்தாவது அந்த பார்ப்பனரல்லாத தோழருக்கு அந்த வேலை கிடைக்காமல் செய்ய வேண்டியவர்களானார்கள். தோழர் சிவசைலம் பிள்ளை மீது யாரும் இதுவரை எவ்வித குற்றமோ, குறையோ கூறவில்லை. பார்ப்பனர்களாவது வேறு எந்த யோக்கியரையும் சிபார்சு செய்யவும் இல்லை. ஆகவே இன்றைய காங்கரசு "வகுப்பவாதமற்றது" என்பதற்கு வேறு என்ன ருஜúவு வேண்டியிருக்கிறது.

மற்றும் பழைய மந்திரிகள் சில உத்தியோகத்தில் நியமித்துவிட்டு வந்த சிலர் பார்ப்பனர் அல்லாதார் என்பதற்காக காங்கரஸ் மந்திரிகள் பதவிக்கு வந்ததும் அந்த உத்தியோகங்களை மாற்றி பார்ப்பனர்களுக்கு போட்டு இருக்கிறார்கள். புது உத்தியோகம் பார்த்தவர்களைக் கூட தள்ளி விட்டார்கள். சில பார்ப்பனரல்லாதாரை "இந்த உத்தியோகம் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?" என்று கேட்டு சம்மதம் பெற்றபின் நியமித்த நியமனங்களை கூட மாற்றி விட்டார்கள். சில உத்தியோகங்களுக்கு பழைய மந்திரிகள் தெரிந்தெடுத்து வைத்தவர்களையெல்லாம் கூட மாற்றி விட்டார்கள்.

இம்மாதிரியெல்லாம் ஒரு சமூகமும் ஒரு ஸ்தாபனமும் கட்டுப்பாடாய் காரியம் செய்து ஆட்சி நடத்தி வருவதென்றால் அதற்கு எதிர் ஸ்தாபனமோ இல்லாவிட்டால் எதிரிகள் தொல்லையை வெளியாக்கும் ஆயுதமோ ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லையா? என்று கேட்கவே இவைகளை எழுதுகிறோம். ஆகையால் இத்தொண்டிற்காக ஏதோ ஒரு சிறு ஆயுதமாகவாவது "விடுதலை" பத்திரிகை இருந்து மானங்கெடப் பிச்சையெடுத்து நடத்திக் கொண்டு வரப்படுவதும் இரண்டொருவர் பிரசாரமூலம் வெளியாக்கி வருவதும் ஒழிந்து போகும்படியாக கேசுகள் விவகாரங்கள் தொல்லைகள் நடப்பதானால் இதற்கு பரிகாரம் செய்ய ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்னுக்கு வரவேண்டாமா? என்று கேட்கின்றோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 20.02.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: