பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகத்தில் தோழர் ஜவஹர்லால் முக்கிய நடிகரானாலும் காந்தியாரும் முக்கிய நடிகரில் முன்னணியில் இருப்பவரானதால் அவரது நடிப்பும் கவனிக்கத்தக்கதாகும்.

அவர் வெறும் பழம் பாடங்களைப் படித்து பழய ஆசாமிகளுக்கு ஆறுதலளித்து இருக்கிறார். காங்கிரஸ் எங்கு புரட்சிகரமான காரியத்தை நினைத்துவிடுமோ என்று பயந்த பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் பயம் நீங்கும்படியாயும், தைரியம் உண்டாகும்படியாகவும் தந்திரமாய் பேசி மழுப்பி இருக்கிறார்.

ஆனால் தோழர் காந்தியார் இதுவரையில் பேசிவந்த பாமரத்தனமான பேச்சுகளிலெல்லாம் இந்த காங்கிரஸ் பொருட்காட்சி திறப்பு பேச்சு பல அம்சங்களில் மிக மிக பிற்போக்கானது என்பது நமது கெட்டியான அபிப்பிராயமாகும். எப்படி எனில்,

"பருத்தி நூல் முனையிலும், ராட்டை முனையிலுமே சுயராஜ்யம் இருக்கிறது" என்று கூறி இருக்கிறார். இது பழம் பாடம் என்று சொல்லி தள்ளிவிடலாம். ஆனால் சுயராஜ்யத்துக்கு "நான்கு முக்கிய அம்சம்" கூறுகிறார்.

அவையாவன:-

1. அனைவரும் இன்புற்றிருக்க வசதி வேண்டும்.

2. யாரும் பசியால் வாடக்கூடாது.

3. செளகரியமான வாழ்க்கைக்கு அவசியமான எல்லா வசதிகளும் வேண்டும்.

4. ஸ்திரீகளும் புருஷர்களும் தங்களுக்கு இஷ்டமான ஆடம்பரமான - அலங்காரமான உடை உடுத்தி மகிழ தாராளமாய் இடம் இருக்கவேண்டும். மொத்தத்தில் அரசியல் துறை முன்னேற்றம்போலவே பொருளாதாரத் துறை முன்னேற்றமும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். (இது 28-12-36-ந் தேதி "சுதேசமித்திர"னில் இருக்கிறது)

இந்த 4 அம்சங்களும் பொருளாதார முன்னேற்றமும் பருத்தி நூல் முனையிலோ, ராட்டினத்தின் முனையிலோ உண்டாகுமா என்பதை தோழர்கள் ஜவஹர்லாலையும் சத்தியமூர்த்தியையுமே கேட்கின்றோம். இதைப் பார்க்கும்போது இவ்வளவு முயற்சியும் எவ்வளவு பயனற்றது என்பது விளங்குகிறது.

மற்றும் தனது சுயராஜ்யம் மேல்நாடுகளில் எவற்றிலும் இருக்கின்றதுபோன்ற சுயராஜ்யம் அல்லவென்று சொல்லுவதோடு அதை இப்போது "நான் விளக்குவதற்கில்லை" என்று மழுப்புகிறார். பின்னும் தனது சுயராஜ்யம் ராமராஜ்யம் தான் என்கிறார். (இதுவும் 28-12-36ந் தேதி "சுதேசமித்திரன்" 7-ம் பக்கம் 2-வது கலத்தில் இருக்கிறது)

சட்டசபையைப்பற்றி பேசுகையில் "சட்டசபைமூலம் நமக்கு ஒரு நன்மையும் ஏற்படாதென்றே சொல்லுகிறேன்"

"சட்டசபை பிரவேச மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும்?"

"ராட்டை நூற்றால் சுதந்தரம் பெறலாம்; ராட்டை நூற்காததாலேயே சுதந்திரம் இழந்தோம். சுதந்திரத்திற்கு வேறு வழிகாட்டுங்கள்"

"இதுவரை சுதந்திரத்துக்கு யாரும் புதிய வழி காட்டவில்லை"

"சுதந்திரமில்லாததற்கு நாமே காரணம். நமது முட்டாள் தனத்தாலேயே (நூல் நூற்காததாலேயே ப-ர்) சுதந்திரமிழந்தோம். பிரிட்டிஷாரே காரணம் அல்ல"

"நூல் நூற்பதே தரித்திரத்தையும் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கவல்லது."

"நம் கதரணிபவர்களில் சிலர் மோசக்காரரும் கொலைகாரருமாவதற்கு தயங்காதவர்கள்" என்பதாக வெல்லாம் பேசி இருக்கிறார். மற்றும்,

"எனது திட்டம் நிறைவேற்றி வைக்கப்படவில்லை" என்ற தலைப்பில் இந்து முஸ்லீம் ஒற்றுமைத் திட்டம், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதா? திருவாங்கூர் ராஜாதான் தீண்டாமை ஒழிப்பு பிரகடனம் செய்தார். ஆனால் ஜாதி இந்துகள் (காங்கிரஸ் ப-ர்) செய்தது என்ன?"

"பகிஷ்காரத் திட்டங்களை நடத்திக் கொடுத்தீர்களா? மது அருந்துவதை நீங்கள் எத்தனை பேர் விட்டீர்கள்?" என்றெல்லாம் பச்சையாக காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையையும் காங்கிரசு ஒரு காரியமும் சாதிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்திவிட்டார். (இதுவும் "சுதேசமித்திர"னில் இருக்கிறது)

"நான் வைசிய ஜாதி ஆனதால் அடிக்கடி எனது வியாபாரத்தை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. ஆதலால் பழய திட்டம் பலிக்காததால் புதுத்திட்டம் போடுகிறேன். அதுதான் சட்ட சபை திட்டம். ஆனால் ராட்டினம் மூலம்தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய சட்ட சபை மூலம் கிடைக்கமாட்டாது என்று திரும்பவும் கூறுகிறேன்" என்கிறார்.

"நானும் ஜவஹரும் இப்போது ஜெயிலுக்கு போகவேண்டிய அவசியமிருந்தால் அவ்வாறே செய்வோம். தூக்கு மேடைக்கும் போவோம்" என்பதிலிருந்து சிறைசெல்வது இனி பயன்படாது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார் என்பதற்கும் இது ஒரு சாட்சியாகும்.

மற்றும் லார்ட் லின்லித்சோவும் அவர் வகை மனிதர்களும் நாங்கள் போய்விடவா என்று கேட்டால் "வேண்டாம் வேண்டாம் இங்கேயே இருங்கள் ஆனால் இந்தியாவுக்கு ஏற்ற விதமாக (உங்கள் ஆட்சி ப-ர்) இருக்க வேண்டும்" என்று சொல்லுவாராம். இதிலிருந்து பூரண சுயேச்சை என்பதும் வெள்ளைக்காரர் அடியோடு ஆட்சியில் இருந்து விலகவேண்டும் என்பதும் வெறும் பகட்டு வார்த்தை என்பது விளங்கும்.

ஆகவே காந்தியார் வருணாச்சிரம ராமராஜ்ய வாதியாகவும் ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரத்தோடு இருக்க விரும்புகிறவராகவும் தனது திட்டத்தில் தோல்வி அடைந்து பயனற்ற சட்ட சபை மோகத்தை மக்களுக்கு அனுமதித்து இருப்பவராகவும் அதுவும் தன் திட்டத்தை மக்கள் ஏற்காததால் வீண் வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துக் கொள்வதுடன் இப்போது ஜெயிலுக்குப் போகவேண்டிய எண்ணமே இல்லையென்றும் வெளிநாட்டு அரசியல் திட்டமோ அபேதவாதத் திட்டமோ இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்றும் ஸ்பஷ்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார். இதையும் வைத்து பண்டிதர் ஜவஹர்லால் பேச்சையும் வைத்து பார்த்தால் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற மாறுதல் உள்ளது என்பதும் இரண்டு பைத்தியக்காரர்கள் பாமர மக்களை குரங்குபோல் ஆட்டி பெருமை அடைகிறார்கள் என்பதும் அதை பெரிய ஜாதிக்காரர்களும் சமய சஞ்சீவிகளும் பயன்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பதும் இந்த காங்கிரஸ் நாடகத்தின் கருத்தும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமுமாகும் என்பதே நமது அபிப்பிராயம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.01.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: