"கடவுள்’களையும், அவதாரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றுவது இந்தியாவிலே தொன்று தொட்ட வழக்கமாக இருந்திருக்கிறது. ‘கடவுள்’ ஆகவும், அவதார புருஷர்கள் ஆகவும் விரும்பாதவர்களையும் கூட பாமர மக்கள் பிற்காலத்தில் கடவுள்களாக்கி அவதார புருஷர்களாக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து தேர்திருவிழா நடத்திக் கொண்டாடுவது இந்தப் பாழும் இந்தியாவிலே, ஒரு வாடிக்கையாகிவிட்டது. புத்தர் ஒரு சீர்திருத்தக்காரர். மதப்புரட்டையும் பார்ப்பனப் புரட்டையும் வெட்ட வெளிச்சமாக்கி மக்களுக்கு நேரான பகுத்தறிவுக்குப் பொருந்திய சாந்தி வழிகாட்டுவதே அவரது லட்சியமாக இருந்தது. அவரையும் கூட அவரது சிஷ்யர்கள் பிற்காலத்தில் அவதார புருஷராக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து புத்தமதத்தை இந்து மதத்திலும் கீழான மதமாக்கி இந்தியாவிலே புத்தமதம் பூண்டு அற்றுப்போகும்படி செய்துவிட்டார்கள். குருட்டு நம்பிக்கையுடையவர்களை வசியப்படுத்த மதம் ஒரு சுளுவான கருவியாக இருப்பதினால் மத சம்பந்தமில்லாத துறைகளிலும் ஒரு சொட்டு மதத்தைப் புகுத்தி மக்களை ஏமாற்றுவது ஒரு பெருவழக்காகப் போய்விட்டது. இந்த உண்மையை உணர்ந்தே தோழர் காந்தி இந்திய அரசியலில் புகுந்ததும் அரசியலோடு மதத்தையும் புகுத்தினார். தென்னாப்பிரிக்கா ஒத்துழையாமைப் போருக்குப் பிறகு காந்தியார் இந்தியாவுக்கு வந்தவுடன் அவருடைய அபிமானிகள் சிலர் தாங்கள் இந்திய அரசியலில் ஈடுபட்டு இந்தியர்களுக்கு ஏன் தலைமை வகித்து நடத்தக் கூடாது எனக்கேட்டபோது “அரசியலை ஒரு மதமாக அனுஷ்டிக்கும் காலம் இன்னும் இந்தியாவில் வரவில்லை. அக்காலம் வரும்போது நான் அரசியலில் வலிய ஈடுபடுவேன்” எனச் சொன்னாராம்.

காந்தி அரசியல் பிரவேசம்

திலகர் மறைந்ததோடு அந்தக் காலமும் வந்தது. அதுவே தருணமென எண்ணி காந்தியாரும் இந்திய அரசியலில் புகுந்தார். பாமர மக்களை ஏய்க்க மேனாட்டு உடையோ, அவரது மரபுடையான பனியாவுடையோ பொருந்தாதென எண்ணி இடுப்புத்துணி கட்டிக்கொண்டார். பழங்கால முனிவர்களைப் போல் கந்தமூலம் புசிப்பதாக பாவனை பண்ணிக் கொண்டு நீலகிரித் தேனும் போஷணை யளிக்கும் சுவைபொருந்திய கனிகளும் அருந்தத் தொடங்கினார். அடிக்கடி பட்டினி விரதம் இருந்து மெளனவிரதம் பூண்டு ஞானி வேஷமும் பூண்டார். காலை மாலை பிரார்த்தனைகளும் நடத்தலானார். பாமர மக்களுக்கு இனி என்ன வேண்டும்? காந்தி கடவுள் அவதாரம் எனக் கண்ணை மூடிக் கொண்டு நம்பத் தொடங்கினர். பட்டதாரிகளான சோம்பேறிகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை விளம்பரப்படுத்தி தம் வாழ்நாளை கழிக்க வகை தேடிக் கொண்டனர். நல்ல வேளையிலோ பொல்லாத வேளையிலோ ஆனிபெசண்டு அம்மையாரும் காந்திக்கு ‘மகாத்மா’ பட்டம் சூட்டினார். ஆனிபெசண்டம்மையார் எல்லா மத தத்துவங்களும் அடங்கிய எம்மதமும் சம்மதம் என்னும் கொள்கையுடைய பிரம்ம ஞான மதத்தராயினும் பிராமண மதத்திலேயே அவருக்கு அதிகபக்தி. பிராமணர்களை “பிராமின்ஸ்” என ஆங்கிலத்தில் எழுதுவதுகூட அவருக்கு மிக வெறுப்பு. ஆங்கிலத்திலே “பிராஹ்மனர்" என முழு ஒலியுடன் எழுதத் தொடங்கியவர் ஆனிபெசண்டு அம்மையாரே. ஆகவே காந்தியையும் “மகாத்மா” என விளம்பரம் செய்தால் காந்தி பக்தர்கள் ஆதரவு தமக்குக் கிடைக்குமெனவும் அவர் ஒருகால் நம்பியிருக்கலாம். அவர் என்ன நோக்கத்துடன் மகாத்மா பட்டம் அளித்திருந்தாலும் ‘மகாத்மா’ பட்டம் அவரை விடமாட்டேன் என தொத்திப் பிடித்துக் கொண்டே இருக்கிறது.

மாயாஜாலம்

“மகாத்மா” பட்டத்தில் விருப்பமில்லாதவரென அவர் சில சந்தர்ப்பங்களில் ஜாலம் செய்து கொள்வதுமுண்டு. வாஸ்தவத்தில் அவருக்கு “மகாத்மா" பட்டத்தில் விருப்பமில்லை யானால் எவரும் என்னை "மகாத்மா" என அழைக்கக்கூடாதென ஏன் அவர் கண்டிப்பாகக் கூறிவிடக்கூடாது? கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றி ‘ஹரிஜன்’ பத்திரிகைக்கு வாரந்தோறும் வெள்ளைக் காகிதத்தில் கறுப்பு மையால் கிறுக்கிக் கொண்டிருக்கும் காந்தியார் ‘மகாத்மா’ பட்டம் வேண்டாம் என ஏன் ஒரு கட்டுரை எழுதித் தொலைக்கக்கூடாது? அவரது எச்சரிக்கையையும் மீறி யாராவது "மகாத்மா" என எழுதினால் அல்லது அழைத்தால் “சாகும் வரை பட்டினி கிடப்பேன்” என ஏன் புரளி செய்யக்கூடாது? உண்மையில் "மகாத்மா" பட்டம் கிடைத்திருப்பது அவருக்கு உள்ளூர மெத்த சந்தோஷந்தான். வெகு திருப்திதான். எனினும் பட்டம் பதவிகளில் ஆசையில்லாத் தியாகி எனக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அடிக்கடி பட்டம் வேண்டாம் எனப் பாசாங்கு செய்து வருகிறார். எனினும் எல்லாரும் அவரை ‘மகாத்மா’ என அழைப்பதில்லை. காங்கரஸ் அடிமைகளைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அவரை மிஸ்டர் காந்தி யெனவே எழுதுகிறார்கள், அழைக்கிறார்கள்.

பட்டத்தைக் காக்கச் சட்டமா?

எந்த சர்க்காரும் அவரை மகாத்மா என அழைப்பதில்லை. ஆகவே “சர்க்கார் கடிதப் போக்கு வரவுகளில் காந்தியாரைப் பற்றி குறிப்பிடும்போது அவரை மிஸ்டர் என்று குறிப்பிடாமல் மகாத்மா என்று குறிப்பிட வேண்டும் என மத்திய மாகாணப் பிரதம மந்திரி பண்டிட் சுக்லா உத்தரவு போட்டிருக்கிறாராம். ஆகவே சர்க்கார் உத்தரவு மூலம் “மகாத்மா” பட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது வெளிப்படை. இதுபற்றி காந்தியார் பெருமையடையப் போகிறாரா வருத்தப்படபோகிறாரா என்பது தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி நடந்துகொண்ட காரேயைக் கொலை செய்து காங்கரஸ்காரராலேயே - காங்கரஸ் பத்திரிகைகளாலேயே - ஜனநாயக முறைக்கு முரணாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பண்டிட் சுக்லாவுக்கு மத்திய மாகாணப் பிரதம மந்திரி பதவியளிக்கும்படி செய்த காந்திக்கு பண்டிட் சுக்லா நன்றி செலுத்தக் கடமைப் பட்டவரே. நன்றிக்குப் பிரதி நன்றி காட்டுவது உத்தமமான குணமே. ஆனால் பண்டிட் சுக்லா காந்தியாருக்கு நன்றி காட்டிய முறை அவருக்கு அவமதிப்பையும் உண்டுபண்ணக் கூடியதாகவே இருக்கிறது. அது எப்படியிருந்தாலும் “மகாத்மா" பட்டத்துக்குரிய யோக்கியதை காந்தியாரிடம் உண்டா என ஆராய்ந்து பார்ப்போம். பகுத்தறிவை முன்நிறுத்தி விஷயங்களையும் ஆட்களையும் பரிசீலனை செய்யும் நேர்மையாளர் எல்லாம் “மகாத்மா" பட்டத்துக்குரிய யோக்கியதை ஒன்றாவது காந்தியாரிடம் இல்லையென்றே கூறுவார்கள்.

காங்கரசில் காந்திக்கு என்ன வேலை?

நான்கு அணா மெம்பர்கூட இல்லாத காந்தியார் காங்கரசிலே சர்வாதிகாரி நாடகம் நடத்தி வருவதே அதற்கு முதல் காரணம். காங்கரசிலிருந்து அவர் நீங்கக் காரணம் என்ன? பார்லிமெண்டரி முறையில் தமக்கு நம்பிக்கையில்லை யென்று சொன்னவர் காங்கரஸ்காரர் பதவியேற்பதை ஆதரித்ததேன்? “காங்கரசிலே பலாத்காரமும் பதவி வேட்டையும், போட்டியும் அதிகமாகிவிட்டது அதன் ஊழல்களின் பளுவினாலேயே அது சின்னாபின்னப்பட்டு அழிந்தொழியக்கூடும். அகிம்ஸையிலும் சத்தியத்திலும் நம்பிக்கையுடையவர்கள் காங்கரஸ் நலத்தை முன்னிட்டு காங்கரசைவிட்டு வெளியேறி காங்கரசில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு ஆக்க வேலை செய்ய வேண்டும்” என ‘ஹரிஜன்’ பத்திரிகையில் அவரது சொந்தக் கையினாலே எழுதிக்கொண்டு மாகாணங்களில் அரசியல் நெருக்கடியுண்டாகும்போது தலையிட்டு வைஸ்ராய்களுக்கும், கவர்னர்களுக்கும் எச்சரிக்கைகள் அனுப்பி "பலாத்காரமும் பதவி வேட்டையும் போட்டியும் நிரம்பிய” காங்கரஸை ஆதரிக்க முயல்வது என்ன யோக்கியதை? வாக்குக்கும் செயலுக்கும் ஒற்றுமை காட்டாத ஒருவரை எப்படி “மகாத்மா” என அழைக்க முடியும்? பட்டினி கிடப்பதும் பிரார்த்தனை நடத்துவதும் மெளன விரதமிருப்பதும் “மகாத்மா” பட்டத்துக்குரிய குணங்களானால் இம்மூன்றிலும் காந்தியாரைத் தோற்கடிக்கக்கூடிய ஆண்டிகள் எத்தனையோ பேர் நாட்டில் இருக்கிறார்களே. அவர்களை ஏன் காங்கரசுக்கு தலைவராக்கக்கூடாது? காங்கரசில் அவருக்கு சர்வாதிகாரி பதவியளித்திருப்பது அவரது அரசியல் ஞானத்துக்காகவா? நேர்மையான குணத்துக்காகவா? அல்லது நாட்டு மக்களுக்குத் தலைமை வகித்து நடத்துவதற்கு அவருக்கிருக்கும் ஆற்றலுக்காகவா? “காந்தியார் காங்கரசைத் தேடிப் போகவில்லை - காங்கரசே காந்தியாரைத் தேடிப் போகிறது. அவருடைய உதவி காங்கரசுக்கு இன்றியமையாததாயிருக்கிறது” என காந்தி பக்தர்கள் ஒரு நொண்டிச் சமாதானம் கூறுவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. அப்படியானால் காந்தி செத்துப் போன பிறகு காங்கரஸ் என்ன செய்யப்போகிறது? காந்தியை விட்டால் காங்கரஸை இயக்க வேறு ஆளில்லையென ஏற்படுமானால் காங்கரஸை இப்பொழுதே கலைத்து விடுவதல்லவா நல்லது! இந்தியாவுக்கு பூரண சுயராஜ்யம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு பிரமாதமான திட்டங்கள் போட்டு வேலை செய்து வருவதாய்ச் சொல்லிக்கொள்ளும் காங்கரசுக்கு, காந்தி செத்தால் வேறு கதியில்லையென ஏற்படுமானால் அந்த காங்கரஸ் இப்பொழுதே ஒழிய வேண்டியதுதானே நியாயம்?

தனி மனிதனை நம்பினால்?

காங்கரஸ் திட்டங்களையும் கொள்கைகளையும் நம்பிக் கொண்டு காங்கரஸ் மந்திரிகள் ஏதேதோ வேலைகள் செய்து வருகிறார்கள். உதாரணமாக சென்னை முதன்மந்திரியார் காங்கரஸை நம்பி சுமார் 4லீ கோடி வரை கடன் வாங்கி நிருவாகம் நடத்தத் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் தற்கால நிலையில் எந்த நிமிஷத்திலும் அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடும். ஏதேனும் ஒரு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நிலைமையை சமாளிக்க சக்தியில்லையானால் காங்கரஸ் மந்திரி சபைகள் கவிழத்தானே செய்யும். கவிழும்போது அவர்கள் போட்டத் திட்டங்களின் கதி என்னாகும்? ஒரு தனி மனிதனை நம்பி வாழும் ஸ்தாபனம் உருப்படுமா? ஒரு ஸ்தாபனத்தின் வெற்றி ஆளைப் பொறுத்ததா? கொள்கையைப் பொறுத்ததா? ஒரு ஸ்தாபனத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஒழுங்காக இருந்தால் எவர் வேண்டுமானாலும் அந்த இயக்கத்தை நடத்த முடியும். ஒரு ஆளின் திறமையினாலோ மகிமையினாலோ அல்லது வேறு ஏதேனுமொன்றினாலோ நடத்தப்படும் இயக்கம் நாம் நினைக்கும் பலனை அளிக்கவே செய்யாது. பொய்யான அடிப்படையின் மீதே இன்று காங்கரஸ் ஸ்தாபனம் நின்று வருகிறது.

மூன்று திட்டங்கள்

கதர், தீண்டாமை விலக்கு, வார்தா திட்டம் முதலியன குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. காந்தியார் ஆயுட்காலத்திலேயே காதிவஸ்திராலயங்களில் பல லக்ஷம் விலை பிடிக்கக்கூடிய கதர் தேங்கிக் கிடப்பது கதர் திட்டத் தோல்விக்கு மறுக்க முடியாத அத்தாட்சி. நூற்போருக்கு அதிகக் கூலி கொடுக்கும் பொருட்டு கதர் விலையைக் கூட்டும் பொருளாதார ஞானத்தை மதக்கிறுக்கரான காந்தியிடமின்றி வேறு எவரிடமும் காண முடியாது. வங்காளத்திலே கதர் திட்டம் தோல்வியடைந்து விட்டதென்று ஒரு காலத்திலே பெரிய கதர் பக்தராயிருந்தவரும் தம் வாழ்நாளில் ஒரு கண்ணியமான பகுதியை கதர் பிரசாரத்தில் செலவு செய்தவருமான ஸர். பிரபுல்லா சந்திரரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார். அம்மட்டோ! பொருளாதாரச் சார்பாகப் பார்த்தால் கதர் திட்டம் பெருந்தோல்வியெனவும் தீர்ப்புக் கூறிவிட்டார். இரண்டாவதாகத் தீண்டாமையொழிப்பின் நிலைமை என்ன? வர்ணாச்சிரமத்தைக் காப்பாற்றிக் கொண்டே தீண்டாமையை ஒழிக்க முடியுமா? நான் கூறும் வர்ணாச்சிரமம் வேறு, வைதீகர் கூறும் வர்ணாச்சிரமம் வேறு என காந்தியார் கூறிக் கொண்டாலும் கிரியாம்சையில் இரண்டும் ஒன்றாகத்தானே இருக்கிறது. ஜாதியை ஒழியாமல் தீண்டாமையை ஒழிக்க முயலும் காந்தியார் முயற்சி எந்நாளாவது வெற்றி பெறுமா? “ஹரிஜன”ங்களுக்கு அனுமதியளியாத அகமாதாபாத் ஹோட்டல்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என பம்பாய் சர்க்கார் உத்தரவு போட்டார்கள். ஆனால் அந்த உத்தரவை அமலில் கொண்டு வர பம்பாய் சர்க்காரால் முடியவில்லை. “ஹரிஜன”ங்களுக்கு அனுமதியளிப்பதை விட ஹோட்டல்களையே மூடிவிடுகிறாம் என ஹோட்டல்காரர்கள் பிடிவாதம் செய்கிறார்கள். அகமதாபாத்தில் காந்தியாருக்கு மிக்க செல்வாக்குண்டு. சர்க்கார் உத்தரவை அமலில் கொண்டுவரும்படி உதவிபுரிய காந்தியார் ஏன் அகமதாபாத்துக்கு வரக்கூடாது? வந்தால் அவருடைய செல்வாக்கின் யோக்கியதை வெட்ட வெளிச்சமாகிவிடும். அதனாலேயே அகமதாபாத் சமாசாரம் தமது காதில் விழாதது போல பாவனை செய்து கொண்டிருக்கிறார். அப்பால் வார்தா கல்வித்திட்டம் உருப்படாத் திட்டமென கல்வி விஷயமாக அபிப்பிராயம் கூற உரிமையும், ஆற்றலுமுடையவர்கள் எல்லாம் கூறிவிட்டார்கள். கதர், தீண்டாமையொழிப்புத் திட்டங்களுக்கு ஏற்பட்ட கதியே வார்தா திட்டத்துக்கும் ஏற்படப் போகிறது.

காந்தி கபட சந்யாசி

காந்தியாரை ருஷ்ய மாய சன்யாசியான ரஷ்புடீனுக்கு ஒப்பிடுவது தப்பாகுமா என “விடுதலை” இம்மாதம் 1-ந் தேதி எழுதிய தலையங்கத்தில் கேட்டது. “சந்தேகம் வேண்டாம். காந்தி அசல் ரஷ்புடீன்தான். அவருடைய காந்தி சேவாசங்கம் ‘குளு க்ளக்ஸ் கிளான்’ குழுதான்” என பீரார் மாகாணத்தைச் சேர்ந்த தோழர் என்.கே. வாத்யா காந்தியாருக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பகிரங்கக் கடிதத்தில் அவர் காந்தியாரைப் பற்றி கூறியிருக்கும் கதை ஒரு பெரிய கதை. காந்திக் கிறுக்குகளில் நம்பிக்கையில்லாதவர்களை அநாமதேயங்களாக்கி காந்தியார் அரசியல் கொலைசெய்துவிட்டார் என்பது தோழர் என்.கே.வாத்யாவின் முதல் குற்றச்சாட்டு. ஆம். கதர் உடுப்பவர்கள்தான் தேசபக்தர்கள், நூல் நூற்பவர்கள்தான் தேசபக்தர்கள், சிறை புகுந்தவர்கள்தான் தேசபக்தர்கள் என ஏற்பட்டுவிட்டதினால் தென்னாட்டிலே அரசியல் அயோக்கியர்களாகிவிட்ட எத்தனையோ அறிவாளிகளையும், அனுபவசாலிகளையும் நாம் பார்க்கவில்லையா? மாஜி திவான் பகதூர் டி.எ.ராமலிங்கம் செட்டியாருக்கு ஆச்சாரியார் தயவினால் கெளன்சிலில் ஒரு மெம்பர் பதவியாம். தோழர் சுப்பய்யாவுக்கு உரிமையினால் அசம்பிளியில் மெம்பர் பதவியாம். (காங்கரசில் சேராத பார்ப்பனரல்லாதார்) அவர்கள் எவ்வளவு மேதாவிகளாக இருந்தாலும் அரசியல் வாழ்வுக்கு யோக்கியர்களல்ல என வைத்துக்கொண்டாலும் மாஜி அட்வகேட் தோழர் டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியாருக்கு தோழர் ஆச்சாரியார் ஆசீர்வாதம் பெற்ற பிறகும் கெளன்சிலிலோ அசம்பிளியிலோ ஒரு ஸ்தானம் பெற முடியாது போய்விட்டதென்றால், இந்திய அரசியல் பொதுவாழ்வு எவ்வளவு தூரம் கேவலமாகிவிட்டதெனக் கூறவும் வேண்டுமா? தோழர் மயிலை ஸ்ரீநிவாசய்யங்கார் மீண்டும் அரசியலில் புகுங் காலத்தைப் பற்றி பிரஸ்தாபித்த போது அரசியலுக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு நீங்கினால்தான் தோழர் எஸ். ஸ்ரீநிவாசய்யங்கார் மீண்டும் அரசியலில் புகக் கூடும் என ஸர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஒரு பொதுக் கூட்டத்திலே சொன்னார். ஆம் காந்தியார் மதத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும் அரசியலில் புகுத்தி இந்திய அரசியல் வாழ்வையே குட்டிச்சுவராக்கிவிட்டார். காலிகளுக்கும், கூலிகளுக்கும், கலாட்டாக் காரர்களுக்குமே இப்பொழுது அரசியலில் இடமுண்டென்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படப் போவதே இல்லை.

இரண்டாவது குற்றச்சாட்டு

மாயசந்நியாசி வேஷம் பூண்டு பாமர மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பயனாக பிரிட்டிஷாரோடு பேரம் பேசிப் பெற்ற அரசியல் அதிகாரத்தை தேசமுன்னேற்றத்துக்கு முரணான முறையில் காந்தியார் பிரயோகம் செய்து வருகிறார் என்பது தோழர் வாத்யாவின் இரண்டாவது குற்றச்சாட்டு. ஆம் மெய்யே! எப்படியோ காந்தியார் காங்கரஸ் சர்வாதிகாரியாகிக் கொண்டார். காந்தியாரோடு பேரம் பேசினாற்றான் அரசியல் விவகாரங்கள் முடிவுபெறுமென பிரிட்டிஷாரும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே காங்கரஸ் மந்திரிகள் மீது அவருக்கு மிகச் செல்வாக்கு இருந்து வருகிறது. காந்தியார் ஆசீர்வாதம் பெறாதவர்களுக்கு மந்திரி பதவியோ காங்கரஸ் தலைவர் பதவியோ கிடையாது என்பது ஒரு காங்கரஸ் ஐதீகமும் ஆகிவிட்டது. இவ்வாறு பெற்ற அதிகாரத்தை அவர் பிரயோகம் செய்யும் முறை மிகவும் அருவருக்கத்தக்கதாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் வேண்டாதவர்களையெல்லாம் சிரச்சேதம் செய்துவருகிறார். சர்தார் படேலுக்கு வேண்டாத நரிமனும், டாக்டர் காரேயும் கவிழ்க்கப்பட்டுவிட்டனர். காந்தி ஆதரவு பெற்ற படேலின் யதேச்சாதிகாரக் கொடுமையினால் பம்பாய் மாகாண காங்கரஸ் இரண்டுபட்டு நிற்கிறது. காந்தியாருக்கு வேண்டியவரான தோழர் ஆச்சாரியார் செய்யும் அட்டூழியங்களுக்கெல்லாம் காந்தியார் பகிரங்கமாக ஆதரவளித்தும் வருகிறார். காங்கரஸ் தலைவரையோ காங்கரஸ் காரியக் கமிட்டியையோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையோ லட்சியம் செய்யாமல் தன்னிஷ்டப்படி காரியங்கள் நடத்தி வருவதுடன் தமது உதவியில்லாமல் காங்கரஸ் காரியங்களே நடைபெறாதென பெரும்பாலான காங்கரஸ் தலைவர்கள் நம்பும்படி இந்த இந்திய ரஸ்புடீனான காந்தியார் மாயாஜாலம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டார். இவ்வாறாக காந்தியார் திருக்கூத்துக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால் அது ஒரு பாரதமாக வளர்ந்துவிடும். ஆகவே கடைசியாக அவர் நடத்திய ஒரு திருவிளையாட்டைப் பற்றி மட்டும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம்.

கடைசித் திருவிளையாட்டு

தரித்திர நாராயணர்களான இந்தியர்களுக்கு சுவர்க்கலோகம் அளிக்கும் பொருட்டு காந்தியார் கிராம கைத்தொழில் அபிவிருத்தி சங்கம் ஒன்று ஸ்தாபித்திருப்பதையும் அது வேலை செய்து வருவதையும் அன்பர்கள் அறிந்திருப்பார்கள். அந்தச் சங்கத்தார் வார்தாவிலே வெல்ல ஆராய்ச்சி நடத்துகிறார்கள். அந்த ஆராய்ச்சிக்காக மத்திய மாகாண - பீரார் சர்க்கார் இலவசமாக கொஞ்சம் கள்ளிறக்கும் மரங்களையும் கொடுத்திருக்கிறார்களாம். அந்த மரங்களிலிருந்து வார்தா ஆச்சிரம தொண்டர்கள் ‘கள்’ இறக்கி வெல்லம் காய்ச்சும் பொருட்டு செம்புப் பானைகளில் வைத்திருந்தார்களாம். அதைச் சில தொண்டர்கள் குடித்தார்களாம். புளித்துப்போன கள்ளின் விஷத்தினால் மாண்டார்களாம். இந்த ரகசியத்தை வெளியிடாமல் வாந்தி பேதியால் அவர்கள் மாண்டதாக ஒரு கதை கட்டி விடப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த சம்பவத்தை பற்றிப் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தோழர் என்.கே. வாத்யா தமது பகிரங்கக் கடிதம் மூலம் காந்தியாரைக் கேட்டிருக்கிறார்.

கேள்விகள்

1. தங்கள் ஆச்சிரமவாசிகள் மூவர் வாந்தி பேதியால் இறக்க வில்லையென்றும் வேறு நோயால் இறந்தார்கள் என்றும் கூறப்படுவது மெய்தானா?

2. அவர்கள் “பொட்டமின்” விஷத்தால் இறந்தார்கள் என்பது உண்மைதானா?

3. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோய்க்காக சிகிச்சை செய்ய வேண்டுமென்று தாங்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ யோசனை சொன்னதுண்டா?

4. வெல்ல ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு மத்திய மாகாண - பீரார் சர்க்கார் கருணைகூர்ந்து இலவசமாக அகில இந்திய கிராமக் கைத்தொழில் அபிவிர்த்தி சங்கத்துக்களித்த மரங்களிலிருந்து இறக்கிய பதநீரை ஆச்சிரமவாசிகள் சிலர் குடித்ததுண்டா?

5. அப் பதநீரை ஒரு செம்புப் பானையில் வைத்திருந்ததும் அது புளித்து விஷமானதும் மெய்தானா?

6. அந்த விஷமாக மாறிய பதநீரைக் குடித்த ரகசியத்தை வெளியாக்கக் கூடாதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மெய்தானா?

இக்கேள்விக்கு காந்தியார் விடையளித்தாலும் சரி; விடையளிக்கா விட்டாலும் சரி. இதுகாறும் நாம் கூறியவற்றால் காந்தியார் “மகாத்மா” பட்டத்துக்கு லாயக்குடையவரல்லவென தைரியமாகக் கூறிவிடலாமல்லவா! அவருடைய செல்வாக்கிலிருந்து - அதிகாரத்திலிருந்து இந்தியா விடுதலை பெறாதாவரை இந்தியா முன்னேற்றமடையப் போவதில்லை யென்றும் முடிவு கூறலாமல்லவா?

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 18.09.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: