காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்ற பிறகு அவர்களுக்குப் பாமர மக்களிடம் இருந்து வந்த செல்வாக்கு இயற்கையிலேயே குறையத் தொடங்கி விட்டது ஒரு புறமிருக்க புண்ணில் ஊசியை விட்டுக் கிளறுவது போல் வயிரெறிந்து கிடக்கும் முஸ்லிம் சமூகத்தை பரிகாசம் செய்வதுபோல் யாரோ ஒரு முஸ்லீமைப் பிடித்து அவருக்கு முஸ்லிம் பிரதிநிதி என்று பெயரைக் கொடுத்து, ஊர் ஊராக அழைத்துப் போய் வேடிக்கைக் காட்டி முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவதும், அதுபோலவே தாழ்த்தப்பட்ட மக்கள் என்கின்ற கூட்டத்தாரும் மனவேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களையும் பரிகாசம் செய்வதுபோல் அவர்கள் சமூகத்திலும் மதிப்பற்ற ஒருவரை பிடித்துக் கொண்டு அவரையே தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி என்று ஊர் ஊராய் அழைத்துப் போய் நடிப்புக் காட்டுவதுமான காரியத்தையே காங்கரசுக்காரர்கள் ஒரு பெரிய தேசாபிமானமென்றும், தேசிய கைங்கரியமென்றும் கருதிச் செய்து வருவதால் பொதுவாக காங்கரஸ்காரர்களுக்கு இவ்விரு சமூகத்தாரிடையும் செல்வாக்கில்லாமல் போனதோடு அதிருப்தியும், ஆத்திரமும் இருந்து வருகிறது என்பதை யாவரும் மறுக்க முடியாது.

உடும்புப் பிடிவாதம்

இந்த அதிருப்தியையும், ஆத்திரத்தையும் இவ்விரு சமூகமும் தங்களது ஆயிரக்கணக்கான சமூக பொதுக் கூட்டங்களில் எடுத்துக் காட்டியிருப்பதோடு இவர்களில் காங்கரசில் கலந்திருந்தவர்களில் பெரும்பாலோர் காங்கரசிலிருந்து விலகியும் விட்டார்கள்.

இந்த நிலையில் காங்கரஸ்காரர்களுக்கு அறிவும், சமயோசித ஞானமும் இருந்திருக்குமானால், இவ்விரு சமூகத்துக்கும் தங்களிடம் பிரதிநிதிகள் இருப்பதாக நடித்து பொது ஜனங்களை ஏமாற்றும் வேலையை தற்காலீகமாகவாவது கைவிட்டு விட்டு வேறு காரியத்தில் மக்களை ஏமாற்றும் வேலையிலாவது முனைந்திருக்கலாம். அல்லது ஒன்று, இரண்டு, மூன்று, பத்து இடங்களில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டாவது படிப்பினை பெற்று சமயோசிதமாக நடந்திருக்கலாம். அதைவிட்டு முதலையும் உடும்பும் தான் பிடித்ததை விடாது என்பதாக பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதே காரியம் செய்வதால் பொது ஜனங்களுக்கு மேலும் மேலும் ஆத்திரம் வரவும் தொத்து வியாதிபோல் ஒரு ஊரில் நடந்த காரியம் மற்றொரு ஊருக்கு உற்சாகத்தைக் காட்டி அதைவிட அதிகமாக காரியங்கள் நடக்கும்படியான நிலை ஏற்பட்டு வருகிறதானது உண்மையிலேயே வருந்தத்தக்கதாகும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுக்கூட்டங்களில் குழப்பம் நடப்பதோ, சிலசில விஷமங்கள் செய்யப்படுவதோ பலாத்காரமான காரியங்கள் செய்யப்படுவதோ, காலித்தனம் நடைபெறுவதோ நமக்கு மிகவும் வெறுக்கத்தக்க காரியமேயாகும். இதை இன்று நேற்றல்ல 15, 20 வருஷகாலமாகவே சொல்லியும், பொது மக்களுக்கு அறிவுறுத்தியும் வருகிறோம்.

காங்கரஸ் காலித்தனம்

ஆனால் அஹிம்சை, நீதி, சமாதானம் என்கின்ற பொய்ப் பெயர்களை வைத்துக் கொண்டு காங்கரஸ்காரர்கள் சட்டம் மீறுவது, உத்திரவை மறுப்பது, பலாத்காரம் ஏற்படும்படியான நிலைமையை வலுவில் வரவழைத்து அடிபடுவது, சமாதானத்துக்கும் நீதிக்கும் விரோதமாய் நடந்து வலிய ஜெயிலுக்கு போவது என்பதான காரியங்களை சுயராஜ்ஜிய கொள்கைகளாகவும், எதிரிகளுக்கு மேடையில்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக காலிகளுக்கே பெரிதும் காங்கரசில் செல்வாக்கும், இடமும், பதவியும் கொடுத்து அவர்களில் பெரும்பாலோர்க்கு இதிலேயே வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கத்தையும் நிலையாக்கி எதிரிகளது சகல பொதுக் கூட்டங்களிலும் அது எப்படிப்பட்ட பொறுப்பும் பெருமையும் உள்ள பதவியாளர்கள் பேசும் கூட்டமானாலும் அவமரியாதை செய்வதும், குறுக்கிடுவதும், "ஜே" கூச்சல் போடுவதும், கல் மண் வாரி இறைப்பது, சில்லரைத்தனம் செய்வது போன்ற காரியங்களில் இறங்கவைத்து கூட்டங்களைக் கலைக்கச் செய்துவிட்டு பிறகு பத்திரிகைகளில் "பொது ஜனங்கள் ஆத்திரம்" "ராமசாமி நாயக்கர் புத்தி கற்பிக்கப்பட்டார்", "பொப்பிலி ராஜா கூட்டத்தில் குழப்பம்," "குமாரசாமி ரெட்டியார் விரட்டி அடிக்கப்பட்டார்", "பி.டி.ராஜன் மீது பொது ஜனங்களுக்கு ஏற்பட்ட ஆத்திரம்", "சவுந்திர பாண்டியனால் கூட்டம் கூட்ட முடியவில்லை" என்பது போன்ற தலைப்புகள் கொடுத்து எழுதுவதுடன், இக்காரியங்கள் செய்த காலிகளையே பொது ஜனங்கள் என்றும் அக்காலித்தனங்களை பொது ஜன நடவடிக்கைகள் என்றும் எழுதி அவர்களுக்கு சபாஷ் பட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு ஊரிலும் இக்காலித்தனங்கள் நடக்கும்படி தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி வந்தால் இப்போது நடைபெறும் கடைந்தெடுத்த காலித்தனமே கடைந்தெடுத்த அசல் தேசாபிமானமாகவும், தேசிய வீரமாகவும், சுயராஜ்ய பாதையாகவும் ஆக்கப்பட்டு விட்டது.

குடி அரசு "ஜோஸியம்"

காங்கரஸ்காரர்களின் இப்படிப்பட்ட இந்த காரியத்தைக் கண்டித்து வெறுப்புற்று சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன்பு "குடி அரசி"ல் எழுதும் போதே காங்கரஸ்காரர்களின் காலித்தனம் பாண்டிச்சேரி எலக்ஷன் போது நடப்பது போன்ற பலாத்காரத்தில் நாட்டைக் கொண்டு வந்து விட்டுவிடப் போகிறது என்று அழுது அழுது குறிப்பிட்டிருந்தோம். யாரும் லட்சியம் செய்யவில்லை. சர்க்கார் அதிகாரிகளும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. பொதுக் கூட்டங்களுக்கு எவ்வித வரையறை என்பதும் ஏற்படுத்தவில்லை. ஆகவே, அது இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனுடைய உள்ளத்திலும் தேச சேவை, கட்சிசேவை, பொதுநல சேவை என்றால் காலித்தனம்தான் என்பதான உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

தற்கால நிலை

எந்தப் பொதுக் கூட்டமானாலும் காலித்தனத்தை சமாளிக்கும் முஸ்தீபுடனும், துணிவுடனும் சென்றால்தான் வீடு திரும்ப முடியும் என்கின்ற நிலை நம் நாட்டில் எங்கும் காணக்கிடக்கின்றது. இதற்கு காங்கரஸ்காரர்கள் தான் காரணம் என்பதை இனியாவது உணர்ந்து கட்சியும், கட்சிக்கொள்கையும் எப்படி இருந்தாலும் பேச்சுச் சுதந்திரம், பொதுக்கூட்ட சுதந்திரம் இன்னவிதமாய் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை ஏற்படுத்தி பல கட்சி, பல சமூக பிரமுகர்கள், தலைவர்கள் என்பவர்கள் ஆகியவர்கள் கலந்து ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது எந்தக் காரணத்தாலாவது அப்படி செய்வது காங்கரஸ் கவுரவத்திற்குக் குறைவு என்று கருதுவார்களானால் பொதுக் கூட்டம் பொது இடத்தில் போட சர்க்காரிடம் அனுமதி பெறவும், தக்க பந்தோபஸ்தும், தக்க அடக்கு முறையும் இருக்கும்படி சட்டம் செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கே சொந்தமான காலித்தனத்தை மற்றவர்களும் கையாளுகிறார்கள் என்று கண்டவுடன் அதை அடக்க தங்களுக்கு யோக்கியதை இல்லை என்று அறிந்தவுடன் ஊரார் மீது பழிசொல்வதென்பது சுத்த கோழைத்தனமேயாகும்.

கல்வி மந்திரி பூச்சாண்டி

இதை ஏன் எழுதுகிறோமென்றால், நமது தோழர் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் சமீபத்தில் ஓமலூருக்குச் சென்றிருந்த பொழுது அங்கு ஏதோ காலித்தனம் நடந்ததில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அதைக் கண்டிக்கும் முறையில்

"இந்த மாதிரி கலாட்டாவும் காலித்தனமும் நடக்கக் காரணம் எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான்; அவரது தூண்டுதலால் தான், நான் செல்லுமிடங்களிலெல்லாம் இப்படியே கலாட்டா நடக்கின்றது. இனி இதை அரை க்ஷணமும் பொருக்கமாட்டேன். இதை அடக்க போலீசையும், ராணுவத்தையும் தாராளமாய் உபயோகித்து அவரை நசுக்கிவிட்டு வேறு வேலை பார்க்கிறேன்"

என்று சொன்னாராம். இவர் இப்படிப் பேசியதை நிருபர்கள் நமக்கு எழுதி இருப்பதோடு, பக்கத்தில் இருந்த ஒரு பார்ப்பனரும் இது உண்மை என்றும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிக்க ஆவேசத்தோடும், கோபத்தோடும் இப்படிப் பேசினது உண்டு என்றும், ஈரோட்டுக்கு வந்து சொன்னதோடு தனது அபிப்பிராயம் அப்படி இல்லாவிட்டாலும் தோழர் ஈ.வெ.ராமசாமி முஸ்லிம்களுக்கு இவ்வளவு இடம் கொடுத்ததால் இப்படி ஏற்படுகிறது என்று அப்பிராயப்படுவதாகச் சொல்லிப் போனார்.

ராமசாமிக்குப் பெருமையே!

இந்த சம்பவம் உண்மையாயிருந்தாலும், உண்மையற்றதாயிருந்தாலும், டாக்டர் அவர்கள் கருதியது சரியாயிருந்தாலும் தவறாய் இருந்தாலும், ஏதோ சமாளிப்பதற்காக வீரம் பேசுவதற்கும் வைவதற்கும் ஒரு ஆள் வேண்டுமே என்று தோழர் ராமசாமி பெயரை டாக்டர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், எப்படி ஆன போதிலும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்திலும் மற்றும் அவர்கள் செல்லுமிடங்களிலும் இம்மாதிரி பேசி வருவதன் மூலம் தோழர் ராமசாமி மீது சிலருக்காவது வெறுப்போ "துவேஷமோ" ஆத்திரமோ ஏற்படக் கூடுமாயினும் பொதுவில் இது தோழர் ராமசாமிக்கு ஒரு பெருமையை அளித்தது போலவேதான் என நாம் கருதுகிறோம். ஏனெனில் தோழர் ராமசாமிக்கு, தமிழ்நாடு பூராவும் அவ்வளவு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அவர் தூண்டி விடுவதால் டாக்டர் போன்ற பெரியார்கள் கூட்டங்களில் அவராலும், அவரது அரசாங்கத்தின் கீழ் உள்ள போலீசாராலும், அவரது தலைமையின் கீழ் உள்ள தேசிய வீரர்களாலும் சமாளிக்க முடியாத குழப்பம் செய்ய சக்தி ஏற்பட்டிருப்பதாக டாக்டர் அவர்களே ஒப்புக் கொண்டு இதை அடக்க ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லுவதென்றால் அது உண்மையில் "ஒரு சாதாரண, பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாத, தேச நலத்துக்கு விரோதமாகப் பாடுபடுகிற ஒரு வகுப்புவாத சுயநலக்காரர்" என்பவருக்கு உண்மையிலேயே ஒரு பெருமை அல்லவா என்று கேட்கின்றோம். இது போலவே தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார்.

ஆச்சாரியார் கவுரவம்

அவர்களும் ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி ஒரு "சாதாரணமான குறிப்பிடவோ, லட்சியம் செய்யவோ தகுதி இல்லாத ஒரு பிற்போக்கான மனிதன் என்பவனுக்கு" பிரதானம் கொடுக்கிறோமே என்று கூடக் கருதாமல்

"ஹிந்தி எதிர்ப்பு என்பது ஒரு தனிப்பட்ட நபராகிய எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமியால் நடத்தப்படுகிறதே தவிர இது பொதுஜன எதிர்ப்பல்ல"

என்று சட்டசபைக் கூட்டத்தில் சொல்லி சமாளித்துக் கொண்டார். இதுவும் உண்மை எப்படி இருந்தாலும் இப்படிச் சொன்னது தோழர் ராமசாமிக்கு கனம் ஆச்சாரியார் கொடுத்த கவுரவமேயாகும்.

ஆனால் இந்த இரண்டு தோழர்களும் இப்படி சொல்லிவிட்டதாலேயே இவர்கள் சமாளித்துக் கொள்ளலாம் என்றோ அல்லது இந்த நொண்டிச் சாக்கைக் கொண்டே தங்களுடைய உத்தேசங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றோ கருதுவார்களானால் கண்டிப்பாக இரு பெரியார்களும் ஏமாற்றமடைவார்கள் என்று உறுதியாகக் கூறுவோம்.

ஒரு சவால்

சாதாரணமாக காங்கரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் அஹிம்சை, சமாதானம், நீதி என்கின்ற பெயரால் என்றைய தினம் ஒத்துழையாமை என்று ஒரு கிளர்ச்சி நடத்தினார்களோ அன்று முதல் ஏற்பட்ட காலித்தனத்திற்கு தோழர் ராமசாமி பொறுப்பாளி என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் என்பது நமக்கு விளங்கவில்லை. 15 - வருஷ காலமாக நடந்து வரும் "குடி அரசு" பத்திரிக்கையிலாவது அல்லது தோழர் ராமசாமியால் இந்த 20-வருஷ காலமாக நடத்தப்பட்டு வரும் பல ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களிலாவது பலாத்காரத்தை தூண்டக் கூடியதாகவோ பலாத்காரத்துக்கு இடம் கொடுக்கக் கூடியதாகவோ ஒரு எழுத்தோ ஒரு வார்த்தையோ இருந்தது என்று யாராவது எடுத்துக் காட்டமுடியுமா என்று கேட்கின்றோம்.

நஷ்டம் யாருக்கு?

தோழர் ராமசாமி அவர்கள் சாதாரண பேச்சிலும் கூட உதைத்தல், அடித்தல் என்கின்ற பதங்களை உபயோகித்தார் என்பதாக யாராலுமே சொல்ல முடியாது. பொதுக் கூட்டங்களில் கலவரம் செய்வதில் யார் ஜெயித்தாலும் தோழர் ராமசாமிக்குத்தான் நஷ்டம். என்னவென்றால் தோழர் ராமசாமி எப்போதும் எதிர்ப்புக் கட்சியில் இருப்பவர். எதிர் கட்சியின் வண்டவாளங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களைத் திருத்த வேண்டுமென்று கருதி இருப்பவர். அப்படிப்பட்டவர் கூட்டத்தில் குழப்பத்திற்கு இடம் கொடுத்தால் அவரது கருத்து நிறைவேறுவதுதான் குந்தகப்பட்டுப் போகுமே யொழிய, லாபம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. எதிர்க்கட்சியாராகிய காங்கரஸ்காரர்கள் பிரசாரம் நடப்பதை நிறுத்துவதிலும் அவருக்கு ஒன்றும் பயனில்லை. ஏனெனில் எதிர்கட்சியின் பிரசாரம், புராண பிரசங்கமும் காந்திப் புராண பிரசாரமுமாகும். மக்களுக்கு புரியாத சங்கதியாகிய சுயராஜ்யம், வெள்ளைக்காரனை விரட்டல் போன்ற நம்பப்பார்வதிபதே மாதிரியான அளப்புகள் தானே தவிர அவர்களிடம் சரக்கு வேறு இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும். இந்த அளப்புகளும் 8 நாளில் புரட்டு, ஏமாற்றல் என்பது விளங்கிவிடக்கூடியதாகவே இருந்து வருவதால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை.

ஆதலால் கூட்டங்களில் நடக்கும் குழப்பங்களுக்கும், நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் தோழர் ஈ.வெ.ராமசாமி காரணம் என்றும், ராணுவத்தை உபயோகித்து அதை அடக்க வேண்டும் என்றும் ஒரு கவுரவமான பதவியில் இருந்து பேசுவது என்றால் அவர் அப்பதவிக்கு லாயக்கில்லை என்பதற்கும், அவருக்கும் போதிய ஞானமில்லை என்பதற்கும் இந்தக் காரணமே போதும் என்போம்.

அன்றியும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் ராமசாமி பயப்படக் கூடியவராகவோ, பின்வாங்கிக் கொண்டு ஓடுபவராகவோ இருப்பாரானால் அவர் இன்று ஒரு மந்திரியாகவும் அவருடைய டிரைவர் ஒரு மந்திரி அதுவும் போலீஸ் இலாக்காவை நிர்வகிக்கும் மந்திரியாகவும் இருந்திருப்பார். அவரிடம் அந்தக் கோழைத்தனமும் சுயநலத் தன்மையும் இல்லாததாலேயே அவ்வளவு சிறிய மனிதரை இன்று இவ்வளவு பெரியார்கள் ராணுவத்தை பயன்படுத்தி அடக்கப் போகிறேன் என்று சபதங்கூறவும் அவரை எப்படி ஒழிப்பது என்பதற்கு சர்க்கார் கோட்டையில் (ஊணிணூt ண்t. எஞுணிணூஞ்ஞு)ல் 10-மந்திரிகள் கூடி சதா சதியாலோசனை செய்யவுமான முயற்சிகள் நடைபெற வேண்டியதாகிவிட்டன.

ராமசாமி பூச்சாண்டிக்குப் பயப்படார்

தோழர் ராமசாமி இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்பட்டவரல்ல. எதிர்த்தால் எதிர்ப்பவன் பலமும் எதிர்க்கப்படுகிறவனுக்கே வந்துசேரும் என்கின்ற ஒரு கட்டுக்கதை தோழர் ராமசாமி விஷயத்தில் மெய்க்கதையே ஆகிவிடும் என்கின்ற உறுதியின் பேரிலேயே அவரது ரதத்தை ஒண்டியாக இருந்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் உண்மையில் தோழர் ராமசாமி ஒரு பயங்காளியே ஆவார். ஆனால் ஏற்பட்டு விட்டால் அது கண்ணியமான முடிவு அடைவதில் ஒரு கை பார்க்காமல் திரும்புகிற - ஓட்டமெடுக்கும் - காரியம் அவரது அகராதியிலேயே கிடையாது.

ராணுவப் போலீஸ் வரட்டுமே!

ஆகவே டாக்டர் சுப்பராயன் அவர்கள் அறிவுடையவரானால் காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்ன வென்பதையும் இதுவரை ஜஸ்டிஸ் மந்திரிகளிடம் செலாவணியாய்க் கொண்டிருந்த காரணம் இந்த தேசாபிமான மந்திரிகளிடம் செலாவணி ஆவதற்குக் காரணம் என்ன என்பதையும் கவனித்துப் பார்த்துத் திருத்திக் கொள்ளட்டும். அல்லது அதைப்பற்றிக் கவலை இல்லாவிட்டால், உண்மையில் அவருக்கு ஆண்மை இருந்தால் அவரது போலீசையும், அவரது ராணுவத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். இரண்டையும் வரவேற்கிறோம். ராணுவ இரத்தம் யார் சரீரத்தில் ஓடுகிறது என்பதைப் பரீட்சிக்க டாக்டர் அவர்களிடம் ஏதாவது கருவி இருக்குமானால் பரீட்சித்துப் பார்த்து பிறகு ராணுவத்தைப் பற்றி நினைக்கட்டும் என்றுகூட வாய்தா கொடுக்கத் தயாராயிருக்கிறோம்.

ஒரு வேண்டுகோள்

பொதுவாக ஒரு வேண்டுகோள் என்னவென்றால் சுயமரியாதைக் காரர்களோ, அல்லது முஸ்லிம் லீக் காரர்களோ தங்களுடைய பிரதிநிதிகள் என்பவர்கள் அல்லாதவர்கள் என்பதாக யாரையாவது கருதி அத்தாட்சி (காட்டவேண்டிய அவசியமில்லை) காட்ட வேண்டுமென்று கருதினால் காட்டட்டும். ஆனால் கலவரம், குழப்பம், காலித்தனம் அல்லது அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஏதாவது ஒரு சிறிய அசெளகரியம், குறுக்கிடல், கேள்வி கேட்டல் முதலாகிய காரியங்களைக் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம்.

அநேகமாக அவர்கள் எதிரிகள் கூட்டத்துக்கு போகக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. விஷயம் அறிய உண்மையில் ஆசையிருந்தால் கூடிய மட்டும் அடையாளம் தெரியாமல் இருந்துவிட்டு வந்துவிடவேண்டும் என்றே வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம். இது தோழர் டாக்டர் சுப்பராயன் மிரட்டுவதற்காக பயந்து கொண்டு சொல்வது அல்ல நாம் இந்த 15, 20 வருஷங்களாக கையாண்டு வந்த கொள்கையே இது. ஆதலாலும் இதை கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

முஸ்லிம் தோழர்களுக்கு தனியாக ஒரு வார்த்தை என்னவென்றால் நமது பிரசாரம் இன்னும் தீவிரமாக நடைபெற வேண்டுமானால் எதிரி கூட்டமானாலும் சரி கண்டிப்பாக கலவரத்துக்கு இடமில்லாத முறையில் நடத்தும் படியாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

மற்றப்படி டாக்டர் சுப்பராயன் அவர்கள் பூச்சாண்டியை எதிர்பார்க்கிறோம் என்பதையும் மறுமுறையும் காட்டி இதை முடிக்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 24.04.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: