அமிர்தசரசில் பாய்பரமானந்தர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் இந்து மகாசபை மகாநாட்டிற்குத் தலைமைவகித்த, பொங்கி உத்தமர் பேசும்போது "அரசியல் அடிமைத்தனத்தைப்போல சமூக அடிமைத் தனத்தையும் நான் எதிர்க்கிறேன். முக்கியமாகப் பெண்களுக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சுதந்தரம் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்து மகாசபையின் நிரந்தரத் தலைவரான பாய்பரமானந்தர் இக்கொள்கையை மறுத்து "இந்துப் பெண்களை காலிகள் துராக்கிரகம் செய்து அவமானப்படுத்துகின்றனர். இந்து சகோதரர்கள் தங்கள் சகோதரி களின் மானத்தையும் சரீரத்தையும் காப்பாற்றும்படி போதிய பலம் பெறுகிறவரையில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கல்வியில்லாம லிருப்பது நலம்" என்று கூறியிருக்கிறார்.

பரமாநந்தருடைய இத்தகைய பிற்போக்கான அபிப்பிராயத்தினால் இன்னும் எத்தனை யுகம் சென்றாலும் இந்து சமூகம் முன்னேற்றம் அடைய முடியுமா? என்று கேட்கின்றோம். இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிற எந்தச் சமூகமாவது அபிவிருத்தியடையுமா?

இந்து சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கின்ற பெண் சமூகம், எப்பொழுதும் ஆண்மக்களால் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலேயே இருக்குமானால் அந்தச் சமூகம் உருப்பட முடியுமா? தம்மைத் தாம் காப்பாற்றிக் கொள்ளச் சக்தி படைத்த மக்களே இவ்வுலகத்தில், மற்ற மக்களுக்குச் சமத்துவமான வாழ்க்கையையும், சுதந்தரமான வாழ்க்கையையும், இன்ப வாழ்வையும் அடைய முடியும். இது ஆராய்ச்சியும் அறிவும், அனுபவமும் உள்ளவர்களால் மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

இப்படிப்பட்ட தற்பாதுகாப்புக்கான அறிவையும், ஆற்றலையும், மனோ தைரியத்தையும் பெண் மக்கள் பெற வேண்டுமானால் அவர்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொள்வதனால் ஆகிவிடுமா? கல்வியறிவு கொடுக்காமல் முழு மூடர்களாக வைத்துக் கொண்டிருந்தால் ஆகிவிடுமா? அவர்களை வெறும் பிள்ளை பெறும் யந்திரங்களாக மட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால் முடிந்து விடுமா?

இதையெல்லாம் ஆலோசித்துப் பாராமல் குறுகிய மனப்பான்மையுடன், மூடர்கள் பெண்களை அவமானப்படுத்திவிடுவார்கள் என்ற பேச்சை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவர்களை மிருகங்களாக்கி வைத்துக் கொண்டிருக்க நினைப்பது எவ்வளவு விபரீத புத்தி! நினைப்பதோடு மாத்திரம் அல்லாமல் அதைப் பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விடுவது எவ்வளவு அவசரப்புத்தி!

பெண்கள் காலிகளால் துராக்கிரகம் செய்யப்படுவதையும் அவமானப் படுத்தப்படுவதையும் வீரமுள்ள எந்த ஆண் மகனும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதிலும், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களும் இதை வெறுப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் பெண்களைக் காப்பாற்றுகின்ற வீரத்தன்மை ஆண்மக்களுக்கு வருகின்றவரையிலும் பெண் மக்களுக்கு எந்தச் சுதந்தரமும் கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவோ மோசமானதும், கடுகளவு புத்தியுள்ளவர்களாலும் ஒப்புக்கொள்ளக் கூடாததும், நமது சமூகத்தை இன்னும் கோழைகளாகச் செய்வதும் ஆகிய அபிப்பிராயமாகும் என்பதை ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

அறிவும், ஆற்றலும், உலக நாகரீகமும், சுதந்தரமும் உள்ள தாய்மார் களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த விதத்தில் எடுத்துக் கொண்டாலும் சுதந்தரமற்று, அறிவற்று மூலையில் பதுங்கிக் கிடக்கும் பெண்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை விடச் சிறந்தவர்களாயிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே பெண்மக்களுக்குக் கல்வியும் சுதந்தரமும் அளிப்பதன் மூலம் ஆண்மக்களுடைய அறிவும், வீரமும், மான உணர்ச்சியும் பெருகுமே யொழிய மற்றபடி யாதொரு தீமையும் நேர்ந்து விடாது.

இந்துக்களுக்கு தங்கள் சமூகப் பெண்களின் மானத்தைக் காப்பாற்று வதற்குத் தற்பொழுது போதிய பலமில்லை என்பதை பரமாநந்தர் ஒப்புக் கொள்ளுகிறார். ஏன் பலமில்லை என்று கேட்கின்றோம். இந்துக்கள் ஒரே சமூகமாக இருப்பார்களானால் அவர்களை யாராவது எதிர்க்க முடியுமா? இந்தியாவில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் பெருவாரியான ஜனத் தொகையைக் கொண்ட ஒரு சமூகம் தங்களுக்குப் பலமில்லை அதுவும் தங்கள் பெண் மக்கள் மானத்தைக் காப்பதற்குக் கூட பலமில்லை என்று சொல்லிக் கொள்ளுவதை விட வேறு என்ன மானக்கேடு வேண்டும். இந்து சமூகம் ஒன்றுபட்டிருந்தால் இப்பலம் இல்லாமல் போய்விடுமா?

இந்து சமூகம் ஒன்றுபட முடியாமல் இருப்பதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார்களானால், சிந்தித்து உண்மை அறிவார்களானால் அந்தத் தடைகளை நீக்க முன் வராமல் இருப்பார்களா என்று கேட்கின்றோம்.

எண்ணில்லாத ஜாதி வேற்றுமைகள்; ஜாதி வேற்றுமைகளை நிலைக்க வைத்துக்கொண்டிருக்கும் பல வேறுமாதிரியான புரோகிதச் சடங்குகள்; இந்துக்களுக்குள்ளிருக்கும் பல வேறு உள் மதப் பிரிவினைகள்; இம்மதப் பிரிவினை காரணமாகக் கொண்டு உண்டாகியிருக்கும் சாமிகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கோயில்கள், திருவிழாக்கள் முதலியன; இவை காரணமாக உண்டாகும் சண்டை சச்சரவுகள், ஜாதி உயர்வு தாழ்வின் மூலம் உண்டான தீண்டாமை, பார்க்காமை, பேசாமை முதலிய கொடுமைகள் ஆகிய இவைகளே இன்று இந்து சமூகத்தை ஒன்று சேரவிடாமல் நெல்லிக்காய் மூட்டைகளாய் வைத்திருக்கின்றன என்பதை அறியாமல், இவைகளை ஒழித்து இந்து சமூகத்தை ஒரே சமூகமாக்க முயலாமல் இந்துக்கள் ஒன்று சேர வேண்டும், ஒற்றுமைப்பட வேண்டும் என்றும் வீண் வாய் வேதாந்தம் பேசுவதனால் என்ன பலனுண்டாகப் போகிறது?

இந்துக்கள் ஆண்மையற்று, ஒற்றுமை யற்று வாழ்வதற்கு அடிப் படையாக உள்ள தடைகளை நீக்க முயற்சிக்காமல் பெண்களை அடிமைப் படுத்தி வைக்க வேண்டும் என்பது மிகவும் பிற்போக்கானதும், இந்து சமூகத்தை இன்னும் அடிமைப் படுகுழியில் தள்ளிக் கோழைகளாக்கி வைக்க வேண்டும் என்பதற்குச் செய்யும் முயற்சியுமேயாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஆகையால் யாரும் பாய் பரமானந்தர் போன்ற வகுப்பு வாதிகளின் பேச்சைக்கேட்டு ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

மற்றும் பிரபல காங்கிரஸ் வாதியாகத் திகழ்கின்ற சர்தார் பட்டேலும் இவரைப் போன்றே "பெண்களுக்குச் சுதந்தரம் கொடுப்பது தவறு. பிள்ளைகளைப் பெறுவதும், வளர்ப்பதுந்தான் அவர்கள் வேலை" என்று முன்பு ஒரு தடவை பேசி இருக்கிறார். இத்தகையவர்கள் தாம் இவர்கள் போன்ற பிற்போக்காளர்கள் தாம் இன்று நமது நாட்டு அரசியல் சமூகத் தலைவர்களாக விளங்கி வரும்போது நமது சமூகம் விடுதலை பெறுவது எப்பொழுது? பெண் மக்கள் சுதந்தரம் பெறுவது எக்காலம்? என்று யாரும் பின் வாங்க வேண்டாம். காலச் சக்கரத்தை யாரும் தடுக்க முடியாது. அது சுழன்று மாறுதல் உண்டாக்கிக் கொண்டுதான் இருக்கும். ஆதலால் யாரும் இந்தக் குறுகிய நோக்கமுடைய சொற்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தோழர் பெரியர் - குடி அரசு - கட்டுரை - 19.05.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: