தோழர்களே!  இன்று  இங்கு  நடைபெறப்  போகும்  திருமணம்  சுயமரியாதைத்  திருமணம்  என்று  சொல்லப்படுகின்றது.  மற்ற  திருமணங்களுக்கும்  சுயமரியாதைத்  திருமணங்களுக்கும்  அடிப்படையாக  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்று  பாருங்கள்.

அனாவசியமாக  சிலர்  "சுயமரியாதைத்  திருமணமா?"  என்றாலே அதிசயப்படுவதும்,  ஏதோ  முழுகி  விட்டது  போல்  வெறுப்படைவதுமா யிருக்கின்றதே  தவிர,  வேறு  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்பது  எனக்கு  விளங்கவில்லை.

விவாகம்  அல்லது  திருமணம்  என்று  சொல்லப்படுவதெல்லாம்  ஒரு  பெண்ணும்,  ஆணும்  சேர்ந்து  ஒருவருக்கொருவர்  கட்டுப்பட்டு  அவர்களது  வாழ்க்கையை  கூட்டுப்  பொருப்பில்  நடத்துவதற்குப்  பலர்  அறிய  செய்துகொள்ளும்  அல்லது  செய்யப்படும்  காரியமே  ஆகும்.  இதைச்  சிலர்  அதாவது  பழைய  முறைக்காரர்  சடங்கு  என்கிறார்கள்.  சிலர்  அதாவது  புதிய  முறைக்காரர்கள்  ஒப்பந்தம்  என்கிறார்கள்.  சடங்கு  என்று சொல்லுகின்றவர்கள்  உண்மையிலேயே  சடங்காகவே  கருதி  காரியங்களில்  லக்ஷியமில்லாமல்  நடத்துகிறார்கள்.  அதாவது  கல்யாணத்தில்  மாப்பிள்ளைக்கும்  பெண்ணுக்கும்  எவ்வித  உரிமையும்  இல்லை.  அதுபோலவே  சடங்கிலும்  கல்யாணக்காரருக்கும்  சடங்குக்கும்  யாதொரு  உரிமையுமில்லை.  எப்படியென்றால்  தம்பதிகளின்  பெற்றோர்களோ  அல்லது  பெற்றோர்களைப்  பெற்றோர்களோ  அல்லது  இந்தப்  பெற்றோர்களுக்கு  வேண்டியவர்களோ  பார்த்து  இன்ன  பெண்ணுக்கு  இன்ன  மாப்பிள்ளை  அல்லது  இன்ன  மாப்பிள்ளைக்கு  இன்ன  பெண்  என்று  தீர்மானித்து  விட்டால்  அதைத்  தம்பதிகள்  மணமக்கள்  ஆ÷க்ஷபிக்க  முடியாது.  அது  மாத்திரமல்ல  இன்னொரு  அநியாயம்  என்னவென்றால்,  திருமணம்  என்பது  நடக்கும்  நிமிஷம்  வரையில்  மாப்பிள்ளை  பெண்ணைப்  பார்த்திருக்க  மாட்டார்.  பெண்  மாப்பிள்ளையைப்  பார்த்திருக்க  மாட்டார்.   100க்கு  99  திருமணத்தில்  பெண்ணும்  மாப்பிள்ளையும்  ஒருவரையொருவர்  சந்தித்துப்  பேசி  இருக்கவே  மாட்டார்கள்.

அங்க  லக்ஷணம்,  அறிவு  லக்ஷணம்,  யோக்கியதை  லக்ஷணம்  ஆகிய  எதையும்  பார்க்காமலும்  தெரியாமலும்  தான்  திருமணம்  தீர்மானிக்கப்படுகிறது.  இவர்கள்  இருவர்கள்  விஷயத்தில்  ஏதாவது  ஒன்று  கவனிக்கப்படுகின்றதா  என்றால்  இருவர்  பிறந்த  நேரம்  என்று  சொல்லப்படும்  "அது  சரியான  நேரமோ,  தப்பான  நேரமோ  என்பதைப்  பற்றி  கவலை  இல்லாமல்"  ஒரு  காலத்தைக்  குறிப்பில்  வைத்து  அதன்  மூலமாகவே  ஒரு  பொறுப்பற்ற  நபரால்  இருவருக்கும்  பொருத்தம்  உண்டா  இல்லையா  என்பது  முடிவு  செய்யப்பட்டு  விடும்.  சில  சமயங்களில்  பிறந்த  காலம்,  நேரங்கள்  கூட  கவனிக்கப்படாமல்  பெண்ணின்  பெயரின்  முதலெழுத்தையும்  மாப்பிள்ளையின்  முதல்  எழுத்தையும்  ஆதாரமாக  வைத்து  பொருத்தம்  முடிவு  செய்யப்பட்டு  விடும்.  மற்றும்  சில  சமயங்களில்  அதுகூட  இல்லாமல்  கோவிலில்  பூ  வைத்து  கேட்பது  மூலமோ,  கருடன்  பறப்பது  மூலமோ,  பல்லி  கத்துவது  மூலமோ,  இருவர்  பெயர்  எழுதப்பட்ட  சீட்டுகளின்  மீது  ஈ(பறவை)  உட்காருவதன்  மூலமோ,  அல்லது  கோவில்களில்  ஏதாவது  ஒருவன்  சாமியாடி  வாக்கு  சொல்லுவதன்  மூலமோ  கல்யாணம்  தீர்மானிக்கப் பட்டுவிடும்.  எவ்வளவு  காட்டுமிராண்டித்தன  வாழ்வில்  நமது  மக்கள்  இருந்து  வருகிறார்கள்  என்பதற்கு  இதைவிட  வேறு  என்ன  உதாரணம்  வேண்டும்  என்பது  எனக்குத்  தெரியவில்லை.

இது  போலவே  சடங்குகள்  விஷயத்திலும்  இந்தச்  சடங்குகள்  எதற்காக  என்றாவது  இந்த  சடங்கின்  அர்த்தம்  என்ன  என்றாவது  இச்சடங்குகளுக்கு  அவசியமோ,  ஆதாரமோ,  ஆரம்ப  காலமோ,  பொருத்தமோ  என்னவென்றாவது  மணமக்களுக்கோ  பெற்றோர்களுக்கோ  மற்றும் பந்து  மித்திரர்களுக்கோ  யாருக்குமே  தெரியாது.

ஆனால்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பது  இந்தப்படிக்கல்ல. மணமக்கள்  ஒருவரை  ஒருவர்  அறிந்து  தங்களுக்குள்ளாகவே  ஒருவரை  ஒருவர்  தேர்ந்தெடுத்துக்கொள்ள  வேண்டும்  என்பதும்  அர்த்தமும்,  பொருத்தமும்,  அவசியமும்  இல்லாமல்  வெறும் சடங்கு  பழக்க  வழக்கம்  என்பதற்காக  மாத்திரமே  ஒன்றையும்  செய்யக்கூடாது  என்பதுமேயாகும்.

இவை  மாத்திரமல்லாமல்  திருமணம்  சம்மந்தமாக  செலவு  மெனக்கேடு  வீண்  கஷ்ட  நஷ்டம்  ஆகியவைகளைப்பற்றி  பழைய  முறைக்  கல்யாணங்களில்  லக்ஷியமே  செய்யப்படுவதில்லை.  ஆடம்பரத்துக்காகவே  வீண்  செலவுகளை  தகுதிக்கு  அதிகமாக  கடன்  வாங்கியாவது  செய்யப்பட்டு  வருகிறது.  திருமணத்திற்காக  3  நாள்  4  நாள்  5  நாள்  சிலர்  7  நாள்  கூட  மெனக்கெட்டு  அயலூர்  பந்து  மித்திரர்களையும்  தருவித்து  மெனக்கெடச்செய்து  5  விருந்து  10 விருந்து  என்பதாகச்  சாப்பாட்டுச்  செலவும்,  பந்தல்  மேளம்  சங்கீதம்  ஊர்வலம்  வாணம்  என்பதாக  வீண்  காரியங்களும்  குடிகாரர்கள்  குடித்த  போதையில்  தாருமாராய் நடப்பது  போல்  கல்யாண  போதையில்  சிக்கி  பணங்கள்,  நேரங்கள்,  கஷ்டங்கள்  ஆகியவைகள்  தாருமாராக  செலவாக்கப்பட்டு  வருகின்றன.  2,  3  நாளைக்கு  ஆக  சிலர்  பார்த்து  புகழ்வதற்காக  என்று  செய்யப்படும்  இப்படிப்பட்ட  தாருமாரான  ஆடம்பர  சிலவுகள்  கல்யாணத்  தம்பதிகள்  தலையிலோ  அல்லது  குடும்பத்தார்கள்  தலையிலோ  விழுந்து  கல்யாணக்  கடன்  பார்வைகளால்  வெகு  நாளைக்கு  அவதிப்பட  வேண்டியிருப்பதால்  சில  குடும்பங்கள்  கல்யாணச்  செலவாலேயே  பாப்பராகி  மீளாக்  கடன்காரர்களாகக்  கூட  ஆகவேண்டியதாகி  விடுகின்றன.  இப்படிப்பட்ட  கொடுமைகளும்  முட்டாள்தனமான  காரியங்களும் கூடாது  என்பதுதான்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதின்  முக்கியாம்சங்களாகும்.

மற்றும்  கல்யாணம்  செய்து  கொள்ளும்  விஷயத்தில்  தம்பதிகளை  விட  மூன்றாவதவர்களுக்கே  சகல  சுதந்திரமுமிருந்து  வருகிறது.  செய்து  வைப்பதற்கு  ஒரு  புரோகிதன்  வேண்டும்.  இன்ன  இன்ன  மாதிரி  செய்  என்பதற்குப்  பெற்றோர்கள்,  பந்து  மித்திரர்கள்  வேண்டும்.  இவர்கள்  சொன்னபடியெல்லாம்  தம்பதிகள்  நடக்கவேண்டும்.

சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதில்  இந்த  முறையில்லை.  மணமக்கள்  தங்கள்  ஒப்பந்தங்களை  ஒருவருக்கொருவர்  சொல்லி  சம்மதித்ததற்கு  அறிகுறியாக  மாலையிட்டுக்  கொள்வது  என்பதுடன்  முடிவுபெற்று  விடுகின்றது.

மற்றும்  இவற்றையெல்லாம்  விட  ஒரு  முக்கிய  விஷயம்  என்வென்றால்  கல்யாண  விஷயத்தில்  மணமக்களின்  வாழ்க்கைச்  சம்மந்தம்  முக்கியமானது  லக்ஷியமானது  அல்லவென்றும்  அதில்  ஏதோ  ஒரு தெய்வீக  சம்மந்தம்  இருக்கிறதென்றும்  அதுவேதான்  திருமணத்தின்  லக்ஷியமென்றும்  ஆதலால்  அப்பெண்ணும்,  மாப்பிள்ளையும்  அத்தெய்வீக  சம்மந்தத்துக்காக  ஒருவர்  குற்றங்களையும்  அநீதிகளையும்  மற்றவர்கள்  பொருத்துக்கொள்ளவேண்டும்  என்றும்  அதிலும்  சிறப்பாக  மாப்பிள்ளை  செய்யும்  கொடுமையையும்  அநீதியையும்  பெண்  பொருத்துக்கொண்டு  வாழ்நாள்  முழுமையும்  மாப்பிள்ளைக்கு  பெண்  அடிமையாய்  பக்தியாய்  இருக்க  வேண்டுமென்றும்  கூறப்படுகிறது.

ஆனால்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதில்  அப்படி  இல்லை.  திருமணம்  என்பது  பெண்ணும்  ஆணும்  சேர்ந்து  வாழ்க்கையை  நடத்த  ஏற்படுத்திக்  கொள்ளும்  ஒப்பந்தமென்றும்  அவ்வொப்பந்த  விஷயம்  பெண்ணையும்,  ஆணையும்  மாத்திரமே  பொருத்ததே  ஒழிய  வேறு  எவ்வித  தெய்வீகத்துக்கோ  அல்லது  எவ்வித  கட்டுப்பாட்டுக்கோ  சம்மந்தபட்டதல்ல  என்றே  சுயமரியாதைக்  கல்யாணத்தின்  தத்துவமாகும்.

மேலும்  பழயமுறை  கல்யாணமானது  ஆணுக்கும்  பெண்ணுக்கும்  கல்யாணமேற்பட்ட  பிறகு  தான்  ஒருவர்  மீது  ஒருவர்  ஆசைகொள்ளுவதோ  காதல்  கொள்ளுவதோ  ஏற்பட  வேண்டுமே  ஒழிய  அதற்கு  (கல்யாணத்துக்கு)  முன்னால்  ஒருவர்  மீது  ஒருவருக்கு  ஆசையும்,  "காதலும்"  ஏற்படுவது  கூடாதென்றும்  குற்றமென்றும்  அது  விபசாரத்துக்கு  சமானமானதென்றும்  கூறப்படுகின்றது.

சுயமரியாதைக்  கல்யாணத்திலோ,  கல்யாணத்துக்கு  முன்பாகவே  ஆணுக்கும்  பெண்ணுக்கும்  ஒருவருக்கொருவர்  ஆசையும்  "காதலும்"  ஏற்பட்டு  அதன்  பின்னரே  கல்யாணம்  நடக்க  வேண்டும்  என்றும்,  மற்றபடி  கல்யாணம்  ஆன  பிறகு  கல்யாணம்  ஆய்விட்டதே  என்கின்ற  காரணத்திற்காக  அங்க  ஈனராய்  இருந்தாலும்  வியாதிக்காரறாய்  இருந்தாலும்,  கொடியவறாய்  இருந்தாலும்  ஒருவருக்கொருவர்  ஆசையும்  காதலும்  கொண்டுதான்  ஆக  வேண்டுமென்றும்  சொல்வதை  கண்டிப்பாய்  ஒப்புக்கொள்ளுவதில்லை.

மற்றும்  பழய  முறைக்  கல்யாணங்கள்  ஒருதடவை  கல்யாணமாகி விட்டால்  எந்தக்  காரணத்தைக்  கொண்டும்  மறுபடியும்  பிரியக்கூடாதென்றும்  இப்படிக்  கூறாவிட்டாலும்  ஆணுக்கு  பிரித்துவிடவோ  பிரிந்துகொள்ளவோ  உரிமை  உண்டு,  பெண்ணுக்குத்தான்  உரிமையில்லை  என்றும்  பெண்ஜாதி  செத்துப்போனால்  புருஷன்  மறுவிவாகம்  செய்துகொள்ளலாம்  என்றும்  பெண்ஜாதி  உயிருடன்  இருக்கும்போதே  புருஷன்  மாத்திரம்  பல  பெண்களை  கல்யாணம்  செய்துகொள்ளலாம்  என்றும்  பெண்கள்  மாத்திரம்  எந்தக்  காரணம்  கொண்டும்  புருஷன்  எவ்வளவு  கொடியவனாகவும்  மனுஷத்தன்மை  அற்றவனாகவும்  எவ்  விஷயத்துக்கும்  பொருத்தமில்லாமல்  கொடுமையும்  சித்திரவதையும்  போன்ற  கஷ்டத்தையும்  கொடுப்பவனானாலும்  புருஷனை  விட்டுப்  பிரியக்  கூடாதென்றும்  வேறு  கல்யாணம்  செய்து  கொள்ள  கூடாதென்றும்  புருஷன்  தான்  பக்குவமாவதற்கு  முன்  தனது  5  வது  10வது  வயதிலேயே  இறந்துபோனாலும்  வேறு  புருஷனைக்  கல்யாணம்  செய்துகொள்ளாமல்  விதவை  என்னும்  பெயருடன்  உலக  சுகபோகங்கள்  எல்லாவற்றையும்  வெறுத்து  மக்கள்  கண்ணுக்கும்,  மனதுக்கும்  வெறுப்புத்தோன்றும்  தன்மையில்  வாழவேண்டும்  என்றும்  சொல்லுகின்றது.

சுயமரியாதைக் கல்யாணத்தில் இவ்வித அக்கிரமும்,  அயோக்கியத்தனமும்  அறியாமையும்  கொடுமையும்  மூர்க்கத்தனமும்  காட்டுமிராண்டித்தனமும்  இல்லை.  வாழ்க்கைக்கும்  மனதுக்கும்  ஏற்ற  தம்பதிகளானால்  கூடி  வாழலாம்.  அவைகளுக்கு  ஒவ்வாத  வாழ்க்கையே  "நரகம்"  போன்றதான  தம்பதிகளானால்  பிரிந்து  மனதிற்கு  ஏற்றவர்களை  மணந்து  இன்பசுக  வாழ்வு  வாழ  உரிமை  உண்டு  என்பதோடு  புருஷனோ  மனைவியோ  யார்  இறந்துபோனாலும்  மறுவிவாகம்  செய்துகொள்ளலாம்  என்று  கூறுகிறது.

பழய  முறை  கல்யாணப்படி  பெண்களுக்கு  சொத்து  உரிமை  இல்லை.  வாழ்க்கையில்  சரிபங்கு  ஆதிக்க  உரிமை  இல்லை  என்று கூறப்படுகிறது.  சுயமரியாதை  கல்யாணத்தில்  சொத்திலும்  வாழ்க்கை  ஆதிக்கத்திலும்  பெண்ணுக்கு  ஆணைப்போலவே  சரிபங்கு  உரிமை  இருக்கின்றது  என்பதுடன்  இவைகளே  கல்யாண  ஒப்பந்தத்தின்  ஷரத்துக்களாகும்.  அநேகமாய்  கல்யாண  தத்துவம்  பழயதும்  புதியதும்  ஒரு  மாதிரிதான்.  எப்படி  எனில்  இங்கு  ஒரு  ஆணும்  பெண்ணும்  சேர்ந்துதான்  கல்யாணம்  செய்துகொண்டார்களே  ஒழிய  ஆணும்  ஆணும்  சேர்ந்தோ,  பெண்ணும்  பெண்ணும்  சேர்ந்தோ  கல்யாணம்  செய்துகொள்ளவில்லை.

ஆதலால்  இவ்வித  திருமணத்தைப்  பற்றி  யாரும்  கவலையோ  ஆத்திரமோ  படவேண்டியதில்லை.  பெண்  மக்களில்  பலருக்கு  இவ்விஷயத்தில்  ஏதாவது  மன  சஞ்சலம்  இருந்தாலும்  இருக்கலாம்.  ஆண்களில்  படித்தவர்கள்  வித்வான்கள்  என்று  சொல்லப்படுபவர்களிலேயே  சில  அழுக்குமூட்டைகள்  இருந்துகொண்டு  விஷம  பிரசாரம்  செய்துவரும்பொழுது  பெண்களில்  இது  விஷயமாய்  அதிருப்த்தி  உள்ளவர்கள்  இருப்பது  அதிசயமல்ல.  ஏனெனில்  பெண்களை  நாம்  எப்படி  வைத்திருக்கின்றோம்.  அவர்களில்  100க்கு  99பேருக்கு  அடுப்பங்கரையையும்,  படுக்கைவீட்டையும்  மாத்திரமே  காட்டி  நகை  மாட்டுகின்ற  (குtச்ணஞீ)  ஸ்டேண்டுபோல்  நகைகளை  மாட்டி  இது  என்  பெண்ஜாதி  (அடிமை)  இது  உன்  பெண்ஜாதி  என்று  கண்காக்ஷி  காட்டு கின்றோமே  ஒழிய  வேறு  அவர்களுக்கு  என்ன  கற்றுக்கொடுத்திருக்கிறோம்  என்பதை  யோசித்துப்பாருங்கள்.  வேண்டுமானால்  கண்ணைமூடிக்கொண்டு  பல்லைக்  கடித்துக்கொண்டு  கணக்கு  வழக்குப்  பார்க்காமல்  பிள்ளைகளைப்  பெறுவார்கள்.  இதற்கு  ஒரு  உபாத்தியாயரோ,  அறிவோ  வேண்டியதில்லை.  எவ்வளவுக்கெவ்வளவு  மடமை  உண்டோ  அவ்வளவுக்கு  அவ்வளவு  பிள்ளைகள்  பிறந்து  விடும்.  எவ்வளவுக்கெவ்வளவு  அடிமைத்தன்மையில்  மோகம்  உண்டோ  அவ்வளவுக்கவ்வளவு    நகைகளை  மாட்டிக்கொள்ளுவார்கள்.  தங்களை  விகாரமாய்  சிங்காரித்துக்  கொள்ளுவார்கள்.  இவைகளையும்,  இவை  போன்றவைகளையும்தான்  நாம்  அவர்களுக்குத்  தாய்  தந்தையர்கள்  என்கின்ற  முறையில்  கற்றுக்கொடுத்திருக்கிறோம்.  ஆகவே  இப்படிப்பட்ட  பெண்களிடம்  நாம்  வேறு  எதை  எதிர்பார்க்க  முடியும்.  இன்றைய  பெண்  எவ்வளவோ  கல்வியும்,  செல்வமும், நாகரீக  ஞானமும்,  கௌரவமும்  உள்ள  சுற்றத்தார்களுக்குள்ளும்  சகவாசத்துக்குள்ளும்  இருந்து  வந்தும்  நிரம்பவும்  கர்நாடக  முறையில்  பட்டிக்காட்டு  கிராமவாசப்  பெண்களைவிட  இளப்பமாய் நடந்து  கொள்வதைப்  பார்த்தால்  நமக்கு எவ்வளவு  சங்கடமாயிருந்தது  என்பது  அவரவர்களுக்கே  தெரிந்திருக்கலாம்.  இப்படிப்பட்ட  பெண்கள்  வயிற்றில்  பிள்ளைகள்  பிறந்து  இவர்களால்  வளர்க்கப்பட்டால்  அவற்றிற்கு  மனிதத்தன்மை  எப்படி  ஏற்படும்  என்பதை  நீங்களே  யோசித்துப்  பாருங்கள்.  நமது  மக்களுக்கு  ஏன்  மனிதத்தன்மை  இல்லை,  சுயமரியாதை  இல்லை  என்றால்  அவற்றிற்கெல்லாம்  முக்கியத்திலும்  முக்கியமான  காரணம்  இப்படிப்பட்ட  தாய்மார்களால்  பெறப்பட்டு  வளர்க்கப்பட்டதேயாகும்.

கடைசியாக  தோழர்களே  ஒன்று  சொல்லி முடித்துவிடுகிறேன்.  கல்யாணமானவுடன்  பெற்றோர்கள்  பிள்ளைகளை  எதிர்பார்ப்பார்கள்.  சுற்றத்தார்  எத்தனை  ஆயிற்றென்று  கணக்குக்கூட்டி  வருவார்கள்.  தம்பதிகள்  பிள்ளை  பெறுவதினால்  படும்  கஷ்டம்  காயலா  அசௌகரியம்  வாலிபம்  பாழாவது  அதிக  பிள்ளைகள்  பெறுவதினால்  தரித்திரம்,  துன்பம்,  வியாகூலம்,  விசாரம்,  மானங்கெட  நேருவது,  சுயமரியாதை  இழந்தாவது  வாழ  ஆசைப்படுவது  ஆகிய  காரியங்களைப்  பற்றி  யெவரும்  சிந்திக்க  மாட்டார்கள்.  யாதொரு  பொறுப்பும்  அறிவும்  அற்று  இன்று  மணமக்களைப் பார்த்து  "16  பிள்ளைகள்  பெற்று  பெருவாழ்வு  வாழவேண்டும்"  என்று  சொல்லுகிறவர்கள்  நாளைக்கு  ஒரு  குழந்தைக்கு  அரைச்சங்கு  பால் வார்க்கக்கூட  சம்மதிக்கமாட்டார்கள்.  ஏதாவது  கஷ்டம்  வந்தால்கூட  பக்கத்து  வீட்டில்  குடியிருந்துகொண்டு  கணக்குக்கூட்டிப்  பார்த்து  அசூசையும்  வெறுப்பும்  அடைவார்களே  தவிர  சிறிது  பரிதாபம்கூட  காட்டமாட்டார்கள்.  ஆதலால்  மணமக்கள்  குழந்தைகளைப்  பெறும்  விஷயத்தில்  சிறிது  ஜாக்கிரதையாகவும்  அறிவுடமையாகவும்  இருக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளுகிறேன்.

குறிப்பு: 08.06.1934  இல்  சென்னை  தோழர்கள்,  கற்பகம்  அம்மாள்   கே.கல்யாணசுந்திரம்  ஆகியோருக்கு  சென்னை  சவுகார்  பேட்டையில்  நடந்த  சுயமரியாதைத்  திருமணத்தில்  ஆற்றிய  உரை.

தோழர் பெரியார், புரட்சி - சொற்பொழிவு  17.06.1934

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: