டில்லியில் உள்ள போலீஸ் சீனியர் சூப்பரின்டென்ட் அவர்கள் போலீஸ் இலாகாவில் பெண்களையும் சேர்க்க முயற்சி செய்கிறார். ‘போலீஸ் உத்தியோகத்திற்கு பெண்கள் தேவை’ என விளம்பரங்களும் வெளியிட்டி ருக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாம் பாராட்டுகிறோம். எதற்காகப் பெண் போலீஸ் தேவை என்று சொல்லுகிறார் என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் இது பெண்களின் சமத்துவத்திற்கு ஏற்ற செய்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்னையில் சென்ற வருஷத்தில் கூடிய பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்கு போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கப்பட்டிருப்பதாக நமது ஞாபகம். டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் கூட ஒரு சமயம் பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் வேண்டுமெனப் பேசியிருப்பதாக நினைக்கிறோம். பெண்மக்களும் ஆண்மக்களைப் போல் சமஉரிமை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற ஆண் பெண்கள் அனை வரும் டில்லி போலீஸ் சூப்பரின்டென்டின் யோசனையை வரவேற்பார்க ளென்று நம்புகின்றோம்.

சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண்களைப் போலீசார் இம்சிப்பதைப்பற்றி சீர்திருத்தமுள்ள பெண்களெல்லாம், சமத்துவம் வேண்டுகின்ற பெண்களெல்லாம் ஆத்திரப்படுகின்றார்களாம். ஆனால் இது எதற்கு? என்பது தான் நமக்கு விளங்கவில்லை. சட்ட மறுப்பில் கலந்து கொண்டு மறியல் - ஊர்வலம் முதலியவைகளை நடத்துகின்ற ஆண்மக்கள் போலீசாரால் அடிபடுகின்ற பொழுது பெண்களும் அடிபடுகின்றது நியாயந் தானே? ஆண்மக்கள் தண்டனை அடைகின்ற பொழுது பெண்மக்களும் தண்டனை அடைய வேண்டியது முறைதானே! சுகத்தில் மாத்திரம் ஆண்களுக் குள்ள உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் வேண்டும், கஷ்டத்தில் மாத்திரம் பெண்களுக்குப் பங்கும், சமத்துவமும் வேண்டாமென்றால் யார் கேட்பார்கள்? சர்தார் பட்டேல் சொல்லியபடி ‘பிள்ளைகளைப் பெறுவதும், வளர்ப்பதுந்தான் பெண்கள் கடமை’ என்பதை ஒப்புக் கொண்டு அவர்கள் சட்ட மறுப்பில் கலந்து கொள்ளாமல் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நான்கு வகையான பழக்க குணங்களுடன் வீட்டிற்குள்ளேயே இருந்தால் அவர்களை யார் என்ன செய்யப் போகிறார்கள்?

ஆனால் ஆண்மக்களை ஆண் போலீசார் தடுக்கிறார்கள். பெண் களைத் தடுக்க பெண் போலீசார் இல்லை. ஆண் போலீசார்தான் அவர்களைத் தடுக்கிறார்கள். ஆகையால் பெண் போலீசாரை நியமித்துவிட்டால் இந்த வித்தியாசமும் ஒழிந்து போகிறது. ஆகையால் பெண் போலீசார் நியமிப்பதை நாம் மனப்பூர்வமாய் பாராட்டுகிறோம். அன்றியும் விபசாரத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்திருக்கும் இச்சமயத்தில் பெண் போலீசார் ஏற்படுவது சீர் திருத்த வேலைக்கும் சாதகமாகுமென்று சந்தோஷப்படுகின்றோம். ஆகை யால் பெண் போலீசாரை ஏற்படுத்துவது எப்பொழுதும் நிலையாக இருந்து வரச் சீர்திருத்தவாதிகள் முயல வேண்டும்.

II

பிப்ரவரி 4-ந்தேதி கூடும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் சமூக சீர் திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றனவாம். அவைகளில் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்களால் கொண்டுவரப்படும் தீண்டாதவர்களுக்கு இருந்துவரும் அசௌகரியங்களைப் போக்கும் மசோதாவும், தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவும் முக்கியமானவையாகும். இதில்தான் இந்திய சட்டசபையின் யோக்கியதை விளங்கப் போகிறது. ஜாதி இந்துக்கள் ஏழைத் தீண்டாதவர்களின் நன்மையை எவ்வளவு தூரம் கவனிக்கின்றவர்களா யிருக்கின்றார்கள் என்பது வெட்டவெளியாகி விடும். காங்கிரசும் மற்ற வைதீகர்களும், ஜாதி இந்துக்களும் தீண்டாதவர்களுக்குத் தனிப் பிரதி நிதித்துவம் வேண்டவதில்லை என்று சொல்லித் தீண்டாதவர்களின் கோரிக்கையை மறுத்ததின் சூழ்ச்சி விளங்கும். “தேவதாசி முறை மதசம் மந்தமானது. அது ஒழிந்து விட்டால் இந்து மதத்திற்கு ஆபத்து” என்று சொல்லுகின்ற கூட்டத்தார் இந்திய சட்டசபையில் எத்தனைபேர் இருக்கின்றனர் என்பதும் வெளிப்படும். இப்பொழுது சட்டசபையில் திரு. எம். கே. ஆச்சாரியார், பண்டித மாளவியா போன்றவர்கள் இல்லை யென்றாலும் திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியாரும், அவர் கூட்டத்தைச் சேர்ந்த சிலரும் இருக்கின்றார்கள் என்பது நேயர்களுக்குத் தெரியும். இவர்கள் எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால் அரசாங்கத்தார் வைதீகர் பக்கம் சேருவார்களா? அல்லது நமது சுயமரியாதைத் தலைவர் திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பக்கம் சேருகின்றார்களா? என்பது நமக்கு இன்னும் விளங்கவில்லை.

இந்த சட்டசபைக் கூட்டத்தில் மற்றொரு கரடியும் வருகிறது. ஒரே கரடி பல உருவமாக வருகிறதாம். அதாவது சாரதா சட்டத்தை எடுத்து விட வேண்டும் என்றும், திருத்த வேண்டுமென்றும் பல மசோதாக்கள் வருகின்றனவாம். இந்த மாதிரியான மசோதாக்களைப் பல இந்துக்கள் கொண்டு வருகிறார்களாம். ஒரு முஸ்லீம் கூட இத்தகைய மசோதா ஒன்று கொண்டு வருகிறாராம். இதுதான் ஆச்சரியமான சேதி. குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படும் கிழவர்களின் ‘அதிர்ஷ்டம்’ எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

சாரதா சட்டத்தை ஆட்சேபித்தும் திரு. ஆர் கே. ஷண்முகம் அவர் களின் மசோதாக்களை கண்டித்தும் நாடெங்கும் உள்ள வைதீகர்கள் தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள். ‘நாங்கள் ஒற்றுமையடைந்து விட்டோம். சீர்திருத்தம் பெற்று விட்டோம். ஆகையால் முழு சுயரராஜ்யம் வேண்டும்’ என்று சொல்லும் காங்கிரஸ்கார்களின் உண்மைப் பேச்சு இச்சமயம் விளங்கி விடும். ஆகையால் இந்த மசோதாக்களின் கதி என்னவாகிற தென்பதைக் கவனித்துக் கொண்டிருப்போம்.

III

திரு. காந்தி அவர்கள், தாம் ஜெயிலுக்குப் போகுமுன்பு, ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகத்தைப் பற்றி தமது ‘யங் இந்தியாவில்’ ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அக்கட்டுரையில் “ஆலயப் பிரவேச சத்தியாகிரகஞ் செய்ய நினைப்பவர்களுக்கு, ஆலயத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டியது அவசியமாகும். ஆலயத்தில் நம்பிக்கையற்றவர்கள் சத்தியா கிரகஞ் செய்ய நினைப்பது தவறு. ஆலயப் பிரவேசம் ஒரு மத உரிமை. ஆகையால் இந்துக்களின் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் பிரவேசிக்க முயற்சிப்பது தவறு. இந்த சத்தியாக்கிரகத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் வெளியிலிருந்து கொண்டு உதவி புரியலாமே தவிர கலந்து கொள்ளக் கூடாது” என்ற அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் இந்த அபிப்பிராயத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? இந்த அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டு சத்தியாக்கிரகம் பண்ணுகிறவர்களுடன் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? நாம் கோயில்கள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறோம். இப்படிச் சொல்லுகிற நாம் எப்படிக் கோயில்கள் மேல் நம்பிக்கை கொள்ள முடியும்? ஆகையால் தற்போது காங்கிரஸ்காரர்களால், காங்கிரஸ்காரர்களின் ஆதரவு பெற்றவர்களால் நடத்தப்படும் ஆலயப்பிரவேச சத்தியாக்கிரகம் மதப்பற்று கொண்டவர்களாலேயே நடத்தப்படுகிறதென்று தெரிந்து கொள்ளலாம். ஆகையால்தான் மத நம்பிக்கை கொண்டவர்களால், மதத்தை அறியாமல் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் சத்தியாக்கிரகங்களில் சுயமரியாதைக் காரர்கள் கலக்கவில்லை. அப்படிக் கலந்து கொள்ளுவதும் தவறு என்று அபிப்பிராயப்படுகிறோம்.

IV

திரு.காந்தி அவர்கள் “சட்டசபை தீர்மானங்கள் குடிஅரசின் தத்துவப் படி பொது ஜனங்களின் அபிப்பிராயத்தைச் சார்ந்ததாகவே யிருக்கும். ஆகையால் பொது ஜன அபிப்பிராயத்தை வளர்க்க வேண்டுமானால், தகுந்த முறையில் நடத்தப்படும் உண்மையான சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறு வழியில்லை” என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். பொது ஜன அபிப்பிராயப்படிதான் சட்டசபையில் சட்டங்கள் ஏற்படுத்த முடியும் என் பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பொது ஜன அபிப்பிராயத்தை வளர்க் கச் சத்தியாக்கிரகந்தான் சரியான வழி என்று சொல்லுவது தவறாகும். சத்தியாக் கிரகஞ் செய்தால் எதிரிகள் இன்னும் பலமாக எதிர்த்து நிற்பார்களேயொழிய சாதகமாக மனந்திரும்பமாட்டார்கள். சத்தியாக்கிரகம் என்பது அகிம்சை யாகாது. ஒருவருடைய காரியங்களைத் தடுப்பது எப்படி அகிம்சையாகும்? ஒருவருடைய காரியங்களை நடைபெற வொட்டாமல் எந்த வகையில் தடுத் தாலும் அது ஹிம்சையேயாகும். ஆகையால் சத்தியாக்கிரகத்தால் எதிர்க் கட்சியின் கொள்கை உறுதிப்பட்டு அவர்கள் இன்னும் பலமாக எதிர்த்துத்தான் நிற்பார்கள். ஆகையால் பிரச்சாரத்தாலும், பத்திரிகைகளாலும் தான் பொது ஜனங்களைத் திருப்ப முடியும். ஸ்பெயின், டர்க்கி, ரஷ்யா, பிரான்சு முதலிய தேசங்களில் நடந்த சீர்திருத்தப் புரட்சிகளுக்குச் சாதகமாகப் பொது ஜனங் களின் மனம் திரும்பியது பத்திரிகைகளாலும் தலைவர்களின் பிரசாரத் தாலுமே ஒழிய சத்தியாக்கிரகத்தால் அல்ல என்பது திரு. காந்தியவர்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் பிரசாரத்தின் மூலம் பொது ஜனங்களின் மனத் தைத்திருப்பிச் சட்ட சபைகளின் சமதர்மச் சட்டங்கள் செய்து, சமதர்மத்தை நிலை நிறுத்துவதே கைகூடும் மார்க்கம் என்று நாம் சொல்லுகிறோம்

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 31.01.1932

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: