வங்காளத்தில்  ஒரு  பெண்  தனது  கணவன்  நோய்வாய்ப்பட்டு  சாகுந் தருவாயிலிருப்பதைக்  கண்டு  கணவனுக்கு  முன்  தான்  மாங்கல்ய  ஸ்திரீயாக  இருந்து  கணவனுடன்  உடன்கட்டை  ஏற  வேண்டுமென்று  கருதி  மண்ணெண்ணையை  மேலே  ஊற்றி  நெருப்பு  வைத்துக்  கொண்டு  இறந்து  போனதாக  அ.பி.  செய்தி கூறுகின்றது.

இது  எவ்வளவு  பரிதாபகரமான  விஷயம்?  மத  நம்பிக்கையினால்  எவ்வளவு  கொடுமைகளும்,  கேடுகளும்  விளைகின்றன  என்பதற்கு  இதைவிட  வேறு  என்ன  சாக்ஷியம்  வேண்டும்.

"இந்  நிகழ்ச்சிக்கு  மத  நம்பிக்கை  காரணமல்ல.  காதலே  காரணம்,  கற்பே  காரணம்"  என்று  சிலர்  தத்துவார்த்தம்  சொல்லி  மதத்தைக்  காப்பாற்ற  இருக்கிறார்கள்  என்பது  நமக்குத்  தெரியும்.  அப்படிப்பட்டவர்களை  ஒன்று கேட்கின்றோம்.

காதல்  என்றும்  கற்பு  என்றும்  ஒன்று  இருப்பதாகவே  வைத்துக்  கொண்டு  பார்ப்போமானாலும்  இன்று  உலகில்  புருஷனை  சாகக்  கொடுத்துவிட்டு  விதவையாகவோ  அல்லது  வேறு  ஒருவரை  மணந்தோ,  இரகசியமாகவோ  இயற்கையை  அனுபவித்துக்  கொண்டிருக்கும்  பெண்கள்  எல்லோரும்  அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல்  கற்பு இல்லாமல்  இருந்தவர்களா  என்று  கேட்கின்றோம்.  மற்றும்  இன்று  புருஷன்  இறந்த  உடனோ  இறக்கப்  போகும்  தருவாயிலோ  மண்ணெண்ணையை  மேலே  ஊற்றி  நெருப்பு  வைத்துக்  கொண்டு  சாவதற்கு  தயாராயில்லாத  பெண்கள்  எல்லோரும்  காதலும்  கற்பும்  அற்றவர்களா?  என்றும்  கேட்கின்றோம்.  ஆகவே  மதத்தின்  பெயரால்  கல்வி  அறிவற்ற  ஆண்களும்  பெண்களும்  எவ்வளவு  கொடுமைக்கு  ஆளாகின்றார்கள்  என்பதை  அறிந்தும்  மதத்தைக்  காப்பாற்ற  வேண்டும்  என்பது  அறியாமையா,  மூர்க்கத்தனமா  அல்லது  தெரிந்தே  செய்யும்  அயோக்கியத்தனமா  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

புரட்சி  துணைத் தலையங்கம்  27.05.1934

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: