தோழர்களே! அதிக நேரமாய் விட்டது. மணி இப்போது 9.30. நான் 10.30 மணி வண்டிக்குப் போக வேண்டும். அபிராமத்தில் நாளை இது போலவே பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். ஆதலால் நான் அதிகம் பேச நேரமில்லை. நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் உடல் அசெளகரியத்தில் இங்கு வந்தும் பகல் 12 மணியிலிருந்து கூட்டத்தை 5 மணிக்கே கூட்ட வேண்டுமென்று சொல்லியும் ஒருவரும் லட்சியம் செய்யாமல் ஏதேதோ பாட்டு, பிரார்த்தனை, வரவேற்பு, தொழுகை என்னும் பேரால் 7லீ மணி ஆக்கி விட்டீர்கள். பிறகு இருவர் பேச மணி 9-30 ஆகிவிட்டது. நாங்கள் இங்கு வருவதின் கருத்து என்ன? ஏதாவது பேசிவிட்டு போக வேண்டுமென்பதேயல்லாமல் விளம்பரம் செய்து எங்கள் முகங்களைக் காட்டிவிட்டுப் போவதற்காக அல்ல. அநேகமாய் நம்மவர்கள் பொதுக் கூட்டங்களை இப்படித்தான் செய்து விடுகிறார்கள். இம்மாதிரி கூட்டத்தை ஒரு பண்டிகை மாதிரி ஆடம்பரம் செய்து விடுகிறார்களே தவிர எங்களைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்வதில்லை. நம் நிலை காங்கரஸ்காரர்கள் பொய்யும் பித்தலாட்டமும் பேசி வெளி மாகாணக்காரர்களைக் கூட்டி வந்து பொறுப்பற்ற முறையில் ஏமாற்றுவதல்ல. தகுந்த ஆதாரங்களுடன் எதிரிகளுடன் போராடுவதேயாகும்.

ஆதலால் எனது அதிருப்தியைக் காட்டிக் கொள்வதற்காகவே நான் இன்று பேசுவதில்லை என்று முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் 5 மணி முதல் இந்த 9.30 மணி வரை பல மக்கள் நான் ஏதோ பேசுவேன் என்று எதிர்பார்த்திருப்பதாக சில தோழர்கள் சொல்லுவதாலும் சில காலிகள் தோழர் கலீபுல்லா சாயபு பேசும்போது இடையில் குறுக்கிட்டு கேள்வியும் மறுப்பும் செய்ததாலும் நான் 10, 15 நிமிஷமாவது ஏதோ இரண்டு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.

அதுவும் இப்போது எங்கும் பேச்சாயிருக்கும் முனிசிபல் தேர்தலைப் பற்றி பேசுகிறேன்.

காங்கரசுக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை?

தோழர்களே! சமீபத்தில் தமிழ் நாட்டில் எங்கும் முனிசிபல் தேர்தல் நடக்கப் போகிறது. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போடுகிறார்களாம். காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை இருக்கிறது. அங்கு முனிசிபாலிட்டியில் இந்த வீரர்கள் எந்தச் சட்டத்தை உடைக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த வெள்ளையனை அன்னியனை விரட்டி அடிக்கப் போகிறார்கள்? அங்கு இவர்களுக்கு காங்கரஸ் திட்டத்தில் ஒரு வேலையும் குறிப்பிட்டில்லை. வெறும் காலிகளுக்கு ஒரு வயிற்றுப் பிழைப்பை உண்டாக்கிக் கொள்ளவும், அயோக்கியர்கள் பொறுக்கித் தின்னவுமே காங்கரசின் பேரால் சிலர் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். சிலர் உண்மையாகவே போகிறவர்களாக இருக்கலாம். ஆனால் காங்கரசுக்காரர்கள் இதுவரை கைப்பற்றிய சகல ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளையும் பாருங்கள். எது நாணையமாய் யோக்கியமாய் நடக்கின்றது.

சென்னை கார்ப்பரேஷன்

சென்னை கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு கவர்னர் இருக்கிறார். மந்திரிகள் இருக்கிறார்கள். இ.ஐ.ஈ. புலிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் அங்கேயே காங்கிரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினதாக காங்கரஸ் பத்திரிகைகளே "தினமணி" உட்பட கூறுகின்றன. காங்கரஸ் கவுன்சிலர்கள் சிலர் பெண் உபாத்தியாயர்களிடமும் நர்சுகளிடமும் எவ்வளவோ அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாக சென்னையில் பிரசுரங்கள் பறந்தன. அங்கு கார்ப்பரேஷன் அதிகாரங்களை சர்க்காருக்கு விட்டுக் கொடுத்ததாகவும் முனிசிபாலிட்டிகளுக்கே மானக்கேட்டை உண்டுபண்ணி விட்டதாகவும் குறைகள் கூறப்பட்டன. முனிசிபல் கண்டராக்டுகளை கவுன்சிலர்களே எடுத்ததாக புள்ளி விவரங்கள் காட்டப்பட்டன. சில கவுன்சிலர்கள் இன்னமும் அந்த வேலையால் பிழைக்கிறார்கள் என்று காங்கரஸ் கவுன்சிலர்களே கூறினார்கள். சில கவுன்சிலர்கள் மீது லஞ்சம் முதலிய குற்றத்திற்கு காங்கரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்து தண்டித்து இருக்கின்றன. அப்படித் தண்டிக்கப்பட்டவர்களும் இன்னமும் காங்கரஸ் கவுன்சிலராக இருக்கிறார்கள். மறுபடியும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அங்கு வகுப்பு வாதம் தாண்டவமாடுவதாகவும் மெஜாரிட்டிகளாக உள்ள சிலருடைய அபிப்பிராயம். பார்ப்பனர் அல்லாதார் என்பதற்கு ஆக புறக்கணிக்கப்படுவதாகவும், பார்ப்பன ஆதிக்கமும், பார்ப்பன சலுகையும் தலைவிரித்தாடுவதாகவும் ஆதலால், பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் அபிப்பிராயம் புறக்கணிக்கப்படுவதாகவும் கூக்குரல்கள் இடப்படுகின்றன.

முனிசிபாலிட்டிகளைக் கைப்பற்றுவதற்கு காங்கரசுக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லுவதற்கு உங்களுக்கு இனி என்ன ஆதாரம் வேண்டும்.

கல்வி அதிகாரி

கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்குத் தோழர் சிவசைலம்பிள்ளை பி.எ.எல்.டி., டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல் காங்கரஸ் மெம்பர்களால் அதிக மெஜாரிட்டியால் 3 தரம் தெரிந்தெடுக்கப்பட்டார். கடைசியில் என்ன ஆயிற்று? அது செல்லுபடியற்றதாக்கப்பட்டுவிட்டது. காரணம் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குகிறவர்களாம். ஆனால் இதில் லஞ்சம் வாங்கவில்லையாம். சிவசைலம் பிள்ளையும் லஞ்சம் கொடுக்கவில்லையாம். அவர் மிகுதியும் தகுதியுடையவர்தானாம். இவற்றைத் "தினமணி"யும், "ஆனந்தவிகடனு"மே எழுதியிருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு பார்ப்பனர்தான் அந்த வேலைக்கு நியமிக்கப்பட்டுவிட்டார். அங்கு இனியும் மற்ற பெரிய வேலைகளுக்கும் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்படவும் போகிறார்கள். சின்ன வேலைகளுக்கும் அதாவது கார்ப்பரேஷன் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயர்கள் வேலைக்கும் 100க்கு 100 பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இதுதான் முனிசிபாலிட்டிகளில் காங்கரஸ் செய்யப்போகும் வேலைத் திட்டம் என்பதோடு பெறப்போகும் சுயராஜ்யமா என்று கேட்கிறேன்.

திருச்சி யோக்கியதை

இனி அடுத்தாப் போல் திருச்சி முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் காங்கரஸ் மெஜாரிட்டியாய் வந்தது. ஆனால் அங்கு காங்கரஸ் பெற்ற சுயராஜ்யம் என்ன? ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் (தோழர் தேவர்) சேர்மனாய் வரக்கூடாது என்று பார்ப்பனர்களால் கட்டுப்பாடாய் சூழ்ச்சி செய்து யோக்கியதைக்கும், நாணையத்துக்கும், காங்கிரஸ் கட்டுப்பாட்டுக்கும் விரோதமாய் காங்கரஸ் அல்லாத - காங்கரசுக்கு விரோதமாய் போட்டி போட்ட ஒருவருக்கு காங்கரஸ் பார்ப்பனர்கள் ஓட்டுக் கொடுத்து தோழர் தேவரை கவிழ்த்ததல்லாமல் வேறு நன்மை என்ன செய்யப்பட்டது? இந்த மாதிரியாக நடந்த ஒரு பார்ப்பன காங்கரஸ் மெம்பரை காங்கரஸ் கடைசியாக என்ன செய்தது? காங்கரசால் குற்றம் சாட்டப்பட்ட அப்படிப்பட்ட "துரோகிக்கு" காங்கரஸ் மந்திரி வேலை கொடுத்ததே அல்லாமல் மற்றபடி காங்கரஸ் ஒழுக்கமாக நடந்து கொண்டதா? என்று பாருங்கள். அந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட துரோகமான காரியம் ஒரு பார்ப்பனரல்லாதார் செய்திருந்தால் அவன் கதி என்ன ஆயிருக்கும்? காங்கரசுக்கு உழைத்து திருச்சியில் ஜஸ்டிஸ் கட்சியை "புதைத்த" தோழர் தேவர் இன்று எங்கே? அவர் விலாசம் உங்களுக்கு தெரியுமா? ஜில்லா போர்டிலாவது அவரை தலையெடுக்க விட்டார்களா? ஆளையே ஒழித்து விட்டார்களே!

காங்கரஸ் வகுப்புவாதம்

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்று சொன்ன யோக்கியர்களை, இன்று எந்த ஸ்தல ஸ்தாபனத்தில் வகுப்பு வாதம் இல்லை என்று கேட்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா வகுப்பிலும் உத்தியோக நியமன முறையை ஒழித்துவிட்டு காலி ஏற்படும் ஸ்தானங்களுக்கெல்லாம் ஒரு வகுப்பாரை அல்லது பார்ப்பனர்களைப் போடவே சூழ்ச்சியும், செளகரியமும் செய்யப்பட்டு வருகிறது.

தேசீயக்கொடி பறக்கவிடுதல்

காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற சொல்லப்பட்ட காரணங்களில் முனிசிபாலிட்டிகளின் மீது தேசீயக்கொடி பறக்க விடுவதாய் ஜம்பம் சொன்னது ஒன்று. இன்று தேசீயக் கொடி எங்கு பறக்கிறது? முதலாவது தேசீயக் கொடி என்று ஒன்று இருக்கிறதா? கவர்னர் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடி என்று கூறக்கூடாது என்று சொன்னவுடன் சரணாகதி மந்திரிகள் தலைவணங்கி ஒப்புக்கொண்டு தங்களுக்கு தேசீயக் கொடி இல்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். மூவர்ணக் கொடி - காங்கரஸ் கட்சியின் சின்னமேயொழிய அது ஒரு தேசத்தையோ, தேசீயத்தையோ குறிப்பதாகாதென்று காங்கரஸ் மந்திரிகள் ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டு விட்டார்கள். அந்தக் கொடியையும் அரசியல் விசேஷக் காலங்களில் கட்டக்கூடாதென்று கவர்னர் சொன்னதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். மற்றும் சர்க்காருக்கு தேசீயக் கொடி கட்ட வேண்டிய அவசியம் வரும்போது யூனியன் ஜாக் கொடிதான் கட்ட வேண்டுமென்றும் காங்கரஸ் கொடியை அவிழ்த்துவிட வேண்டுமென்றும் சர்க்கார் தேசீயக் கொடி பறக்கும்போது எந்த சமயத்திலும் காங்கரஸ் கொடி பறக்கக் கூடாது என்று சொன்னதையும் காங்கரஸ் தலைவணங்கி ஒப்புக்கொண்டு சர்க்கார் பேரால் காங்கரசே அறிக்கை வெளியிட்டு விட்டு சிறிதும் மானம், வெட்கம், ஒழுக்கம், நாணையம் இல்லாமல் பாமர மக்களிடத்தில் காங்கரஸ்காரர்கள் மூவர்ணக் கொடியை தேசீயக்கொடி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

வரி குறைப்பு எங்கே? சுங்கம் ஏற்படுத்துவதா?

மற்றபடி காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களில் எந்த ஐட்டத்தில் வரி குறைத்தது என்று கேட்கின்றேன். புது வரிகள் போட யோசனை கூறுகிறதுடன் சர்க்கார் கொடுத்து வந்த கிராண்டு (உதவித் தொகைகளை) நிறுத்திக் கொள்ள யோசனை செய்து வருகிறது. பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரிகளும் செத்துக் கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் டோல்கேட்டுகள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கண்ட்ராக்ட் ராஜ்யம் சேலம் முனிசிபாலிட்டி

மற்றும் ஸ்தல ஸ்தாபன கண்ட்ராக்ட் விஷயத்திலும் காங்கரஸ் காரர்களும், காங்கரஸ் மந்திரிகளும் ஒழுக்கத்தையும் நாணையத்தையும் லட்சியம் செய்யாமல் முனிசிபல் பணங்கள் நாசமாக்கப்படுகின்றன.

உதாரணமாக சேலம் முனிசிபாலிட்டி வாட்டர் வர்க்ஸ் கண்ட்ராக்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் காங்கரஸ் மந்திரிகள் நடந்து கொண்ட ஒழுக்கம் கெட்ட - முறைகெட்ட நடத்தை போல் வெள்ளைக்கார மந்திரிகளாவது, ஜஸ்டிஸ் மந்திரிகளாவது, இடைக்கால மந்திரிகளாவது நடந்து கொண்டதாக ஒரு சிறு ஆதாரம் காட்ட முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.

ஸ்தல ஸ்தாபனங்களுக்கு காங்கரஸ் மந்திரி சபை கொடுத்த சுதந்திரம் என்ன என்று கேட்கின்றேன். ஸ்தல ஸ்தாபன அதிகாரத்தில் மந்திரிகள் குறுக்கிட்டு அவர்கள் அதிகாரத்தைப் பிடுங்கி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். முறையற்ற - லாபமற்ற நன்மையற்ற தனங்களோடு நிபுணர்கள் இலாகாத் தலைவர்கள் அபிப்பிராயங்களுக்கு விரோதமாக மந்திரிகள் டெண்டர்களைப் புதிதாகக் கற்பித்துத் திருத்தச் செய்து அதுவும் ஒன்றுக்கு ஒன்றே முக்கால் ஆக விலை சேர்த்து திருத்தி எழுதிக் கொடுத்த டெண்டர்காரர்களுக்கு - முனிசிபல் தீர்மானங்களுக்கு விரோதமாய் மந்திரிகள் கண்ட்ராக்டு கொடுக்கச் செய்தார்கள்.

இதற்குக் காரணம் ஒரு மந்திரியின் மருமகன் அந்த முறையற்ற டெண்டர்காரர் கம்பெனியில் அக்கரை உள்ளவர் என்றும் இதனால் அவருக்கு ஏராளமான பலன் கிடைக்கலாம் என்றும் பொது ஜனங்களால் கருதப்படும் பேசப்படும் அபிப்பிராயத்துக்கு எந்த மந்திரியும் நாளது வரை சமாதானம் சொல்லாமலும் சேலம் கவுன்சிலர்களும், சேர்மெனும் சேர்ந்து செய்த தீர்மானத்துக்கு விரோதமாய் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரை அதுவும் கிரிமினல் அதிகாரம் உள்ள உத்தியோகஸ்தரை சேர்மெனாக நியமித்து பலாத்காரத்தில் தீர்மானம் செய்யச் செய்து அதுவும் சர்க்காரின் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட காரியத்துக்கு ஆக பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கவுன்சிலர்களும், சேர்மெனும் வைஸ்சேர்மெனும் ராஜிநாமா கொடுத்த பிறகு இம்மாதிரி பார்ப்பன பலாத்காரத் தீர்மானம் சர்க்கார் அதிகாரி முயற்சியில் செய்யப்பட்டது என்றால் இது ஜனநாயகமா? காட்டுமிராண்டி, காட்டுராஜா ராஜ்யமா அல்லது கண்ட்ராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் ராஜ்யமா? என்று யோசித்துப் பாருங்கள்.

அவசரமென்ன?

மறுபடியும் தேர்தலும் புதிய கவுன்சிலும் ஏற்பட ஒரு மாதம் இருக்கும்போது இவ்வளவு அவசரமாக அந்த டெண்டர் விஷயம் இந்த முறையில் முடிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். இந்த நடவடிக்கையில் துர்நாற்றம் வீசுகிறதா? இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரிகள் முயற்சியால் மந்திரிகளின் வேண்டுகோளின் பேரில் டெண்டர் கொடுத்து கம்பெனிக்காரன் என்று சொல்லப்பட்ட அதே கம்பெனிக்காரர் அதே சாக்கை அதாவது வார்ப்பட குழாயை அந்தர் 1-க்கு 5 ரூபா வீதம் கொடுப்பதாக வேறு ஒரு கம்பெனிக்கு டெண்டர் கொடுத்துவிட்டு மந்திரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவர்கள் என்ற தைரியத்தில் சேலம் வேலைக்கு அந்தர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் டெண்டர் கொடுத்ததை பொது ஜனங்கள் எடுத்துக்காட்டிய பிறகும் மந்திரிகள் அந்த டெண்டரை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதையே சேலம் கவுன்சிலர்களின் பிடரியின் மீது பலாத்காரமாய் ஏற்றியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தால் இந்த மந்திரிகள் நாணயத்தில் யாராவது சந்தேகப்படாமல் இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அல்லது எனது தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியாரே இது ஒழுங்கான காரியமா என்று சொல்லட்டும். மந்திரிமார்களே இவ்வளவு தைரியமாக டெண்டர்கள் விஷயத்தில் நடந்து வழிகாட்டுவார்களானால் அப்புறம் சாதாரண கவுன்சிலர்களும், சேர்மெனும் இம்மாதிரி நடக்கவோ, டெண்டர்களில் ஒழுங்கீனமாய் நடந்து பணம் சம்பாதிக்கவோ பயப்படுவார்களா என்று கேட்கிறேன். இலாக்கா அதிகாரிக்குத்தான் இவர்களிடம் எப்படி மதிப்பு இருக்கும்? தோழர் ராஜகோபாலாச்சாரியார் இதில் பணம் சம்பாதித்திருக்க மாட்டார் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால் மற்ற மந்திரிகளோ அல்லது அவர்களுக்கு சேர்ந்தவர்களோ பணம் சம்பாதிக்க இடம் கொடுத்தால் சம்பாதித்தார்கள் என்று கருதும்படி இடம் கொடுத்ததால் பொது அரசியல் நாணயத்துக்கும் ஒழுக்கத்துக்குமே கேடு ஏற்படவில்லையா என்று கேட்கிறேன்.

ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்து இப்படியா நடந்தது?

இவ்விஷயங்களில் மந்திரிகள் சிறிதும் சந்தேகத்துக்கிடமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாமா? ஜஸ்டிஸ் மந்திரிகளின் 17 வருஷம் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்ட யாராவது முடியுமா? என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன். இப்படிப்பட்ட யோக்கியதையில் உள்ள காங்கரஸ்காரர்கள் எந்த முகத்தைக் கொண்டு ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சத்தையும், கண்ட்ராக்ட் ராஜ்யத்தையும் நிறுத்தப்போகிறோம் என்றும் சொல்லுகிறார்களென்பதும் எந்த முகத்தைக் கொண்டு மறுபடியும் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசிக்கப் போகிறார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு சற்றாவது மானம் வெட்கம் இருந்தால் ஸ்தல ஸ்தாபனத்தைப்பற்றி நினைப்பார்களா? என்று கேட்கிறேன். பொது ஜனங்களுக்குதான் ஆகட்டும், சிறிதாவது பொறுப்போ புத்தியோ இருந்தால் இவர்கள் ஓட்டு கேட்க வாசப்படி மிதிப்பார்களா என்று கேட்கிறேன்.

ஸ்தாபனங்களுக்கு கெளரவம் வேண்டாமா?

நிர்வாகம் நடத்துவதும், லஞ்சம் வாங்குவதும் கண்ட்ராக்டில் சுயநலம் குறுக்கிட்டு ஒழுக்க ஈனமாய் நடப்பதும், உத்தியோகத்தில் பார்ப்பனர்களையே புகுத்துவதுமான காரியங்கள் செய்வதையாவது செய்து நாசமாய்ப் போகட்டும் என்றாலும் அந்த ஸ்தாபனங்களுக்காவது ஒரு மரியாதை இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறேன்.

ஸ்தல ஸ்தாபனங்கள் வரவர கஞ்சித்தொட்டிகளுக்கும், காலாடிகளுக்கும், காவடிகளுக்கும் புகலிடமாய் - பிழைப்புக்கிடமாய் ஆவது என்றால் யார்தான் சம்மதிப்பார்கள்?

காலாடி ராஜ்யமா?

இது என்ன காலாடி ராஜ்யமா என்று கேட்கிறேன். சிலவித பிரசாரத்தையும் அதற்காக செய்யப்படும் காலித்தனத்தையும் பார்க்கிறபோது வயிறு பற்றி எரிகிறது. பணக்கார ஆட்சி ஒழிக்கப்படுவது என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு பதில் எச்சக்கலை ஆட்சியும், திருட்டுப்பசங்கள்- அதிலேயே பொறுக்கித் தின்று வயிறு வளர்த்துத் தீரவேண்டிய சோம்பேறிகள் ஆட்சியைத்தான் ஏற்படுத்த வேண்டுமா என்று கேட்கிறேன். அப்படியானால் ஸ்தல ஸ்தாபனங்களில் சென்னை கார்ப்பரேஷனை விட சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளை விட மிக மிக மோசமான ஆட்சி ஏற்பட்டு விடாதா என்று கேட்கிறேன்.

பொது ஜனங்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஸ்தாபனங்கள் கொள்ளை போகாமலும் ஒழுக்க ஈனங்கள் நடக்காமலும் கவுரவம் குறையாமலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட பொது ஜனங்களுக்குத் தானாகட்டும் உரிமை யில்லையா என்று கேட்கிறேன்.

குடிக்க முடியாவிட்டால் கவிழ்ப்பதா?

பார்ப்பனர்களுடைய எண்ணம் நாடு ஒன்றாய் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலிகள் கூலிகள் கையில் ஒப்புவித்துக் கவிழ்த்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறதாகத் தெரிகிறது.

நம் நாடு சமதர்ம நாடாகிவிட்டதா? அல்லது பொது உடமை நாடாகிவிட்டதா? அப்படி இருந்தால் சொத்தில்லாதவன் ஆட்சி புரிவது நியாயமாய் இருக்கலாம். அதிலும் பாடுபடுபவன் ஆட்சிபுரிவதுதான் நியாயமாக இருக்கலாம். அப்படிக்கூட இல்லாமல் இந்தத் தனி உடமை ராஜ்ஜியத்தில் சோத்துக்கு வேறு வழியில்லாதவன், வேறு வகையில் பிழைக்க முடியாதவன், பாடுபட முடியாத சோம்பேறி ஆகியவர்கள் சட்ட சபையையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்றுவதுதான் காங்கரஸ் முறை என்றால் அப்புறம் அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லட்டும். சென்னை கார்ப்பரேஷன் பேரால் ஸ்தல ஸ்தாபனங்களில் பொறுக்கித் தின்னவும் சென்னை அசம்பிளியில் போய் ஒரு வேலையும் செய்யாமல் கைகட்டி வாய்பொத்திக் கொண்டு கண் ஜாடை காட்டியவுடன் கை தூக்குவதற்கு ஆக மாதச் சம்பளம் எடுத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட இலாக்காக்களிலெல்லாம் கண்றாக்ட்டில் ஒழுக்க ஈனமாய் நடக்கவும்தானே முடியும்.

இந்த வார ஆனந்தவிகடன் என்னும் பத்திரிகையில் 3 அசம்பிளி மெம்பரை அசம்பிளியில் கைகட்டி வாய்பொத்தி பள்ளிக்கூட பிள்ளைபோல் உட்காரவைத்துக் காட்டி இருக்கிறது. இதன் அருத்தம் என்ன? மாதம் 75 ரூபாய் கூலிக்கு அடித்து உதைத்து அடக்கிவைக்கப்பட்ட பள்ளிக்கூட பிள்ளைகள் போல் பார்ப்பனரல்லாத அசம்பளி மெம்பர்களை உட்காரவைத்து ஆச்சாரியார் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதைக் காட்டுவதாகத் தானே அருத்தம். நம் நாட்டு அரசியல் வாழ்வுக்கும் பார்ப்பனரல்லாதார் யோக்கியதைக்கும் இதைவிட இழிவும் ஈனத்தனமும் வேறு வேண்டுமா என்று கேட்கிறேன்.

பணக்காரனாகவும், பாடுபட்டு வயிறுவளர்க்கத் திறமையுடையவ னாகவும் இருக்கிறவர்களே பலர் ஸ்தல ஸ்தாபனங்களில் சட்டசபைகளில் நாணையமாய் நடந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் இன்னும் தகரப் போகிணிகள் சங்கதி கேட்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் இந்த தகரப்போகிணிகள் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவதற்கு ஆதாரமாகவே மக்களிடம் போய் "பணக்காரர்கள் ராஜ்யத்தை ஒழிக்கப் போகிறோம். ஆதலால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்கிறார்களாம். தெருவில் எச்சிலை பொறுக்கும் பிள்ளைகளுக்கும் பரிசுத்த ஆவி மக்களுக்கும் காசு கொடுத்து கொடி கொடுத்து பணக்கார ஆட்சி ஒழிய, பணக்காரர் ஒழிய, காங்கரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கத்தச் சொல்லுகிறார்கள். காங்கரசில் பணக்காரர் இல்லையா? எல்லோருமா இன்சால்வெண்டு பேர்வழிகள்? தோழர்கள் வெள்ளியங்கிரிக் கவுண்டர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்து, கோபால் ரெட்டி இவர்கள் யார் தகரப் போகிணிகளா மஞ்சள் காகிதங்களா? இந்த ஊரிலும் இதே பேச்சாயிருக்கிறதாம்.

பணக்காரர் ராஜ்யம் ஏன் ஒழிய வேண்டும்

சட்டத்தில் பணக்காரன் இருக்க இடம் வைத்துக்கொண்டு அவனிடம் வருஷம் 1000, 2000, 5000, 10000 ரூபாய்களை பூமிவரி, வீட்டுவரி, வருமானவரி முதலிய பல வரிகளாக வாங்கிக் கொண்டு அவனை ஒழிக்க வேண்டுமென்றால் அது ஒரு காசு வரி இல்லாத - ஒரு சதுர அங்குல இடமில்லாத - ஒரு நாழி உழைப்பதற்குக் கூட ஒரு சிறிதும் சக்தியும், அனுபவமும், இஷ்டமும் இல்லாத - ஊர் உழைப்பில், ஏமாற்றுதலில் ஒழுக்க ஈனமான காரியத்தில் வயிறு வளர்க்கும் அயோக்கியர்களும், அன்னக்காவடிகளும், ஆட்சி செலுத்தி பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதற்குத்தான் (பணக்கார ஆட்சி) ஒழிக்கப்படுவதா என்று கேட்கிறேன்.

காலிகள் ஆட்சிதான் ஜனநாயகமா?

இப்பொழுது பஞ்சாப் மந்திரியும் தோழர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் சொன்னது போல் ஜனநாயகம் என்னும் பேரால் இந்தியா காலிகள் ராஜ்யமாகி வருகிறது. அரசியலில் திருட்டு, புரட்டு, ஏமாற்றுதல், கொள்ளை அடித்தல் முதலாகிய மானங்கெட்ட காரியங்கள் சர்வ சாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது. இனி சர்வமும் காலிகள் மயமாகி விட்டால் இந்நாட்டில் மானமுள்ளவர்கள் மரியாதைக்காரர்கள் வாழ்வதா சாவதா? அவர்களது பெண்டு பிள்ளை சொத்துக்குப் பத்திரம் வேண்டாமா என்று கேட்க வேண்டியதாய் விடாதா?

நாணையமற்றவனை ஒழியுங்கள்

இந்த உடுமல் பேட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர் சிவசுப்பிரமணியக் கவுண்டர் 10 லக்ஷக்கணக்கான சொத்துக்கு உடையவர். அதற்கு ஆக அதாவது, அவர் பணக்காரராய் இருப்பதற்காக அவர் முனிசிபாலிட்டியில் பொது வாழ்வில் இருந்து விரட்டப்பட வேண்டுமா? அவர் வரி கொடுக்கவில்லையா? அவர் முனிசிபாலிட்டியில் பணம் திருடி இருந்தால் உதைத்துத் துரத்துங்கள். அல்லது அவர் முனிசிபாலிட்டி மெம்பர் பதவியாலோ சேர்மென் பதவியாலோ வயிறு வளர்ப்பதாய் இருந்தாலாவது அல்லது அவருக்கு வயிறு வளர்க்க அதைத் தவிர வேறு யோக்கியமான வழியில்லா விட்டாலாவது அடித்துத் துரத்துங்கள். அப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அடித்துத் துரத்துங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு அவர் பணக்காரராய் இருக்கிறார் என்பதற்காக அவரை முனிசிபாலிட்டியிலிருந்து விரட்ட வேண்டுமென்றால் அதுவும் விரட்டுகிறவர்கள் பாப்பராய் இதில் பிழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்ணியமாய் உணர்ந்தால் அப்படிப்பட்ட அன்னக்காவடிகளை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அது விஷயத்தில் உங்கள் கடமை என்ன என்று கேட்கின்றேன்.

ஏழைகள் வேறு சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக்காரர் வேறு

ஏழைகள் என்பதற்காக நாம் யாரையும் கேவலமாய் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு மரியாதை செய்வோம். அவர்கள் ஏழ்மைத் தன்மை ஒழியவும் அதற்கு அவசியமான பணக்காரத் தன்மை ஒழியவும் கூட நாம் பாடுவோம். பொதுவுடமை ஏற்படவும் முயலுவோம். பணக்காரர் பணங்களை பறிமுதல் செய்து சகல மக்களுக்கும் சரிசமமாய் பங்கிடவும் சட்டம் செய்ய ஆசைப்படுவோம். ஆனால் காலிகள் ராஜ்யமும் பதவியின் பேரால் ஒழுக்க ஈனமாய் பொறுக்கித் தின்பவர்கள் ராஜ்யமும் சோம்பேறிகள் ராஜ்யமும் ஏற்பட சிறிதும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. அந்த சாக்கை வைத்துக் கொண்டு காலிகளும், கூலிகளும், பணக்காரர்கள் என்பவர்களை வையவோ காலித்தனம் செய்யவோ கூட நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் வேறு. வயிற்றுப் பிழைப்புச் சோம்பேறிகள் வேறு. இருவரையும் ஒன்றாய்ப் பார்க்கக் கூடாது என்பது எனது கருத்து.

பணக்காரன் என்றால் யார்? வயிற்றுப் பிழைப்புக்கு பொது ஸ்தாபனங்களை எதிர்பாராமல் யோக்கியமான முறையில் மானத்தோடு பாடுபட்டு உழைப்பவனும் மரியாதையாக வாழ்பவனும் சட்டப்படி நாணைய ஒழுக்கத்தால் செல்வம் தேடி சாப்பிட்டு சிறிதாவது மீதி வைத்திருப்பவனும் எல்லோரும் பணக்காரர்கள்தான். அவன் 10 ரூபாய் உடையவனாயிருந்தாலும் பல லக்ஷ ரூபாய் உடையவனாயிருந்தாலும் ஒன்றுதான். அதிக பணம் ஒருவனிடம் சேரக்கூடாதென்றால் நல்ல வரிபோட்டு கரைக்கப் பார்ப்போம். அதற்கு ஆக சட்டம் செய்வோம். அதை விட்டு விட்டு அவர்கள் பொது வாழ்விலேயே தலைகாட்டக் கூடாதென்றால் அதுவும் நாளை சாப்பாட்டுக்கு வகையற்றவர்கள் சொல்வதென்றால் இது என்ன கொள்ளைக்காரர்கள் ராஜ்யமா என்று கேட்கிறேன். இதுதான் காந்தியாருடைய ராமராஜ்யமா என்று கேட்கிறேன்.

காங்கரஸ் ஆட்சியில் மரியாதை இல்லை

இன்று காங்கரஸ் ஆட்சியால் பொது வாழ்வில் மரியாதை அற்றுப் போய்விட்டது. மக்களுக்குப் பத்திரம், பந்தோபஸ்து அற்றுப் போய் விட்டது. மரியாதைக்கும் மானத்துக்கும் பயப்படுபவர்களுக்கு வெளியில் தலை நீட்ட இடமில்லாமல் போய்விட்டது. மரியாதைக்காரர்கள் தங்களுக்கென ஒரு கூட்டம் போட்டு விஷயம் எடுத்துச் சொல்ல இடம் இல்லாமல் போய்விட்டது. இங்கேயே பாருங்கள். நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்று கேட்பதற்கு முன்பே பேசப் பேச குறுக்கிட ஆரம்பித்து விட்டார்கள். நான் நாடெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வந்து உண்மையைப் பேசுகிறேன்.

ஜெயில் திறக்கப்பட்டு விட்டது

கனம் ஆச்சாரியார் ராஜ்யத்தில் போதாக்குறைக்கு ஜெயிலை நிர்வகிக்கப் பணம் இல்லையென்று காரணம் சொல்லி ஜெயிலில் இருக்கிற கருப்புக் குல்லாய் கேடி, கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், தொல்லைக்காரர்கள், போர்ஜரி, பொய்சாட்சி, நம்பிக்கைத் துரோகக்காரர் முதலியவர்கள் எல்லாம் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். விடுதலையாகும்போது "காங்கரஸ் - காந்தி ராஜ்யம் வந்து உங்களை விடுதலை செய்திருக்கிறது. ஆதலால் காங்கரசில் சேருங்கள்" என்று உபதேசம் செய்து விடுதலை செய்யப்படுகிறதாம். இனி அதுபோலவே இவர்களும் காங்கரசில் சேர்ந்து விட்டால் அப்புறம் மக்கள் கதி என்ன ஆவது. நீங்களே யோசித்துப் பாருங்கள். யோக்கியர்கள் கூட காங்கரசில் சேர்ந்தால் இந்த கதி ஆகும் போது இவர்கள் சேர்ந்தால் என்ன ஆவார்கள்? இதுதானா நீதியும், அமைதியும், ஒழுக்கமும் நிலவும்படியான ராஜ்யமா என்று கேட்கிறேன். தோழர்களே!

துஷ்டர்களை நிபந்தனை யில்லாமல் விடுதலை செய்து அவர்களை காங்கரசிலும் சேர்த்துக் கொண்டால் நாட்டு மக்கள் கதி என்ன ஆவது.

எங்களுக்கு உண்மையில் ஒரு பதவியும் வேண்டாம். ஜனங்களுக்கும் அவர்கள் பாடுபட்டுத் தேடிக்கொடுக்கும் வரிப்பணத்துக்கும், நியாயமும் யோக்கியமான வாழ்வுக்கும் இடமும் வேண்டாமா என்பதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம்.

ஆகவே காங்கரஸ் ஆட்சியில் ஜனங்களுக்கு இன்று சகிக்க முடியாத கஷ்டம், தொல்லை, துயரம், நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இவற்றை நீங்கள் சரியானபடி நிதானமாய் யோசித்துப் பார்த்து நாங்கள் சொல்லுவது சரியா தப்பா என்று தெரிந்து இதற்குக் காங்கரஸ்காரர்கள் சொல்லும் சமாதானத்தையும் பொறுமையோடு கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

குறிப்பு: 11.04.1938 ஆம் நாள் உடுமலைப் பேட்டை அலிச் சவுக்கில் நடைபெற்ற முஸ்லீம் லீக் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 24.04.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: