சைமன் கமிஷனை பஹிஷ்கரித்தவர்கள் அவரால் சிபார்சு செய்த சட்டசபைக்குப் போகலாமா?

தோழர்களே!

நான் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்ல இங்கு வரவில்லை. வரும் தேர்தலுக்கு கஞ்சா குடிக்கிறவன் கூட ஒரு அபேட்சகராய் நின்று சட்டசபைக்குப் போக உரிமை உண்டு. புதிய சீர்திருத்தத்தில் ஏழெட்டு மந்திரிகள் உண்டு. யார் மந்திரியாய் வந்தாலும் ஒரு காரியம்தான் செய்ய முடியும். யார் சட்டசபைக்குச் சென்றாலும், முதலில் இந்த இராஜாவுக்கும் அவர்கள் பின் சந்ததிக்கும், அவர்கள் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசத்துடன் நடக்கிறேன் என்று சத்தியம் செய்து இராஜ விஸ்வாசப் பிரமாணம் எடுத்தக்கொள்ள வேண்டும். இன்று நடக்கப் போகிற தேர்தலில் காங்கிரசின் பேரால் நிற்கிறவர்கள் தனிப்பட்ட தங்கள் சொந்த யோக்கியதையைப் பற்றிக் கூறாமல், கட்சியின் பேரை உபயோகித்து ஓட்டுக்கேட்கிறார்கள். ஏன்? ஆசாமிகள் யோக்கியதை வெளியானால் காங்கிரஸ் புதைக்கப்பட்டு விடும். இதனால்தான் எங்கு பார்த்தாலும் கட்சியின் பேர் அடிபடுகிறது. அதுவும் பொய்யும் புளுகும் கூறி பாமர மக்களை ஏமாற்றி, தங்கள் கட்சிகளுக்கு ஓட்டுப்போடும்படி தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

இன்று தமிழ்நாட்டில் இந்த தேர்தலின் பேரால் இரண்டு மூன்று கட்சிகளின் பேர்கள் அடிபடுகின்றன. அதில் ஒன்று ஜஸ்டிஸ், மற்றொன்று காங்கிரஸ், மற்றொன்று ஜனநாயகம் என்றும், மற்றும் சமூகத்தின் பேரால் முஸ்லீம் லீக் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி, ஐரோப்பியர்கள் கட்சி, வர்ணாஸ்சிரம கட்சி என்றும் பல கட்சிகள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் விட்டு காங்கிரஸ் கட்சியாரால் துவேஷித்து கூறப்படுகிற கட்சி ஜஸ்டிஸ் கட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேசும்போது அது தேசத்துரோக கட்சி, சர்க்கார் கட்சி என்றெல்லாம் கூறி பாமர மக்களைத் தூண்டி விட்டு, குத்து, வெட்டு, சண்டை முதலிய வீண் குழப்பங்களை உண்டாக்கி ஜனங்களைத் தப்பான வழியில் செலுத்தி காங்கிரஸ்காரர் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாம் சில கட்சிகளின் சம்பந்தம் வைத்து வருவதால், அந்த கட்சியை இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) இழித்து பழித்துக் கூறி வருவதினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். காங்கிரஸ் என்றால் என்னவென்று கேட்கிறேன். சுயராஜ்யம் என்றால் என்னவென்று யாராகிலும் விபரமாய் சொல்லமுடியுமா? இல்லை, காங்கிரஸ் தலைவர்கள் என்கின்றவர்களையே கேட்கிறேன், சொல்லட்டுமே பார்ப்போம். நான் அவர்கள் (காங்கிரஸ்காரர்) மாதிரி யாராகிலும் கேள்வி கேட்டால் கேள்விக்குப் பயந்து கொண்டு ஓடிப்போய்விட இங்கு வரவில்லை. யார் கேட்டாலும் பதில் சொல்லுகிறேன். ஏன், ஜவஹர்லால் கூட தமிழ் நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்கிறபோது அவரைக் கேள்விகள் கேட்ட போது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், கேட்டவர்களை முட்டாள்கள் என்று தான் கூறினாரே ஒழிய, வேறு என்ன சொல்லமுடிந்தது? காங்கிரஸ் ஆரம்பம் 1885. முஸ்லீம் லீக் ஆரம்பம் 1906. ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பம் 1916.

எருமை, பசு முதலியவைகள் கன்றுகள் போடும்போது முதலில் வால் முளைக்கிறது அதன் பிறகு தான் கொம்பு வெளியில் வருகிறது. கொம்பைவிட வால் மூத்ததானதினாலே பலம் அதிகரித்துவிடுமா? பழசு என்றால் பெருமையா? புதுசு என்றால் தள்ளுபடியா? அந்த வாதம் அயோக்கியத்தனமானது. காங்கிரஸ் ஏற்பட்டது ஐ.சி.எஸ்.வெள்ளைக்காரரால் தானே ஒழிய இந்தியர்களால் அல்ல. நாம் யார் உதை போட்டுக்கொண்டாலும், வெள்ளைக்காரர்கள் தங்களுக்குப் பாதகம் வராமல் தங்கள் சவுகரியத்திற்காகச் செய்து கொண்ட காரியமேயாகும். காங்கிரஸ் உற்பத்தியான கதை என்ன வென்றால் 50, 60 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரர் நாயக்கர்கள், முதலியார்கள், முஸ்லீம்கள் ஆகியவர்களுக்குத்தான் உத்தியோகம் கொடுத்தார்கள். பிறகு, வெள்ளைக்காரர்கள் இங்கு பள்ளிக்கூடம் வைத்ததும் அதில் சிலர் படித்து, படித்த யோக்கியதையையே வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களிடத்தில் உத்தியோகம் கேட்க ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது படித்தவர்களை உத்தியோகம் கேட்பதற்கு ஆக ஒரு ஸ்தாபனம் வைத்துக்கொண்டு உங்கள் சங்கதிகள் கேளுங்கள் என்றார்கள். அப்பொழுது உத்தியோகத்துக்கு ஆக ஏற்பட்டது தான் காங்கிரஸ். அதன் முதல் தீர்மானமே இராஜ விசுவாசந்தான். அதற்கு அடுத்தது உத்தியோகம் கேட்பது. டிசம்பர் 29ல் காங்கிரசு கூடினால் ஜனவரி முதல் தேதிக்குள் காங்கிரசில் தலைமை வகித்த தலைவர்களுக்கும் வாய்ப்பேச்சு வீரர்களுக்கும் உடனே உத்தியோகம் சர்க்காரில் கொடுக்கப்பட்டாய்விடும்.

இதனால் 1890லேயே முஸ்லீம்களுக்கு நடுக்கம் கொடுத்துவிட்டது. இவர்களும் தங்களுக்கு உத்தியோகம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மே-த-ஆகாகான் முதலியவர்களும் இன்னும் முக்கியமானவர்களும் ஒன்று சேர்ந்து சர்க்காரை நெருக்க ஆரம்பித்தார்கள். 1900த்தில் சர்க்கார் முஸ்லீம்களுக்கு இன்னவீதம் உத்தியோகம் கொடுப்பதாக ஒரு உத்திரவு போட்டார்கள். எலக்ஷன்களிலும் தனியே மெம்பர்கள் கேட்டார்கள். இது 1905ல் தகராறு செய்து அதற்கு ஆகவே 1906ல் முஸ்லீம் லீக் ஏற்படுத்தி முதல் தீர்மானமாக முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி கேட்டார்கள். 1909ல் மின்டோமார்லி சீர்திருத்தம் வந்தது. 1910ல் தனித்தொகுதியில் சட்டசபைக்கு வந்தார்கள். அந்த தேர்தலில் நின்று சட்டசபைக்கு வந்த முஸ்லீம் அங்கத்தினர்களில் இப்போது காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் முகையதீன் மரைக்காயர் அவர்களின் தகப்பனார் காலஞ்சென்ற சர்.அகமது தம்பி மரைக்காயர் அவர்களும் ஒருவர். இவைகளைக் காங்கிரஸ்காரர்கள் கண்டித்தார்கள். இது சரித்திர சம்மந்தமானது. 1916ல் பெசன்ட் தலைமையில் கூடிய காங்கிரசில் முஸ்லீம்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் முஸ்லீம்கள் காங்கிரசில் சேர்ந்தார்கள். அதன்பின் காங்கிரசில் முக்கியஸ்தராயிருந்த டாக்டர் நாயரும், சர்.தியாகராஜ செட்டியாரும் எலக்ஷனில் பார்ப்பனரால் தோல்வி அடைந்தபின் பார்ப்பனரல்லாதார் நன்மையை உத்தேசித்து இந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்தார்கள். பார்ப்பனரல்லாத மற்ற சமூகத்தினர் அத்தனை பேரும் இந்தக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். 1885 வருஷம் முதல் 1915 வருஷம் வரையும் பள்ளிக்கூடங்களில் அதிகமாகப் படித்தவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களுக்கே தான் பெரிதும் உத்தியோகம் போய்க் கொண்டிருந்தது இல்லை என்று யாராகிலும் சொல்லட்டுமே. 1915ம் வருடத்திற்கு முன் இப்போது எல்லா சமூகத்தினர்களும் சர்க்காரில் உத்தியோகம் பார்ப்பது போல், உத்தியோகம் பார்த்தார்களா என்று கேட்கின்றேன். இன்னும் முஸ்லீம்களில் இன்று பி.ஏ. பாஸ் செய்தவர்கள் மாதிரி, டிப்டி கலைக்டர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிற மாதிரி முன்னே இருந்தார்களா என்று கேட்கிறேன். காங்கிரஸ் ஒன்று தான் தேசீய ஸ்தாபனம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி ஜஸ்டிஸ் கட்சியைக் குறை கூறுகிறார்கள். ஆனால் அடைய நினைப்பது உத்தியோகம். சர்க்காரில் உத்தியோகம் கொடுத்தவுடன் அதற்கு பதில் ஏழைகளுக்கு வரி போடுவதுதான். எனக்குத் தெரிய 5 தாலூக்காக்களுக்கு ஒரு சப் கலைக்டர் இருந்து வந்தார். இப்போது 2 தாலூக்காக்களுக்கு ஒரு சப் கலைக்டர் இருக்கிறார். இப்படியே எல்லா உத்தியோகங்களிலும் வெள்ளைக்காரனுக்கு கொடுப்பதைப் போல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால்தான் முன்னே 2 மந்திரியாய் இருந்தது இதுபோது 7 மந்திரியாகிவிட்டது. 1920ல் மூன்றரையே அரைக்கால் கோடியாய் இருந்த சம்பளம், 1921ல் 6லீ கோடி ஆகிவிட்டது. இது உங்கள் ஜில்லாவில் இருக்கிற மகாலிங்க ஐயர் என்கின்ற ஒருவரே விபரமாய் எழுதி இருக்கிறார் இதோ பாருங்கள். இது காந்தி சர்க்காரை மிரட்டி வீண் வீம்பு பேசியதால் ஏற்பட்ட கஷ்டமாகும். அதனால்தான் முன் 100ரூபாய் சம்பளமாய் இருந்தது. இப்போது 150 முதல் 200 வரையும் ஆகிவிட்டது.

நேற்று பட்டேல் வந்து போலீஸ்காரரை மிரட்டினார். உடனே சர்க்கார் காங்கிரஸ் மந்திரிக்கும் போலீசுக்கும் சம்மந்தமில்லை என்று உத்திரவு போட்டு விட்டார்கள். காங்கிரஸ்காரர் அதிகாரத்திற்கு வந்தவுடன் பிரித்த ஜில்லா போர்டை ஒன்றாக ஆக்கிவிடுவோம் என்று சொல்லுகிறார்கள். உடனே சர்க்கார் பிரிக்கமுடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். 1920 முதல் 1936 வரை காங்கிரஸ் சாதித்தது என்ன? காங்கிரஸ்காரர்கள் சட்ட சபைக்கு போக என்ன காரணம் சொல்லுகிறார்கள்? முன்பு அதை பஹிஷ்கரித்த போது என்ன சொன்னார்கள்? இன்று சொல்லுவது என்ன? சட்டசபைக்கு நாய், கழுதைதான் போகும் என்றார்கள். இந்த 10-16 வருடம் காங்கிரஸ்காரர்கள் செய்த கிளர்ச்சியில் ஜனங்களுக்கு சாதித்தது என்ன? நன்மை என்ன வென்று கேட்கிறேன் சொல்லட்டுமே. ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது, வெள்ளை அறிக்கையை கிழிப்பது, சீர்திருத்தத்தை உடைப்பது என்றால் என்ன? இவர்கள் இந்திய சட்டசபையில் செய்தார்களா? இவர்களுக்கு (காங்கிரஸ்காரர்) நாணயம் இருந்தால் சைமன் கமிஷனை பகிஷ்கரித்து சைமன் கமிஷன் சிபார்சு செய்த புதிய சீர்திருத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் போட்டி போடலாமா என்று கேட்கின்றேன். தோழர் காந்தி காங்கிரசு தோற்றுப் போனதிற்கு அது ஒரு வியாபாரம் என்கிறார். ஒரு வியாபாரத்தில் நஷ்டப்பட்டால் வேறு வியாபாரம் செய்வேன் என்கிறார்.

1920ம் ஆண்டில் காங்கிரசின் தீர்மானம் இந்து முஸ்லீம் ஒற்றுமை, மதுவிலக்கு, கதர், தீண்டாமை ஒழிப்பு முதலானவைகளாகும். அவைகளில் இன்று காங்கிரசில் ஏதாகிலும் ஒன்று இருக்கிறதா? இவர் சங்கதி பலிக்காமல் போகவே "சுயராஜ்யம் வந்தபிறகு இவை பார்த்துக் கொள்ளலாம்" என்கின்றார் காந்தியாரும். வட்டமேஜை மகாநாட்டில் இவர் (காந்தி) டாக்டர் அம்பேத்கார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நீ பிரதிநிதி இல்லை என்று தான் சொன்னார். பள்ளிக்கூடங்களை விடச் சொன்னார் - ஜெயிலுக்கு 1000க் கணக்கான 10000 ஆயிரக்கணக் கானவர்களை அனுப்பினார். கடைசியில் என்ன முடிந்தது? வைசிராய் இடம் மண்டி போட்டு இனிமேல் சட்டம் மீறுவதில்லை என்று சொல்லி ராஜி செய்து கொள்ள வேண்டி இருந்தது. காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் காந்தி இர்வின் ஒப்பந்தம் பற்றி பெருமை பேசிக்கொள்ளலாமே ஒழிய அதில் தோல்வியும் மன்னிப்பும் தான் இருக்கிறது. ஒரு உருப்படியான காரியமும் இவர்கள் இதுவரையும் செய்யவில்லை என்பதை ருசுப்பிக்க முடியும். யாராவது காங்கிரசினால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று சொல்லி மறுக்கட்டுமே பார்ப்போம். உப்புவரியை குறைக்க உப்பு அள்ளப்போனார்களே உப்பு வரி குறைந்ததா, என்ன நடந்தது. இனிமேல் உப்புக்காய்ச்சுவதில்லை என்று ஒப்புக் கொண்டதுதான். எலக்ஷன் காலத்தில் புதிதாய் ஒரு தந்திரமாக சட்டசபைக்கு சுயராஜ்யம் வாங்கப்போகிறோம் என்று சொல்லுகிறார்கள். காந்தியார் சட்டசபையில் சுயராஜ்யம் வராது என்று சொல்லுகிறார். ஜவஹர்லால் நேரு ஏழைகள் பட்டினி போக்க சுயராஜ்யம் வாங்கப் போவதாக கூறுகிறார். இன்று உலகில் உள்ள அமெரிக்கா, பிரஞ்சு, இங்கிலாந்து முதலிய தேசங்கள் சுயராஜ்யம் இல்லாத தேசமா? அங்கு ஏழைகள் இல்லையா? பட்டினிக்காரர்கள் இல்லையா? இது சின்ன நேருவுக்குத் தெரியாதா? இன்னும் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்குள்ளேயே சுயராஜ்யம் என்பதில் வித்தியாசமான அபிப்பிராயம் சொல்லப்படுகிறது. ஒருவர் குடி ஏற்ற நாட்டு அந்தஸ்து என்கிறார். வேறொருவர் பூர்ண சுயராஜ்யம் என்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் வெள்ளைக்காரரோடு ஒப்பந்தம் செய்து கொள்ளுவது தான் சுயராஜ்யம் என்கிறார். ஆகையால் நீங்கள் எதை நம்புகிறீர்கள். தோழர்களே இன்னும் சொல்லுகிறேன். இன்று நடக்கும் கிளர்ச்சிகள் எல்லாம் முஸ்லீம்களுக்கும், ஆதிதிராவிடர்கள் என்பவர்களுக்கும் கிடைத்திருக்கும் வகுப்புரிமையை கெடுக்கவும் உத்தியோக வகுப்பு முறையை அழிக்கவும்தான். இந்தக் காரியங்களுக்கு ஆகத்தான் பார்ப்பனர்கள் தேசபக்தி பேசுகிறார்களே தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணருங்கள். ஏன் 30, 40 வருடங்களுக்கு முன், "துலுக்கனை" தொட்டால் அந்த விரலை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். இந்துக்கள் அகராதிகளில் கூட பாருங்கள். "துலுக்கன்" என்றால் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? இப்போதல்லவா முஸ்லீம்கள் தங்கள் நிலைமை உணர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு தேடிக்கொண்ட பிறகு, என்ன! பாயி!! - சாயபே - ஜனாப் - பகதூர் என்று தோளோடு தோள் உரசுகிறார்கள். சில சமஸ்தானங்களில் பார்ப்பான் கொலை செய்தால் தூக்குக்கிடையாது என்று சட்டம் இருக்கிறது. இன்றும் இந்து லாவில் நமது பெண்களுக்கு பார்ப்பான் பிள்ளை கொடுத்தால் அப்பிள்ளைக்கு பார்ப்பான் சொத்தில் பங்கில்லை. பார்ப்பனப் பெண்ணுக்கு நாம் பிள்ளை கொடுத்தால் அப்பிள்ளைக்கு நமது சொத்தில் பங்கு உண்டு. இந்த வித்தியாசங்கள் ஒழியவேண்டும் என்று சொல்லுகிற முஸ்லீம் லீக்கையும் ஜஸ்டிஸ் கட்சியையும் எப்படி தேசத்துரோக கட்சி என்று சொல்ல முடியும்?

தமிழ்நாட்டை பொறுத்தவரையும் தான் பார்ப்பனர் அல்லாதார் கட்சி, வடநாட்டில் இந்து - முஸ்லீம் கிளர்ச்சிதானே - இன்றும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் கலகம் இல்லாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சிதான்.

இன்னும் தோழர்களே உங்கள் ஜில்லா முஸ்லீம் தொகுதிக்கு நிற்கும் ஜனாப் தாஜúடீன்சாயபு அவர்கள் சட்டசபையில் வரிகுறைப்பு சம்பந்தமாய் ஏதாகிலும் செய்திருக்கிறாரா இல்லையா என்பதை சட்டசபை நடவடிக்கைப் புத்தகத்தில் பாருங்கள். 1933ம் வருடமே வரிகுறைப்பு சம்பந்தமாய் வந்த தீர்மானங்களுக்கு ஓட்டுச் செய்து வந்திருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள் அசம்பளியில் 185 தீர்மானம் கொண்டு வந்து சர்க்காரை தோற்கடித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். அத்தீர்மானங்கள் என்ன ஆயிற்று? குப்பைத் தொட்டிக்குத் தானே போயிற்று. நிலவரியில் நமது மாகாணத்தில் இப்போது ரூ.1க்கு 3 அணா வரி வஜா செய்து இருப்பது கூட ஜஸ்டிஸ் கட்சியின் முயற்சியும் ஆதரவும் இல்லாவிட்டால் எப்படி முடியும் என்று கேட்கிறேன். காங்கிரசுக்கு மெஜாரிட்டி இருந்ததா?

மேல்சபைக்கு என்.ஆர். சாமியப்ப முதலியார் நிற்கிறார். காங்கிரஸ் அல்லாத டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாரை தோழர் ஆச்சாரியாரும் தஞ்சை காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஆதரிக்கிறார்கள். இது எப்படி ஒழுங்கான நியாயமாகும்? ராவ்பகதூர் பட்டத்தை விட்ட தோழர் ராமனாதம் செட்டியாருக்கு பார்ப்பனர்கள் நாமம் சாத்தப் போகிறார்கள். அவர் கண்டிப்பாய் தோற்கடிக்கப்படப்போகிறார். இது தான் காங்கிரஸ் கட்டுப்பாடு.

ராவ்பகதூர் ஏ.டி.பன்னீர்ச் செல்வம் கிறிஸ்துவ தொகுதிக்கு நிற்கிறார். அவர் என்ன குற்றம் செய்து விட்டார்? உத்தியோகம் பார்க்கிறார் என்பது தானே அவர் செய்த தப்பு. இந்த உத்தியோகங்கள் இவர்கள் பார்க்கா விட்டால் சும்மாகிடந்து விடுமா? 200 வருஷம் பொறுத்து ஒரு இந்திய கிறிஸ்தவர் மந்திரி ஆனால் இதில் ஏன் இவ்வளவு பொறாமை? இந்த பார்ப்பனக் கூட்டத்தார் உத்தியோகம் பார்த்தால் தேச பக்தி என்பதும் நாம் உத்தியோகம் ஒன்று இரண்டு நாளைக்குப் பார்த்தால் அதை தேசத்துரோகி என்பதா? என்று கேட்கிறேன். தோழர் தாஜúடீன் சாயபு மந்திரி காரியதரிசியாய் இருந்து மாதம் 500ரூ. வாங்கினதற்கு இந்துக்கள் பொறாமைப்படவில்லை. சில முஸ்லீம்கள் அதிகப் பொறாமைப்படுகிறார்கள். பார்ப்பனர்கள் 1000, 2000, 5000 வாங்கினார்கள் - வாங்குகிறார்கள். எத்தனையோ பார்ப்பன வக்கீல் N 10 ஆயிரம் இருபது ஆயிரம் வாங்கினார்கள். அதை யாரும் குறிப்பிடுவதில்லை. இம்மாதிரியே பார்ப்பனரல்லாதார் சமூகம் தங்களுக்குள்ளாகவே பொறாமைப்பட்டு ஒருவரை ஒருவர் கெடுத்துக் கொள்கிறார்கள். சாயபுக்கு இவ்வளவு சாயபு எதிர்ப்பும் முதலியாருக்கு இவ்வளவு முதலியார் எதிர்ப்பும் பார்க்கிறீர்களே, ஒரு பார்ப்பானுக்கு ஒரு பார்ப்பான் எதிர்ப்பையோ பொறாமையையோ காட்டுங்கள் பார்க்கலாம். நாம் நாகரீகமடையாத மக்கள் - காட்டுமிராண்டி மக்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

காங்கிரஸ் வெற்றி பெற்றால் வகுப்பு உரிமை ஒழிந்தது. பழயபடி ஜட்கா வண்டி ரைன்சும் பங்கா கயிறும் பில்லை சேவகமும் தான் ஏற்படும். ஆதலால் ஜாக்கிரதை! எச்சரிக்கை!! பார்ப்பனர்கள் எச்சரிக்கை!!!

குறிப்பு: 12.02.1937 இல் நாச்சியார்கோவில், கூத்தாநல்லூர் ஆகியவிடங்களில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 14.02.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: