பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்த 50 - வது காங்கிரசைப் பற்றிக் "குடி அரசி"ல் நமது அபிப்பிராயத்தை எழுதிவிட்டு காங்கிரஸ் தீர்மானங்களின் தன்மையைப் பற்றி பின்னால் எழுதுவதாக எழுதியிருந்தோம்.

காங்கிரசின் 20 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரம் பொதுஜனங்களின் கவனத்துக்குக் கொண்டு வரத்தக்கதாகும். மற்ற தீர்மானங்கள் சடங்குத் தீர்மானங்களேயாகும். ஆதலால் அவற்றைப் பற்றி குறிப்பிடாமல் முக்கிய தீர்மானத்தைப் பற்றியே கவனம் செலுத்துவோம்.

அதாவது, சட்டசபை தேர்தலைப் பற்றிய தீர்மானம்.

"1935-ம் வருஷத்து இந்திய கவர்ன்மெண்ட் ஆக்ட் என்னும் அரசியல் சீர்திருத்தமானது இந்தியருடைய விருப்பத்துக்கு மாறானது. ஆதலால் அதை இந்த காங்கிரஸ் நிராகரிக்கிறது.

அதனோடு ஒத்துழைப்பது இந்திய சுதந்திர எழுச்சிக்கு துரோகம் செய்ததாகும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவின் மீது உள்ள ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாகும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் ஏற்கனவே சுரண்டப்பட்டுள்ள இந்திய மக்களை இந்த புதிய அரசியல் இன்னும் கசக்கிப்பிழிந்து வேலை வாங்கி தரித்திரர்களாக்கும் என இக்காங்கிரஸ் அபிப்பிராயப்படுகிறது.

ஆகையால், இந்த புதிய அரசியலுக்கு கீழ்ப்படிவதில்லை என்றும், இதனுடன் ஒத்துழைப்பது இல்லை என்றும் இதை ஒழிப்பதற்கு சட்டசபைக்கு உள்ளும் வெளியிலும் போராடுவது என்றும் காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்து கொண்டிருப்பதை இக்காங்கிரஸ் மீண்டும் எடுத்துரைக்கின்றது" என்பது முக்கிய தீர்மானமாகும்.

மற்ற அம்சங்களைப்பற்றிய விவரங்களில்,

இந்தியாவுக்கு அரசியல் அமைக்க பிரிட்டிஷாருக்கு உரிமை கிடையாது என்பதையும், இந்தியாவுக்குப் பூரண ஜனநாயகத்துவமே தேவை என்பதையும், சட்டசபை அபேக்ஷகர்கள் காங்கிரஸ் தேர்தல் பிரச்சினையையே பிரசாரம் செய்ய வேண்டுமென்பதையும் விளக்கிவிட்டு சட்டசபையில் உள்ள காங்கிரஸ் அங்கத்தினர்கள் இந்தியாவின் அரசியலை நிர்ணயிப்பதற்கு ஜனப்பிரதிநிதி சபை கூட்டவேண்டும் என்றும், வயது வந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை கொடுத்து அவர்களைக் கொண்டே பிரதிநிதிசபை கூட்டவேண்டும் என்று கோர வேண்டுமென்றும் கட்டளை இட்டுவிட்டு,

உத்தியோகம் ஏற்பு விஷயத்தில்,

"உத்தியோகம் ஏற்பதா கூடாதா என்பதை மாகாண அசம்பிளி தேர்தல் முடிந்த பிறகு அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியே எவ்வளவு சீக்கிரமாக முடிவு செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிவு செய்யும்.

தேர்தலுக்குப் பிறகு பல மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும் தங்கள் ஜில்லாக் கமிட்டியையும் ஸ்தல கமிட்டியையும் கலந்து ஆலோசித்து இவ்விஷயமாக தமது சிபார்சுகளை அ.இ. காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பவேண்டும். அதன் பேரில் அ.இ.கா. கமிட்டி முடிவு செய்யும்" என்பது காங்கிரஸ் தீர்மானமாகும்.

ஆகவே இப்போது சட்டசபை அபேக்ஷகர்கள் சட்டசபைக்குப் போய் என்ன செய்வது என்பதற்கு ஒரு திட்டம் கிடையாது.

ஆனால் பொதுஜனங்களை ஏமாற்றவும் ஓட்டர்களை ஏமாற்றவும் மிகவும் சரியான திட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் இன்று காங்கிரஸ்காரர்களுக்குள் இரண்டுவித அபிப்பிராயமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாரார் பதவி ஏற்புக்காரர்கள். அதோடு பதவி பெற்று சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்து பயன்பெற அவா உடையவர்கள். மற்றொரு சாரார் முட்டுக்கட்டை மனோபாவமுடையவர்கள். ஆதலால் இத்தீர்மானம் இருவரையும் ஏமாற்றத் தகுந்தது. ஓட்டர்களோ 100க்கு 90 பேர் தற்குறிகள்; அரசியல் ஞானம் கற்பிக்கப்படாதவர்கள். அவர்களை இரு கூட்டத்தாரும் ஏமாற்ற இத்தீர்மானம் வசதியளிக்கிறது.

இது எப்படியோ இருக்கட்டும். முடிவில் அ.இ. காங்கிரஸ் கமிட்டி சட்டசபையில் முட்டுக்கட்டை போட்டு அரசியலை உடைக்க வேண்டுமென்று தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

காங்கிரசு எதிர்ப்பு - முட்டுக்கட்டை, சீர்திருத்தத்தை உடைத்தல் ஆகிய காரியங்களில் ஈடுபடப் போவதாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்படியானால் புது சீர்திருத்தத்தின்படி ஏற்பட்டிருக்கும் தேச ஆட்சி நடைபெறுவது எப்படி? அதை நடத்துபவர்கள் யார்? சொத்து காவல், நீதி சமாதானம், பரிபாலனம் ஆகிய காரியங்கள் பார்ப்பது யார்? உத்தியோகஸ்தர்களுடைய அக்கிரமங்களை கேட்பது யார்? ஒரே வகுப்பாரே உத்தியோகங்களை எல்லாம் கொள்ளைகொண்டு போகாமல், ஒரு வகுப்பார் ஆதிக்கம் ஏற்படாமல் பார்ப்பது யார்?

இந்திய மக்கள் வருஷம் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் வரிகொடுத்துவிட்டு அவர்கள் பிரதிநிதிகள் சட்டசபைக்குப் போவதற்கும் கோடிக்கணக்கில் ரூபாய் செலவழித்துவிட்டு அங்கு போய் அரசியலை முட்டுக்கட்டை போடுவதற்கும் அரசியலை உடைப்பதற்கும் நாள்களை வீணாக்கினால் நம்மால் கொடுக்கப்பட்ட வரி நாசமாகிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ் இந்திய ஜனப்பிரதிநிதி சபையாய் இருப்பது உண்மையாய் இருந்து, இந்திய மக்களும் காங்கிரசை ஆதரிப்பது உண்மையாய் இருந்து காங்கிரசின் கொள்கையும் அரசாங்க நடப்புக்கு முட்டுக்கட்டை போட்டு அரசியலை உடைப்பது உண்மையாயிருக்குமானால் முதலில் செய்ய வேண்டிய வேலை வரியைக் கொடுப்பதை நிறுத்துவதேயாகும். அப்படிக்கில்லாமல் வரியைக் கொடுத்துவிட்டு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்து சட்டசபைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமும் நிகழ்ச்சிக் குறிப்பும் இல்லாமல் வீணே அரசாங்கத்தார் ஏணி என்றால் கோணி என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்துக்கு தோல்வி மேல் தோல்வி, காங்கிரசுக்கு வெற்றிமேல் வெற்றி என்று பத்திரிகைகளில் எழுதிக்கொண்டு காலத்தைப் போக்கினால் மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றோம்.

தோழர் புலாபாய் தேசாய் அவர்கள் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் 100க்கு 50வீதம்தான் ஜெயிக்கக்கூடும் என்று வியக்தமாய்ச் சொல்லி விட்டார். தோழர் காந்தியார் காங்கிரசுக்காரர்களின் முட்டுக்கட்டை, சீர்திருத்த உடைப்பு ஆகிய வேலைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது ஷெட்யூல் வகுப்பார்கள் சம்மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். தோழர் ஜின்னாவும் மற்றும் உள்ள முஸ்லீம் சங்கத்தார்களும் காங்கிரசை வால் பிடிக்கக்கூடாது, பின்பற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் சமதர்மம் மதத்துக்கு விரோதம் என்றும் சீர்திருத்தத்தை உடைப்பது ராஜத்துரோகம் என்றும் சொல்லிவிட்டார்கள். மற்றபடி ஜமீன்தாரர்கள், வியாபாரிகள், நிலச்சுவான்தாரர்கள் அழிவு வேலை ஜன சமூகத்துக்கும் முற்போக்குக்கும் கேடு என்று சொல்லுகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதெங்கே? சீர்திருத்தத்தை உடைப்பது எங்கே என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

1920ம் வருஷத்திய சீர்திருத்தத்தை உடைப்பதற்கு வக்கீல்கள் வேலையைவிட்டு மாணவர்கள் பள்ளியைவிட்டு முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு தாலூக்கா போர்ட் காலியாக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்கள் பொது மக்களிடம் வசூல் செய்து செலவழிக்கப்பட்டு வேலை விட்ட வக்கீல்களுக்கும் பள்ளி விட்ட மாணவர்களுக்கும் அந்தப் பணத்தில் வேலை கொடுத்து சம்பளம்- நிவேதனம் கொடுத்து பதினாயிரக்கணக்காய் மக்கள் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு ஜெயிலுக்கு போனவர்கள் குடும்பத்துக்கும் அலவன்ஸ் கொடுத்து இவ்வளவும் செய்தும் ஒரு காரியமும் நடவாமல் தோழர்கள் தாஸ், நேரு, சீனிவாசய்யங்கார், லஜபதிராய், மகமதலி, ஷவ்கத்தலி போன்ற உண்மையிலேயே நாட்டில் பெருமையும் மதிப்பும் செல்வமும் அறிவும் வீரமும் உள்ள ஆட்கள் எல்லாம் தலைகீழாய்த் தொங்கிப்பார்த்தும், ஆகாத காரியத்தை காந்தியார் காங்கிரசிலிருந்து விலகி, ராஜகோபாலாச்சாரியார் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிற காலத்தில் மற்றும் பலர் காங்கிரசை எதிர்த்துக்கொண்டிருக்கிற காலத்தில் - ஜாதி ஜாதியாய் வகுப்பு வகுப்பாய் மதம் மதமாய் மக்கள் பிரிந்து நிற்கும் காலத்தில் சத்தியமூர்த்தியும் ஜவஹர்லாலும் தலைவர்களாகவும் சர்வாதிகாரிகளாகவும் இருக்கும் காலத்தில் - மாத சம்பளக்காரர்கள், கூலிகள், சட்டசபை பதவி முதலிய மோகக்காரர்கள் மாத்திரமே அபிமானிகளாகவும் தொண்டர்களாகவும் பிரமுகர்களாகவும் இருக்கிற இந்தக் காலத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றோம்.

ஜவஹர்லால் ஆசைப்படுகின்றபடியும் சத்தியமூர்த்தியார் சொல்லுகிறபடியும் ராஜகோபாலாச்சாரியார் கனவுப்படியும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்படும் ஆட்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். கவர்னர் சத்தியமூர்த்தியாரைக் கூப்பிட்டு மந்திரி லிஸ்ட்டு கொடுக்கும்படி கேட்பதாகவே வைத்துக்கொள்ளுவோம். தோழர் சத்தியமூர்த்தியார் 1. சத்தியமூர்த்தி, 2. பிரகாசம், 3. யாகூப்உசேன், 4. எம்.சி.ராஜா, 5. டாக்டர் சுப்பராயன், 6. சி.ஆர்.ரெட்டி, 7. முத்துரங்க முதலியார் அல்லது ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் பெயரைக் கொடுப்பதாகவே வைத்துக்கொள்ளுவோம். இவர்கள் போய் உட்கார்ந்த முதல் மீட்டிங்கில், "இந்த சீர்திருத்தம் பயன்படாதது, இதை ஒழிக்க வேண்டும், சர்க்கார் ஜனப்பிரதிநிதி சபை கூட்டி இந்திய பொதுஜனங்களின் அபிப்பிராயப்படி ஒரு சீர்திருத்த திட்டம் ஏற்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் இந்த சீர்திருத்தத்தையோ அரசாங்கத்தையோ நடத்த மாட்டோம்"

என்ற தீர்மானம் தோழர்கள் சுப்பையாவால் பிரேரேபிக்கப்பட்டு அண்ணாமலையால் ஆமோதிக்கப்பட்டு கிருஷ்ணசாமிபாரதியால் ஆதரிக்கப்பட்டு சொக்கலிங்கம் காமராஜன் ஆகியவர்களால் பின் தாங்கப்பட்டு 115 மெம்பர்களின் ஓட்டுகளால் காந்திக்கு ஜே, வந்தே மாதரம் என்கின்ற கோஷத்துக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவே வைத்துக்கொள்ளுவோம். மேலால் என்ன நடக்கும் என்று கேட்கின்றோம். கவர்னர் லீவ் எடுத்துக்கொள்வாரா? செகரட்டரிகள் ராஜினாமா கொடுத்து விடுவார்களா? பட்டாளங்கள் வெளியாக்கப்பட்டு போர்ட் சென்சார்ஜ் கோட்டை மூடப்பட்டு காங்கிரஸ் மண்டபம் சட்டசபை மண்டபமாகி விடுமா? என்று கேட்கின்றோம்.

அதுதான் போகட்டும், சட்டசபை காங்கிரஸ் மெம்பர்கள் செலவு பில்லாவது சட்டசபை காரியதரிசிக்கு கொடுக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம். என்ன காரியத்தை இத்தீர்மானமும் வெற்றியும் வந்தே மாதரமும் நிறுத்திவிடும் என்று கேட்கின்றோம்.

இந்திய சட்டசபையில் தோழர்கள் புலாபாயும் சத்தியமூர்த்தியும் மற்றும் மெஜாரிட்டி காங்கிரஸ் மெம்பர்களும் இருந்து 2லீ வருஷ காலமாய் என்ன காரியம் செய்ய முடிந்ததோ அதற்கு மேல் வரப்போகும் சென்னை சட்டசபையில் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றோம்.

இப்பொழுதே காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளு கிறார்கள். அதென்னவென்றால், இப்போதைய சீர்திருத்தத்தில் கவர்னருக்கு முன்பிருந்ததைவிட அதிகமான அதிகாரம் இருக்கிறது என்றும், சட்டசபையின் எந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துவிடலாம் என்றும் சொல்லுகிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களின் சீர்திருத்த மறுப்பு தீர்மானம் என்ன பலனை உண்டாக்கிவிட முடியும் என்று கேட்கின்றோம்.

பொதுஜனங்கள் முட்டாள்கள் என்றும், ஓட்டர்கள் பெரும்பாலோர் அரசியல் ஞானமற்றவர்கள் என்றும் காங்கிரஸ்காரர்கள் கருதியிருக்கும் முழு தைரியத்தால் பேசும் புரட்டுகளே இன்று காங்கிரஸ் கொள்கையாயிருக்கின்றது என்று சொல்லக்கூடுமே யல்லாமல் மற்றபடி காங்கிரசுக்கு காரியத்துக்கு பயன்படும்படியான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கின்றோம். உண்மையில் இன்று காங்கிரசில் சட்டசபைக்குப் போகிறவர்கள் பெரும்பாலும் யார் என்று பார்த்தால் உத்தியோகம் ஏற்று பலன் அனுபவிக்க வேண்டும் என்கின்ற கூட்டத்தார்கள் என்பது விளங்கும்.

தோழர் சத்தியமூர்த்தியாரும் அவரது அந்தரங்க நண்பர் தோழர் டாக்டர் சுப்பராயன் அவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை.

தோழர் சுப்பராயன் அவர்கள் 1927ம் வருஷத்தில் காங்கிரசுக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்ட மந்திரிகளில் ஒருவராயிருந்தபொழுது சைமன் கமிஷனை பகிஷ்கரித்து மற்ற மந்திரிகள் ராஜிநாமாக் கொடுத்த காலத்தில் இவர் ராஜிநாமாக் கொடுக்காமல் ஜஸ்டிஸ் கட்சியாரின் மந்திரியாக ஆகி மேல்கொண்டு 3லீ வருஷ காலம் பயன் அனுபவித்தவர். அப்படிப்பட்டவர் இன்று மந்திரியானால் வேறு யார் வெளியேறினாலும் நமது டாக்டர் அவர்கள் காலாவதி ஆகி சார்ஜெண்டு வெளியில் பிடித்துத் தள்ளினாலொழிய வெளியில் வந்துவிடக்கூடுமா என்று யோசிக்க விரும்புகிறோம்.

தோழர் சத்தியமூர்த்தியாரோ செல்லுமிடங்களில் எல்லாம் நான் மந்திரி ஆனால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன், தண்ணீர் கொண்டுவருவேன், வரி குறைப்பேன், போலீஸ்காரனை சலாம் போட வைப்பேன் என்கின்ற மந்திரங்களையே ஜெபித்து வருகிறார். சிலர் பட்டங்களை விட்டு விட்டுக்கூட மந்திரி பதவிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரசானது சட்டசபையில் முட்டுகட்டை போடப்போகின்றது என்பதையோ மந்திரி பதவியை கிடைக்கக்கூடுமானால் மறுக்கப் போகிறது என்பதையோ யார் நம்புவார்கள்?

எப்படி ஆன போதிலும் காங்கிரசின் நிலைமை அது எவ்வளவுதான் பாமர மக்களிடத்தில் மூடபக்தி பெற்றிருந்தாலும் இப்போது அது வெகு நெருக்கடியாக ஆகிவிட்டது. அதற்கு ஜெயித்தாலும் ஆபத்து தோற்றாலும் ஆபத்து என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் ஆகிவிட்டது. வெட்டி ஆடம்பரத்துடன் அதன் வாழ்வும் முடியப்போகிறது.

எப்படி எனில் ஜெயித்தால் மந்திரி பதவி ஏற்கும் போதே வகுப்புக் கலகம் ஏற்படும். பதவி ஏற்றபின் கொள்கையிலும் வேலைத் திட்டமுறையிலும் சதா தொல்லை நேரும். ஏதாவது ஒரு காரணத்தால் வெளியேற நேர்ந்தால் டாக்டர் சுப்பராயன் மந்திரிகாலம் போல் சிலர் தங்கிக்கொள்வார்கள். சிலர்தான் வெளியேறுவார்கள் என்கின்ற நிலைமை ஏற்படும்.

மந்திரி பதவி ஒப்புக்கொள்ளாவிட்டாலோ சட்டசபையில் இவர்கள் வேறு என்ன செய்ய முடியும் என்பதையும் இவர்கள் ஓட்டுப் பலத்தால் தோற்கடிக்கக்கூடிய தீர்மானங்களின் கதி என்ன ஆகும் என்பதையும் நாம் விளக்க வேண்டியதில்லை. அல்லது காங்கிரஸ் அல்லாத மந்திரிகளின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகவே வைத்துக்கொண்டாலும் அத்தீர்மானம் நிறைவேறிவிட்டாலும் அப்புறம் என்ன செய்வது? மந்திரிகள் இலாகாவை கவர்னர் ஏற்று நடத்துகிறார் என்றோ அல்லது சட்டசபை கலைக்கப்பட்டு மறுதேர்தல் ஏற்படுத்தப்படுகிறது என்றோ வைத்துக்கொள்வோம். அப்பொழுது கவர்னர் ஆட்சி செல்லுபடி யற்றதாகிவிடுமா? அல்லது மறுதேர்தலில் மறுபடியும் காங்கிரஸ் ஜெயிக்குமா? என்று பார்த்தால் வேலூர் ஜி. போ. காங்கிரஸ் மெம்பர்கள் ராஜினாமாக் கொடுத்த பின்பு என்ன பலன் ஏற்பட்டதோ அதுதான் ஏற்படுமே ஒழிய வேறு என்ன நடக்கக்கூடும்?

ஆகையால் காங்கிரசின் சட்டசபை வேட்டையானது அதன் அந்திய காலத்துக்கு சாதனமாய் முடியப்போகின்றது என்பதை இப்போதே "ஜோசியம்" கூறுகிறோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 10.01.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: