காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும்

எச்சரிக்கை

காங்கரசுக்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சி கரமானதுமான காரியங்களைப்பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

காங்கரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக் கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக்கூடாது என்பதுதான் காங்கரஸ்காரர்களின் சுயராஜ்யமாகவும், பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக்குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய் காங்கரஸ்காரர்களின் காலித்தனத்தை அவ்வப்போது நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுவுக்கும் வேண்டுகோள் செய்து கொண்டே வந்திருக்கிறோம். என்ன காரணத்தை முன்னிட்டோ இவ்விஷயத்தில் சர்க்கார் போதிய கவலை செலுத்தாமலே இருந்து வந்திருக்கிறது.

காலித்தனத்துக்கு காங்கரஸ் பத்திரிகைகள் ஆதரவு

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள்.

இவற்றை காங்கரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி காலிகளுக்கு உற்சாகமூட்டி மறுபடியும் மேற்கொண்டும் மற்ற இடங்களிலும் காலித்தனம் செய்ய தூண்டியே வந்திருக்கின்றன. இதன் பயனால் காங்கரஸ் காலிகளால் கூட்டங்களில் மிக்க இழிவானதும் கோபமூட்டத் தக்கதுமான வார்த்தைகளையும் வேண்டுமென்றே தூஷணையான விஷயங்களையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அள்ளி இறைப்பதும் கையில் கொடுப்பதும் தபாலில் அனுப்புவதுமான அயோக்கியத்தனங்கள் ஏற்பட்டு வேண்டுமென்றே மக்களை வம்புக்கு இழுப்பது போன்ற காரியங்கள் நடந்த வண்ணமாகவே இருந்து இருக்கின்றன. கூட்டங்களை எப்படியாவது கலைத்து விடுவதிலேயே காலிகள் கவலை வைத்து எவ்வளவு பொறுப்புடனும், பயத்துடனும் நடந்துகொள்ளும் கூட்டங்களிலும் காங்கரஸ் காலிகள் சிலர் கூடிக்கொண்டு ஜே போட்டு கலகம் செய்வதும் சிறுபிள்ளைகளை தூண்டிவிட்டு தொல்லை விளைவிப்பதுமான காரியம் செய்தே வந்திருக்கிறார்கள். இவ்வளவையும் பொறுமையுடன் சமாளித்து பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

சர். ரெட்டியார் பட்டபாடு

இவை ஒருபுறமிருக்க ஜஸ்டிஸ் கட்சி மந்திரிமார்கள் கூட்டத்தில் சில காங்கரஸ் தலைவர்கள் என்கிற காலிகள் நடந்து கொண்ட விதம் சொல்லத் தரமல்ல. உதாரணமாக தோழர் சர். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மதுரையில் பேசும்போது அவரை மதுரை காலிகள் பேச விடவில்லை. மறுநாள் þ காலிகளுக்கு புத்தி கற்பிக்கும்படியான ஏற்பாட்டுடன் வந்து கூட்டம் நடத்திய பிறகு பல காங்கரஸ் காலிகள் மறுநாள் தலைவர்களாகி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோழர் சர். ரெட்டியார் அவர்களையே ராஜபாளையத்தில் பொதுக் கூட்டத்தில் பேசவிடாமல் காலித்தனம் செய்தார்கள். மறுபடியும் தோழர் சர். ரெட்டியார் அவர்களையே திருச்சி ஜஸ்டிஸ் மகாநாட்டில் கொட்டகைக்குள் வந்து பேசவிடாமல் காங்கரஸ் காலிகள் குழப்பம் செய்தார்கள். மற்றும் திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு முதலிய இடங்களிலும் அவரை இதே மாதிரி செய்தார்கள்.

சர். ராஜன் அனுபவம்

மற்றும் சர். P.T. ராஜன் அவர்கள் மந்திரியாய் இருக்கும் போதே சேலம், கோயமுத்தூர் முதலிய இடங்களில் பொது கூட்டங்களில் அவரை பேச விடாமல் காங்கரஸ் காலிகள் குழப்பம் விளைவித்தார்கள். அது சமயம் போலீசைப்பற்றியும் கூட்டத்தில் நன்றாய் கண்டிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் ஜஸ்டிஸ் கட்சி தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் பிரதம மந்திரியாய் இருக்கும்போதே திருச்செங்கோடு முதலிய இடங்களில் அவர்கள் பேசும்போது பொதுக் கூட்டத்தில் காங்கரஸ் காலிகள் காலித்தனம் செய்து தொல்லை விளைவித்து இருக்கின்றார்கள். இவைகளில் ஒரு எழுத்துக்கூட உண்மைக்கு மாறானதல்ல என்பதற்குப் போலீஸ் இ.ஐ.ஈ. சிப்பந்திகளும் அவர்களது ரிக்கார்டுகளும் இன்றும் சாட்சியாக இருக்கின்றன.

பொப்பிலி, ராஜன் கவர்னரிடம் முறையீடு

இவ்வளவு மாத்திரமல்லாமல் கனம் பொப்பிலிராஜா அவர்களும் சர்.க.கூ. ராஜன் அவர்களும் இதைப்பற்றி கவர்னர் பிரபுவிடமும் போலீஸ் இலாக்காத் தலைவரிடமும் நேரில் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் சர்க்காரிடம் ரிக்கார்டு இருந்து வருகிறது.

மற்றும் சமீபகாலம் வரை சு.ம. கூட்டத்தில் செருப்பு, கல், சாணி, மண் முதலியவை எறியப்பட்டதாக காங்கரஸ் பத்திரிகைகளிலேயே பல சேதிகள் வெளிவந்திருக்கின்றன.

திருச்சி, சேலம் சம்பவங்கள்

இவை தவிர சேலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களை ஏதோ இரண்டொரு கேள்விகள் கேட்டதற்காக தோழர்கள் சித்தையன், நடேசன் முதலியவர்களை மேடைக்கு வஞ்சகமாய் அழைத்து நையப் புடைத்து விட்டார்கள். திருச்சியில் தோழர்கள் ஈ.வெ.ராவும் அ. பொன்னம்பலம் அவர்களும் பேசிய சமயம் கூட்டத்தில் காங்கரஸ் காலிகள் பெரும் கலகம் விளைவித்தபோது போலீசார் அதை அடக்கமுடியாமல் கூட்டத்தை கலைத்து விடும்படி யோசனை சொன்னார்கள். பிறகு தோழர் விஸ்வநாதம் அவர்கள் கூட்டத்தை கலைக்காமல் தைரியமாய் பலாத்காரத்துக்கும் துணிந்து நின்ற பிறகு கூட்டம் நடத்தப்பட்டது.

"தினமணி" குறும்பு

சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ.பொ. அவர்கள் பேசும்போதும் காங்கரஸ் காலிகள் கல் போட்டு கலவரம் செய்த போது தோழர் ஜெகதீசன் அவர்கள் சமாளித்து கூட்டத்தை நடத்திக் கொடுத்தார். இம்மாதிரி ஜஸ்டிஸ் சு.ம. கூட்டம் ஒவ்வொன்றிலும் காங்கரஸ் காலிகள் இப்படியே நடந்து வந்திருக்கிறார்கள். இதற்கு அனுகூலமாகவே "தினமணி" பத்திரிகையும் காலிகளுக்கு ஆக்கம் கொடுத்தே தூண்டிவிட்டுக் கொண்டு வந்திருக்கிறதை அவ்வப்போது எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம். உதாரணமாக, "தினமணி"யின் ஒரு தலையங்கத்தில் "இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேறாமல் பொதுஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று பச்சையாக தூண்டிவிட்டிருக்கிறது. மற்றொரு சமயம் பொது ஜனங்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் "பொதுஜனங்கள் சும்மா இருப்பார்களா? என்றெல்லாம் எழுதி கிளப்பிவிட்டு இருக்கிறது. இவைகளைப் பற்றியும் அவ்வப்போது "குடி அரசு" "விடுதலை" பத்திரிகைகள் கண்டித்து கலவரம் நடந்தால் கவர்னரும் இந்தப் பத்திரிக்கைகளும்தான் ஜவாப்தாரி ஆக வேண்டும் என்று எழுதியிருக்கின்றன. இப்படி இருக்க சமீபத்தில் திருச்சியிலும், சேலத்திலும் நடந்த காலித்தனங்களைப் பற்றி சற்று கவனிப்போம்.

திருச்சிக் காலித்தனம்

திருச்சியில் தமிழர் மகாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடனும், வாத்தியங்களுடனும், ஊர்கோலம் போகும்போது ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளை கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டுபோய் கொடுப்பதும் கோபமுண்டாகும்படி ஜே போடுவதுமான காரியங்களை செய்து கொண்டே வந்ததுமல்லாமல் கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? போலீசார் இந்த காலிகளை விரட்டி விரட்டி விட்டார்களே ஒழிய அவர்களை கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை . ஊர்கோலம் மகாநாட்டு மண்டபத்துக்கு வந்த பிறகு மகாநாட்டு கொட்டகைமீதும் கல் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

காங்கரஸ் கற்றுக் கொடுத்த பாடம்

கூட்டங்களில் கேள்விகள் கேட்பது, மற்றவர்கள் கூட்டங்களில் வந்து ஜே போடுவது, செருப்பு, கல் வீசுவது, கறுப்புக்கொடி பிடிப்பது முதலிய காரியங்கள் காந்தியாரும், காங்கரசும் கற்றுக் கொடுத்ததல்லாமல் வேறு யாரால் இக் காலித்தனங்கள் சமூக வாழ்வில் புகுத்தப்பட்டன என்று கேட்கின்றோம்.

"குடி அரசு" பத்திரிகையும், தோழர் ஈ.வெ.ராவும் பொதுக் கூட்டங்களில் குழப்பம் செய்வதும் காலித்தனம் நடப்பதும் பலாத்காரம் ஏற்படுவதும் ஆகிய காரியங்களை கண்டித்தும் புத்தி புகட்டியுமே வந்திருக்கிறார்கள்.

தேசீயப் பத்திரிகைகள் சூழ்ச்சி

இவைகள் ஒருபுறமிருக்க "மித்திரன்" "தினமணி" "இந்து" முதலிய பத்திரிகைகள் கூட்டங்களில் நடந்த காரியங்களை கட்டுப்பாடாக மறைத்தும் திரித்துக் கூறியும் வந்து பொதுஜனங்களுக்கு காலித்தனத்தில் உற்சாகமூட்டி வந்திருக்கும் சம்பவங்கள் அனேகமாகும். தோழர் சத்தியமூர்த்தியார் தொண்டர்களுக்கு காலித்தனத்தில் உற்சாகம் ஏற்படும்படியாக பல தடவை பேசிவந்திருக்கிறார். இந்நிலையில் காலித்தனங்களை அடக்குவதற்கு சர்க்கார் அது காங்கரஸ் சர்க்கார் அல்லாமல் அதாவது நீதியையும் சமாதானத்தையும் பாதுகாக்கும் தனி அதிகாரத்தை தங்களுக்கென்று ஒதுக்கி வைத்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதியாகிய கவர்னர் பிரபு தலையிட்டு தக்க முயற்சி எடுத்துக்கொண்டால் ஒழிய வேறு வழிகளில் சாத்தியமில்லை என்பதுதான் நமது அபிப்பிராயம். அப்படி இல்லாமல் நடப்பது நடக்கட்டும் என்று கவர்னர் பிரபு வேடிக்கை பார்த்து வருவாரானால் நிலைமை மிகமிக மோசமாகப் போய்விடும் என்றே பயப்படுகிறோம்.

ஆச்சாரியார் ஆணவம்

பெட்றோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பை வைத்துக் கொண்டு விளையாடுவதுபோல் முஸ்லீம் லீக் விஷயமாய் காங்கரஸ் காலிகள் நடந்து கொள்ளும் தன்மையும் காங்கரஸ் தலைவர்கள் நடந்து கொள்ளும் தன்மையும் இருந்து வருகிறது. மாகாண பிரதம மந்திரியார் தோழர் கனம். ஆச்சாரியார் அவர்கள் நடந்து கொள்ளும் மாதிரியும் முரட்டுத்தனமாகவே இருக்கிறது. அதாவது "நான் அப்படித்தான் செய்வேன், உனக்கு இஷ்ட மில்லையானால் அடுத்த தடவை ஓட்டுக் கொடுக்காதே" என்கிறார்.

அதிகாரிகளுக்கு மதிப்பில்லை

மிக்க சாதாரண மக்கள் மந்திரி ஆக நேரிட்டு விட்டால் சகல காரியங்களிலும் தலையிட்டு அதிகாரங்களை உபயோகிக்கும் முறை சிகரெட், பீடி கடைகள் வியாபாரம் போல் ஆகிவிட்டதால் பொறுப்பு வாய்ந்த சர்க்கார் அதிகாரிகளிடம் ஜனங்களுக்கு உள்ள மதிப்பு குறைந்து வருவதல்லாமல் போலீசுக்கும் ஜில்லா மேஜிஸ்திரேட்டுகளுக்கும் சுத்த சுத்தமாய் மொத்த மதிப்பும் குறைந்துவிட்டது. ஒரு பரம காலியைக் கண்டாலும் போலீசு நடுங்குகிறது. ஜில்லா மாஜிஸ்திரேட்டுகள் நாணயம், கண்ணியம் ஆகியவைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு காலிகளுக்கு நல்ல பிள்ளைகளாக முயற்சிக்கிறார்கள். நாட்டில் சாதுவாய் கண்ணியமாய் இருக்க வேண்டும் என்று கருதுகிற மக்களுக்கு இடமே இல்லாமல் போகும்படியாக இருந்துவருகிறது. ஒரு சிறு விஷயங்களுக்குக் கூட போலீசும் மேஜிஸ்திரேட்டுக்களும் நீதிபதிகளும் மந்திரிகள் செல்வாக்குக்கு மாத்திரமல்லாமல் "மந்திரி கட்சி" காலிகள் செல்வாக்குக்கும் பயப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் சமாதானத்தையும் நீதியையும் மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அரசாங்கம் என்பது நீதியைப் பார்க்கிலும் மதிப்பையும் கவுரவத்தையும் அதிகமாய் கொண்டதாகும்.

காங்கரஸ் மந்திரிசபை யோக்கியதை

பொதுவாக காங்கரஸ் ராஜ்யத்தில் நிர்வாகத்துக்கும் நீதிக்கும் ராஜரீகத்துக்கும் மதிப்பும், கவுரமும் அடியோடு போய்விட்டது. N 75ரூ. சம்பளத்துக்கு கைதூக்கும் சட்டசபை மெம்பர்களுக்கு எங்காவது மதிப்பு இருக்க முடியுமா என்பதும், இப்படிப்பட்ட மாதக் கூலி மெம்பர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு இருக்கும் மந்திரியை, ஜனநாயக மந்திரி யென்றோ, பொதுஜன பிரதிநிதி என்றோ, மதிக்கத்தக்கது என்றோ யாராவது மதிக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். இன்று நமது சென்னை மந்திரிகளின் தனிப்பட்ட யோக்கியதைகள், ஒழுக்கங்கள் சென்னை மூர்மார்க்கெட்டில் சிரிப்பாய் சிரிக்கின்றது ஒருபுறம் இருக்க சட்டசபை மெம்பர்கள், காங்கரஸ் தலைவர்கள், பத்திரிகைகள் ஆகியவர்களின் யோக்கியதையும், மிருகப் பிராய காலத்தையும், காட்டு மிராண்டி காலத்தையும் காட்சி அளிப்பதாய் இருக்கிறது. இந்த நிலையில் இவர்களது ராஜரீகத்தின் யோக்கியதையும் இந்தப்படி இருக்குமானால் இந்தநாடு கூடிய சீக்கிரத்தில் கலகக்காரர்கள் கையில் சிக்கி வலுத்தவர்களின் தன்னரசு நாடாக ஆகிவிடுவதில் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

காங்கரஸ் சர்க்கார் சூழ்ச்சிகள்

தவிர ஏற்கனவே மக்கள் உள்ளத்தில் இந்த மந்திரிசபையில் ஒருவித ஆத்திரம் பொங்கிக் கொண்டு இருக்கும்போது அதாவது ஒரு ஜில்லாவில் மதுவிலக்கு என்று சாக்கு காட்டிக் கொண்டு மாகாணம் பூராவும் உள்ள கல்வி வசதியை ஒழிக்கவும்,

பொது பாஷை என்று சாக்கு வைத்துக் கொண்டு மக்களின் சுதந்திர எழுச்சியையும், சுயமரியாதை உணர்ச்சியையும் அழிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை செய்வது என்று சொல்லிக் கொண்டு பணக்காரர்களுக்கு உதவியும் ஏழைகள் வாயில் மண்ணு அடிக்கவும்,

உத்தியோக சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு ஒரு வகுப்புக்கு ஆக்கமளித்து மற்ற வகுப்புகளை அடக்கவும்,

சம்பளம் குறைப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி சேர்க்க ஓட்டு சேர்க்க உத்தியோகங்களை பெருக்கி மக்களை தப்பான வழியில் அடக்கி, ஒடுக்கி, நிரந்தர ஆதிக்கம் செலுத்த சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைச் செய்வதாயிருந்தால் எப்படித்தான் ஒரு ஆட்சிக்கு நாட்டில் மரியாதை இருக்கமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

கவர்னர் பிரபுவுக்கு எச்சரிக்கை

ஆகவே காங்கரசுக்காரர்கள் பதவி பெற்ற 4,5 மாதங்களுக்குள் நாடு குட்டிச் சுவரான நிலைக்கு வந்துவிட்டதோடு ராஜாங்கத்துக்கு அடியோடு மதிப்பும் கெட்டு காலிகள் ஆட்சியாக ஆவதற்குத் திரும்பி விட்டது என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஆகையால் மறுமுறையும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். என்னவென்றால்,

நாட்டில் நீதியும் சமாதானமும் குலைந்து வருகிறது. போலீசுக்கும் மேஜிஸ்திரேட்டுகளுக்கும் மதிப்பு குறைந்து வருகிறது.

காலிகள் நிலை உச்சம் பெறுகிறது. கவுரவமாக சுதந்தரமாக மக்கள் வாழ்வதற்குள்ள மார்க்கம் அடைபட்டு வருகிறது.

இனி சீக்கிரத்தில் வகுப்புக் கலகம், உள்நாட்டுக் கலகம் தோன்றும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

ஆகவே இதற்கு ஏதாவது பரிகாரம் தேடி சமாதானத்தையும் நல்ல ஆட்சியையும் விரும்பும் மக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டியது மிக்க அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதை உண்மையாக வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் உண்மை நிலையை மக்களின் உள்ளத்து உணர்ச்சியை நன்றாய் அறிந்தே மிக்க பொறுப்புடன் இதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஒரு யோசனை

கவர்னர் பிரபுவுக்கு நாட்டின் உண்மைநிலை தெரிவதற்கு இல்லை என்று நாம் கருதுவதாலேயே இதை தெரிவிக்கவேண்டியதாகிறது. ஏனெனில் பத்திரிக்கைகள் உண்மையை தெரிவிப்பதில்லை. கவர்னர் பிரபுவுக்கு யோசனை சொல்லும் அதிகாரிகள் நடுநிலமையில் இருக்க முடியவில்லை. சில சில்லறை சிப்பந்திகள் வகுப்பு உணர்ச்சியோடு விஷயங்களை பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். மேன்மை தங்கிய கவர்னர் பிரபு யார் யாரை பெரிய மனிதர்கள் யோக்கியர்கள் என்று கருதி இருக்கிறார்களோ யார் யாரை பொது நோக்குடையவர்கள், கட்சித் தலைவர்கள் என்று கருதி இருக்கிறார்களோ அவர்கள் 100க்கு 99 பேர்கள் சுயநலத்துக்கு எதுவும் செய்யத் துணியும் வீரர்களாவார்கள். ஆதலால் தகுந்த கண்ணியமும் நடுநிலை புத்தியும் உள்ள ஒரு வெள்ளைக்கார அதிகாரியை வேவுக்காரராகப் போட்டு உண்மை உணர்ந்தால் நாம் சொல்லுவதின் தன்மை விளங்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 02.01.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: