Print
Category: சுயமரியாதை இயக்கம்

 

இந்திய  சட்டசபைத்  தேர்தல்  இந்தியா  முழுவதிலும்  அனேகமாக  நடந்தாகிவிட்டது.

இவற்றுள்  சென்னையே  பார்ப்பனர்களுக்கு  பெருமித  வெற்றி  அளித்து  எங்கு  பார்த்தாலும்  பார்ப்பன  வெற்றிக்  கொண்டாட்டத்  திருநாள்கள்  நடைபெறச்  செய்திருக்கிறது.  இத்திருநாள்களை  புராணத்  திருநாள்கள்  அதாவது  "நரகாசூரன்  தோற்ற  நாள்"  (அல்லது)  "நரகாசூரனைக்  கொன்ற  நாள்"  என்று  தீபாவளி  கொண்டாடுவது  போல்  "பார்ப்பனரல்லாதார்  இயக்கம்  தோற்ற  நாள்  (அல்லது)  ஜஸ்டிஸ்  கட்சியை  வெட்டிப்  புதைத்த  நாள்"  என்று  இப்போது  ஊர்  ஊராய்  கொண்டாடப்  புறப்பட்டு விட்டார்கள்  நம்  பார்ப்பனர்கள்.  இத்திருநாள்  இனி  வருஷா  வருஷம்  (காந்தி  ஜயந்தி  முதலியவை  போல்)  கொண்டாடப்படலாம்.  இதில்  பார்ப்பனரல்லாதாரும்  பெருமிதமாய்  கலந்து  கொண்டு  எண்ணெய்  ஸ்நானம்  செய்து  புதுவேஷ்டி  அணிந்து  பலகாரம்  செய்து  சாப்பிடலாம்.  என்றாலும்  இத்திருநாள்  கொண்டாட்டத்தின்  பயனாய்  ஏற்பட்ட  லாபம்  என்ன  என்று  பார்ப்போமானால்  தோழர்கள்  சத்தியமூர்த்தி  அய்யர்,  ராஜகோபாலாச்சாரியார்,  டாக்டர்  ராஜ  அய்யங்கார்  இன்னும்  ஏதோ  இரண்டொரு  சாஸ்திரியார்கள்,  ராவுஜீக்கள்  ஆகியவர்கள்  சேர்ந்து  ஊர்ஊராய்ச்  செல்வதும்,  இவர்களுக்கு  எவ்வித  ஆபத்தும்  வராமல்  இவர்களைக்  காப்பாற்ற  ஆங்காங்கு  சில  ரெட்டியார்,  முதலியார்,  கவுண்டர்,  செட்டியார்,  பிள்ளை,  சாயபு  ஆகிய  கூட்டத்தைச்  சேர்ந்த  ஆசாமிகள்  "ராமர்  பின்னால்  அனுமார்கள்  (குரங்குகள்)  சென்றன"  என்பது  போல்  பயபக்தியுடன்  சென்று  காவல்  காப்பதும்,  இந்த  ஐயர்,  ஆச்சாரியார்,  அய்யங்கார்,  சாஸ்திரி,  ராவுஜீ  ஆகிய  கூட்டங்கள்  மேடைகளிலும்,  பத்திரிகைகளிலும்,  "கொடுங்கோலரக்கன்  ஷண்முகம்  இமயமலை  போல்   வீழ்ந்தான்,  கொடிய  ராட்சதன்,  பொப்பிலி  ஒழிந்தான்,  அடிமைக்  குலாம்  கட்சியாகிய  ஜஸ்டிஸ்  கட்சி  வெட்டிப்  புதைக்கப்பட்டுவிட்டது",  "வெற்றிக்  கொண்டாட்டம் கொண்டாடுவோம்  வாருங்கள்  வாருங்கள்"  என்று  கூவுவதற்கு  தைரியம்  ஏற்பட்டு  விட்டதேயாகும்.

நமது  மாகாணத்தில்  எங்கெங்கு  பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சி  இல்லையோ  அங்கும்,  எங்கு  பார்ப்பன  ஆதிக்கம்  அதிகமோ  அங்கும்,  எங்கு  முழு  மூடர்களும்,  துரோகிகளும்  மலிந்திருக்கிறார்களோ  அங்கும்  பார்ப்பனர்களையே  தேர்தல்களுக்கு  நிறுத்துவதும்,  எங்கு  பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சி இருக்கின்றதோ  அங்கெல்லாம்  முதல்தர  சோணகிரிகளாகவும்,  பிறவி  அடிமைகள்  என்று  மதிக்கக்  கூடியவர்களாகவும்,  தங்கள்  சுயநலத்துக்கு  எதையும்  விற்கக்  கூடியவர்களாகவும்  பார்த்து  பார்ப்பனரல்லாதார்களை  நிறுத்துவதும்,  அவர்களை  வெற்றி  பெறச்  செய்வதும்,  பிறகு  அவர்களைப்  பின்னால்  இழுத்துக்கொண்டு  "ஜஸ்டிஸ்   கட்சி  வெட்டிப்  புதைக்கப்பட்டது  குலாம்கள்  ஒழிந்தார்கள்"  என்று  கூப்பாடு  போடுவதும்  ஆகிய  காரியம்தான்  இன்றைய  காங்கிரஸ்  வெற்றியாய்  கொண்டாடப்படுகிறது  என்றும்  சொல்லலாம்.

பார்ப்பனரல்லாத  மக்களுக்கு  சுயமரியாதை  உணர்ச்சியும்,  பகுத்தறிவும்  இல்லை  யென்றால்,  பார்ப்பனர்கள்  இவ்வித  வெற்றிக்  கொண்டாட்டம்  கொண்டாடுவதிலும்,  "பார்ப்பனரல்லாதார்  கட்சியை  வெட்டிப்  புதைத்து  விட்டோம்"  என்று  அவர்கள்  பறை  அடிப்பதிலும்  யாதொரு  குற்றமும்  இல்லை.

மடையர்கள்  சுமக்க  வேண்டியதும்,  தந்திரக்காரர்கள்  ஏறிச்  சவாரி  செய்ய  வேண்டியதும்  இயற்கையேயாகும்.  அந்த  இயற்கை  தத்துவத்தின்படிதான்  இன்று  இந்த  நாட்டில்  100க்கு  97  மக்களாய்  இருக்கக்  கூடிய  ராஜாக்கள்,  ஜமீன்தார்கள்,  பிரபுக்கள்,  முதலாளிமார்கள்,  பண்டிதர்கள்  சகல  காரியத்துக்கும்  பாடுபடும்  பாட்டாளி  மக்கள்  ஆகிய  கூட்டத்தார்கள்  தீண்டக்  கூடாதாராய்,  பறையராய்,  சக்கிலியராய்,  சூத்திரராய்,  கீழ்  ஜாதியராய்,  பார்ப்பனர்களின்  வைப்பாட்டி  மக்களாய்,  அடிமைகளாய்,  பார்ப்பனர்கள்  காலைக்  கழுவிக்  குடிப்பவர்களாய்,     தாசிகளாய்,  தாசி  மக்களாய்  இருந்து  வருவதும்  100க்கு  மூன்றே பேராய்  இருந்து  வரும்  மக்கள்  பிச்சை  எடுத்து  வாழும்  மக்கள்,  உலகிலுள்ள  சகல  இழிதொழிலுக்கும்  முன்னின்று  அச்சக்காரம்  (அட்வான்ஸ்)  வாங்கும்  மக்களாயிருந்தாலும்  அவர்கள்  இன்று  பூதேவர்களாயும்,  பிராமணர்களாயும்,  ஆச்சாரிமார்களாயும்,  சுவாமிகளாயும்,  அய்யர்களாயும்,  மண்வெட்டியும்  கோடாலியும்  கையில்  தொடுவது  தோஷம்  என்று  சொல்லிக்  கொண்டு  ஒரு  சொட்டு  வேர்வை  கூட  நிலத்தில்  விழுகாமலும்,  ஒரு  கடுகளவு  கவலையோ  விசாரமோ  கைமுதலோ  இல்லாமல்  வாழ்வு  நடத்தக்  கூடியவர்களாயுமிருந்து  ஆதிக்கங்கள்  செலுத்தப்பட்டு  வருகின்றன.

இதே  இயற்கைத்  தத்துவம்  தான்,  இந்தியாவில்  உள்ள  35  கோடி  மக்களையும்,  இவ்வளவு  விஸ்தீரணமுள்ள  நாட்டையும்  ஆயிரத்துக்கு  ஒன்று  வீதமுள்ள  எண்ணிக்கைகூட  இல்லாத  அளவு  வெள்ளைக்காரர்கள்  இந்தியாவில்  இருந்து  கொண்டு  சர்க்கஸ்காரன்  மிருகங்களை  நடத்துவது  போல்  நடத்தி  ஆட்சி  புரிந்து  வர  முடிகின்றது.

மற்றும்  இந்த  இயற்கை  தத்துவம்தான்  உழைக்கின்ற  மக்கள்  வயிற்றுக்கும்,  வயித்தியத்துக்கும்  கூட  போறாமல்  பட்டினியினாலும், நோயினாலும்  அவஸ்தைப்  பட்டுக்  கொண்டு  கஷ்டப்படுவதும்,  பாடுபடாத  சோம்பேரிகள்  அப்பாட்டின்  பலனையெல்லாம்  தாங்களே  அனுபவிப்பதும்,  மீதியை  தாருமாறாய்  பாழ்படுத்தி  வருவதுமான  கேடுகள்  நடந்து  வருகின்றன.

இந்த  இயற்கைத்  தத்துவம்  தான்,  இன்றும்  20ம்  நூற்றாண்டு  மக்களைக்  காட்டுமிராண்டி  வாழ்க்கைக்குக்  கொண்டுபோக  முனைந்து  நிற்கிறவரும்,  முதலாளிமார்களுடையவும்,  சோம்பேரி  வாழ்க்கைக்காரர் களுடையவும்,  அடிமையுமான  காந்தியாரை  மகாத்துமாவாக்கியதுமாகும்.

இப்படிப்பட்ட  மக்கள்  வாழும்  நாட்டில்  உள்ள  பார்ப்பனர்கள்  "பார்ப்பனரல்லாதார்  முன்னேற்றத்தைக்  குலைத்து  அவர்களது  ஸ்தாபனத்தை  வெட்டிப்  புதைத்து  விட்டோம்"  என்று  சொல்லுவதில்  இயற்கைக்கு  விறோதமோ,  அதிசயமோ  ஏதும்  இருப்பதாக நமக்குத்  தோன்றவில்லை.

பார்ப்பனருக்கு  ஆட்கள்  கிடைக்கின்றன  பணங்கள்  கிடைக்கின்றன.  ஏனென்றால்  பார்ப்பனரல்லாத  மடையர்களே  ஏழைகளை  வருத்தி  சித்திரவதை  செய்து கொள்ளை  கொண்ட  பணத்தை  மானம்,  வெட்கம்,  அறிவு  சிறிதும்  இல்லாமல்  மோட்சத்தின்  பேரால்,  புண்ணியத்தின்  பேரால்,  தேசத்தின்  பேரால்,  தேசாபிமானத்தின்  பேரால்,  கதரின்  பேரால்  தீண்டாமை  விலக்கின்  பேரால்  கொட்டிக்  கொட்டிக்  கொடுத்து  பார்ப்பனர்கள்  பையை  நிரப்பினால்,  பின்பு  அவர்களுக்கு  வேலை  செய்ய  உழைக்க  மானத்தையும்  மரியாதையையும்  விற்க,  சமூகத் துரோகத்தைச்  செய்ய  ஏன்  ஆட்கள்  கிடைக்காது  என்று  யோசிண்த்துப்  பார்க்க  வேண்டுகிறோம்.

வெறிகொண்ட  மிருகங்கள்  நீக்குப்  போக்கு  இல்லாமல்  குலைப்பது  போலும்,  கடிப்பது  போலும்  தோழர்கள்  ஷண்முகம்,  வரதராஜுலு,  ஏ.  ராமசாமி  ஆகியவர்கள்  மீது  பாய்ந்து  அவர்களை  ஒரு  கூட்டம்  வைகின்றது.  இந்த  வசவுகளையே  பார்ப்பனர்களிடம்  கூலி  பெற்றுக்  கொண்டு  பார்ப்பனரல்லாதார்களே  கூட  சிலர்  வைகிறார்கள்,  எழுதுகிறார்கள்  என்றால்  பார்ப்பனரல்லாத  சமூகம்  ஏன்  அழியாது?  அல்லது  ஏன்  இன்னமும்  இழிவான  நிலைக்குப்  போகாது?  அல்லது  பார்ப்பனரல்லாதார்  சூத்திரர்  என்றும்  பார்ப்பனர்களின்  வைப்பாட்டி  மக்கள்  என்றும்  எழுதிவைத்த  சாஸ்திரங்களை  மாற்றி  இன்றைய  தினம்  ஒவ்வொரு  பார்ப்பனரல்லாதாரும்,  அவனது  பெண்டு  பிள்ளைகளை  கொண்டு  வந்து  பார்ப்பனர்களுக்கு  தங்கள்  செலவில்  விட்டுப்போக வில்லையானால்  அவன்  நரகத்துக்குப்  போவதோடு  பெரியதொரு  தேசத்துரோகியாகவும்,  சர்க்கார்  குலாமாகவும்  மதிக்கப்படுபவன்  என்று  கூட  ஏன்  எழுதி  வைக்கமாட்டார்கள்  என்பதை  யோசித்துப்  பார்க்க  வேண்டுகின்றோம்.

பார்ப்பனர்கள்  முன்காலத்தில்  நடந்து  கொண்ட  மாதிரிக்கும்,  இப்போது  நடந்து  கொள்கின்ற  மாதிரிக்கும்  கடுகளவாவது  மானம்,  வெட்கம்  இருந்தால்  அவர்கள்  பின்  வைப்பாட்டி  மக்கள்  போல்  திரிய  யாருக்காவது  எந்தப்  பார்ப்பனரல்லாதாருக்காவது  மனம்  வருமா  என்று  கேழ்க்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்க்கு  இனியாவது  மானம்,  ரோஷம்  வந்து  தங்கள்  சமூக  நலனுக்குழைக்க  வேண்டும்  என்றுதான்  நாம்  இந்தப்படி  எழுதுகின்றோமே  ஒழிய  துவேஷத்துக்காக  அல்ல.

பார்ப்பனரல்லாதார்  அல்லது  தோழர்கள்  ஷண்முகம்,  வரதராஜுலு,  ஏ.  ராமசாமி  முதலியார்  ஆகியவர்கள்  தேசத்துக்கு  அல்லது  தனிப்பட்ட  நபருக்குச்  செய்த  மோசம்,  துரோகம்  அல்லது  இழிவான  காரியம்  என்ன  என்று  எந்த  பார்ப்பனரல்லாதாராவது  சொல்ல  முன்  வரட்டும்.

தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  அவர்களுடைய  யோக்கியதையை  விட  தோழர்கள்  ராஜன்,  ராஜகோபாலாச்சாரி  ஆகியவர்களுடைய  யோக்கியதையைவிட,  ஷண்முகம்,  வரதராஜுலு,  ராமசாமி  முதலியார்  ஆகியவர்கள்  எந்தவிதத்தில்  குறைந்தவர்கள்  என்று  பந்தயம்  கட்டிக்  கேட்கின்றோம்.

தோழர்கள்  சத்தியமூர்த்தியும்  ராஜகோபாலாச்சாரியாரும்  என்றைக்காவது  தங்கள்  ஜாதி  அபிமானத்தை  விட்டுக்கொடுத்து  நடந்திருக்கிறார்களா?

தோழர்  சத்தியமூர்த்தியை  தலையில்  தூக்கிவைத்துக் கொண்டு  ஆடும்  பார்ப்பனரல்லாதார்கள்  தங்கள்  உடலில்  பார்ப்பனரல்லாதார்  ரத்தமோ  அல்லது  நாணையம்,  ஒழுக்கம்  என்கின்ற  தத்துவமோ  கடுகளவு  இருக்கிறது  என்று  சொல்லிக்கொள்ள  அருகதை  உடையவர்களாயிருந்தால்  தோழர்கள்  ஷண்முகம்,  வரதராஜுலு,  ராமசாமி  முதலியார்  இவர்களை  விட  தோழர்  சத்தியமூர்த்தி  எந்தவிதத்தில்  யோக்கியர்  என்பதை  மெய்ப்பிக்கட்டும்  என்று  கேழ்க்கின்றோம்.

எதற்கும்  ஒரு  அளவு  உண்டு.  அளவுக்கும்  மீறுவது  என்றால்  அதை  இரண்டில்  ஒன்று  பார்க்க  வேண்டிய  நிலை  என்றுதான்  சொல்லுவதோடு  வைவதும்,  காலித்தனம்  செய்வதும்,  பார்ப்பனருக்கும்  காங்கிரசின்  பெயரால்  பிழைக்கின்றவர்களுக்கும்  தான்  ஏகபோக  உரிமை  என்பதை  எப்படியாவது  ஒழித்தாக  வேண்டிய  நிலை  என்றுதான்  சொல்லுவோம்.

காங்கிரசுக்கும்,  கதருக்கும்  சம்மந்தமில்லை  என்று  கதரின்  பேரால்  வசூலித்த  பணம்,  தேர்தல்களுக்கு  செலவு  செய்யப்பட்டது  யாரும்  அறியார்களா? கதரின்  பெயரால்  மாதம்  100,  200  பணம்  வாங்கிப் பிழைக்கும்  ஆட்கள் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டு  இருக்கவில்லையா?  தீண்டாமை  விலக்கின்  பேரால்  வசூலித்த  பணத்தில்  மாதம்  40,  50,  100  சம்பளமாகவும்  வேறு  எடுபிடி  செலவுக்காகவும்  என்று  வாங்கிப்  பிழைக்கும்  ஆட்கள்  தேர்தலில்  பிரசாரம்  செய்யவில்லையா?  இதெல்லாம்  நாணையமான,  யோக்கியமான  காரியமா  என்று  கேழ்க்கின்றோம்.

இந்திய  சட்டசபையில்  கோவில்  பிரவேச  மசோதா  கொண்டுவரச்  செய்து  ஜனங்களைத்  தீண்டாமை  விலக்கின்  பேரால்  ஏமாற்றி  பார்ப்பனரல்லாதாரிடம்  ஏராளமாய்  பணம்  வசூல்  செய்து  கொண்டபிறகு  அந்த  மசோதாவை  வாப்பீஸ்  பெறும்படி  செய்துவிட்டு  இந்திய  சட்டசபைத்  தேர்தல்களின்போது  இனிமேல்  அந்த  மாதிரியான  மசோதா  கொண்டு  வருவதில்லை  என்றும்  வேறு  யாராவது  கொண்டுவருவதா யிருந்தாலும்  ஓட்டுக்  கொடுப்பதில்லை  என்றும்  சொல்லி  பார்ப்பனர்களுக்கு  வாக்குக்  கொடுத்து  தேர்தல்  பிரசாரம்  செய்து  வெற்றி  பெற்று விட்டு  மானமில்லாமல்  வெற்றிக்  கொண்டாட்டம்  கொண்டாடுவதென்றால்  இதற்கு  எதை  சமானமாகச்  சொல்கிறது  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

வெற்றி  கொண்டாட்டம்  என்று  சொல்லுவதெல்லாம்  காங்கிரசின்  நாணையக்  குறைவும்  பார்ப்பனர்களின்  சூட்சியும்  ஜெயித்துவிட்டது  என்று  சொல்லுவதை  விட  வேறு  என்ன  என்று  கேட்கின்றோம்.

தோழர்  சத்தியமூர்த்தி  யோக்கியதை  நமக்குத்  தெரியாதென்று  நினைத்துக்  கொண்டு  அவரைத்  தோளின்  மீது  தூக்கி  வைத்துக்  கொண்டு  திரிகின்றவர்கள்  இந்தக்  கும்மாளம்  போடுகின்றார்களா?  அல்லது  தெரியும்  என்று  நினைத்துக்  கொண்டே  பசி  வெட்கமறியாது  என்பது  போல்  கூலிக்காசைப்பட்டு  இம்மாதிரி  அவரைப்  புகழ்கின்றார்களா  என்றும்  கேழ்க்கின்றோம்.

தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்கள்  இதுவரை  நடந்து  வந்ததும்  அவரது  உள்  எண்ணமும்  இந்தியா  பூராவும்  உள்ள  அறிஞர்கள்  அவரைப்  பற்றி  கொண்டுள்ள  எண்ணமும்  நமக்குத்  தெரியாது  என்று  இவர்கள்  கருதுகின்றார்களா  என்று  கேட்கின்றோம்.  தோழர்  ராஜன்  அவர்களின்  யோக்கியதைதான்  என்ன?  இவர்கள்  எல்லோரும்  வருணாச்சிரம  ராஜாபகதூரை  விட  எந்த  விதத்தில்  மேலானவர்கள்  என்று  பார்ப்பனக்  கூலிகளையே  கேழ்க்கின்றோம்.

குருகுலப்  போராட்டம்  வந்த  காலத்தில்  தோழர்  வரதராஜுலு  மீது  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானம்  கொண்டுவந்ததுடன்  காங்கிரஸ்  கமிட்டியில்  இருந்து  ராஜினாமா  கொடுத்துவிட்டு  ஓடிய  "சீர்திருத்தக் காரர்கள்"  தான்  என்பதை  உலகம்  அறியாது  என்று  கருதிக் கொண்டிருக்கிறார்களா  என்று  கேழ்ப்பதோடு,  இந்தச்  சீர்திருத்தவாதிகள்  இரவும்  பகலும்  புராணப்  பிரசங்கம்  செய்துகொண்டு  எப்படி  எப்படி  பார்ப்பனரல்லாதார்  குடியைக்  கெடுப்பது  என்று  பிளான்  போட்டுக்  கொண்டு  இருக்கிறதே  அல்லாமல்  இவர்கள்  தேசத்துக்கும்  சமூகத்துக்கும்  நாளது  வரை  செய்த  ஒரு  காரியமோ,  பயனோ  இன்னது  என்று  எடுத்துக்காட்ட  முடியுமா  என்று  கேழ்க்கின்றோம்.

தோழர்  சாமி  வெங்கிடாசலம்  செட்டியார்தான்  ஆகட்டும்  எதைச்  சாதித்தவராய்  இருப்பார்?  அல்லது  ஷண்முகத்துக்கு  மேலாக  இவர்  எத்தனை  தடவை  ஜெயிலுக்குப்  போயிருப்பார்?  கைப்பிசகாய்  இவருடைய  பெயர்  ஓட்டர் லிஸ்டில் பதிக்கப்பட்டுவிட்டது என்பதைத் தவிர  இவர்  உண்மையிலேயே  அந்த  தொகுதி  ஓட்டருக்கு  லாயக்குள்ளவரா?  என்றும்  கேட்கின்றோம்.

செத்துப்போனவர்கள்  எத்தனை  பேர்  எழுந்து  வந்து  தோழர்  சாமி  வெங்கிடாசலத்துக்கு  ஓட்டுப்  போட்டுவிட்டுப்  போனார்கள்  என்பதைக்  கவனிக்கப்போனால்  எலக்ஷன்  நிலைக்குமா?  என்று  கேட்கின்றோம்.

மற்றும்  சமீப  காலம்  வரை  ஜஸ்டிஸ்   கட்சியை  தொங்கிக்  கொண்டிருந்ததும்  அபேட்சகராய்  தெரிந்தெடுக்கப்படும்  வரையில்  காங்கிரசையே  வைது  கொண்டிருந்ததும்  யாருக்கும்  தெரியாதா  என்று  கேட்கின்றோம்.  இவை  எப்படியோ  போகட்டும்  என்றாலும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  நின்று  வெற்றி  பெற்ற  வீரர்களுக்கும்,  அவர்களுக்கு  உழைத்த  வீரர்களுக்கும்  வெற்றியின்  பேரால்  வெற்றிக்  கொண்டாட்டம்  கொண்டாடும்  வீரர்களுக்கும்  என்ன  கொள்கை  இருக்கின்றது?  சட்டசபையில்  போய்  இவர்கள்  செய்யப்போகும்  காரியம்தான்  என்ன?  என்பதைப்பற்றி  ஒரு  வார்த்தையாவது  சொல்லக்  கூடுமா  என்று  கேட்கின்றோம்.  "ஜஸ்டிஸ்   கட்சிக்கு  கொள்கையில்லை"  என்று  சொல்லும்  இவர்களை  (காங்கிரசுக்காரர்களை)  உங்கள்  கொள்கை  என்ன  என்று  கேட்டால்  என்ன  பதில்  சொல்லக்  கூடும்?  எலக்ஷனில்  யாதொரு  கொள்கையும்  சொல்லாமல்  காந்தியாருக்கு  ஓட்டுப்  போடுங்கள்,  காங்கிரசுக்கு ஓட்டுப்  போடுங்கள்  என்று  கேட்பதும்,  காந்திக்கும்  காங்கிரசுக்கும்  எதற்காக  ஓட்டுப்  போடுவது  என்று  கேட்டால்,  ஜெயிலுக்குப்  போனதற்காகவும்,  அடிபட்டதற்காகவும்  ஓட்டுப்  போடுங்கள்  என்று  சொல்வதும்,  ஜெயிலுக்கு  போனதினாலும்,  அடிபட்டதினாலும்  ஏற்பட்ட  பலன்  என்ன  என்று  கேட்டால்,  ஜெயிலுக்கு  போனதும்  அடிபட்டதும்  முட்டாள்தனம்  என்று  கண்டுபிடிக்கப்பட்டு  இப்போது  சட்டசபைக்குப்  போகவேண்டும்  என்று  தீர்மானித்து  இருக்கிறோமே  அதுதான்  என்று  சொன்னதும்  அல்லாமல்  வேறு  கொள்கை  என்ன  என்று  இப்போதும்  கேட்கின்றோம்.

வெள்ளை  அறிக்கையை  நிராகரிக்கப்  போகின்றோம்  என்று  சொன்ன  சிலர்  வெள்ளை  அறிக்கையை  நிராகரிக்க  முயற்சித்து  தீர்மானம்  தோல்வி  அடைந்த  பின்போ  அல்லது  வெற்றிபெற்ற  பின்போ  அப்புறம்  என்ன  செய்யப்போகின்றீர்கள்  என்றும்  நீங்கள்  செய்த  தீர்மானத்திற்கு  எவ்வளவு  யோக்கியதை  உண்டு  என்றும்  கேட்ட  கேள்விக்கு  நாளது  வரை  என்ன  பதில்  சொல்லப்பட்டது  என்று  கேட்கின்றோம்.

யாதொரு  கொள்கையும்  இல்லாமல்  மக்களின்  முட்டாள்தனத்தையே  முதலாக  வைத்து  செய்த  ஏமாற்று  வியாபாரத்தில்  வெற்றி  பெற்றுவிட்டதால்  அதற்காக  இம்மாதிரி  குடிகாரன்  வெறிகாரன்  போல்  எல்லோரையும்  வாயில்  வந்தபடி  கீழ்மக்கள்  போல்  வைது  கொண்டுதான்  வெற்றிக்  கொண்டாட்டம்    கொண்டாடுவதா  என்று  கேட்கின்றோம்.  இது  எதை  நிரூபிக்கின்றது  என்றால்  பார்ப்பனர்களின்  சூட்சியிலிருந்து  இந்திய  மக்களை  விடுவிக்க  வேண்டியது  மிகவும்  அவசியமும்  அவசரமுமான  காரியம்  என்பதையும்  பாமர  மக்களுக்கு  தனித்  தொகுதியே  அவசியமான தென்பதையும்  நிரூபிக்கிறது  என்றுதான்  சொல்லுவோம்.

தகப்பன்  வீட்டுப்  பெருமையை  தமையனிடம்  சொல்லும்  தங்கச்சிபோல்  பஞ்சத்துக்காக  வந்து  காங்கிரசிற்குள்  புகுந்து  கொண்ட  இந்த  பச்சகானா  கூட்டம்  தோழர்  வரதராஜுலு  நாயுடுவுக்கும்,  சர். ஷண்முகத்துக்கும்  காங்கிரஸ்  பெருமையைப்  பற்றி  போதிப்பதென்றால்  அதில்  எவ்வளவு  ஞானம்  இருக்கின்றது  என்றுதான்  கேட்கின்றோம்.

ஏறக்குறைய  இந்த  15  வருஷ  அனுபோகத்தில்  யார்  யார்  காங்கிரசை  விட்டு  வெளியில்  போனால்  தாங்கள்  சொந்தத்தில்  வாழ  முடியுமோ  பிழைக்க  முடியுமோ  அவர்கள்  எல்லோருமே  சற்றேறக்  குறைய  காங்கிரசை  விட்டு  வெளியேறித்தான்  இருக்கிறார்கள். மற்றும்  சிலரும்  வெளியேறிப்  பார்த்து  அங்கும்  வாழ்வுக்கு  வழியில்லாமல்  போனதினாலேயே  திரும்பவும்  போய்  புகுந்து  கொண்டுதான்  இருக்கிறார்கள்.  இது  யாருக்குத்  தெரியாத  இரகசியம்  என்று  கேட்கின்றோம்.

ஜீவனத்துக்கு  வேறு  எந்த  வழியும்  இல்லாத  ஆட்கள்  பலர்  இந்தக்  கூட்டத்தில்  சேர்ந்து கொண்டு  சமாதானத்துக்குப்  பங்கம்  ஏற்படும்  படியாகவும்,  காதில்  கேட்பதற்கே  அசிங்கமாயிருக்கும் படியாகவும்  பலர்  கத்துவது  நம்  காதுக்கு  வந்து  கொண்டிருக்கின்றது.  இந்த  மாதிரியான  ஆட்கள்  சிலரைப்  பிடித்து  அவரது  ஜீவிதம்  எப்படி  நடக்கின்றது  என்று  விசாரித்தால்  நல்ல  நடவடிக்கைக்கு  ஜாமீன்  வாங்க  வேண்டியதைத் தவிர  வேறு  ஒன்றுமே  செய்ய  வழி  இருக்காது.  ஆனால்  அப்படிப்பட்ட  பலர்  மீது  நடவடிக்கை  எடுத்துக்கொள்ள  வேண்டிய  அதிகாரிகள்  ஜாதி  அபிமானம்  காரணமாக  விட்டுக்  கொண்டிருக்கிறார்கள்  என்றுதான்  சொல்ல  வேண்டி  இருக்கிறது.  இந்த  யோக்கியதையில்  உள்ள  காங்கிரசுதான்  நீதியும்,  சத்தியமும், அகிம்சையும்  கொண்ட  முறையில்  சுயராஜ்யம்  பெருவது  என்பதைக்  கொள்கையாகக்  கொண்டிருக்கின்றதாம்.  என்ன  பித்தலாட்டம்,  எவ்வளவு  நாணையக்  குறைவு  என்று  பார்க்கும்படி  வேண்டுகின்றோம்.

வெகு  காலமாகவே  நாம்  காங்கிரசுக்காரர்கள்  கூட்டத்தில்  சென்று  யாரும்  கலகம் செய்யக்  கூடாது என்றும்  சொல்லி  வந்ததானது  காலித்  தனத்தை  காங்கிரசுக்கே  சொந்தமாக்கிவிட்டது  போல்  காணுகின்றது.

காங்கிரசுக்காரர்கள்  தடபுடலையும்,  அவர்களது  வசவையும்,  காலித்தனத்தையும்  கண்ட பலர்  பயந்து  கொண்டு  மெல்ல  மெல்ல  காங்கிரஸ்  கூட்டத்தோடு  தங்களைக்  கலக்கிக்  கொள்ள  பலர்  ஆசைப்படுவதைப்  பார்க்க நமக்குச்  சிரிப்பாக  இருக்கின்றது.  இருந்தாலும்  இப்படிப்பட்ட  கூட்டத்தார்  மறுபடியும்  8  நாளில்  கண்டிப்பாய்  திரும்பவும்  ஓடிவந்துவிடப்போகிறார்கள்  என்று  இப்போதே  ஜோசியம்  கூறுவோம்.

தோழர் பெரியார், பகுத்தறிவு - கட்டுரை  25.11.1934

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn