காங்கரஸ்காரன்: இப்படி கோடி கோடியாய் கடன் வாங்குகிறீர்களே! இது அடுக்குமா? நாமோ எந்த சமயத்தில் விட்டுவிட்டு ஓடப்போகிறோமோ யார் கண்டார்கள். அப்புறம் இந்தக் கடனை யார் கட்டுவது?

மந்திரி: கடன்பட்டவன் கட்டிவிட்டு சாகிறானா, சம்பாதித்தவன் சாப்பிட்டு விட்டு சாகிறானா? என்னமோ நம்ம காலம் வரை சக்கரம் ஓடினால் சரி. எவனோ கட்டுகிறான் நமக்கு அந்தக் கவலை எதற்கு?

கா: முன்னமே மூன்றேகால் கோடி. இப்பொழுது வேறே ஒன்றரை கோடியா? இது என்ன ஊரா, பாழா? பொது ஜனங்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள் கேட்க மாட்டார்களா?

ம: கேட்டு அவர்கள் தாலி அறுந்தது. எங்கேயோ அடித்துப் பிடித்து பணக்காரனிடம் பணம் பிடிங்கி தங்களுக்கு நல்லது செய்வதாகத்தான் கருதுவார்கள். மற்றபடி இது தங்கள் மீது சுமத்தப்படப்போகும் கடனே என்று ஒருவருக்கும் தெரியாது.

கா: காங்கரசல்லாத பத்திரிகைகள் இவற்றை வெளியாக்கி விடுமே அப்புறம் கூடவா தெரியாது?

ம: நாம்தான் காங்கரசல்லாத பத்திரிகைகள் எல்லாம் தேசத்துரோக பத்திரிகைகள் என்று சொல்லிவிட்டோமே. அப்புறம் அதைப்பார்த்துக் கொண்டு எவனாவது பேசினால் அவன் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவனானாலும் சரி அவன் கதர் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவனானாலும் சரி அவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள்தான்! அவர்கள் சொல்வதைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?

கா: மக்கள் ஒவ்வொருவராய் நம்மைவிட்டு விலகிவிட்டால்...?

ம: போனால் போகிறார்கள். நம்மிடம் என்ன செய்தாலும் போகாத அடிமைகள் - நாம் என்ன சொன்னாலும் கை தூக்கும் கூலிகள் - போதுமானதற்கு மேல் 20, 30 இருக்கிறது. ஆதலால் அதற்காக பயப்படவேண்டியதில்லை.

கா: அப்படி நினைக்கலாமா? எத்தனை நாளைக்குத்தான் ஒருவன் மானமில்லாமல், மனிதத் தன்மை இல்லாமல் நமக்கு கை தூக்குவார்கள்?

ம: ஓ! ஹோ!! அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே. எவனும் சும்மா தூக்குவதில்லை. மாதம் 75 ரூபாய்க்குத்தான் தூக்குகிறார்கள். 15 ரூபாய் சம்பாதிக்க வழியில்லாதவர் அநேகம் பேர்களுக்கு மாதம் 75 ரூபாயென்றால் இதில் மானமென்ன, மனிதத்தன்மை என்ன?

கா: எல்லோருமா அப்படிப்பட்டவர்கள்? இதனால் பிழைக்காதவர்கள் சிலராவது இல்லையா? அப்புறம் அவர்கள் போய் விட்டார்களானால் என்ன செய்வது?

மா: அப்படியும் அதிகம் பேர் இல்லை. இருந்தாலும் எங்கு போய் விடுவார்கள்? யார் கூடப் போய்ச் சேருவார்கள்? அவர்களை ஒழிக்க நமக்கு வழி தெரியாதா? அப்படித்தான் யாரை நினைத்துக்கொண்டு நீ இப்படிக் கேட்கிறாய்?

கா: ஸ்ரீகள் தேவர், நாடிமுத்துப் பிள்ளை, வெங்கிட்டப்ப செட்டியார் இப்படிப்பட்டவர்கள் 10 பேராவது இல்லையா?

ம: சரி இருந்திருந்து நல்ல ஆசாமிகள் பெயர் சொன்னாய். இவர்களை நாமே பல தடவை வெளியில் போகும்படி சொல்லி ஆகிவிட்டது. இன்னம் சில பேரையும் சொல்லி ஆகிவிட்டது. ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுத்தாய்விட்டது. “வார்த்தை வாரம்மா வள்ளித்தாயே” என்று முருகன் வள்ளியைக் கையேந்திக் கொஞ்சியதுபோல் அவர்கள் “என்னமோ செய்து கொள்ளுங்கள் எங்களை வெளியில் தள்ளிவிடாதீர்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

கா: மந்திரிகளில் சிலரும் மொண மொணத்துக் கொண்டிருக்கறாப் போல் இருக்கிறது. அவர்கள் நிஷ்ட்டூரம் வந்தாலும் வரும் போலிருக்கிறதோ!

ம: ஒரு நாளுமில்லை. 75 ரூ. காரர்கள் ஓடினாலும் ஓடுவார்கள் என்று சொல்லு. 500+300+350=1150 ரூ. காரர்கள் ஓடுவார்கள் என்று கனவிலும் நினையாதே! நீ யாரை சந்தேகப்படுகிறாய்? டாக்டர் சுப்பராயனையா?

கா: இல்லை. அவர் பிறவியிலேயே மந்திரி என்று கருதிக் கொண்டிருக்கிறவர். பெரிய குடும்பம். ஒரு நாளும் பதவியும் வரும்படியும் இல்லாமல் தனித்திருக்க சம்மதிக்கமாட்டாரா?

ம: பின்னை யார்? ஸ்ரீ ராமநாதனா?

கா: இல்லை, இல்லை. அவர் 75 ரூ. காரனாயிருந்தால் கூட விட்டுவிட்டு ஓடவே மாட்டார். ஏன் என்றால், இலாக்கா இல்லாமல் N 1000-த்து சில்வானம் பணம் வாங்குபவர். அவருக்குத் தெரியாதா? நன்றி விசுவாசமிருக்காதா? ஆதலால் அவர் போகமாட்டார்.

ம: மற்றபடி யாரை சொல்லுகிறாய்? ஸ்ரீகள் முனிசாமி, யாகூப் ஹாஸன் இவர்களைப் பற்றியா?

கா: இல்லை, இல்லை. அவர்கள் போய் விடுவார்களா என்றுகூட நான் நினைப்புக்குக்கூட கொண்டு வரவில்லை.

ம: பின்னை யார், ஸ்ரீகள் ரெட்டியும் மேனனுமா?

கா: இவர்களைப் பற்றியும் எனக்கு அதிகம் தெரியாது.

ம: அப்படியே வைத்துக்கொள்ளேன். இதுகள் ஆரும் போய் விட்டாலும் நமக்குப் பயமில்லை. 12 பேர் புதிதாக வருவார்கள். வராவிட்டாலும் பயமில்லை. 5 வருஷத்திற்குச் சக்கரம் ஓடும். பின்னை என்ன பயம்?

கா: பத்திரிகைகள் எல்லாம் கன்னாபின்னா என்று கூப்பாடு போடுமே.

ம: ஒன்னும் கூப்பாடு போடாது. நாம் கடன் வாங்க ஆரம்பித்தால் அதுகளுக்குக் கொண்டாட்டம்தான்.

கா: அதென்ன கொண்டாட்டம்?

ம: கடனுக்கு விளம்பரம் கொடுப்போம். அதில் அவைகளுக்கு 1000, 2000 கிடைக்கும். ஆதலால் வாயை மூடிக் கொண்டு விகடன் ஸ்ரீகள் சுப்பய்யாவுக்கும், பாரதிக்கும் போட்ட பொம்மைகள் போல் கைகட்டி வாய் பொத்தி தலை குனிந்து சலாம் போட்ட வண்ணம் கிடக்கும். இது தவிர அதுகளுக்கு நாம் வேறு வகையிலும் எலும்புத்துண்டு போட்டு வருகிறோம். ஆதலால் எது எப்படி நடந்தாலும் பத்திரிகைகள் மாத்திரம் நம்மிடம் வாலாட்டாது. மெயில் பத்திரிகைகூட 10 நாளில் சரியாய் போய்விடும். அதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்தாய் விட்டது.

கா:- எல்லா பத்திரிகைகளுக்குமா விளம்பரம் கொடுப்போம்? குட்டிப் பத்திரிகைகள் குலைக்காதா?

ம:- குட்டிப் பத்திரிகைகள் குலைத்தால் ஒரே அடிதான். பத்திரிகையே நடக்காது. நம்மையோ? காங்கரசையோ தைரியமாய் தாக்கினால் மூட்டை கட்ட வேண்டியதுதான். அவை தேசீயம், காங்கரசு, சுயராஜ்யம், காந்தி என்று சொல்லிக் கொண்டுதான் பிழைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும். அதுவும் கப்பலேறிப் போய் பிச்சை எடுக்க வேண்டும். ஆதலால் அவை ஒன்றும் கொஞ்சம்கூட வாலாட்ட முடியாது.

கா: வெள்ளைக்காரன் பார்த்து பரிகாசம் பண்ணமாட்டானா?

ம: அவன் காரியம் நாம் பார்க்கிறோம். நமக்கு கஷ்டக்கூட்டுத்தான் உண்டு. இதில் அவன் கோபம் என்ன வந்தது- வந்தால் பழையபடி “ஏகாதிபத்தியம் ஒழிய” என்றால் தீர்ந்தது. யுத்தம் வேறே வரப்போகுது. அவனும் கோடி கோடியாய் கடன் கேட்பான். அப்புறம் நமக்கு கோபம் வராதா? அளந்த வள்ளத்தில் நாம் அளப்போம் என்று அவனுக்குத் தெரியும். தவிரவும் நாம் எவ்வளவோ மானம்கெட்டு வெட்கம் கெட்டு அவனுக்கு நல்ல பிள்ளையாய் இருக்கிறோம். இதெல்லாம் அவனுக்குத் தெரியாதா?

கா: இதெல்லாம் போனால் போகட்டும். மகாத்மா காந்தி இருக்கிறாரே, அவர் சகிப்பாரா இந்த அக்கிரமங்களை?

ம: அந்த மகாத்மா நாம் செய்து வைத்த மகாத்மா தானே. அப்படி ஏதாவது அவர் குறை கூறினால் அப்புறம் நமக்கு தெரியாதா அவரை சாதாரண ஆத்மா பண்ணிவிட. நம்மைவிட அவருக்கு நன்றாய் தெரியும் தென்னாட்டுப் பார்ப்பான் நினைத்தால் தாம் சாதாரண ஆத்மாவாகக் கூட இருக்க முடியாது என்பது.

கா: கடைசியாக கடவுள் ஒருவர் இருக்கிறாரே அவருக்காவது பொறுக்க வேண்டாமா?

ம: எந்தக் கடவுளப்பா? நாம் கற்பித்த கடவுள்தானே? "கடவுளே நாங்கள் செய்வதைப் பார்க்காதே கண்ணை மூடிக்கொள்” என்றால் கண்ணை மூடிக் கொள்ளும். நாம் படைத்த கடவுளுக்கே நம் இஷ்டம் போல் அவயவம், குணம் கற்பிக்க நமக்கு முடியும். ஆதலால் ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே.

கா: சரி இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக் கொண்டு நாங்கள் உங்களுக்கு “ஜே” போடுகிறோமே அப்புறம் எங்களுக்கு என்ன லாபம்?

ம: அதை வேண்டுமானால் கேளு, கதர் வேஷ்டி சும்மா தருகிறோம். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு எங்கேயோ போய் எப்படியோ நடந்துகொள். நாங்கள் கவனிப்பதில்லை. அவ்வளவுதான் முடியும். வேண்டுமானால் கவுன்சிலர், சேர்மென், வைஸ் சேர்மென், பஞ்சாயத்து மெம்பர், பிரசிடெண்ட், வைஸ்பிரசிடெண்ட் சக்தி இருந்தால் அடித்துக் கொள். உனக்கு விட்டுவிடுகிறோம். குறை கூறாதே!

கா: போதும் ஸ்வாமி, பிழைத்தோம்! இன்னும் இரண்டு கோடி வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.

ம: போதும் இனி நாளை வருஷத்துக்குத் தான்.

கா: போய்ட்டு வருகிறேன்.

குடி அரசு - உரையாடல் - 11.09.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: