தோழர் சத்தியமூர்த்தியார் நிலக்கோட்டை தாலூகாவிற்குள் பிரசாரத்துக்குப் போனபோது அங்கு ஏதோ சில காலிகளோ அல்லது பொறுப்பற்ற வேடிக்கைப் பிள்ளைகளோ ஒரு மோட்டார் கார் மீது கல் போட்டார்களாம். அதற்காக பத்திரிகைகள் தனது அடிமையாய் இருக்கின்றன என்கின்ற ஆணவத்தால் நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது துவேஷத்தைக் கிளப்பி வருகிறார்.

அறிவுள்ள மக்கள் யாரும் இந்த விஷமும் மாய மாலமும் கொண்ட அறிக்கையை லட்சியம் செய்யமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இந்த சின்ன காரியத்துக்காக (அதுவும் உண்மையாய் நடந்ததோ இல்லையோ) இவ்வளவு "ஆத்திரம்" காட்டி தடபுடல் செய்யும் சத்தியமூர்த்தியாற் காங்கிரஸ் காலிகள் கதர் குல்லாயுடனும் கொடியுடனும் செய்த எத்தனையோ காலித்தனங்களைப் பற்றி ஏன் ஆத்திரப்படவில்லை என்று கேட்கின்றோம்.

சேலத்தில் தான் பிரசன்னமாயிருந்த கூட்டத்திலேயே எதிர்க்கட்சிப் பிரமுகர்களை கேள்விகள் கேட்டதற்காக கதர் குல்லாயும் கொடியும் பிடித்திருந்த காங்கிரஸ் காலிகள் கடினமாய்த் தாக்கித் துன்பப்படுத்தியதற்கு தன்னைப் பொறுத்தவரை ஒரு மாதகாலம் அந்தப் பக்கம் தலைகாட்டாமல் ஒளிந்து கொண்டதல்லாமல் வேறு என்ன பரிகாரம் செய்தார்?

பள்ளத்தூரில் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசும்போது சாணி உருண்டைகளும் கல்மாரியும் விழுந்ததைப்பற்றி என்ன அறிக்கை விட்டார்?

சென்னைக் கார்ப்பரேஷன் கூட்டத்தில் ஒரு கதர் குல்லாய் போட்டிருந்த காங்கிரஸ் காலி அழுகு முட்டையையும் செருப்பையும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பெண் அம்மையார் மீது வீசியதற்காக எந்த அறிக்கையை விட்டார்?

மந்திரிகள் கனம் பொப்பிலி ராஜா, குமாரசாமி ரெட்டியார், ராஜன் ஆகியவர்கள் கூட்டத்தில் முறையே திருச்செங்கோடு, ராஜபாளையம், திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் குழப்பம் விளைவித்ததற்கு என்ன அறிக்கைவிட்டார்?

மற்றும் தோழர் வி.வி. ராமசாமி தேர்தலில் தோழர் செளந்திரபாண்டியன், ஈ.வெ. ராமசாமி கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் செய்த குழப்பங்கள் கல்வீச்சுகள் ஆகியவைகளுக்கு என்ன அறிக்கை விட்டார்? இப்படியாக காங்கிரஸ் காலிகளுக்கு காலித்தனம் செய்ய உற்சாகத்தை மூட்டி சம்மந்தமில்லாத ஆட்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள்மீது ஆத்திரம் ஏற்படும்படியாகச் செய்து காலித்தனத்தை வளர்க்கவிட்டு ஒரு காரின் மீது ஏதோ கல்பட்டது என்று அதுவும் உண்மையா? யார் செய்தார்கள்? என்று இல்லாமல் இம்மாதிரியான அறிக்கை விடுவதால் யார் பயந்துகொள்ள முடியும் என்று கேட்கின்றோம்.

இந்தச் சமயத்தில் இதைப்பற்றிப் பொதுஜனங்களுக்கு ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறோம்.

அதாவது இம்மாதிரி தங்கள் மீது கல் விழுந்ததாகவும் தாங்கள் அடிபட்டதாகவும் எடுத்துச் சொல்லி மாயமாலமாய் அழுதால் பொதுஜனங்கள் ஏமாந்து தங்கள் ஓட்டுக்களை கொடுத்து விடுவார்கள் என்கின்ற தந்திரத்துக்காக இந்தக் கூப்பாடுகள் என்பதைத் தெரிவிக்கிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.01.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: