தோழர்களே!

திருமணத்திற்கு பிறகு திருமணத்தை பாராட்டிப் பேசிய அநேகர் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அவற்றிலிருந்து பல புதிய விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இத் திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கு அநேக இடையூறுகளும் பல தொந்தரவுகளும் ஏற்பட்டிருப் பதாகத் தெரிகிறது.

பெண் ஒரு மாத காலமாக தோழர் நீலாவதி அம்மாள் வீட்டில் இருந்திருக்கிறது என்பதும், பெண்ணைச் சேர்ந்தவர்கள் பெண்ணை திருப்பிக் கொண்டு போவதற்கு பலவிதமான தொந்தரவுகள் செய்து இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து பெண் வேறு இடத்திற்கு கொண்டு போகப்பட்டு ஒரு வாரம் வரையிலும் மறைத்து வைக்க வேண்டியிருந்தது என்பதும், தோழர் ராம சுப்பிரமணியம் பேசியதிலிருந்து தெரிய வந்தது. அதுபோலவே மணமகன் விஷயத்தில் மணமகனைச் சேர்ந்தவர்கள் திருமணம் நடக்கவொட்டாமல் செய்வதற்காக வேண்டிய முயற்சிகள் செய்யக் கருதி அதற்காக கோர்ட்டு நடவடிக்கைகள் நடத்தவும் தடையுத்தரவு வாங்கவும் முயற்சித்தார்கள் என்பதும் ஒன்றும் முடியாது போனதும், அதன் பிறகு மாப்பிள்ளையை சுமார் 15 நாள் வரை மறைத்து வைத்திருந்ததாகவும் தோழர் வக்கீல் ஈப்பன் அவர்கள் பேசியதிலிருந்து தெரிய வந்தது.

இத் திருமணத்துக்கு மணமகனுக்கு உதவியாய் இருந்து இவ்வளவு தூரம் நடந்தேர தைரியம் கொடுத்தவரும் ஒரு அளவுக்கு ஆதிகாரணஸ்தராய் இருந்தவரும் தோழர் வக்கீல் லட்சுமிதரன் பாரதியார் என்றும் தெரிய வருகிறது.

இன்னும் பல விஷயங்களும் தெரிய வருகிறது.

ஆனால் இவ்வளவு பெரிய கஷ்டங்கள் ஏற்பட இத்திருமணம் என்ன அவ்வளவு தப்பிதமான காரியம் என்பது நமக்கு விளங்கவில்லை.

கலப்புமணம் செய்து கொள்ளுகிறார்களே என்பதற்கு ஆகவா அல்லது விதவை திருமணம் நடக்கின்றதே என்பதற்கு ஆகவா என்பது எனக்கு விளங்கவில்லை.

கலப்பு மணம் என்பது இந்திய நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதும், வேத புராண காலங்களில் இருந்தும் ஸ்மிருதி, சுருதி ஆகியவைகளால் அனுமதிக்கப்பட்டும் நடந்து வருகின்ற காரியம் தானே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்துவதாகச் சொல்லிவிட முடியாது.

ஆகையால் கலப்பு மணம் என்பதை எந்த மதக்காரர்களும் ஆக்ஷேபிப்பதர்க்கு இடமில்லை.

அன்றியும் இன்று பிரதியக்ஷ அனுபவத்திலும், மதவாதிகளுக் குள்ளாகவே கலப்பு மணங்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றதை நாம் பார்க்கின்றோம்.

டாக்டர் பி.சுப்பராயன் முதல் மந்திரியாய் இருந்தவர் ஒரு வேளாளர். அவர் சுமார் 20 வருஷங்களுக்கு முன்பே ஒரு பார்ப்பனப் பெண்ணை மணந்திருக்கிறார்.

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் என்கின்ற பார்ப்பனர் சர்க்காரில் லோக்கல் முனிசிபல் மந்திரியாய் இருந்தவர். அவரும் 20 வருஷத்துக்கு முந்தியே ஒரு நாயர் பெண்ணை மணந்தார்.

ஒரு ரெட்டியார் சென்னையில் வேறு ஜாதி முத்துலெக்ஷிமி அம்மாளை மணந்திருக்கிறார்.

சென்னையில் 2, 3 நாள் ஹோம் மெம்பராய் இருந்த வெங்கட்ராம சாஸ்திரியர் குமாரர் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணை நல்லமுத்தம்மாளை மணந்திருக்கிறார்.

சென்னையில் இந்துமத பரிபாலன போர்ட் தலைவர் சூரியராவ் நாயுடு புதல்வி ஆர். லக்ஷிமி தேவி அம்மாள், பி.ஏ. சென்னை போலீஸ் டிப்டி கமிஷனர் ஜயநுதீன் சாயபு, பி.ஏ. (முஸ்லீமை) மணந்திருக்கிறார்.

நெல்லூரில் ஒரு அய்யங்கார் பெண் ஒரு சாயபுவை மணந்திருக்கிறார்.

சென்னையில் நீலகண்ட சாஸ்திரியார் பெண் ருக்மணி அம்மாள் ஒரு ஐரோப்பியரை மணந்திருக்கிறார்.

சரோஜினி தேவி பார்ப்பனப் பெண் 35 வருஷங்களுக்கு முன்பே ஒரு டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடுவை மணந்திருக்கிறார்.

இப்படியாக "பெரிய" இடங்களிலேயே அனேகம் கலப்பு மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் சுயமரியாதைக்காரர்கள் என்றோ நாஸ்திகர்கள் என்றோ சொல்லிவிட முடியாது.

இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகள்கூட முஸ்லீம் பெண்ணையும், தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களையும் மணந்திருப்பதாக ஆஸ்திகர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மற்றும் அவர்களுடைய ரிஷிகள், முனிவர்கள் 100க்கு 100 கலப்புமணக்காரர்களாகவே இருந்திருக் கிறார்கள். அப்படி யெல்லாம் இருக்க கலப்பு மணத்தைப் பற்றி அதிசயப் படுவதோ ஆக்ஷேப்பிப்பதோ உலகனுபவம் தெரியாததும் அறிவில்லாததுமான செய்கை என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர மற்றபடி அதில் எவ்வித கெடுதியோ ஆக்ஷேபணையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு சமயம் விதவா விவாகஞ் செய்து கொண்டது குற்றம் என்று சொல்லப்படுமானால் அதுவும் அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்து மதத்திலும் விதவை மணம் ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

இந்தியாவிலும் இந்து மதத்திலும்கூட அநேக ஜாதிகளில் விதவை மணம் அனுமதிக்கப்பட்டும் நடந்தும் வருகின்றது.

சில ஜாதிகளில் வழக்கமில்லையென்றாலும் தோழர் ஆ. ராம சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள் பேசியதில் தங்கள் வகுப்பில் வெளிப்படையாய் விதவை மணம் இல்லையே ஒழிய விதவைப் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மாத்திரம் தெரியும்படி ஆயிரக்கணக்கான மணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன என்று சொன்னார். இந்த மாதிரி மணம் அந்த வகுப்பில் மாத்திரம் என்றும் சொல்லிவிட முடியாது. விதவைகளாக இருக்க அனுமதிக்கப்பட்ட எந்த வகுப்பிலும், விதவை மணம் அனுமதிக்கப்படாத எந்த வகுப்பிலும் சர்வசாதாரணமாய் "கண்டாலும் காணவில்லை" என்றும் "கண்டுதோ காணலையோ" என்றும் சொல்லும் முறையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதை யாரும் தப்பு என்று சொல்லிவிட முடியாது. இது இயற்கையின் ஆட்சியேயாகும்.

தோழர் நித்தியானந்தமவர்கள் பேசியதில் இந்தக் காரைக்குடி நகரில் 2400 இரண்டாயிரத்து நானூறு விவசாரிகள் இருப்பதாக சர்க்கார் கணக்கில் இருப்பதாய் ஒரு பெரிய சர்க்கார் அதிகாரி சொன்னதாக சொன்னார்.

இந்த 2400 பெண் விவசாரிகளும் எந்த சாமி பேருக்காவது பொட்டுக் கட்டி விவசாரிகளாக ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா?

காரைக்குடி ஜனசங்கியை 20000 ஆனால் இதில் 10000 தான் பெண்கள் இருக்க முடியும். அந்தப் பெண்களிலும் சரி பகுதிப் பேராவது குழந்தைகளாக கிழவிகளாய் இருக்கக் கூடும். மீதி 5000 பெண்கள் உள்ள காரைக்குடியில் 2400 பெண்கள் விவசாரிகள் என்றால் இவர்களில் குறைந்தது 3ல் 2 பாகம் 1600 பேராவது முதலில் விதவைகளாக இருந்து இரகசிய மணம் செய்து பிறகு அம்பலத்துக்கு வந்து விவசாரிகள் ஆயிருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் பேசியதில் ஊரணிக்கேணியில் வாரத்துக்கு 4 குழந்தை 5 குழந்தை செத்து மிதக்குகின்றது என்று சொன்னார்.

இதுவும் பார்ப்பனர்களே சுற்றியிருக்கிற சென்னை பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்திலும் மற்றும் அநேக புண்ணிய தீர்த்தங்கள் என்பவைகளிலும் காணக்கூடிய காட்சியே யாகும்.

தோழர் பொன்னம்பலம் பேசுகையில் அனேக சமூகங்களில் கலப்பு மணம் செய்து கொள்ளுவதற்கு இருக்கும் கஷ்டம் விவசாரித்தனம் (வெளிப்படையாய்) செய்வதற்கு இல்லை என்றும் விவசாரித்தனம் என்பதை வெகு சாதாரணமாய் அனுமதிக்கப்படுகிறது என்றும் ஓடிப்போன விதவைப் பெண்களைக் கூட்டி வந்து ஜோடியாகக் கூட வசிக்கவே அனுமதிக்கிறார்கள் என்பதோடு செலவுக்கும் கொடுக்க சம்மதிக்கிறார்களே ஒழிய அதற்கு கல்யாணம் செய்வதென்றால் அது பெரிய தவறான காரியம் என்று மதிக்கிறார்கள் என்றும் சொன்னார்.

ஆகவே இவைகளையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் விதவையாய் இருக்கும் எந்தப் பெண்ணும் விதவைப் பெண்களை வைத்து இருக்கும் எந்த வீட்டுக்காரரும் எந்த சமூகத்தாரும் வெட்கப்பட வேண்டுமே ஒழிய வேறில்லை.

எதற்காக ஒரு பெண் விதவையாக இருப்பது என்பது எனக்கு விளங்கவில்லை. விதவைத் தன்மை என்பதை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது வெகு நாளைய அபிப்பிராயமாகும். ஏனெனில்,

விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விவசாரித்தனத்தை தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனேக விதவைகள் தங்களுக்கு போக்கிடமில்லாமல் சித்திரவதை போன்ற துன்பம் அனுபவிக்கின்றார்கள்.

பெண்கள் நிலையம்

ஆதலால் சுயமரியாதை இயக்கக்காரர்களாகிய நாம் அங்கொரு விதவை மணம், இங்கொரு விதவை மணம் வீதம் செய்வதாலேயே விதவைக் கொடுமைகள் ஒழிந்து விடாது.

தோழர்கள் ஆ. ராம. சொக்கலிங்கம் செட்டியார், ஜீவானந்தம், நீலாவதி ஆகியவர்கள் சொன்னது போல் ஒரு பெண்கள் நிலையம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு விதவைகள் விஷயத்தில் அனுதாபம் இருக்கின்ற மக்கள் பலவிதத்திலும் உதவி புரிய வேண்டும்.

வயது சென்ற பல விதவைப் பெண்கள் அந்நிலையத்து மேல் பார்வைக்கு வரவேண்டும். பெரும் குடும்பங்களில் அவஸ்தைப்படும் விதவைப் பெண்களை தாட்டிக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு கல்வி, தொழில் முதலியவைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கலியாணம் வேண்டியவர்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும். கல்யாணம் வேண்டாதவர்களைப் பிரசாரத்துக்கு பழக்கி பிரசாரம் செய்யச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்கள் சுயமரியாதைக்காரர்கள் செய்தால் தான் உண்டு. மற்றவர்கள் செய்யவே மாட்டார்கள். ஆதலால் கூடுமானவரை செய்வதற்கு உடனே முயற்சிக்க வேண்டும். தோழர்கள் நீலாவதி, வைசு. ஷண்முகம், மு. அருணாசலம், ஆ. ராம. சொக்கலிங்கம் முதலியவர்கள் இவ்விஷயத்தில் மிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.ஆதலால் அவர்கள் செய்யும் முயற்சிக்கு மற்றவர்கள் கூடுமான உதவி செய்ய வேணுமாய் கோருகிறேன்.

குறிப்பு: 19.04.1935 ஆம் நாள் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் திருச்சி புரோகித மறுப்பு சங்கத்தின் சார்பாய் நடைபெற்ற தோழர்கள் நாராயணசாமி ரெங்கநாயகி விதவா விவாக திருமணத்தில் தலைமைவகித்து ஆற்றிய உரை.

தோழர் பெரியர் - குடி அரசு - சொற்பொழிவு - 28.04.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: