மனிதன் ஆக்க வேலைக்குப் பயன்பட வேண்டியவன். மனிதன் பகுத்தறிவு பெற்றிருப்பது, உலகிலுள்ள மனித சமுதாயத்தின் ஆக்கத்திற்குப் பாடுபடவேயாகும். ஆக்க வேலையென்றால் பண்பட்ட நிலமாக இருந்தால் அதனைப் பயன்படுத்தி வாழலாம். ஆனால், முள்ளும் புதரும் நிறைந்த காடு போன்ற நிலத்தில் உள்ள முட்கள், புதர்களை ஒழித்து நிலத்தைப் பண்படுத்தி, அதன்பின் பயன்படுத்த வேண்டி இருக்கின்றது. அதுபோன்று நம் மனிதர்கள் மனதில் நிறைந்திருக்கின்ற முட்டாள்தனம், மூடநம்பிக்கை, மடமை, அறிவற்றத் தன்மை ஆகிய முட்களையும், புதர்களையும் அழித்து ஒழித்துப் பண்படுத்தி மனிதனை அறிவுப் பாதையில் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இப்போது நாம் மனிதனிடமிருக்கும் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கைகளை அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஒருவன் தனக்கிருக்கிற பழைய காரை வீட்டை மாற்றி, வில்லை வீடாக்க வேண்டுமானால், பழைய வீட்டை இடித்து ஒழித்துவிட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு, கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இருக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியமைத்திருக்கின்றோம்.

பொதுவாக ஒரு ஜீவன், தன் உணர்ச்சிக்காகவும் இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவையே ஆகும்.

கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீர வேண்டுமென்றிருக்கின்றது. இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால், கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல், தங்களின் அடிமைகளாக
உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.

நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர். அவர் முதற்கொண்டு அத்தனைப் புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை. இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார். வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னாரே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.

அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம், "சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால், நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர் "திருக்குறளிலிருந்து "பிறன் இல்விழையாமை'' என்ற அதிகாரத்தைக் காட்டி, "வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார்'' என்று சொன்னார். நான் உடனே, "பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக்கூடாது என்று சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால், பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக்கூடாது என்று சொல்லவில்லையே'' என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் ஆற்றிய உரை

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: