ஏ அநாதியே!

நீ பிறந்ததற்கும், வளர்ந்ததற்கும் இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு வருவாயென்று நான் நினைக்கவேயில்லை. உன்னிடத்தில் பித்தலாட்டக்காரர்களும், காலிகளும், கூலிகளும் நிறைந்திருந்தால் எப்படி உன்னைப் பொது ஜனங்கள் நம்பி தேசத்துக்காகப் பாடுபடுவார்கள். புரட்டிப் புரட்டிப் பேசுகிறவர்களையும், கொள்கை மாறும் பச்சோந்திகளையும் எப்பொழுது ஒழிக்கப்போகிறாய்? மதத்தையும், புராண இதிகாசங்களையும் காட்டி நீ இன்னும் எந்தனை காலத்துக்குப் பாமர மக்களை ஏமாற்ற முடியும்? அயோக்கியத்தனம் நிறைந்த ஒரு ஜன்மம் இருப்பதைவிட இறந்துவிடுவதே மேல். நீயாக ஒழியாவிட்டால் மற்ற சக்திகளெல்லாம் சேர்ந்து உன்னைக் கொஞ்ச காலத்தில் தொலைத்துவிடும் என்பதை அறியவும்.

குட்பை.

வர்ணாச்சிரமத்துக்கு,

ஏ நடைப்பிணமே!

நீ சாகிற காலத்திலே எதற்காக லபோ லபோ என்று அடித்துக் கொள்கிறாய்? உன்னாலேதான் உலகமே பாழாய்ப்போச்சே, இந்தியாவும் உருப்படவில்லையே. யார்செத்தாலும் சரி, யார் வாழ்ந்தாலும் சரி, கவலை யில்லாமல், நீ மாத்திரம் தின்று கொழுத்துக் கொஞ்சமும் மானமில்லாமல் உன்னுடைய குட்டிகள் மாத்திரம் இந்த உலகத்திலே சுகமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறாயே இது என்ன நியாயம்? உனக்கு எதற்காக இந்த "நீஜ" பாஷை இங்லீஷ்? உத்தியோகம் எதற்காக? இங்கே ஏன் இருந்து கொண்டு மக்களின் உயிரை வாங்குகிறாய்? ஊரைக் குட்டிச்சுவராக்குகிறாய்? எங்காவது மலைகளுக்குப் போய் அங்கேயே மடிந்து மாய்ந்துவிடு, இல்லாவிட்டால் உன் பேர் சொல்ல ஆள் இல்லாமல் விஞ்ஞானம் உன்னை ஒழித்துவிடும் என்பதை அறியவும்.

குட்பை.

ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு,

ஏ "இராவணன் தலை" ஸ்தாபனமே!

நீ செத்துப்போய்விட்டாயென்றும், உன்னை வெகு ஆழத்தில் புதைத்தாச்சு என்றும், நீ இருக்கிறாயா இல்லையா என்றும் சில அயோக்கியர்கள், மடையர்கள், கீழ்மக்கள் சொல்லித் திரிகிறார்களே. நீ பிறந்தில்லா விட்டாலும், எவ்வளவோ எதிர்ப்புக்கு இடையில் நல்ல காரியங்களைச் சாதித்திருக்காவிட்டாலும் பார்ப்பனர் அல்லாதாரின் நிலைமை இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்திருக்காதா? நான் தான் இந்த மாதிரி உனக்கு ஒரு காலத்துக் கடிதம் எழுத முடியுமா என்று யோசித்துப்பார். நீ உள்ளே இருந்து வேலை செய்வது போதாது. வெளிப்படையாக வந்து கச்சத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு கோணல்களை யெல்லாம் சேர்த்து நிமிர்த்து விட்டால் உனக்கு எதிராக உன்னைப் பற்றிக் கேவலமாக எந்த நாயாவது குலைக்குமா? எந்தக் கழுதையாவது கத்துமா? எங்கே உன்னுடைய பேர்வழிகளை யெல்லாம் அபிப்பிராய பேதங்களை விட்டுவிடச் சொல்லி ஒன்று சேர்த்து ஒரு கை பார்.

குட்பை.

தீண்டாமைப் பேய்க்கு,

ஏ நரித் தந்திரமுள்ள ஓநாயே!

நீ வஞ்சகர்களைக் காட்டி ஏழைகளை இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? பதவிகளில் இருக்கும் தீண்டப்படாதார்கள் எல்லாரும் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சம் மறந்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எலெக்டிரிக் லைட்டிலும், மெத்தை தைத்த சோபாவிலும் தூங்குவதைத் தவிர வேறுயார் என்னதான் செய்வார்கள்! அவர்கள் விழித்துக்கொண்டு, நாம் எதற்காக இங்கு வந்தோம், நம்மை யார் நம்பியிருக்கிறார்கள். அடாடா தூங்கிவிட்டோமே, பார்ப்பனீய மோகினியைக் கண்டல்லவோ மயங்கி விட்டோம்! என்று தட தடத்து எழுந்து மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றால் நீ என்ன ஆவாய்? உன்னை ஆதரிக்கும் நூல்தான் என்ன ஆகும்? எல்லாம் அதோகதிதான் என்று அறியவும்.

குட்பை.

குடி அரசு - கடிதங்கள் - 22.05.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: