இந்திய சட்ட சபையில் இம்மாதம் 4-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகள் நமது நாட்டுச் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் கவனிக்கக் கூடிய தொன்றாகும். அன்று நமது நாட்டுப் பெண்மக்களுக்கு விடுதலையளிக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தன. அவைகளில் “விதவைகளுக்கு சொத்துரிமை” அளிக்கும் மசோதா ஒன்று. இம்மசோதா விவாதத்திற்கு வந்த காலத்தில், வைதீகர்கள் இதைப் பற்றி கூறிய அபிப்பிராயத்தையும் சென்றவாரம் எடுத்துக் காட்டி கண்டித்திருந்தோம். கடைசியாக இம்மசோதா தனிக் கமிட்டிக்கு அனுப்பப்படாமல் தோற்றது. இரண்டாவது “விவாக விடுதலை மசோதா” ஒன்று விவாதத்திற்கு வந்தது. கடைசியில் இம் மசோ தாவைப் பற்றிய விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் “விதவை களுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் போலவே தோற்றுப் போகும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு இந்தியப் பெண்மணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் மசோதாக்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். முதற்காரணம் வைதீகர்கள்; இரண்டாவது காரணம் அரசாங்கத்தார்கள்.

இவர்களில் வைதீகர்களைப் பற்றி நாம் குறை கூறுவதில் ஒன்றும் பயன் உண்டாகப் போவதில்லை. அவர்கள் எப்பொழுதுமே சீர்திருத்தங்க ளுக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்து தீருவார்கள். பொருள் சம்பாதிப் பதிலும், பட்டம், பதவி பெறுவதிலும், சாஸ்திரம், மதம் முதலியவைகளைப் பார்க்காமல் எந்தக் காரியங்களையும் செய்யப் பின்வாங்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு உண்டாகும் நன்மைகளை மாத்திரம் தடுக்க, முன் வராமல் இருக்க மாட்டார்கள். பிறருடைய சுதந்திரத் திற்கும், சமவுரிமைக்கும் தடை செய்வதற்காக மதத்தையும், சாஸ்திரங் களையும் கொண்டு வந்து நடுவில் போட்டு குழப்பம் பண்ணுவார்கள். இவ்வாறே தான் எந்தச் சீர்திருத்தங்களுக்கு முயற்சி செய்கின்ற காலங் களிலும் வைதீகர்கள் செய்து கொண்டு வருகிறார்கள். ஆகவே அவர்க ளுடைய நோக்கம் சுயநலத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆகையால் சீர்திருத்தம் புரிய விரும்புகிறவர்கள் வைதீகர்களுடைய அபிப்பிராயங்களை யும், கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய காரியத்தை நிறைவேற்றுவதில் நோக்கமுடையவராயிருந்தால் தான் சீர்திருத்தம் பண்ண முடியும்.

அடுத்தபடியாக அரசாங்கத்தாரும் மசோதாக்களுக்கு ஆதரவளிக் காமல் எதிர்த்தார்கள். ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்தி அவர்களுக்குச் சுதந்திரத் தன்மையும், சமத்துவத் தன்மையும் உண்டாகும்படி செய்வதற்கு அரசாங்கமே கடமைப் பட்டதாகும். அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் நாட்டில் எந்த விதமான சீர்திருத்தங்களையும் செய்ய முடியாது. ஒரு துருக்கி தேசத்தை எடுத்துக் கொண்டால் அந்த நாட்டில் இன்று நடைபெற்று வரும் சமுக சீர்திருத்தங்களெல்லாம் அரசாங்கத்தாராலேயே செய்யப்பட்டு வருகின்றன. இது போலவே ருஷியா, ஸ்பெயின் முதலிய நாடுகளிலும் நடை பெறுகின்றன. மற்றய இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்சு, இட்டாலி முதலிய எல்லா தேசங்களிலும் அரசாங்கத்தாராலேயே சமூகச் சீர்திருத்தச் சட்டங்கள் செய்யப்பட்டன என்பது அறிந்ததாகும். ஆனால் நமது நாட்டு அரசாங்கமோ “நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டு வைதீர்களுக்குச் சாதகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசாங்கம் இவ்வாறு வைதீகர்கள் கூச்சலைக் கண்டு அஞ்சு வதற்குக் காரணம், அவர்களைத் திருப்தி செய்துவிட்டால் அரசியல் கிளர்ச்சி அதிகமாக நடைபெறாது என்று நினைத்திருக்கலாம். உண்மையில் அரசாங் கம் இவ்வாறு நினைத்திருக்குமாயின், அது மிகவும் தவறானதே யாகும். இதனால் அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் ராஜ விசுவாசிகளாக மாறிவிடப் போவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அந்தக் கிளர்ச்சியைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்துவிட்டு வெள்ளைக்காரர்கள் நமது நாட்டைவிட்டுப் போய் விட்டாலும், அப்பொழுதும் அரசாங்கத்தாரை எதிர்த்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆகையினால் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு வேறு ஒன்றைச் செய்வது ஒழுங்காகாது என்று சொல்லுகிறோம்.

அடுத்தபடியாக நமது நாட்டு அரசியல் வாதிகள் சீர்திருத்த வியஷங் களில் எந்தவிதமான அபிப்பிராயமுடையவர்களாயிருக் கின்றார்கள் என்று பார்த்தால், அவர்களும் வைதீகர்களின் “வக்காலத்து”க் காரர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள் என்பது விளங்கும். சீர்திருத்த வாதிகளை ஏமாற்ற வாய்ப் பேச்சுக்காக மாத்திரம் சுயராஜ்யம் பெற்ற பின், எல்லா சீர்திருத்தங் களையும் செய்து கொள்ளலாம் என்று மாத்திரம் பேசுகின்றார்களே ஒழிய சாதாரணமாகச் சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரசாரங்கள் கூடச் செய்வதில்லை. இவர்கள் கேட்கும் சுயராஜ்யமோ ‘மத நடுநிலைமை’ வகிக்கக் கூடிய சுயராஜ்யமாக இருக்கிறது. இது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மதத்திற்கும், மத நூல்களுக்கும், நாகரீகங்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய சுயராஜ்யமாக இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள். தற்போதுள்ள வெள்ளைக்காரர் அரசாங்கத்திலாவது ஜனப் பிரதிநிதிகளாகச் செல்லும் ‘மெஜாரிட்டி’யான சட்டசபை அங்கத்தினர்கள் சீர்திருத்த நோக்க முடைய வர்களாயிருந்தால் எந்தச் சீர்திருத்தச் சட்டங்களையும் நிறைவேற்றக் கூடிய சௌகரியம் இருக்கிறது. ஆனால் அந்த அரசியல் வாதிகள் கேட்கும் சுயராஜியத்தில் மதக்கொள்கைக்கு விரோதமான எந்த சீர்திருத்த மசோதாக் களையும் சட்ட சபையில் கொண்டுவரவே இடமில்லையே. ஆகையால் அரசியல் கிளர்ச்சிக் காரர்களையும் சமூக சீர்திருத்த விரோதிகளாகத்தான் நாம் தீர்மானமாகக் கருதுகின்றோம்.

இவ்வாறு வைதீகர்களும் அரசாங்கத்தாரும், அரசியல் வாதிகளும் சமூகச் சீர்திருத்தத்திற்கு விரோதிகளாயிருப்பதனால் சீர்திருத்தக்காரர்கள் யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. தம்மைத் தாமே நம்பி ஜன சமூகத்தின் பழய மனப்பான்மைகளை மாற்ற முயற்சிப்பதைத் தவிர தற்காலத்தில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. மக்களுடைய மனத்தைச் சமூக சீர்திருத்தத்தில் மாற்றினால் சட்டசபைக்குச் செல்லும் பிரதிநிதிகளும் சீர்திருத்த நோக்கமுடையவர்களாகவே இருக்கக் கூடும். அவர்களைக் கொண்டு எந்த விதமான சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே நமது அபிப்பிராயமாகும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.02.1932

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: