தோழர்களே!

சமீபத்தில் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல் பிரசாரம் பலமாய் நடைபெறுகிறது. இதுவரை நடந்த பிரசாரங்களைவிட இந்த சீர்திருத்த விஷயத்தில் அதிகக் கிளர்ச்சி இருந்து வருகிறது. அதற்கேற்ப குழப்பமும் பலாத்காரமும் கூட நடைபெறுகின்றன. தோழர்கள் ஜவஹர்லால், மாளவியா, ஜின்னா கூட்டங்களில் குழப்பம், கலவரம் நடப்பதோடு மாளவியா, ஜவஹர்லால் கூட்டங்களில் செருப்புகளும், கற்களும், அழுகு முட்டைகளும், சாணி உருண்டைகளும் விழுந்துவிட்டன. அடிதடிகள், குத்து வெட்டுகள், கொலைகள் நடந்துவிட்டன. பணங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகின்றன. வசவுகளோ மீன்கடை, கள்ளுக்கடைகள் போல் நடைபெறுகின்றன. கூட்டங்களில் பேசப்படும் பேச்சுகளும் பொய்யும், பித்தலாட்டமும், ஈனப்பழிகளும் அபாண்டப் புரட்டுகளும் கொண்டவைகளாகவே இருக்கின்றன. மறைந்து நின்று கொன்ற புராண சூழ்ச்சி இழிதன்மை நிகழ்ச்சிக் கதைகள் போலவே "தலைவர்கள்" நடத்தைகள் இருந்து வருகின்றன. இவைகளின் பயனால் கிடைக்கும் வெற்றி தோல்விகளின் பயன்களோ மிகமிக அற்பமான பயனைக் கொடுக்கக்கூடியதும் ஒரு குறிப்பிட்ட வகுப்பு ஆதிக்கத்துக்கு அரணா அழிவா என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.

இன்று நமது நாட்டில் இவ்வளவு சாமக்கிரிகைகளோடும் சாதனைகளோடும் செய்யப்படும் தேர்தல் போர் பார்ப்பன ஆதிக்கம் இருப்பதா இறப்பதா என்பதைத் தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் அல்ல. நான் இதில் பிரவேசித்து இருப்பதும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் இதில் பிரவேசித்திருப்பதும் இதைத்தவிர வேறு அல்ல. மற்றவர்கள் இரு கட்சியிலும் கூலிகள், தனது தனிப்பட்ட சுயநலக்காரர்கள், வயிற்றுப்பிழைப்புக்கு எதையாவது செய்து வயிறு வளர்க்க வேண்டியவர்கள் இருக்கலாம். அதைப்பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் பார்ப்பனரல்லாத சமூகத்தைவிட பார்ப்பன சமூக ஆதிக்கத்துக்குப் பாடுபடும் கட்சி இன்று பலம் பொருந்தியது. பார்ப்பனர்கள் 100க்கு 3 பேரே இருந்தாலும் அக்கூட்டம் அத்தனையும் அசல் மணிகளாக இருக்கின்றன. அதில் பொக்கு இல்லை, கருக்காய் இல்லை, சோடையில்லை. நமது சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் பொக்குகள், சோடைகள், கருக்காய், பாளைகள். பார்ப்பனர்கள் இப்போரை நடத்த இராமாயணக் கதையை வழிகாட்டியாகக் கொண்டுவிட்டார்கள். அக்கதை பார்ப்பனர்களுக்கு ஒரு வழிகாட்டுவதற்காகவே ஏற்படுத்திக் கொண்டதாகும். அதைப் பின்பற்றியே நடந்து வருகிறார்கள். அதனாலேயே அவர்கள் இவ்வளவு காலம் சமாளித்து இன்னமும் சமாளிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களில் எப்படிப்பட்ட அயோக்கியனும் இழிமகனும் இருந்தாலும் எவனாவது தன் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து எதிரியோடு சேர்ந்து வயிறு வளர்க்கிறானா பெருமை அடைகிறானா என்று பாருங்கள். இன்றைய போர் உண்மையிலேயே பார்ப்பனர்களுக்கு வெற்றி கொடுத்தால் அதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? அச்சமூகத்தில் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க எதிரிகளுடன் சேரும் ஈனப்பிறவிகள் இல்லை. நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறவர் களின் கொள்கை, நடத்தை, நாணயம் ஆகியவைகளைப் பாருங்கள்.

அதாவது காட்டிக்கொடுப்பவர்களும் அனுமார்களும் அதாவது சுயமரியாதை அற்ற மிருக (குரங்கு) பிறவிகளும் இருந்தாலும் நாம் பயப்படப்போவதில்லை. இந்தக் கூட்டங்கள் இருப்பதே நமது தொண்டின் அவசியத்திற்குக் காரணமாகும். ஆதலால் நீங்கள் யாரும் மனங்கலங்க வேண்டியதில்லை. வெகு சீக்கிரத்தில் பார்ப்பனர்கள் வழிக்கு வரப்போகிறார்கள்.

இந்தத் தடவை பார்ப்பனர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கும் படியான தோல்வி அணுகிக்கொண்டு வருகிறது. அவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடியதெல்லாம் ஒரு விஷயம் தான். அதாவது இப்பொழுது நடைபெறப்போகும் தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்கள் அளவுக்கு மேல் ஸ்தானம் பெறுவார்கள். அதாவது 100க்கு 3 வீதமாக 215 ஸ்தானங்களுக்கு 6 பேர் 7 பேர்கள் வரவேண்டிய ஸ்தானங்களுக்கு இன்று 40,50 பேர்கள் வர எதிர்பார்க்கிறார்கள். இதில் அவர்கள் 30, 35 பேர்களாவது வரக்கூடும். அதில் வெற்றி பெறக்கூடும். அவ்வளவுதானே ஒழிய வேறில்லை. அச்சமூகத்துக்கு 2 மந்திரிகள் எதிர்பார்ப்பார்கள். அதனால் நான் பயப்படவில்லை.

ஆனால் நமக்கு இன்னமும் அவர்களைப் பார்த்து பழகிக்கொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. பொறாமைப்பட்டு பயன் இல்லை. ஆனால் மட்டும் பார்ப்பனர்களால் செத்தாலும் சாவேனே ஒழிய ஒழிந்தாலும் ஒழிவேனே ஒழிய ஒரு நாளும் அவர்கள் காலுக்குள் புகமாட்டேன் என்பதை உறுதி கூறுகிறேன். இந்தத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் தோற்றால் எனக்கு அதிக பலம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் என்முன் முழங்கால் படியிட்டு வணங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

ஏன் என்றால் நமது கொள்கை அப்படிப்பட்டது; வெற்றி தோல்விக்கும் கொள்கைக்கும் சம்மந்தமில்லை.

பார்ப்பனர்களுடன் நாம் போரிடும் கொள்கை இந்த தேசத்தை யார் ஆள்வது என்பதல்ல. இந்த தேச ஆòயில் நமக்கு பங்கு வேண்டும் என்பதே. இப்போது உள்ள பங்குகள் பார்ப்பனர்களிடமே இருக்கிறது. இத்தனை நாளும் பார்ப்பனர்களிடமே இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே நமது வகுப்பு தேவடியாள் வகுப்பாகவும் தாசி வகுப்பாகவும் அடிமை சூத்திர வகுப்பாகவும் இருந்து வந்திருக்கிறது. அது மாதிரியே அவர்கள் வகுப்பும் ஆகவேண்டும். இன்று நம் முயற்சியால் குறிப்பாக சுயமரியாதை இயக்க முயற்சியால் பார்ப்பனப் பெண்களை சதுராட வைத்து விட்டோம், பார்ப்பனர்களை விவசாரிகளுக்குப் பின்னால் தாளம் போடச் செய்து விட்டோம். உலகில் இனி மேல் இழிதொழில்களே இல்லையென்று செய்யப்போகிறோம். இன்னும் அனேக காரியம் செய்யப்போகிறோம். ஆனால் அதற்குத் தாராளமான செளகரியம் வேண்டுமானால் அரசியலில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு பார்ப்பனர்களை மேல் ஜாதிக்காரர்களை ஒழிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அனுகூலம். அதனால்தான் நாம் இன்று தேர்தலில் அலைகின்றோம், அவதிப்படுகின்றோம். இன்னம் எத்தனை விபீஷணர்களும் அவர்கள் கூட்டங்களில் தைரியமாக ராமாயணத்தை உபமானம் கூறுகிறார்கள் - விளம்பரங்களில் அனுமார்படம் போடுகிறார்கள். நம்மவர்கள் பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லுபவர்களை விபீஷணர்கள் என்று சொல்லுகிறார்கள். சென்னையில் வெங்கிடுசாமி நாயுடு அவர்களை தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் விபீஷணன் என்றே அழைத்தார். தொண்டர்கள் என்பவர்களுக்கு வானரப்படை என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். நம் தலைவர்களை ராவணன், ராக்ஷதன், கும்பகர்ணன் என்றே சத்தியமூர்த்தியார் அழைக்கிறார். இவைகளை நாம் தினமும் பார்க்கின்றோம். நம்மவர்களிலும் கழிபட்டவர்கள் பெரும்பாலும் எதிரிகளிடம் - பார்ப்பனர்களிடமே போய் சேருகிறார்கள். நமது போரானது அந்தத் தன்மையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஒழிய, நாம் யாரும் கிரீடம் சூட்டிக்கொள்ளவல்ல. பார்ப்பனர்கள் நம்மில் எவ்வளவு கீழானவர்களாய் இருந்தும் நம்மால் மனிதர்கள் என்று கருதத் தகுதி அற்றவர்கள் என்றும் நினைத்து ஒதுக்கித் தள்ளுகிறோமோ அவர்களையெல்லாம் விபீஷணர்கள் ஆக்குவதும் பட்டம் பதவி கொடுத்து நம்மை வையவும் நம்மோடு போர் தொடுக்கச் சொல்லவும் செய்து வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தனித்தனியே எடுத்துச் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றேன்.

பார்ப்பனர்களால் தேர்தல்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத ஆட்களில் 100க்கு 75 பேர்களை நீங்கள் பாருங்கள். பார்ப்பனர்களால் வெறுத்துத் தள்ளி அரக்கன் என்றும், ராக்ஷதன் என்றும், ஒழிய வேண்டும் என்றும் கூறும் ஆட்களின் யோக்கியதைகளையும் பாருங்கள்.

ஆகவே அவர்களுடைய சூழ்ச்சி மதத்தையும், புராணத்தையும் மூடநம்பிக்கையையும் ஆயுதமாகக் கொண்டதா அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள். நான் மூடநம்பிக்கையும் புராண ஆபாசமும் மதப்பித்தும் ஒழிய வேண்டும் என்று சொல்லுவது சரியா தப்பா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள். புராணப் பித்தும் மூடநம்பிக்கையும் ஒழிந்திருந்தால் நம்மை மோசம் செய்து காட்டிக் கொடுப்பவர்களை இன்று ஆச்சாரியார் விபீஷணர் என்று கூறுவாரா? நமக்குத் துரோகம் செய்து ஓடினவர்களையும் நம்மால் யோக்கியதைக்கு மேற்பட்டுப் பயனனுபவித்து விட்டு இன்று கைவிட்டு விட்டு ஓடினவர்களையும் பற்றி ஆச்சாரியார் கவிபாடி ஓட்டு வாங்கிக் கொடுப்பார்களா என்பதையும் யோசித்துப் பாருங்கள். அவர்கள் மந்திரிகளாவதாகவே வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் கொள்கைகள் என்ன என்று பார்ப்போம்.

தோழர்களே!

இன்று சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ்காரர்கள் எதற்காகப் போகிறார்கள்? அங்கு போய் இவர்கள் என்ன செய்வதாய்ச் சொல்லுகிறார்கள்? இத்தனை நாள் இவர்கள் சட்டசபையில் செய்யமுடியாத எந்த வேலையை இவர்கள் புதிதாகச் செய்வதாய்ச் சொல்லுகிறார்கள். தோழர்கள் சி.ஆர்.தாஸ், லஜபதி, பெரிய நேரு, எஸ்.சீனிவாசய்யங்கார் முதலிய சட்ட ஞானமுள்ளவர்களும் உண்மை வீரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் சட்டசபைக்கு மெஜாரிட்டியாய்ப் போன காலத்தில் செய்ய முடியாமல் போன எந்தக் காரியங்களை தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சுப்பையா முதலியாரும், அண்ணாமலை பிள்ளையும் செய்து முடித்துவிட முடியும்? தோழர்கள் சத்தியமூர்த்தி, புலாபாய் தேசாய், அவனாசிலிங்கம், முத்துரங்கம் ஆகியவர்கள் இந்திய சட்டசபையில் ஜின்னா அவர்கள் உதவியும் பெற்று செய்ய முடியாமல் போன எந்தக் காரியத்தை இவர்கள் இனி புதிதாகத் தோழர்கள் சொக்கலிங்கத்தையும் அஞ்சலை அம்மாளையும் அழைத்துப்போய் செய்ய முடியும்? வீண் ஏமாற்று வார்த்தையால் மயங்கி ஓட்டுப் போடுவீர்களானால் நீங்கள் அரசியல் சுதந்திரம் பெறத் தகுதி உடையவர்களாவீர்களா? ஜெயிலுக்குப் போனதற்கு ஓட்டுக்கொடு என்றால் ஜெயிலுக்குப் போனவர்கள் பொது மக்கள் பணத்தில் அலவன்ஸ் வாங்கவில்லையா? வக்கீல் விட்டதற்கு ஓட்டு என்றால் வக்கீல் வேலை விட்ட காலத்தில் பொது மக்கள் பணத்தில் மாதம் 50 முதல் 250 ரூபாய் வரை அலவன்ஸ் வாங்கவில்லையா? அன்றியும் அவை இனி மேல் செய்வதில்லை என்று காங்கிரஸ் தீர்மானித்துவிடவில்லையா?

இனிமேல் சட்டம் மீறவில்லை என்று காங்கிரஸ் எழுதிக் கொடுக்கவில்லையா?

ராஜாவிடத்திலும் அவர்பின் சந்ததியிடத்திலும் அவரது சட்டத்துக்கும் பக்தி விசுவாசமாய் இருப்பதாக காங்கிரஸ்காரர் பிரமாணம் செய்து கொடுக்கவில்லையா?

சட்டப்படி நடப்பவர்கள் ராஜாங்கத்தினிடம் பக்தி விசுவாசமாய் இருப்பவர்கள் ராஜாங்கத்தை கவிழ்க்க முடியுமா?

சட்டங்களை சீர்திருத்தச் சட்டங்களை உடைக்க முடியுமா?

சட்டத்தை மீறியாவது காங்கிரஸ்காரர்கள் சட்டத்தையோ அரசாங்கத்தையோ எப்படி உடைக்க முடியும்?

ராஜதுவேஷமாய் - சட்டவிரோதமாய்ப் பேசினால் சர்க்கார் சட்டப்புத்தகத்தில் தண்டனையும், ஜெயிலும், உதையும் இருக்கிறது. 1 தடவை, 2 தடவை, 3 தடவை பார்த்துவிட்டு இனிமேல் அப்படிச் செய்வதில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு சட்டத்துக்குப் பக்தியாய் நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டு இனி எப்படி சட்டத்தை ஒழிக்க முடியும்? காங்கிரஸ்காரர்கள் எல்லா ஸ்தாபனமும் பெற்று 8 மந்திரிகளும் அவர்களேயானாலும் மேஜிஸ்டிரேட்டையும் பட்டாளத்தானையும் போலீசாரையும் பற்றி எவ்வித உத்திரவும் சட்டத்திற்கு விரோதமாய்ப் போட முடியாது. ஒரு காசு சம்பளம் குறைக்க முடியாது. வெட்டி ஜம்பப் பேச்சுக்கு ஏமாற்று வித்தைக்கு ஏமாறக்கூடாது. பாரதமாதா என்பது பார்ப்பனர்கள் வயிறுதான். காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான். தேசபக்தர்கள் என்பது பார்ப்பனர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் தான். இதை அறியாத மூட மக்களும் வயிற்றுப்பிழைப்புக்கு எதிரி கால்களுக்குள் நுழைகின்றவர்களும்தான் இன்று காங்கிரஸ் சேவையாளர்களாக இருக்கிறார்கள். உங்கள் ஓட்டு பத்திரம். மஞ்சள் பெட்டிக்குள் விழுந்து உங்கள் மானத்தை இழக்கச் செய்யப் போகிறது.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 07.02.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: