ஈரோடு, மே.10.

ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மெஜாரிட்டியாக 16 காங்கரஸ் கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று மாலை 5 மணிக்கு காங்கரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு சேர்மனைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கரஸ் எலக்ஷன் ஆபீசில் அட்ஹாக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்திற்கு தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், குட்டப்பாளையம் கே.எஸ். பெரியசாமிக் கவுண்டர், கோவை சுப்ரி முதலியவர்கள் விஜயம் செய்திருந்தார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கெளன்சிலர்களும் விஜயம் செய்திருந்தார்கள்.

கடந்த மூன்று நான்கு தினங்களாக "பொது ஜனங்கள்" பெயரால் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களையே சேர்மனாகத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்று பல துண்டு பிரசுரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சேர்மன் பதவிக்கு பலர் அபேட்சித்தார்கள். இதில் தோழர்கள் எம். எ. ஈசுவரன் பெயரும், ஆர்.கே. வெங்கிடசாமி பெயரும் முதன்மையாக அடிபட்டன.

தோழர் ஈசுவரனை ஆதரித்து பல வாலிபர்கள் வெளியில் நின்றுகொண்டு கிளர்ச்சிசெய்து, வெங்கிடசாமிக்குக் கொடுக்கக்கூடாதென்று ஆரவாரம் செய்தார்கள். "வெங்கிடசாமிக்குக் கொடுக்க வேண்டும், ஈசுவரனுக்குப் பொறுப்பில்லை" என்று பலர் வெளியில் நின்று ஆரவாரம் செய்தார்கள்.

இவ்வாறு ஆரவாரம் செய்த இரண்டு கட்சியாரும் காங்கரஸ்காரர் களேயாகும். இரண்டு பக்கத்தார் கிளர்ச்சியும் ஹத்து மீறுவது கண்டு காங்கரஸ் கமிட்டியார் அச்சமடைய கமிட்டிக் கூட்டத்தை 9-மணிக்கு ஒத்திவைத்து விட்டு பூந்துறைப் பொதுக்கூட்டத்திற்காக அவினாசிலிங்கம் செட்டியார் கோஷ்டியார் சென்றுவிட்டார்கள்.

தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் தோழர் வெங்கடசாமி அவர்களையும், அவரைச் சேர்ந்தவர்களையும் மிகவும் கேவலமாகவும், இழிவாகவும் தூஷித்து கலகம் செய்து வந்தார்கள். இதனால் இரண்டு பக்கத்தாருக்கும் பெரிய கலகம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆரம்பமாயின. தோழர் வெங்கிடசாமி அவர்கள் கோஷ்டியாரின் சாந்த குணத்தால் அமைதி நிலவியது. தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் சுமார் 100 பேர்கள் ஒன்று சேர்ந்து தோழர் ஈசுவரனையே சேர்மனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் கார் முன் மறியல் கிடக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு பூந்துறைக்குச் சென்றார்கள். அப்படி சென்று கொண்டிருக்கும்போது தோழர் அவனாசிலிங்கம் அவர்களின் கார் வந்து விட்டது. அதை மறித்து தோழர் ஈசுவரனையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.

தோழர் அவனாசிலிங்கம் அவர்கள் 9 மணிக்குக் கூடும் கூட்டத்தில் முடிவு செய்வதாகக் கூறி வந்து விட்டார்.

மீண்டும் 9 மணிக்குக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. 8 கெளண் சிலர்கள் தங்களுக்கு சேர்மன் பதவி வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.

பின் 4 பேர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்.

மீதி இருந்த 4 பேர்கள் மிகவும் பிடிவாதமாக தங்களுக்கு சேர்மன் பதவி வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். வாக்கு வாதம் கடுமையாக ஏற்படவே கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டதாகக் கூறி கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள். கூட்டத்தை கலைத்து விட்டு அவினாசிலிங்கம் கோஷ்டியார் வெளியில் வரும்போது தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் அவரை மறித்து மிகக் கேவலமாக மீன்கடை பாஷையில் பேசி ஈசுவரனையே ஆதரிக்க வேண்டுமென்று கலகம் செய்தார்கள்.

தோழர் கே. எஸ். பெரியசாமி அவர்களையும் மிகவும் கேவலமாகப் பேசி அவரை வெளியில் போகவிடாதபடி தடுத்துக் கலகம் செய்தார்கள்.

பின் தோழர்கள் அவினாசிலிங்கம், பெரியசாமி, ராமசாமி ரெட்டியார் முதலியவர்கள் வேறு ஒரு பிரபலஸ்தர் வீட்டிற்குச் சென்று தோழர் ஆர்.கே. வெங்கிடசாமியையே சேர்மன் பதவிக்கு நியமித்து விட்டதாய்க் கூறியதாகத் தெரிகிறது. இதனால் நிலைமை இன்னும் மிகவும் மோசமாக ஆகிவிட்டதென்று தெரிகிறது. தோழர் ஈசுவரன் சேர்மனாக வந்தால் சில கெளன்சிலர்கள் ராஜிநாமா செய்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

தோழர் வெங்கிடசாமி சேர்மனாக வந்தால் வேறு சில கெளன்சிலர்கள் ராஜிநாமா செய்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

ஈரோடு மகாஜனங்கள் எல்லாம் காங்கரஸ்காரர்களின் பதவி மோகத்தைக் கண்டு எள்ளி நகையாடுவதுடன் காங்கரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டதற்காக வெட்கப்பட்டு பழைய கெளன்சிலர்களையும் சேர்மனையும் பாராட்டி ஜே கோஷம் செய்துவருகிறார்கள்.

ஈரோடு முனிசிபாலிட்டிக்கு சேர்மனை நியமிப்பதற்குக் கூடிய அட்ஹாக் கமிட்டியார் தோழர் ஆர்.கே. வெங்கிடசாமி அவர்களை சேர்மன் பதவிக்கும் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களை வைஸ் சேர்மன் பதவிக்கும் நாமினேஷன் செய்திருப்பதாகத் தெரிகிறது. தோழர் ஈசுவரன் அவர்கள் வைஸ் சேர்மன் பதவி தனக்கு வேண்டியதில்லை யென்று மறுப்பதாகவும் கவுன்சிலர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தோழர் ஈசுவரன் அவர்களை சேர்மனாக நாமினேஷன் செய்யாததால் அவரை ஆதரிக்கும் கோஷ்டியார் கறுப்பு உடைகளுடனும், கறுப்புக் கொடிகளுடனும் இன்று மாலை ஊர்வலம் செல்லப்போவதாகவும் தெரிகிறது.

சேர்மன் தேர்தலுக்கு தோழர் ஈசுவரன் பெயரை நாமினேஷன் செய்யாததால் சேர்மன் தேர்தல் நடைபெறும் 14-5-38ந் தேதியன்று முனிசிபாலிட்டி ஆபீஸிற்கு முன்பு தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் காங்கரஸ் கெளன்சிலர்கள் முனிசிபாலிட்டிக்குள் செல்லாமல் தடுக்க சத்தியாக்கிரகம் செய்யப் போவதாகத் தெரிகிறது.

தோழர் ஈசுவரன் அவர்களை நாமினேஷன் செய்ய வேண்டுமென்றும், அப்படிச் செய்யாவிட்டால் ஈரோட்டில் காங்கரசுக்கு செல்வாக்குப் போய் விடுமென்றும் பம்பாயிலிருக்கும் முதல் மந்திரி கனம் சி. ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும், தமிழ்நாட்டுக் காங்கரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்களுக்கும் தந்தி கொடுத்திருப்பதாயும் தெரிகிறது.

கெளன்சிலர் ஸ்தானத்திற்கு நிற்கும்படி சிலரைக் கேட்கும்போது சேர்மன் பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து இப்பொழுது கொடுக்காததால் அவர்கள் காங்கரஸிலிருந்து விலகப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஈரோடு காங்கரசில் இப்படி பிளவு ஏற்பட்டதைக் கண்ட பொதுஜனங்கள் மஞ்சள் பெட்டியை நம்பி ஓட்டுக் கொடுத்த மடமையை எண்ணி வருந்துகிறார்கள்.

ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் காங்கரஸ்காரர்களின் பதவி வேட்டையைக் கண்டு யாவரும் வெறுத்து கண்டித்து வருகிறார்கள்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 15.05.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: