பெண்களை இளம் வயதில் மணம் செய்து கொடுக்கும் இந்துக்களின், அறிவீனமான கொடுமையான செய்கையைத் தடுப்பதற்காகச் சீர்திருத்த வாதியாகிய ஹரிவிலாச சாரதா அவர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருக்கும் பால்ய விவாகத்தடைச் சட்டம் தற்சமயம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமலே இருந்து வருகிறது என்பதை நாம் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். அச்சட்டத்தை நிறைவேற்ற இந்திய சீர்திருத்தக்காரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் தோழர் காந்தியார், காலஞ்சென்ற பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்வாதிகளாகிய வைதீகர்களால்கூட பலமாக ஆதரிக்கப்பட்டும், பொது ஜனங்களின் அபிப்பிராயந் தெரிவதற்கென லெட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து சுற்றுப்பிராயணக் கமிட்டி நியமித்து விசாரணை செய்தும், கடைசியில் உயிரற்ற ஒரு வெறுஞ் சட்டமாகவே நிறைவேறியது. அச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் வழக்குகளில்கூட வைதீகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சியோ, அல்லது அரசாங்கத்தின் அலட்சிய புத்தியினாலோ, சாரதா சட்டத்தை மதிக்காதவர்கள் பயப்படுவதற்கு வழியில்லாத மிகச் சாதாரணமான அபராதமும், தண்டனைகளுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வைதீகர்கள், சாரதா சட்டத்தைச் சிறிதும் லட்சியம் பண்ணாமல், தங்கள் இஷ்டப்படியே சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் மிகத் தாராளமாக மணம் செய்து கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய அடாத செய்கையைத் தடுத்துச் சாரதா சட்டத்தைப் பலன்தரத்தக்க ஒரு நல்ல சட்டமானதாகச் செய்ய வேண்டுமானால் அதில் சில அவசியமான சீர்திருத்தங்களைச் செய்தே தீரவேண்டும் என்பதைச் சீர்திருத்த ஆர்வமுள்ளவர்கள் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால், உடனே அதைத் தடுக்கும் அதிகாரம் அவ் வழக்கை விசாரிக்கும் அதிகாரமுள்ள கோர்ட்டாருக்கு இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை போலீஸ்காரர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும்.

வழக்குத் தொடுக்க முன்வரும் வாதிகள் ஜாமின் கட்ட வேண்டும் என்னும் நியதி இருக்கக் கூடாது.

பொது ஜனங்களால் தொடுக்கப்படும் வழக்குகளையும் சர்க்கார் கேசாகவே எடுத்துக் கொண்டு பொது ஜனங்களுக்குச் சவுகரியமாக வழக்கு நடத்த வேண்டும்.

தண்டனைகளும் அபராதங்களும் இப்பொழுது போல் இல்லாமல் இன்னும் கடுமையாகவும், தயவுதாட்சண்யம் இல்லாமலும் விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான முறையில் சாரதா சட்டம் திருத்தப்படுமானால் திருத்தப்பட்ட சட்டமும், வைதீகர்களின் குரைப்புக்குப் பயப்படாமல் கண்டிப்பாக அமுல்நடத்தப்படுமானால் தான், அச்சட்டத்தினால் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்தப் பலன் உண்டாகக்கூடும். இன்றேல் அது வெறும் காகிதச் சட்டமாகவே தான் இருக்க முடியுமே ஒழிய வேறு ஒரு இம்மியளவும் பயன்தரப் போவதில்லை என்பதில் கடுகளவுகூடச் சந்தேகம் இல்லை. ஏறக்குறைய நாம் கூறும் இந்த அபிப்பிராயத்திற்கு இணங்கிய மாதிரியிலும் பால்ய விவாகங்களை இப்பொழுதுபோல் இல்லாமல் கூடிய வரையிலும் தடுக்கக்கூடிய முறையிலும் சாரதா சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தியா சட்டசபையின் அங்கத்தவரான, தோழர் பி.தாஸ் என்பவர் சில திருத்தங்களைக் குறிப்பிட்டு அவைகளை வைசிராய் பிரபுவின் அனுமதி பெற வேண்டி அனுப்பியிருக்கிறார். அத்திருத்தங்களாவது:

சாரதா சட்ட வழக்குகளை விசாரிக்க அதிகாரம் பெற்றுள்ள கோர்ட்டார் உசிதமென்று தோன்றுகிறபோது அச்சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மணங்களுக்குத் தடையுத்திரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை ஏற்படுத்தல்.

அச்சட்டத்தின் கீழ் கோர்ட்டுகள் தாங்களாகவே வழக்கு நடத்தலாம், வாதி பாண்டோ, ஜாமீனோ கொடுக்க வேண்டியதில்லை யென்று விதித்தல்.

குழந்தையை மணந்து கொண்ட புருஷன் அவன் மைனரா யிருந்தால், அவனுடைய கார்டியன் அப்பெண்ணைத் தனியே வைத்துக் காப்பாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும், சட்டத்தில் கண்டுள்ள வயது வரும் வரையிலோ, அவசியமானால் மேற்கொண்டு சில காலம் வரையிலோ, சாந்தி முகூர்த்தம் செய்யக் கூடாது என்று தடைப்படுத்தவும் கோர்ட்டாருக்கு அதிகாரம் அளித்தல்.

என்பவைகளே திருத்தங்களாகும். இத்திருத்தங்களின் நோக்கத்தையும், அவரே குறிப்பிட்டிருப்பது வருமாறு:

"ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பம்பாய் சிவில் கோர்ட்டுகள், சட்டத்திற்கு விரோதமாக ஏற்பாடு செய்திருந்த மணங்களுக்குத் தடை உத்திரவு பிறப்பித்திருக்கின்றன. மற்ற மாகாணங்களில் இவ்விதம் நடந்ததா வென்று தெரியவில்லை. இவ்விதம் செய்வதற்குச் சட்டம் இடங் கொடுக்கிறதாவென்பதைப் பற்றி சந்தேகங்கள் எழும்புகின்றன. அவற்றை நிவர்த்திக்க மசோதா முயற்சிக்கிறது. சட்ட விரோதமாக நடக்கும் மணங்களுக்கு விதிக்கும் அபராதத்தை மேற்படி தடையுத்திரவை மீறுபவர் களுக்கு விதிக்க வேண்டுமென்று மசோதா கூறுகிறது. ஏனெனில் கோர்ட்டு தடையுத்திரவை மீறுவது கோர்ட்டை அவமதிப்பதாகும்.

மேலும், இப்போதுள்ள சட்டப்படி, புகார் செய்பவர் விளம்பரத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகிறது. கோர்ட்டு விரும்பினால் பாண்டு எழுதித் தர வேண்டும். அதிற் கண்டுள்ள தொகையை இழந்துவிட வேண்டியதாகலாம். இவற்றின் காரணமாக மேற்படி சட்டம் சரியாக அமுல் நடப்பது கஷ்டமாகிறது. தனிப்பட்ட முறையில் கோர்ட்டாருக்குத் தகவல் கிடைத்ததும், அதன் உண்மையைக் கண்டறிந்து கொண்டு வழக்கு நடத்தும் அதிகாரத்தை திருத்த மசோதா அளிக்கிறது. இப்போதுள்ள விதிப்படி சட்டத்தை மீறியவர்களைத் தண்டித்த போதிலும், அகால ஆண் சேர்க்கையி லிருந்து சிறுமிகளைக் காப்பாற்ற முடியாது. வழக்குத் தொடர்ந்ததின் காரணமாக சிறுமியை புருஷனோ, புருஷன் வீட்டாரோ துன்புறுத்தக் கூடும். இவற்றை முன்னிட்டு சிறுமியின் நலத்தில் கவலை கொண்டவர்கள்கூட சட்டப்படி வழக்குத் தொடர தயங்குகிறார்கள். அதை நிவர்த்திப்பது மசோதாவின் நோக்கமாகும்."

இப்படிப்பட்ட அவசியமான திருத்தத்திற்கு வைசிராய் பிரபுவின் அனுமதி நிச்சயம் கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்விஷயத்தில், தோழர் சத்தியமூர்த்தி போன்ற வைதீகர்களும் மற்ற காங்கிரஸ்காரர்களும் என்ன செய்யப் போகிறார்களென்று பார்ப்போம். அவர்களுடைய உண்மையான தேசாபிமானத்தையும், ஜன சமூக ஊழியத்தையும் அறிய இதுவும் ஒரு தகுந்த சந்தர்ப்பமாகும்.

குடி அரசு துணைத் தலையங்கம் 03.03.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: