தலைவர் அவர்களே! தோழர்களே!

இந்தப் பக்கங்களில் நாங்கள் வருவதாகத் தெரிந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் வெகு தடபுடலாக அவசர அவசரமாக ஓடி எங்களைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எங்கள் கூட்டங்களுக்கு யாரும் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலிகளுக்கு உத்திரவு செய்து கொண்டே ஓடுகிறார்களாம். அது போலவே இரண்டு ஒரு இடங்களில் எங்கள் கூட்டத்திற்கு கொஞ்ச தூரத்தில் காலிகளும் குடிகாரர்களும் நின்று கொண்டு வரும் ஆட்களைத் தடுத்து திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதையும் கெட்ட வார்த்தைகள் பேசி வைவதையும் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கல்லுகள் போட்டதுடன் செருப்பும் வீசி எறியப்பட்டது.

அது உள்ளூர்க்காரர் மீது விழுந்து செருப்பு போட்டவனை மறுநாள் உள்ளூர்க்காரர்களே நன்றாய் செருப்பாலடித்ததாகவும் கேள்விப்பட்டேன். சென்றவாரம் நானும் தோழர் பாண்டியனும் அய்யம்பாளையத்துக்குப் போனபோதும் அங்கு சிலர் மூக்கில் கள்ளு ஒழுகக் குடித்துவிட்டு கண்டபடி கூப்பாடு போட்டும், சிறு பையன்களைக் கொண்டு கூப்பாடு போடச் செய்தும் சுமார் 1000ம் பேர் வரை கூட்டத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தவர்கள் மீது கல்லு போட்டும் நெருப்பு சட்டி எடுத்துக் கொண்டு சாமி வந்தவர்கள் போல் ஆவேசம் காட்டி கூட்டத்தை கலைக்க முயற்சித்ததுமான காரியத்தை நேரிலேயே பார்த்தேன்.

இதைப் பார்த்த போலீஸார் எங்களை கூட்டம் நடத்தக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் மறுநாள் அந்த ஊரில் 16 காலிகளை அரஸ்ட் செய்து அந்த ஊருக்கு ஒரு அவுட் போஸ்ட் போலீஸ்டேஷனும் போட்டுவிட்டார்கள்! இந்த காலித்தனத்தின் பயனாய் அந்த ஊர்க்காரர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவைகளைப் பார்க்கும் போது காங்கிரஸ் என்பது ஒரு கொள்ளைக் கூட்டமாகவே மாறிவிட்டது என்று கருதவேண்டி இருக்கிறது. இதற்குப் பதில் செய்ய நாம் ஆரம்பித்தால் நம்மவர்கள் தான் கஷ்டப்படுவார்கள். பார்ப்பனர்கள் சுகமாக மணிக்கு 50 மைல் 60மைல் வேகத்தில் ஊர் ஊருக்கு நெருப்பு வைப்பது போல் கிளப்பி விட்டுவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள். ஆதலால் நாம் பதில் செய்ய தயங்கவேண்டி இருக்கிறது. இவ்வளவு அயோக்கியத் தனங்களும் அற்பத்தனங்களும் செய்தும் அவர்கள் வெற்றி பெறப்போவது கிடையாது.

பத்திரிகை ஆர்ப்பாட்டமும் சில்லறைக் காலித்தனமும் அல்லாமல் ஒரு காரியமும் ஆகப் போவதில்லை.

சில இடங்களில் பார்ப்பனர்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் சர்க்கிள்களாகவும் இருப்பதாலும் சிறப்பாக மதுரை ஜில்லாவில் சில காலிகள் மீது அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அவர்கள் சுலபமாகக் காலித்தனம் செய்யச் செய்ய முடிகிறது. சின்னாளப்பட்டி என்கின்ற ஊரில் போலீஸ்காரர்கள் காலித்தனத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். போலீஸ் மீது ரிப்போர்டு செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் காலித்தனத்துக்கு தோழர் பாண்டியன் பயப்படாமல் தன் ஆட்களையும் பொது ஜனங்களையும் பதிலுக்கு பதில் செய்ய விடாமல் அடக்கி 3 மணி நேரம் மீட்டிங்கை நடத்தி இருக்கிறார். பாண்டியன் ஆட்களையும் பொது ஜனங்களையும் அடக்காமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பயங்கரமான விஷயம். அது போலவே மற்றும் பல இடங்களில் நடக்கின்றன. கிட்டத்தட்ட பாண்டிச்சேரி எலக்ஷன் போலவே நமது எலக்ஷன்களும் ஆகிவிட்டன. அடுத்த தேர்தலில் கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் ஊரை விட்டு ஓடிப்போகும்படியான நிலைமை ஏற்பட்டுவிடும். யார் ஜெயித்தாலும் சரி, யார் தோற்றாலும் சரி, கண்டிப்பாக இந்த முறையை நாம் கையாள ஆரம்பித்தால் அவர்கள் அதோகதிதான். அடுத்த தேர்தல் வருவதற்குள் இன்றைய போலீசு இலாக்காவிலுள்ள பார்ப்பன ஆதிக்கம் அநேகமாகக் குறைந்துவிடும். பார்ப்பன தலைவர்களான தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தியார், மற்றும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் ஆகியவர்களால் ஏற்படும் பயன் இதுதான்.

இந்த அக்கிரமங்களை முடித்துவைக்காமல் யார்தான் இருப்பார்கள்? நாம் எது எப்படியிருந்தாலும் உத்தியோகங்களை கைப்பற்றி ஆகவேண்டும். நம் வக்கீல்களை ஆதரித்து ஆக வேண்டும். இனி முனிசீப்புகளும் நம்மவர்களே அதிகம் வரக்கூடும்.

தோழர் மட்டப்பாரை அய்யர் நாடார்கள் கையில் குறிப்பாக பாண்டியன் கையில் திராசு கொடுத்து கருப்பட்டி நிறுக்கச் செய்வதாகச் சொன்னாராம். அதாவது நாடார்களை மரமேறி கள்ளும் பதனி (தெளிவு)யும் இறக்கி கருப்பட்டி காய்ச்சி விற்கும்படி செய்யப்போகிறாராம். விளக்கமாக சொல்லவேண்டுமானால் அவரவர்கள் ஜாதித்தொழிலுக்கு அனுப்புகிறோம் என்பதாகும். மட்டப்பாரை அய்யர் அப்படிச் சொன்னதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பொழுதாவது நாடார் ஜாதிக்கு சுயமரியாதை உணர்ச்சி ததும்பாதா என்பதுதான். மட்டப்பாரை அய்யர் பேசியது கொஞ்சம், மற்றும் பல பார்ப்பனர்கள் பேசுவதும் அந்த அதிகாரிகள் ஆணவமாய்ப் பேசி செய்யும் கொடுமைகளும் உங்களுக்கு தெரியாது. அவற்றை உணர்ந்துதான் நாங்கள் பாடுபடுகிறோமே ஒழிய, மற்றபடி எங்களுக்கு எந்த உத்தியோகம் பதவி வேண்டும்?

பார்ப்பனரல்லாத மக்களுக்கு உண்மையிலேயே சுயமரியாதை உண்டாகவேண்டும் என்பதற்கு ஆகவே பாடுபாடுகிறோம். இந்த தேர்தல்கள் பதவிகள், உத்தியோகங்கள்தான் சுயமரியாதையை கிளப்பிவிடக்கூடியதும் உண்டாக்கக் கூடியதுமாய் இருந்து வருகிறது.

நமது மந்திரிகள் இரண்டொருவர் தவிர மற்றவர்கள் பார்ப்பன ஒற்றர்களாக இருந்துவிட்டார்கள். தோழர் ராஜனுக்கு பார்ப்பனர்கள்தான் அதிக சிநேகம். அவர்களைத்தான் அவர் நம்பி ரகசியத்தில் அவர்களுக்கு அனேக நன்மைகள் செய்து வந்தார். தோழர் ரெட்டியாரோ சொல்ல வேண்டியதில்லை. அவருக்குப் பதில் வந்தவரோ உங்களுக்கே தெரியும். இப்படிப்பட்ட மந்திரிகளை உள்ள கட்சி எப்படி உருப்படி ஆகும்? நமக்கு பத்திரிகை இல்லை, பிரசாரம் இல்லை, ஆங்காங்கு ஜில்லாக்களில் உள்ள தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்வதையும் தங்கள் சுயநலத்தையுமே பிரதானமாய்க் கருதி வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பார்ப்பனர்கள் நல்ல புத்தி கற்பித்தார்கள். நமக்கு விரோதமான பார்ப்பனர்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் நம் மந்திரிகளுக்கு அத்தியந்த நண்பர்களாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்தே பிரசாரம் நடத்தாமலும் பத்திரிகை நடத்தாமலும் இருந்தார்கள். ஆனால் அதன் பயனை இப்போது அடைகிறார்கள். நாம் என்ன செய்யலாம்? தோற்றாலும் வெற்றி பெற்றாலும் பார்ப்பனர்களுக்கு 2000ரூபாய் செலவு என்றால் மந்திரி கூட்டத்துக்கு 20000 ரூபாய் செலவும் எதிர் நீச்சமுமான வேலையாக இருக்கிறது. நமது பாமர மக்கள் விவரம் தெரியாதவர்கள் பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரத்தை நம்பி நமக்கு எதிர்ப்பாய் இருக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள் மந்திரிகள் நடந்துகொண்ட காரியத்துக்கு ஆக விரோதமாகப் பேசுகிறார்கள். 100க்கு 3 பேர்களாய் உள்ள பார்ப்பன சமூகம் எவ்வளவு தொல்லை விளைவிக்கிறார்கள் பாருங்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் தாங்கள் தோற்றுவிட்டால் வங்காளக்குடாக் கடலில் விழுக வேண்டும் என்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் தாங்கள் தோற்றுவிட்டால் தற்கொலை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

நம்மவர்களுக்கு என்ன உணர்ச்சி இருக்கிறது? தோழர் பொப்பிலி ராஜா இல்லாதிருந்தால் ஜஸ்டிஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதாக ஜனங்களுக்கு தெரியவே முடியாமல் போயிருக்கும். உங்களுக்கு ரோஷம் வேண்டும்; சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். எதற்காக ஜஸ்டிஸ் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் போராடுகிறது என்பதை உணர வேண்டும்.

நாம் மந்திரிகளை ஆதரிக்கிறோம் என்றும் பணத்துக்காக மந்திரிகளுக்கு வேலை செய்கிறோம் என்றும் சில அயோக்கியர்கள் பேசிக் கொண்டு பார்ப்பனர்களின் உள்ளங்காலை நக்குகிறார்கள். யார் அவர்கள்? நாம் பணம் கொடுக்காததால் நம்மைவிட்டு ஓடிப்போன கூலிகளே ஒழிய மற்றபடி எவ்விதத்திலும் சுயமரியாதையோடு இருந்தவர்கள் அல்ல. அவர்கள் யோக்கியதை சீக்கிரத்தில் வெளியாகப் போகிறது. நாம் மந்திரிகளை பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் ஏன்? பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பேரால் இருக்கும் மந்திரிகள் ஆனதால்தான். இதே தோழர் கனம் முத்தைய செட்டியாரை நாம் கண்டித்தோம்; அவர் பார்ப்பனர்களின் கையாயுதமாய் இருக்கிறார் என்று கண்டித்தோம். இது போலவே தோழர் டாக்டர் சுப்பராயன் அவர்களையும் முன்பு பார்ப்பனர்களின் கையாளாய் இருக்கும்போது கண்டித்தோம்; பிறகு நம் கையாளாக ஆனபோது ஆதரித்தோம். இப்போது மறுபடியும் அவர் பார்ப்பனர் கையாளானமையால் கண்டிக்கின்றோம். நமக்கு ஆட்களின் தனிப்பட்ட முறையில் வெறுப்பு விருப்பு இல்லை. நம் சமூகத்துக்கு எவ்வளவு அனுகூலமோ எவ்வளவு கேடில்லாதவரோ என்று பார்த்து ஆதரவு செய்யவேண்டியது நம் கடமை. தோழர் டாக்டர் சுப்பராயனை இப்போது பார்ப்பனர்கள் ஆதரிக்கவில்லையா? மற்றும் நம்மிடம் இருந்து பார்ப்பனர்களை காங்கிரசை, காந்தியை, ஆச்சாரியாரை சின்னம் சின்னமாய்ப் பேசிக் கண்டித்த ஆட்களை பார்ப்பனர்கள் ஆதரிக்கவில்லையா? இந்த ஆட்களிடம் பணமும் கூலியும் வாங்கிக்கொண்டா பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள்? அவர்கள் சமூகத்துக்கு தொண்டுசெய்ய ஆட்கள் கிடைத்தால் போதுமென்று கூலிகொடுத்து சோறு போட்டு ஆதரிக்கிறார்கள். ஆதலால் நாம் நம் சமூகத்துக்கு ஆதரவாகவோ வெளிப்படையான எதிரிகளாகவோ இல்லாதவர்களை நம்மால் கூடியவரை ஆதரிக்க வேண்டியது கடமை ஆகும்.

பார்ப்பனக் கூட்டத்தில் சேராத ஒவ்வொருவரும் நம் ஆதரிப்புக்கு ஆளானவர்களேயாவார்கள்.

பார்ப்பனர்களோ அவர்களது கூலிகளோ புதியதாய் கூலிகளாகப் பட்டவர்களோ நம்மை வைகிறார்கள் என்று நாம் லòயம் செய்யக் கூடாது என்பதை தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். இந்தக் கூட்டத்தை நாம் நாளைக்கு மறுபடியும் கூலிக்கமர்த்திக் கொள்ளலாம். அதற்கு ஆகப் பயப்பட வேண்டியதில்லை.

நிற்க, தோழர் மட்டப்பாரை அய்யர் அவர்கள் ஜஸ்டிஸ் மந்திரிகள் கதர் கட்டவில்லை என்றும், பார்ப்பனரல்லாதார் தான் கதர் நூற்கிறார்கள் என்றும் ஆதலால், தாங்கள் பார்ப்பனராயிருந்தும் ஆதரிப்பதாகவும் சொன்னாராம்.

பார்ப்பனரல்லாதார் கதர் நூற்பதாலேயே நாம் அதை ஆதரிக்கவேண்டுமா என்று கேட்கிறேன். அது (கதர்) ஒரு முட்டாள் தனமான காரியமாகும். மக்களை ஏமாற்றும் சாதனமாகும். அதனால் நாட்டுப்பஞ்சு ஏராளமாய் வீணாகின்றது. ஏழைகளுக்கு பணம் ஏராளமாய் வீணாகின்றது. ஒரு ஏழை தினம் 14 மணி நேரம் வேலை செய்து 12 தம்பிடி சம்பாதிப்பதற்கு மற்றொரு ஏழை ஒரு கஜம் துணி 2லீ அணாவுக்கு வாங்குவதற்குப் பதிலாக 12லீ அணாவுக்கு வாங்க வேண்டியதாகிறது. இது "பசுவைக்கொன்று செருப்புதானம் கொடுத்த பலன்" போன்ற தர்மமே தவிர, இதில் புத்திசாலித்தனமோ நல்ல எண்ணமோ கிடையாது.

தாசித்தனம் பார்ப்பனரல்லாதார் தான் வெளிப்படையாகச் செய்தார்கள். ஆதலால் மந்திரிகள் பார்ப்பனரல்லாதாராயிருப்பதால் அதை ஆதரித்திருக்க வேண்டுமா? கதரை பார்ப்பனர்கள் ஆதரிப்பது போல் தான் தோழர் சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்கள் தாசிகள் பார்ப்பனரல்லாதார்தானே என்று சட்டசபையில் சொல்லி வாதாடினார்கள். நம் மந்திரிகள் அதற்குப் பயப்படாமல் தாசித்தனத்தை - பொட்டுக்கட்டுவதை ஒழித்தார்கள். அதனால் தாசிகள் அவர்கள் மக்கள் ஓட்டுகள் கிடையாமல் போகலாம். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.

மற்றும் தோழர் மட்டப்பாரை அய்யர் அவர்கள் உத்தியோகங்களுக்கு சம்பளம் அதிகமென்றும் ஜஸ்டிஸ்காரர்கள் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் பழி கூறினாராம்.

இது அக்கிரமமான வெறுக்கத்தக்க பழியாகும். இன்றுள்ள மந்திரிகள் சம்பளம் உள்பட 100க்கு 99 பங்குள்ள அதிக சம்பளமும் கொள்ளைச் சம்பளமும் காங்கிரஸ்காரர்கள் ஏற்படுத்தினது. ஜஸ்டிஸ் மந்திரிகள் பதவிக்கு வரும்முன் ஏற்படுத்திக் கொண்டவையாகும்.

காரணம் பார்ப்பனர்களே உத்தியோகத்தில் இருந்தார்கள். காங்கிரசின் வேலையும் உத்தியோகம் கேட்பதும், சம்பளம் உயர்த்துவதும் ஆகிய இரண்டு காரியமே முக்கியமானதாக இருந்தன. ஆதலால் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களுக்கு உள் ஆளாய் இருந்து தாங்கள் இருந்த எல்லா உத்தியோகத்துக்கும் சம்பளங்களை ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் பெருக்கிக் கொண்டார்கள். உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வரும் முன்பே காங்கிரசும் சர்க்காரும் சேர்ந்து 1918ம் வருஷத்தில் 3லீ கோடி ரூபாயாக இருந்த சம்பளத்தை 1921ல் 6லீ கோடி ரூபாயாக ஆக்கிக் கொண்டார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு அவைகளில் அனேக காரியங்கள் அதிகாரமில்லாமலே சட்டம் செய்து வைத்துவிட்டார்கள். ஆதலால் சம்பளக் கொள்ளைக்கும் காரணம் காங்கிரசேயாகும். ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வந்ததும் சம்பளக் கொள்ளையை கண்டித்து தீர்மானங்கள் செய்து அவற்றைக் குறைப்பதற்கு கமிட்டிகளும் நியமித்தார்கள். பார்ப்பனர்களும் சர்க்காரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் தங்களது சம்பளங்களில் 1000ரூபாய் வீதம் குறைத்துக் கொண்டார்கள்.

காங்கிரஸ்காரர்கள் அநேக தீர்மானங்களில் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளங்கள் போலவே தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆகையால் வரியை உயர்த்தி ஊரைக் குட்டிச்சுவராக்கியவர்கள் காங்கிரசும் பார்ப்பனர்களுமேயாகும்.

குறிப்பு: மதுரை மாவட்டத்தில் 25.01.1937 ஆம் நாள் பட்டி வீரன்பட்டியிலும், 26.01.1937ஆம் நாள் தேவதானப்பட்டியிலும், 27.01.1937 ஆம் நாள் நிலக்கோட்டையிலும் நடைபெற்ற "ஜஸ்டிஸ் கட்சி" தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 31.01.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: