தமிழ்நாட்டில் இது சமயம் நல்ல ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு அதை சமாளிக்க சக்தி இல்லாமல் போய்விட்டது. நாம் எவ்வளவு சொல்லியும் மக்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இக்கதி ஏற்பட்டது. அலட்சியமாய் இருந்து விட்ட மக்கள் அதன் பயனை அனுபவிக்க வேண்டியதுதான். ஒரு பெரியார் நம்மை "துக்கம்" விசாரிக்க வந்தவர் "வைசிராய் கடன் நிவாரணச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று இருந்தேன். அளித்து விட்டாரே" என்று சொல்லி அது சம்மந்தமான துக்கம் விசாரித்தார். வைசிராய் பிரபு செய்ததில் ஒன்றும் தவறு இல்லை. நமது யோக்கியதைக்கு உண்டான பயனை நாம் அடைவதில் சங்கடப்படுவானேன் என்று வெறுப்போடு சமாதானம் கூறினோம் என்றாலும் தமிழ் மக்களின் கேவல நிலை இவ்வளவு மோசமாக இருந்ததை நாம் இதுவரை கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடன் நிவாரண சட்டம் தமிழ் மக்களுக்கு செய்யப் போகும் கொடுமை இவ்வளவு அவ்வளவு என்று இப்போது யாருக்கும் புலப்படாது. பின்னால் அதன் பயனை அனுபவிக்கும் போது தான் தெரியப் போகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அச்சட்டம் விவசாய முன்னேற்றத்தை அடியோடு பாழ்படுத்துவதோடு சிறிய விவசாயிகளை கூட்டோடு அழித்துவிட்ட பெரிய மிராசுதார்களை - ஏன் நாளடைவில் ஒரு சில ஜமீன்தாரர்கள், காட்டுராஜாக்கள் என்பவர்களைத் தவிர மற்ற கிராம வாசிகளையெல்லாம் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஆதி திராவிடர்களைப் போல் பரம்பரை அடிமை குடும்பங்களாக ஆக்கப்படபோகின்றது. அப்போதுதான் நம் நாட்டில் இருந்து இன்னும் ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு கூலிகளாகப் போகப் போகிறார்கள். ஒன்று இரண்டு குடும்பம் சமாளித்துக் கொண்டு இங்கு இருக்க ஆசைப்பட்டால் அவையும் பிரவி அடிமைக் குடும்பங்களாகத்தான் இருக்க முடியும்.

இது ஒரு புரமிருக்க இச்சட்டத்தால் பூமியை பெருவாரியாக வாரிக்கட்டி அணைத்துக்கொள்ளும் பெரிய ஜமீன்தாரனாவது ஒழுங்காக வாழ முடியுமா என்றால் அவனும் திண்டாடி தெருவில் நின்று தன் செல்வம் முழுவதையும், உத்தியோகப் பார்ப்பானுக்கும், வக்கீல் பார்ப்பானுக்கும், வைத்தியப் பார்ப்பானுக்கும், புரோகிதப் பார்ப்பானுக்கும் மற்றும் மந்திரி பார்ப்பானுக்கும், மாமா பார்ப்பானுக்கும் அழுதுவிட்டு வருணாச்சிரபடிப் பிரகாரம் 4ம் படிக்கு இரங்கி விட வேண்டியதுதான் என்பதைத் தவிர வேறுநிலை ஏற்படப் போவதில்லை. சுமார் 200 வருஷகாலமாக முன்னேறி விடுதலை பெற்று வந்த நம் நாட்டு மனித சமூகம் மனு ஆட்சிக்குப் போக தள்ளப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்தக் கடன்காரனுக்கு இச்சட்டத்தால் கடன்பாகை ஒழிந்ததாக மனப்பால் குடிக்கிறோமோ அந்தக் கடன்காரனுக்கு ஒரு காசும் லாபம் ஏற்படப் போவதில்லை. கையில் ஒரு காசும் நிலைக்கப் போவதில்லை. ஒரு சிறு விவசாயியானவன் சற்று பெரிய விவசாயி அல்லது மிராசுதாரன் இடம் வாங்கியிருந்த கடன் இல்லை என்று ஆகப் போகிறது. ஆனால் இதனால் சிறு விவசாயிக்கு லாபம் என்ன? என்றால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறு விவசாயி கையில் காசு இருந்தால் முன்னமேயே கொடுத்துக் கடன் தீர்த்து இருப்பான். கையில் இல்லாததால் பாடுபட்டு கிடைக்கும் பலனில் ஒரு பங்கு தான் எடுத்துக் கொண்டு ஒரு பங்கு பூமிக்காரனுக்கோ, கடன் கொடுத்தவனுக்கோ கொடுத்துக் கொண்டு அப்படியே காலம் கழித்து வருவான். கடன் கொடுத்தவனும் பூமிக்காரனும் விளைந்ததில் கஷ்டக் கூட்டு மாதிரி ஒரு பங்கு விவசாயிக்குக் கொடுத்துவிட்டு தன் பூமி பொருமானத்துக்கு நூத்துக்கு 4 அணா, 6 அணா வட்டி கட்டும்படியோ அல்லது தான் கொடுத்த பணத்துக்கு 8 அணா, 12 அணா வட்டி கட்டும்படியோ எப்படியாவது வசூல் செய்து கொண்டு வருவான். இப்படிப்பட்ட இந்த லேவாதேவிக்காரனும், பூமி உடையவனும் மற்றொரு பெரிய லேவாதேவிக்காரனிடம் முன் வட்டி கொடுத்தோ, அல்லது மாதா மாதமோ மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ வட்டி கட்டிக் கொண்டு வந்தோ ஒரு அளவுக்கு வருஷம் 200, 300 ரூபாய் சம்பாதனை மீதக்காரனாகவோ அல்லது குடும்ப செலவு மாத்திரம் தாட்டிக் கொள்ளக் கூடியவனாகவோ வாழ்ந்து வருவான். இந்த சட்டமானது இவ்வளவு காரியத்தையும் தடைப்படுத்தி ஒரு 10 ரூபாய் கடன் வேண்டுமானால் 100 ரூபாய் பூமியையோ, 50 ரூபாய் மாட்டையோ விலை பேசினால் ஒழிய ரூபாய் கிடைக்காத மாதிரியும் ஒரு 100, அல்லது 200 ரூபாய் கடன் வேண்டியிருந்தால் 500 ரூபாய் 1000 ரூபாய் பூமியை விலைக் கிறையம் செய்தால் ஒழிய கிடைக்காத மாதிரியும் செய்து விட்டது.

கடன் அல்லது லேவாதேவி என்று சொல்லுவது ஒரு பாபமான காரியமோ, அல்லது மோசடியான காரியமோ என்று சொல்லி விட முடியாது. பொது உடமை தேசமாய் இருந்து மக்களுக்கு சுதந்திரமாய் தொழில் , வியாபாரம், விவசாயம் செய்து சம்பாதிக்க இடம் இல்லாத நிலையில் சவுகரியம் சட்டம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நாட்டில் கடனும், லேவாதேவியும் குற்றமான காரியம் என்று சொல்லலாம். நம் நாட்டையும் அப்படி ஆக்குவதானால் இரு கையேந்தி வரவேற்கலாம். ஆனால் நம் நாடு அப்படி இல்லை.

விவசாயி ஆனாலும் சரி, பெருமித பூமி உடையவரானாலும் சரி, சதா சர்வகாலம் வெருங்கையனாய் இருந்து அன்னியர் கை பார்த்தே பணம் பெற்று விளைவு வந்தபின் கொடுப்பதும், விளையாவிட்டால் கடன் சொல்லி புதிய கடன் வாங்குவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பணம் இல்லாமல் தடுத்து விட்டால் விவசாயத் தொழில் முறை எப்படி நடக்கும் என்று கேழ்க்கிறோம்.

இந்த சட்டம் செய்ததைப் பற்றி விவரமரியாதவர்களும், பார்ப்பனர்களின் கூலிகளும், அடிமைகளும் புகழ்ந்து கூறி பாமர மக்களை ஏமாற்றலாம். ஆனால் இதன் பலன் என்ன என்றால் பார்ப்பனீயத்திற்கு ஆதரவளிப்பதும், வருணாச்சிரம வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் காணமுடியாது என்பதே நமதபிப்பிராயம். உண்மையில் சிறு விவசாயியும், பெரு விவசாயியும் அழிந்து போவார்கள். இவர்களுக்கு விவசாயத்துக்கு பணம் கிடைக்கும்படி சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யப்படவில்லை. அவசர காரியத்துக்கும் திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்கும் பணம் கிடைக்க சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யவில்லை. இதனால் கிரமமான முறையில்லாமல் நிமித்திய மாத்திரம் என்றும் அவசரத்துக்கு என்றும் பெரும் நிபந்தனைகளை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு கிரயம் எழுதிக் கொடுக்கவும், அதிக தொகைக்கு எழுதிக் கொடுக்கவுமான காரியங்கள் தாராளமாக நடந்து வர இடமேற்படும். இதன் முடிவு என்ன ஆகும் என்று பார்ப்போமானால் பெரும்பாகமான வரவு செலவுகள் கோர்ட்டுக்குப் போய் வக்கீல்கள் பிழைக்கவே கொடுத்தவன், வாங்கினவன் ஆகிய இருவர் சொத்தும் பாழாய்விடப் போகிறது.

இவை தவிர இச் சட்டத்தால் இன்னும் பல தொல்லைகளும் விளையப் போகின்றன. இவற்றைப் பற்றி தமிழ் மக்கள் ஆத்திரப் பட்டார்களே ஒழிய சரியாக முயற்சி ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. தக்க எதிர்ப்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தால் வைசிராய் பிரபு இதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டார் என்றுதான் கருதுகிறோம்.

இப்படிப்பட்ட விஷயங்களில் பார்ப்பனர்களுக்கும், நமக்கும் ஒரு பெரிய வித்தியாசமிருப்பதை நாம் மறைப்பதில் பயனில்லை. விவசாரம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு முதலிய ஒரு சிறு சட்டமானாலும் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் வரும்படிக்கும், சோம்பேரிப் பிழைப்புக்கும் கெடுதி தரத்தக்கது என்று உணர்ந்தால் உடனே அவர்கள் அத்தனை பேரும் கூப்பாடு போடுவார்கள். சகல பெரிய மனிதர் என்பவர்களும் அபிப்பிராயம் கூறி வைசிராயையும், இந்தியா மந்திரியையும், பிரிட்டிஷ் பிரதம மந்திரியையும் தொல்லை படும்படி செய்வார்கள். நேரில் போய் பார்த்து விட்டும் வருவார்கள். உதாரணமாக தேவஸ்த்தான சீர்திருத்த சட்டம், இனாம் பூமி சட்டம் முதலியவைகளில் எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? எத்தனை தடவை திரும்பி வரும்படி செய்தார்கள்? அப்படியெல்லாம் இருக்க மனித சமூகத்தின் ஒரு பெரும் சமூகமாகிய விவசாயிகளை அடியோடு அழித்து அடிமைகளாக்கும் இக்கொடிய சட்டம் வெகு சுலபமாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால் தமிழ் மக்கள் கேவல நிலைக்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

பொருளாதாரத் துரையில் நம்மவர்களுக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட கொடுமை ஒருபுரமிருக்க இனி கல்வித் துரையிலும் அறிவுத் துரையிலும் நமக்கு ஹிந்தியாலும், காந்தி கல்வித் திட்டத்தாலும் வரப்போகும் கேட்டிற்கு அளவு கூற முடியாது. இவற்றை பொதுமக்கள் கூட்டோடு எதிர்க்கிறார்கள் என்றாலும் எதிர்ப்பை சரியானபடி நடத்தி கிளர்ச்சி செய்ய நாதி இல்லாமல் போய்விட்டது. திருடனைத் தடம் கேழ்ப்பது போல் நமது பிரதிநிதிகளாகச் சட்டசபையில் உள்ள தலைவர்கள் எதிரிகளின் ஒற்றர்களாக அமைந்து விட்டார்கள். நம்மைக் காட்டிக் கொடுப்பதற்கே அவர்கள் சட்ட சபையில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களது ஆதரவுகளை நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பெற்றுவிட்டதாலேயே எதிரிகளின் காரியங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருப்பதாக சர்க்காரும் கருதி வருவதாக தெரிகிறது. வெளியில் உள்ள கட்சித் தலைவர்களும் இது விஷயத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாகவோ, எடுத்துக் கொள்வதாகவோ தெரியவில்லை.

ஆதலால் கடன் நிவாரணச் சட்டம் ஒழியவும், ஹிந்தி முயற்சி அழியவும், காந்தி கல்வித் திட்டம் கைவிடும்படி செய்யவும் தமிழ் மக்கள் பெரியதொரு முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமுமான காரியமாய் இருந்து வருகிறது. பொருளைப் பற்றியாவது எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் சரியான பொறுப்பும், நம்பிக்கையும் உள்ள தலைவர்கள் யார் என்பது கடினமான பிரச்சினையாக இருந்து வருகிறது. யார் எப்படி இருந்த போதிலும் இந்த விஷயங்களையும் மற்றும் சில அரசியல் விஷயங்களையும் பற்றி ஆலோசித்து முடிவு செய்ய ஏப்ரல் மாதத்தில் ஒரு சர்வ கட்சி தமிழர்கள் மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டியது அவசியம் என்பதையும் அதிலிருந்து தக்கதொரு கிளர்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் மிக்க கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 20.03.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: