இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வலுப்பெற்று வருகிறது. கனம் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கையாளுவதைப் பார்த்து இந்தியா முழுதும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சென்னை மாநகரம் முழுதும் காங்கரசை எதிர்க்கிறது; வெறுக்கிறது. எனவே தமது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தம் காங்கரஸ்காரருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நேர்மையான முறையில் ஏதாவது அவர்கள் செய்ய முயன்றால் எவரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் இழிவான முறைகளைக் கையாண்டால் யாராவது கண்டிக்காமல் இருப்பார்களா! இந்தி எதிர்ப்பாளர் மானத்தைக் கெடுக்கும் பொருட்டு பலபொய்க் கதைகளை காங்கரஸ் பத்திரிகைகள் கட்டிவிட்டன. சிறையிலிருக்கும் இந்தி எதிர்ப்பாளரை மன்னிப்புக் கேட்டு வெளியேறும்படி விளம்பர மந்திரி கனம் எஸ். ராமநாதன் தூண்டியதாகவும் கூட சென்னை "சண்டே அப்சர்வர்" பத்திரிகை எழுதிற்று. ஸ்டாலின் ஜெகதீசனை விலைக்கு வாங்கி அவரைக்கொண்டு இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடும்படியும் காங்கரஸ்காரர் சூழ்ச்சி செய்து பார்த்தார்கள். திருச்சித் தமிழர் பெரும்படை சோற்றுப்படை என்றும் கால் நடைக் கூட்டம் என்றும் கேலி செய்யப்பட்டது. எனினும் இந்த அயோக்கியப் புரளிகளைத் தமிழ் நாட்டார் லôயம் செய்யவில்லை. வழிநெடுக காங்கரஸ்காரர் உட்பட தமிழர்கள் தமிழர் பெரும்படைக்கு வரவேற்பளித்து ஆசி கூறினார்கள். கடைசியாக தமிழர்படை சென்னையை அடைந்தபோது ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் கூடி படையை வரவேற்று உபசாரம் செய்தார்கள். அம்மாதிரி ஒரு பிரம்மாண்டக் கூட்டம் இதுவரை சென்னை மாநகரத்திலே நடந்ததில்லையென்றே சொல்லலாம். அதைப்பார்த்ததும் காங்கரஸ்காரர் மூளை கலங்கி விட்டது. தமிழர் பெரும்படையைச் சேர்ந்த யாரோ சிலர் பேரால் காங்கரஸ் பத்திரிகைகளில் ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டு தமிழுலகத்தை ஏய்க்க காங்கரஸ்காரர் முயன்றார்கள். அது எவ்வளவு கேவலமான - போக்கிரித்தனமான முயற்சி என்பதை பின்பக்கத்தில் வெளிவரும்.*

தோழர் சைமன் ராமசாமியின் மறுப்பு நன்கு விளக்கிக்காட்டும். தமிழர் பெரும்படைத் தலைவர்கள் மீதும், தோழர் ஈ.வெ.ரா. மீதும் பழி சுமத்தி காங்கரஸ் பத்திரிகைகளில் வெளிவந்த ஆபாசமான பொய்ச் செய்திக்கும், தமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், அதைப் பார்த்துத் தாம் திடுக்கிட்டுப் போனதாகவும் தோழர் சைமன் ராமசாமி கூறுகிறார். ஆகவே காங்கரஸ்காரர் போக்கு எவ்வளவு அயோக்கியத் தனமானதென்பதை தென்னாட்டாரே முடிவு செய்து கொள்ளட்டும். காங்கரஸ்காரர் பிரேரணையில் தோழர் ஸ்டாலின் ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கையைப் பற்றிய நெஞ்சம் திடுக்கிடக்கூடிய பல மர்மங்களையும் தமிழ் நாட்டார் வெகு சீக்கிரம் அறிவார்கள் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

- 22.09.1938 "விடுதலை" துணைத் தலையங்கம்.

தோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 25.09.1938

* சைமன் ராமசாமி மறுப்பு

காங்கரஸ் பத்திரிகைகளின் புரட்டும் யோக்கியதையும்

திருச்சி. செப். 21.

பிரபல தினசரிகளாகிய "ஹிந்து" "சுதேசமித்திரன்" "தினமணி" "ஜெயபாரதி" முதலியவைகளில் தமிழ் படையினர் தவிப்பு, காங்கரஸ் கட்சியின் உதவி, தமிழ் படைத்தலைவர் குட்டு வெளியாகியது, வசூல் ரூ.1000 எங்கே? ஈ.வெ.ரா.வின் யோக்கியதை, படையினர் சந்தியில் விடப்பட்டனர், ஊர்போகப் பணங்கிடையாது என்று 17-9-38ந் தேதி "ஜெயபாரதி"யிலும், ஜெயிலுக்குப் போகிறாயா? பட்டினி கிடக்கிறாயா? என்றும் இன்னும் அயோக்கியத்தனமாகவும் 17-9-38 "தினமணி"யிலும், தெருவில் தவிக்கவிடப்பட்டனர் என்று 16-9-38 "சுதேசமித்திர"னிலும் தலைப்புகள் கொடுத்தும் அறிக்கை கொடுத்தவர்கள் நால்வர்களில் என் பெயரை முதலில் பிரசுரித்தும் இருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப் போனேன். பத்திரிகா உலகு இவ்வளவு கட்டுப்பாடாயும் கேவலமாயும் நடப்பதையறிந்து மனமுடைந்து போனேன். அவ்வறிக்கையில் கண்டது அத்தனையும் சுத்தக் கட்டுக்கதை என்றும் புராணப் புரட்டு என்றும் அதற்கும் எனக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது என்றும் இவ்வறிக்கையின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.

இத்துடனில்லாது, சென்னை சட்டசபை காங்கரஸ் கட்சியினர், எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு போட்டு, டிக்கட் வாங்கிக்கொடுத்து, தமிழர் படையினர்களை அனுப்பியதாக "ஜெயபாரதி"யில் வந்திருக்கும் செய்தி பெரும் பொறுப்பற்ற பொய்களில் ஒன்றாகும். அத்தகைய காரியங்கள் யாதும் நடைபெற வில்லையென்பதையும் இதனால் பொது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க சோம்பேறிக் கூட்டத்தார் கையாளும் பல சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதவும். நம் செந்தமிழ் மக்கள் இனிமேலாவது இம்மாதிரியான கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்தை நம்பாதிருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

சைமன் ராமசாமி என்கின்ற

எஸ். ராமசாமி,

துறையூர்.

(குடி அரசு - 25.09.1938, பக். 8)

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: