சுயமரியாதை மகாநாடு

தோழர்களே! தோழர் அய்யப்பன் அவர்களை நான் சுமார் 9, 10 வருஷமாய் அறிவேன். வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அறிமுகமானோம். வைக்கம் சத்தியாக்கிரகக் கிளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரணஸ்தர். அவர் இந்துமதப்படியும், மலையாள நாட்டுச் சம்பிரதாயப்படியும் வர்ணாச்சிரமத் தர்மப்படியும் தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு மலையாள தேசம் 30,40 வருஷங்களாகத் தெரியும். வியாபார முறையில் அங்கு சென்று தாமதிப்பதுண்டு. அந்தக் காலத்தில் அய்யப்பன் வகுப்பார் வீதியில் நடந்தால் மோட்டார் கார் ஆரன்கொடுப்பதுபோல் அவர்கள் ஹா, ஹா என்று கத்திக் கொண்டு போக வேண்டும். ஏனெனில் மோட்டார் கார் எப்படி ஜனங்கள் தனது சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஆரன் ஊதித் தான் வருவதை முதலிலேயே தெரிவிக்கிறதோ அதுபோல் ஈழவர் முதலியவர்கள் மற்றவர் கள் தங்கள் அருகாமையில் வந்து தீட்டுப்பட்டு தோஷமடை யாமலிருப்பதற்கு, ஹா, ஹா என்ற கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள்.

ஆனால் இப்போது தோழர் நாராயணகுருஸ்வாமி அவர்கள் முயற்சியாலும், அய்யப்பன் முதலியோர் கிளர்ச்சியாலும் அக்கொடுமைகள் ஒழிந்து சட்டசபை அங்கத்தினர் முதலிய ஸ்தானம் பெற்று சுமார் 20 லக்ஷம் ஜனங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மலையாள தேச ஈழுவசமுதாயம் ஒட்டுக்கும் உள்ள ஸ்தாபனமாகிய எஸ்.என்.டி.பி.யோக காங்கிரசில் தங்களுக்கு மதமே வேண்டியதில்லை என்றும், தாங்கள் யாரும் இனிமேல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானங் கள் செய்ததற்குக் காரணம் தோழர் அய்யப்பனேயாவார். அவர் ஒரு பத்திராதிபர். அவர் மனைவியாரும் பி.ஏ, எல்.டி. யுடன் ஒரு பத்திராதிபரும் ஒரு ஜட்ஜின் குமாரத்தியும் ஆவார். இருவரும் சேர்ந்தே உழைத்து வரு கிறார்கள். மலையாளத்தில் அய்யப்பன் என்கின்ற பெயர் ஒவ்வொரு வருக்கும் வீட்டுப் பேர்போல் வளங்குகின்றது. மலையாள வாலிபர்களை யெல்லாம் இன்று அவர் பொதுவுடமை சமதர்மவாதியாக ஆக்கிவைத் திருக்கிறார்கள். அவரது பொதுவுடமைக் கட்சியில் அனேக நாயர் வாலிபர் களும் மகம்மதிய வாலிபர்களும், கிறிஸ்துவ வாலிபர்களும் கூட இருக் கிறார்கள்.

நமது மகாநாட்டில் லெனின் படத்தை திறக்க ஒப்புக் கொண்டிருந்த தோழர் கொச்சி இப்றாஹிம் பி.ஏ., எம்.எல்.சி. அவர்கள் கொச்சி சட்ட சபையில் பொதுவுடமைக் கக்ஷி சார்பாக அங்கம் பெற்றிருக்கிறவர்.

ஆனால் அவர் இன்று சிறையிலிருக்கிறார். இங்கு வர விடக் கூடா தென்று தான் அவரை கொச்சியில் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். அவர்கள் கடன் மறுப்புப் பிரச்சாரமும் செய்து சிறிய ஒரு கடன் துகையை செலுத்தாமல் ஜெயிலுக்குப் போனவர். இப்படிப்பட்ட கிளர்ச்சி களெல்லாம் திருவாங்கூரிலும், கொச்சியிலும் நடத்துபவர்களில் தோழர் அய்யப்பன் பிரதானப்பட்டவர். இவரை நமது நாட்டுக்கு வரவழைக்க வேண்டுமென்று தோழர் குருசாமிக்கும், எனக்கும் நீண்டநாள் எண்ணம். ஆதலால் அவரைக் கேட்டுக் கொண்டேன். உடனே, சம்மதித்து வந்திருக் கிறார்.

குறிப்பு : - கோவை மாவட்ட சுயமரியாதை மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆற்றிய உரை.

பெண்கள் மகாநாடு - தலைவர் முன்மொழிவு

தோழர்களே! சுயமரியாதை இயக்கமானது இந்த நாட்டில் 8, 9 வருஷ மாக நடந்து வருகின்றது. இதைப்பற்றி பலருக்கு விருப்பு வெறுப்பு உண்டு. யார் யாருக்கு இந்த இயக்கத்தினால் லாபம் இல்லை என்று கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்த இயக்கத்தைக் குற்றம் சொல்வதுண்டு. என்ன குற்றமென்றால், சுயமரியாதை இயக்கம் கற்றறியாத மூடர்கள் இயக்கம். பொறுப்பற்றவர்கள் இயக்கம், அது காலிகள் இயக்கம் என்றெல்லாம் பேசு வார்கள். சிலர் இதிலுள்ள பெண்களைப் பற்றியும் தாருமாராய்ப் பேசுவ துண்டு. சிலர் இனி இதில் பிழைப்புக்கு மார்க்கமில்லை என்று கண்டவர்கள் இந்த இயக்கம் செத்துப்போச்சு, கெட்டுப்போச்சு என்று சொல்வதுமுண்டு.

ஆனால் இன்று இந்த மாகாணத்தின் எல்லா பாகத்திலிருந்தும் வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் பார்த்து அறிய உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதில் இருக்கின்றவர்கள் படிப் பற்றவர்களா? காலிகளா? பொறுப்பற்றவர்களா? இயக்கம் செத்துப் போயி ருக்கிறதா? பாருங்கள். எங்கள் இயக்கம் சிலருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக் கச் சக்தியில்லாததால் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். சிலருக்குக் காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்கள் போல் சாப்பாட்டுக்கு வகைசெய்ய சக்தியில்லாததால் இதையே நம்பி ஜீவிக்க வேண்டிய சிலரால் வசவு கேட்க நேரிடுகிறது என்பதை ஒப்புக் கொள்ளு கிறேன். ஆனால் இதிலிருக்கிறவர்களைப் பாருங்கள்.

முதலாவதாக இம் மகாநாட்டைத் திறந்து வைத்த தோழர் லி.ரா.ரங்க நாயகி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தம்மாள் இந்த ஜில்லாக் காரர். பண்டிதர் பரீட்சை பாஸ்செய்த வித்வான். தகுந்த பொறுப்புள்ள உத்தி யோகத்தில் இருக்கிறவர். அவர் துணைவரும் ஒரு பண்டிதர், இருபதினா யிரக் கணக்கான பிரதிகள் வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியர். ரங்க நாயகி அம்மாளின் திரனை அவர்களது உபந்யாசத்தின் மூலமாகவே நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதுவரை லி.ராமசாமி மாத்திரம் நம் இயக்கத்தில் இருந்து வந்தார். அவர் “குடி அரசு” ஆசிரியராய் இருந்தது கூட உங்களுக்குத் தெரியும். ஆனால் துணைவியாரும் வந்திருப்பதானது இயக்கம் வளர்ந்து விட்டதா? செத்துவிட்டதா பாருங்கள். அவரது உபந்யாசத்தில் “இரண் டொரு விஷயம் தவிர மற்றதெல்லாம் ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். அந்த இரண்டொரு விஷயமும் அம்மையார் அபிப்பிராயப் படியே நாம் ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். ஆதலால் அதை எங்களுக்கு எடுத்துச் சொல்லி எங்களைத் திருத்த வேண்டுமென்று தான் கேட்டுக் கொள்ளுகிறோம்.

அதுபோலவே மகாநாட்டு வரவேற்புத் தலைவர் தோழர் சிவானந்தம் வள்ளியம்மாள் அவர்களும் “தொண்டமண்டல வேளாள” ஜாதியைச் சேர்ந்தவர். அவரது துணைவர் தோழர் ஏ.ஆர். சிவானந்தம் அவர்கள் நமது இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து அபார வேலை செய்து வருகிறார். அம்மை யாரும் அவருக்கு உதவியாகவே இருந்து வந்திருக்கிறார்.

அதுபோலவே தோழர் சி.டி.நா. சிதம்பரம் அம்மையார் ஆங்கிலத் தில் எம்.ஏ. படித்தவர். அவரது துணைவர் தோழர் சி.டி.நாயகம் அவர்கள் சர்க்கார் உத்தியோகத்தில் மாதம் 500 ரூ. சும்பளமுள்ள கொவாப்ரேடிவ் டிப்ட்டி ரிஜிஸ்டார் என்னும் பெரிய உத்தியோகஸ்தராக இருந்தவர். அவரது பிள்ளைகள் பெரிய பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகள் எல்லாம் பி.ஏ. படித்திருக்கின்றனர். இன்று கூட வந்திருக்கும் அவரது இச்சிறிய பெண் குழந்தைகூட பி.ஏ. அவர்கள் குடும்பம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு வேலை செய்தி ருக்கிறது என்பதை அறிய ஆசையுள்ளவர்கள். இவரைப்பற்றி சட்டசபை யில் தோழர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனரும், அவரது அடிமைகளாகிய சில பார்ப்பனரல்லாத சட்ட சபை மெம்பர்களும், கேட்ட கேள்விகளைப் படித்துப்பார்த்தால் தெரிய வரும். அவர் உத்தியோகத்தையும், பணத்தையும் பிரதானமாய் எண்ணியிருந்தால் இன்னம் 4, 5 வருஷம் உத்தியோகத்தில் இருக்கக்கூடும். அவர்கள் குடும்பத்துடன் இப்போது நமது இயக்கத்துக்கு வேலை செய்து வருகிறார்கள்.

தோழர் நாயகம் அவர்கள் “திருநெல்வேலி சைவ வேள்ளாளர்” குலம் என்பதைச் சேர்ந்தவர். ஆனாலும் இவர் குடும்பத்தை பொருத்தவரை வெகுகாலமாகவே ஜாதி வித்தியாசம் இல்லை. அனேக விதவை விவாகம் செய்திருக்கிறார்கள். அனேக சுயமரியாதை விவாகம் செய்திருக்கிறார்கள், சுயமரியாதை மகாநாடு எங்கு கூடுவதாகப் பத்திரிகைகளில் பார்த்தாலும் அழைப்பில்லாமல் போய் விடுவார்கள். ஆகவே நமது இயக்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு பெரும் ஆதரவு அளித்து வந்த தோழர் சிதம்பரம் அம் மாள் அவர்கள் இன்று இப்பெண்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க இசைந்து இரண்டு நாளைக்கு முன்னமே குடும்பத்துடன் வந்திருப்பதையே நான் சுயமரியாதை இயக்கப் பெண்களைப்பற்றி குறைகூறும் “பெரியார்” களது கூற்றுக்கும் இயக்கம் செத்துப் போய்விட்டது என்று கூறும் வீரர்களது கூற்றுக்கும் சமாதானமாகச் சொல்லி பிரேரேபிக்கிறேன்.

குறிப்பு:- கோவை மாவட்ட பெண்கள் மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து ஆற்றிய உரை.

நன்றியுரை

தோழர்களே இப்போது இப்பெரியார்களுக்கு நமது நன்றிசெலுத்தும் கடமைக்கு எழுந்து நிற்கிறேன். இவ்விழாவின் தலைமையில் டாக்டர். வரத ராஜுலு நாயுடு அவர்கள் பேசியதை கேட்டீர்கள். தோழர் முதலியார் அவர் கள் பேசியதையும் கேட்டீர்கள். அவற்றுள் நமக்கு மாறுபட்ட அபிப்பிரா யங்கள் பிரமாதமாக ஒன்றும் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் சிற்சில மாறுதல் இருக்கிறதென்றும் நாம் மிக தீவிரமாகப் போவதாகவும் சொன் னார்கள்.

தோழர்களே! எனது பொதுவாழ்வுக்கு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் அக்காலத்திய எனது தொழிலின் பயனாய் இன்று நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும் வணிகனாகவும் இருந்தி ருப்பேன். அல்லது ஒரு சமயம் அம்முயற்சியால் அனாமதேய பாப்பராக வும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று இந்நிலைக்கு வந்ததற்குக் காரணம். அப்படி இருக்க நான் தீவிரமாய் போய் விட்டதாகச் சொல்லுகிறார். ஏன் குருவை மிஞ்சின சிஷ்யன் உலகில் இல்லையா? ஒரு சமயம் அதுபோல் இருக்கலாம் என்றாலும் எனது மூக் கணாங்கயிற்றை அவர் கையில் கொடுக்க இப்போதும் எனக்கு ஆnக்ஷ பனையில்லை. நிதானமாய் என்னை ஓட்டிச் செல்லட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்றியும் உண்மையிலேயே அவர்களுக்கு நமது இயக்க சம்மந்தமாய் அபிப்பிராய பேதம் இல்லை என்றே இப்போதய அவருடைய உபன்யாசத்தில் இருந்து அறிகிறேன். ஏதோ சில காரியத்துக்கு என்றுதான் அபிப்பிராய பேதம் இருக்கிறது என்று சொல்லு கிறார் என்று கருதுகின்றேன். ஆதலால் அவர்களது வரவால் உபன்யாசத்தால் நமக்கு அதிக பலமும், ஆதரவும் ஏற்பட்டது என்பதே எனது அபிப்பிராயம். அதற் காக நாம் நன்றி செலுத்தவேண்டியதே. தோழர் முதலியார் அவர் களுக்கும் நன்றி செலுத்த வேண்டியது நமது கடமையாகும். அவரது உடல்நிலையில் நாம் கூப்பிட்டவுடன் கட்டுப்பட்டது மதிக்கத்தகுந்ததாகும். அவர்களால் தான் எனக்கு வைக்கம் வீரர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது நான் அதை பெருமையாகக் கொள்ளவில்லையானாலும் அப்போது அந்தப் பெயரால் நான் மகிழ்ந்து பரவசப்பட்டது எனக்குத் தெரியும். எல் லோருக்கும் பெயர் வைக்கும் பெருமை தோழர் முதலியா ருக்கே இருந்தது. கம்பர் கம்பராமாயணம் பாடியிருக்கவில்லையானால் தமிழ்நாட்டில் ராமாய ணத்துக்கும் ராமனுக்கும் எப்படி மதிப்பிருந்திருக்காதோ அதுபோல் தோழர் முதலியார் அவர்கள் காந்தியாரை, எம்பெருமாள் என்றும், அடிக ளார் என்றும், எம்மான் என்றும், பெம்மான் என்றும் கவிபாடா திருந்திருந் தால் காந்தியாருக்குத் தமிழ்நாட்டில் இவ்வளவு மரியாதை கூட இருந்திருக் காது. நான் அனேகமாய் தோழர் முதலியார் அவர்களால் தான் ஒத்துழை யாமையில் அவ்வளவு ஈடுபட்டது. நாங்கள் மூவரும் அதாவது, நாயுடுகார், முதலியார், நான் என்கின்ற மூவரும் சேர்ந்து அந்தக் காலத்தில் பார்ப்ப னர்களுக்கு தேசபக்தியின் பேரால் எவ்வளவோ உழைத்து விட்டோம். பார்ப்பனர் சூழ்ச்சியறிந்து அவர்கள் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டிய முக்கிய சமயத்தில் பிரிந்து விட்டோம்.

அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லு கின்றேன் கேளுங்கள். நான் காங்கிரஸ் காரியதரிசியாயும், தலைவனாகவும் இருந்த காலங்களில் தமிழ்நாடு வாலிபர்களை தேசிய வீரர்களாக்க வென்று வி.வி.எஸ்.ஐயர் என்னும் ஒரு தேசீயப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபாய் கேட்டபோது அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபாய் அனுமதிக் கப்பட்டது. அந்தப் பணம் குருகுலம் என்று ஒரு ஆச்சிரமம் வைத்து அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும் பார்ப்பனரல்லாத பிள்ளை களை வெளியில் வைத்தும் சாப்பாடு போட்டு வருணாச்சிரம தர்மம் கற்றுக் கொடுக்கப் பயன் படுத்தப்பட்டதுடன் இதன் பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யவும் பட்டது. இதற்கு “தமிழ் நாடும்” “நவசக்தியும்” ஆதரவும் அளித்தன. இந்த சூழ்ச்சி யான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். அப்போது அவர் டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி நாயுடு அவர்கள் “தமிழ்நாடு”வில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்க வேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டோம். அவ்வளவு தான் சங்கதி. உடனே டாக்டர் குருகுலத்தின் மீது போர் தொடுத்தார். தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் தோழர் கள் ராஜகோபாலாச்சாரியார், சீனிவாசய்யங்கார் உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ தொல்லை விளைவித்தும் பயன்படாமல் கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்து அதில் இப்போது படைக்கள்ளியும், நெரிஞ்சி முள்ளும் வளரும் படியும், பாம்பும், பூச்சியும் வாழும்படியும் ஆய்விட்டது. அதுபோலவே மற்ற காரியங்களிலும் மூவரும் ஒத்து வேலை செய்திருந்தால் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவை விட்டு ஓடி இருக்கும். உண்மையிலேயே சொல்லுகின்றேன். இதுவரை நாங்கள் மூவரும் ஒரு அபிப்பிராயமாய் இருந்திருந்தால், இந்து, சுதேச மித்திரன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இருந்திருக்குமா? இருந்தாலும் இந்தமாதிரி பார்ப்பனப் பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து முட்டுக்கட்டை போட்டு இழிவுப்படுத்தி விடுமா? யோசித்துப் பாருங்கள். நாம் எந்த சாஸ்திரத்தை, எந்த தத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின் றோமோ அதையே கலம் கலமாய், பக்கம் பக்கமாய் அப்பத்திரிகைகள் எழுதி வருகின்றன. சங்கராச்சாரியின் வருணாச்சிரம பாஷ்யமும் சூத்திரன் யார்? சண்டாளன் யார்? என்கின்ற தத்துவமும், இன்னமும் பக்கம் பக்கமாய் எழுதி வருகின்றன. குட்டிப் பத்திரிகைகளெல்லாம் பயமின்றி குலைக் கின்றன. இவற்றின் சூக்ஷிகளை மக்கள் அறியும்படி செய்ய முடியவில்லை. பார்ப்பனரல்லாத பார்ப்பனக் கூலிகளையும் ஒழிப்பதென்றால் நாம் மூவரும் சேர்ந்தால்தான் முடியும். ஏன் என்று கேழ்க்க இப்போது நாதியற்றுப் போய் விட்டது. மூன்று பேர் அடுப்புக் கல்லைப் போல் பயனற்று வாழ்கின்றோம் என்பது தான் எனது எண்ணம். இனியாவது ஒத்து இருந்தோமானால் பார்ப்பனரல்லா பெருமக்கள் சம தர்மம் பெற்று, சுயமரியாதை அடைந்து சோம்பேறி வாழ்க்கைக்காரரும், சூழ்ச்சி வாழ்க்கைகாரரும் அழிவு பெற மாட்டார்களா? என்பதுதான் எனது ஆசையே தவிர முதலியாரும் நாயுடு வும் வந்து சேர்ந்தால் தான் ஏதோ சொந்தத்தில் பெருவாழ்வு வாழ்ந்து விட லாம் என்று கருதவில்லை.

தோழர்கள் முதலியாரையும் நாயுடுவையும் சில சோம்பேறி வயிற்றுச் சோற்று தேசபக்தர்களென்கின்ற காலிகள் சிலர் வைவார்களென்பது எனக்குத் தெரியும்.இவர்கள் என்ன பாவம் பண்ணிவிட்டார்களென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் கூலிகொடுத்து காலிகளை ஏவிவிட்டு அவர்களை வையச் சொல்லுவார்கள். இதற்கொரு சிறு உதாரணம் கூறு கிறேன். கொஞ்சகாலத்துக்கு முன்பு தோழர் வரதராஜுலு அவர்கள் ஜஸ்டிஸ் ஆபீசுக்குச் சென்றிருந்தாராம். இதை ஒரு பார்ப்பன ஒற்றர் கண்டுபிடித்துச் சுதேசமித்திரனுக்கும், இந்துவுக்கும் தெரிவித்து விட்டார். இதைப் பெரிய பெரிய எழுத்தில் அப்பத்திரிக்கைகள் “ஜஸ்டிஸ் ஆபீசில் வரதராஜுலு நாயுடு” என்று தலைப்புக் கொடுத்து எழுதிவிட்டன. உடனே நாயுடுகார் சமாதானம் சொல்ல ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து பார்ப்பனர்களுக்கு எவ்வளவு ஆதிக்கம் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். இவ்வித மிரட்டலுக்கெல்லாம் இனிபயப்பட மாட்டார்களென்றே நினைக்கிறேன்.

நமது தோழர்களுக்கும் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன்:-

நம்மில் சில தோழர்கள் இவர்களை நாம் வரவழைத்ததால் நமது கொள்கைகளோ, திட்டங்களோ மாறுபட்டுவிட்டது என்று ஓலமிட்டு நம்மை வைய ஒருவழி தேடக்கூடும் அல்லது உண்மையிலேயே சிலர் அப்படி நினைத்து பயப்படக் கூடும். அது சரியல்ல. அவர்கள் வந்ததால் நமக்குப் பலமேற்பட்டது. அனேக காங்கிரஸ்காரர்கள் பாமர ஜனங்கள் டாக்டர் நாயுடு அவர்களை ஒரு பெரிய தேசீயவாதி என்றும் நம்மை ஒரு தேசத் துரோகி என்றும் கருதியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கூட இன்று நம்மையும் மதிக்கும்படி செய்து விட்டோம். ஏன்? நாம் சொல்லுபவை களையே தான் டாக்டர் நாயுடு அவர்களும் இன்று பலமாக அழுத்திச் சொல்லி இருக்கிறார். ஆதலால் லாபம் நமக்குத்தான். எப்படியென்றால் சொம்பிலிருந்து ஊற்றினால் தண்ணீர் என்பார்கள். கெண்டியால் ஊற்றினால் தீர்த்தம் என்பார்கள். உத்திரணிலில் ஊத்தினால் தான் மதிப்பது வழக்கம். அதுபோல் அவர் வாயிலிருந்தே நமது கொள்கைகள் முழுவதும் வந்து விட்டன. இனி அவர்களைப் பின்பற்றுபவர்களும் நமது கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் வையவாவது மாட்டார்கள். அதுபோலவே தோழர் முதலியார் அவர்களும் மதத்தைப் பற்றிப் பேசிய இரண்டொரு இடம் தவிர மற்றதெல்லாம் அனேகமாக நமது கொள்கையைத் தழுவியதே ஆகும். மதவிஷயமாய் தோழர் முதலியார் அவர்களது இப்போதைய அபிப்பிராயத் தைப் பற்றி கவலையில்லை. அவர் நம்மைத் திருப்பட்டும் அல்லது நமது வழிக்குத் திரும்பட்டும் அல்லது அவரவர் அபிப்பிராயம் அவரவரிடமிருக்கட்டும். ஒரே மேடையில் இருவரும் அவரவர் அபிப்பி ராயம் சொல்ல நம் இருவருக்கும் உரிமை வேண்டும். ஒருவருக்கொருவர் சொந்த விரோதம் வேண்டாம். பகைத்துக் கொள்ள வேண்டாம். மூவரும் மனித சமூக புல்லுருவியும், க்ஷயரோகக் கிருமியுமாகிய பார்ப்பனீயத்தை அழிப்பதிலும் முதலாளித்துவத்தை ஒழிப்பதிலும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்கால ஆசை.

தோழர்களே கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். அதென்னவென் றால் இவர்களிருவரும் என்னைப் பார்ப்பனீயத்துக்கு இட்டுச் சென்று விடுவார்கள் என்கின்ற பயம் உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் என்னை நம்பினாலும் நம்புவார்கள். முதலியாரையோ, நாயுடுவையோ எப்போதும் ஒரு பார்ப்பனரும் நம்ப மாட்டார்கள். இவர்கள் பூணூல் போட்டுக் கொண்டால் கூட சேர்க்க மாட்டார்கள். அது மிக மிக உறுதி. உப்புச் சத்தியாக்கிரகத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி சிறைப்பட்ட தும் தோழர் முதலியாருக்கு சர்வாதிகாரம் கொடுப்பதாய்ச் சொல்லி அவரும் தயாராயிருந்தார். ஆனால் அந்தப்படி செய்யவில்லை. ஒரு சாதாரண பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டது. முதலியார் பேர் அடிபட்டதால் அவர் பத்திரிகை ஒழிந்தது தான் மிச்சம். இப்பொழுது வரப் போகும் காந்தியார் வரவேற்பு கமிட்டிக்கு நாயுடு அவர்களை பார்ப்பனர் சேர்க்கவில்லை. ஒரு 3-வது வகுப்பு பார்ப்பனர்தான் தலைவராய் இருக்கிறார். ஆனால் பார்ப்பன ரல்லாதார் இடமிருந்துதான் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆதலால் பார்ப்பனீயம், புரோகிதம், முதலாளித்துவம் ஆகிய கொடுமையை அழிக் கும் விஷயத்தில் நமக்குப் பெரியதொரு ஆதரவு கிடைத்திருக்கிறது என் கின்ற நம்பிக்கையின்பேரில் அவர்களது கருணை நிரம்பிய விஜயத்துக்கும் அவர்களது அரிய உபதேசத்துக்கும் நான் உங்கள் சார்பாகவும், என் சார்பாக வும் மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அவர்களது விஜயத்தில் இங்கு அவர்களுக்குப் போதிய சௌகர் யமும், மரியாதையும் அளிக்கத் தவறியதற்கும் மன்னிக்கும்படி அவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

குறிப்பு:- 25, 26.11.1933 நாள்களில் ஈரோடு டவுன் முனிசிபல் ஜெனரல் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற கோவை மாவட்ட சுயமரியாதை மாநாடு மற்றும் பெண்கள் மாநாடுகளில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், புரட்சி - சொற்பொழிவு - 03.12.1933

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: