நமது நாட்டில் சிறப்பாக இந்து சமூகம் என்பதில் கல்யாணம் என்னும் விஷயம் மிகவும் கஷ்டமும், நஷ்டமும் தரத்தக்க காரியமாயிருந்து வரு கின்றது. ஆனால் கல்யாணம் செய்கின்றவர்களோ, செய்து கொள்ளுகின்ற வர்களோ இந்த கஷ்ட நஷ்டங் களைப் பற்றி கவனியாதவர்கள் போலவும், இது எவ்வளவு கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அடைந்துதான் தீரவேண்டும் என்றும், இது சமூக வாழ்க்கைக்கு அவசியமாய் அடைந்துதீர வேண்டிய கஷ்ட நஷ்டமென்றும் கருதுகிறார்கள். இது மாத்திரமல்லாமல் இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகி நடைபெறும் கல்யாணங்கள் நடக்கும் போது ஒருவித சந்தோஷத்தையும், பெருமையையும் கூட அடை கின்றார்கள். இது பழக்கத்தினாலும் வழக்கத்தினாலுமேயாகும்.

கல்யாண காலங்களில் கல்யாணக்காரருக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைப் போலவே கல்யாணத்துக்கு வரும் மக்களுக்கும் கஷ்ட நஷ்டம், வேலைக்கேடு முதலிய பல தொல்லைகளும் விளைகின்றன.

100க்கு 90 கல்யாணங்கள் தங்கள் நிலைமையை சிறிதும் லட்சியம் செய்யாமல் கௌரவத்தையும், ஜம்பத்தையுமே பிரதானமாகக் கருதி பிரத்தி யார் பெருமையாய் பேசிக்கொள்ள வேண்டுமே என்கின்ற காரியத்திற் காகவே, கடன் வாங்கியும், நாணையத்தைக் கெடுத்துக் கொண்டும், அன்னி யருக்கு கஷ்டத்தைக் கொடுத்தும் கல்யாணத்தை நடத்துகிறார்கள். விருந்து, நகை, துணிமணி, ஊர்வலம், பந்தல், ஆடல், பாடல் முதலிய அசௌகரி யங்கள் வெறும் பெருமையையும், ஜம்பத்தையும் குறியாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. எவ்வளவு பணம் செலவு செய்தாலும், எவ்வளவு ஆடம்பரமாய் செய்தாலும் அவையெல்லாம் இரண்டு-மூன்று நாள் தமா ஷாக முடிகின்றதே தவிர அடுத்த வாரத்தில் அதை பற்றிய பெருமை ஒன்று மேயில்லை. ஆனால் அந்தக் கல்யாணச் செலவானது பல குடும்பங்களை நாசமாக்கிவிடுகின்றதுடன், பல ஏழைக்குடும்பங்களுக்கும் பெரும்பாரமாகி வெகுநாளைக்கு அக்கடன் தொல்லை தீருவதேயில்லை. நம்நாட்டுப் பெண் களுக்கு கல்வி அறிவில்லாததாலும் அடிமை ரத்தம் ஊரிப்போயிருக்கிற படியாலும், அவர்கள் சிறிதாவது கல்யாணச் செலவாலும் கடன்தொல்லை யாலும் ஏற்படுகின்ற பலனை லட்சியம் செய்வதே இல்லை.

நாட்டுக்கோட்டை சமூகத்திலும், பார்ப்பன சமூகத்திலும் கல்யாண சம்மந்தமான செலவும், மெனக்கேடும் சொல்லி முடியாது. இருசமூகமும் சரீரத்தால் சிறிதும் உழைக்காமல் யார் செல்வத்தை அட்டைபோல் உருஞ்சு கின்றவர்களானதால் அவர்களுக்கு இதுசமயம் கஷ்டமில்லாத காரியமா யிருக்கலாம். ஆனால் அவர்களும் சமீப காலத்தில் கஷ்டப்படப் போகின் றார்கள் என்பதிலும் மனவேதனை அடையப்போகின்றார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

நிற்க, கல்யாணம் என்றால் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சேர்ந்து வாழ்க்கை நடத்தப் போகிறார்கள் என்பதைவிட வேறு எவ்விதக் கருத்தும் அதில் பொதிந்திருக்க அவசியமில்லை. இதற்காக செலவும், மெனக்கேடும், கஷ்டமும் எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. சிக்கனக் கல்யாணம் என்றும், சீர்திருத்தக் கல்யாணம் என்றும் சிலர் செய்கிறார்களானாலும் அது பெரிதும் ஒருவித நாகரீகக் கல்யாணமாய் தான் முடிந்து விடுகின்றதே தவிர, சிக்கனமும் நன்மை உண்டாக்கத்தக்க சீர்திருத்தமும் அவைகளில் அதிக மாய் இருப்பதாகத் தெரியவில்லை.

அயலூரிலிருந்து பந்துக்கள், சிநேகிதர்கள், அறிமுகமானவர்கள் முதலியவர்களை எதற்காக வரவழைக்க வேண்டும் என்பது நமக்கு விளங்க வில்லை. அதற்காக ஒரு விருந்தோ, அல்லது அரை விருந்தோ தான் எதற்காக நடத்த வேண்டும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

கல்யாண ஜோடியின் பிற்கால வாழ்க்கையில் சில சட்ட சம்மந்தமான ஆnக்ஷபணைகள் அநேக காரியங்களில் ஏற்படும் என்பதற்காக அதிலி ருந்து தப்ப சில சடங்குகளை சாட்சியாக்க செய்யப்படுகின்றன என்று சொல் லப்படுகின்றது. இது அனாவசியமான சமாதானமாகும். ஏனெனில் கல்யா ணங்களுக்காக ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது சிவில் மேரேஜ் ஆக்டு என்ப தாகும். அந்தப்படி கல்யாணம் செய்வதற்கு மூன்று ரூபாய் தான் செல வாகும். அதாவது ஜில்லா ரிஜிஸ்டரார் முன்னிலையில் ஆணும் பெண்ணும் சென்று கையெழுத்துப் போட்டு விட்டு வருவதேயாகும். இதற்கு இரண்டு சாட்சிகள் தம்பதிகளைத் தெரியும் என்பதற்காகக் கையெழுத்துப் போட்டால் போதும். இந்தக் கல்யாணமானது மிகவும் கெட்டியானதும் பந்தோபஸ் தானதுமான கல்யாணமாகும். எப்படியெனில் சாதாரண வழக்க கல்யாண மானது எவ்வளவு பணம் செலவு செய்து எவ்வளவு ஆடம்பரமாகச் செய்த போதிலும், விவாகம் வரும்போது இது சட்டப்படி செல்லாது என்றோ, கல்யா ணமே செய்து கொள்ளவில்லை என்றோ, வைப்பாட்டியாக வைத்திருந்தேன் என்றோ வாதாடி சாட்சிவிட்டால் சாக்ஷிகளைப் பொருத்துத்தான் தீர்ப்பா குமே ஒழிய மற்றபடி கல்யாணம் என்று சொன்னதாலேயே செல்லுபடி யானதாக ஆகி விடாது. இப்படிப்பட்ட அநேக கல்யாணங்கள் மேல்கண்ட காரணங்கள் சொல்லி ரத்து செய்து கொள்ளப்பட்டும் குறைந்த பிரதிப் பிரயோஜனத்தோடு முடிவடைந்தும் இருக்கிறது. ஆனால் மேல்குறிப்பிட்ட ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது எந்த விதத்திலும் மறுக்கக்கூடியதாகாது. அரசாங்கம் உள்ளவரை ஆதாரம் இருந்து வரும்.

அன்றியும் சாதாரண கல்யாணத்தைவிட பத்திரமானதுமாகும். சுலபத்தில் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்து கொள்ளவும் முடியாது. ஆதலால் ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது மிக சிக்கனமானதும், சுருக்க மானதும், கெட்டியானதும், பந்தோபஸ்தானதுமாகும். பந்துக்களுக்கும், சிநேகிதர்களுக்கும் விஷயம் தெரியவேண்டுமானால் பத்திரிகைகளில் பிரசுரம் செய்து விட்டு ரிஜிஸ்டர் ஆனதும் துண்டு விளம்பரம் வழங்கி விட்டால் நன்றாய் வெளியாகி விடும். ஆதலால் சிக்கணக் கல்யாணம், சீர்திருத்தக்கல்யாணம் என்பவைகளை நடத்த விரும்புவோர் ரிஜிஸ்டர் மூலம் செய்து விடுவதே சிறந்த காரியமாகும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் விருந்து போடுவதும், புதுத் துணிகள் வாங்கி வினியோகிப்பதும், கல்யாணத்துக்கு என்று நகைகள் செய்வதும் அனாவசியமும், பெரு நஷ்டமுமான காரியம் என்றே சொல்லு வோம். செலவு செய்ய தகுதி உள்ள பணங்கள் கடன் வாங்காத சொந்தப் பணமாயிருக்கு மானால், ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்பு பெண்ணின் பேரால் ஒரு பாங்கியில் போட்டு பெருகச் செய்து பின்னால் பிள்ளைகளை வளர்ப் பதற்கும் அதன் கல்விக்கும் உபயோகித்தால் அது பெருத்த அனுகூலமான காரியமாய் முடியும்.

நமது நாட்டுப் பணக்காரர்கள் கல்யாணத்துக்கு 1000, 10000 ரூபாய்கள் செலவு செய்வார்களே ஒழிய குழந்தை பெற்றால் குழந்தையை சுகாதார விதிப்படியும், பெற்ற தாயுக்கு தொந்திரவு இல்லாமலும் வளர்க்க வழியும் தெரியாது; இஷ்டமும் இருப்பதில்லை.

பிள்ளை வளர்ப்பு விஷயமாய் தாய்மார்கள் கஷ்டப்படுவதை ஹைக் கோர்டு ஜட்ஜி வேலையில் இருக்கிறவனுக்குக்கூட (இந்தியனுக்கு) தெரிவ தில்லை. ஒரு அன்புள்ள புருஷன் தன் பெண்ஜாதியின் சுகத்திலும், சந்தோஷத்திலும் கவலையுள்ளவனாய் இருக்கிறான் என்றால் அவன் கர்ப்பத் தடை முறையை கையாளுபவனாய் இருக்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தை பிரசவ விஷயத்திலும் குழந்தையை வளர்க்கும் விஷயத்திலும் தாயிக்குத் தொந்திரவு இல்லாமல் இருக்கும்படி செய்ப வனாய் இருக்க வேண்டும். இந்தக்காரியம் செய்ய கொஞ்சம் பணம் செலவாகும். அதாவது ஒரு தாதியை வைக்க வேண்டும். அத் தாதிக்கு µ 5 முதல் 10 ரூபாய்வரை கொடுத்தால்போதும். இந்தக்காரியம் செய்ய நமது பணக்காரர்கள் எவருக் குமே தோன்றுவதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு அனாவசியமான துணி மணிகள் நகைகள் முதலியவைகளில் ஏராளமான பணங்கள் செலவு செய் வார்கள். மற்ற சாதாரண குடும்பக்காரரும் கல்யாணத் துக்கும் சாந்தி முகூர்த்தத்துக்கும் பிள்ளைப்பேரு சடங்குக்கும் ஏராளமான பணம் செலவு செய்வார்களே ஒழிய, பிள்ளையை ஒழுங்காய் வளர்க்க சௌகரியம் செய்ய மாட்டார்கள். ஆதலால் மேல்கண்ட செலவுகளை யெல்லாம் நன்றாய் சுருக்கி சிக்கனம் செய்து தாதிகள் வைத்து பிள்ளைகள் வளர்க்கும் முறைக்குச் செலவிடவேண்டும். தாதிகளைத் தயார் செய்ய ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது பொதுவாகக் குழந்தைகள் வளர்க்கும் இடம் ஏற்படுத்தி அங்கு குழந்தை களைக் கொண்டுபோய்விட்டு சுகாதார ஒழுங்கு முறைப் படியும், நல்ல பழக்க வழக்கம் குணங்கள் பழகும் ஒழுங்கு முறைப்படிக்கும் வளர்க்கச் செய்ய வேண்டும். இக்காரியங்களால் பெற்றோர்களுக்கு எவ்வளவு லாபமும், சந்தோஷமும் சௌக்கியமும் இருக்கின்றது என்பதும், குழந்தைகளுக்கு எவ்வளவு சௌக்யமும் நல்ல பழக்கவழக்கங்களும் குணங்களும் ஏற்படு கின்றது என்பதும், யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. ஆதலால் சிக்கன சீர்திருத்தக் கல்யாணம் செய்கின்ற வர்கள் இனிமேல் இவ்விஷயங்களைப் பற்றி கவனம் செலுத்துவார்களாக.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 10.09.1933

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: