இந்திய மக்கள் கால்நடையில் இருந்து மாட்டுவண்டி பிரயாணம் ஆகி குதிரைவண்டியாகி ரயில் வண்டி ஆகி சைக்கிள் வண்டி ஆகி மோட்டார் வண்டி ஆகி ஆகாயத்தில் பறக்கும் ஏரோப்ளான் பிரயாணத்துக்கு வந்திருக்கிற காலத்தில் இன்றைய காந்தி சகாப்தத்திலும் ஜவஹர் அயனத்திலும் பழயபடி மாட்டு வண்டிப் பிரயாணம் மறுபடியும் துவக்கப்பட்டுவிட்டது. அதாவது பெய்ஸ்பூர் காங்கிரசில் தலைவர் ஜவஹர்லாலை 6 காளைமாடு பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலம் செய்தார்களாம். காங்கிரஸ்காரர்களின் இந்த பிற்போக்கு உணர்ச்சியில் நாம் ஆச்சரியப்படத்தக்கது ஒன்றும் இல்லை. ஏனெனில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ராத்தல் நூல் பூச்சிக்கூடு இழைபோல் நூற்கும் யந்திரங்கள் வந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு ராத்தல் நூல் மொந்தம் பழம் மொத்தம் நூற்கும்படியான கைராட்டினத்தை வைத்து பூஜிக்கிற தலைவரான காந்தியாரின் சிஷ்யர் மாட்டு வண்டிக்கு போவதில் எப்படி அதிசயமிருக்க முடியும்?

காந்தியார் இன்று மக்களை ஏமாற்றி மகாத்மா ஆன ரகசியமே பழய காட்டுமிராண்டித் தனத்தை - கல் ஆயுத காலத்தைப் புகழ்ந்தும் உபதேசித்தும் (பார்ப்பனர்கள் மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலந்து குடிப்பதே மோக்ஷம் என்று சொல்லி ஆச்சாரிகள் ஆனது போல்) அவற்றையே தேசீயமென்றும் விடுதலையென்றும் வெள்ளைக்காரனை ஓட்டும் "பிரம்மராக்ஷசு" என்றும் வஞ்சித்ததே ஒழிய வேறில்லை. இப்பொழுதும் காந்தியாரின் கிராம முன்னேற்ற வேலையும் கிராமப்புனருத்தாரண வேலையும் இது போலவேதான். அதாவது கொட்டைமுத்து எண்ணெய் விளக்கு எரித்தல், கருப்பட்டி இனிப்பு உபயோகித்தல், கைக்குத்து அரிசி சாப்பிடுதல், ஆடு மாடு மேய்த்து பால், தயிர், நெய் செய்து பட்டண வாசிகளுக்கு உதவுதல், பாலிய விதவைகள் ராட்டினத்தை கல்யாணம் செய்து கொண்டு இரவும் பகலும் அதனுடன் கொஞ்சுதல் என்கின்றது போன்ற "புதிய" முறைகளைக் கண்டுபிடித்து இந்திய மக்களை ஈடேற்ற வந்திருக்கும் மகாத்மாவின் சிஷ்யரான ஜவஹர்லால் மாட்டுவண்டி ஊர்கோலம் போவது ஏன் பொருந்தாது?

காங்கிரஸ் என்றாலே பாமர மக்களை ஏய்க்க வேண்டியது, காலிகளுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுக்கும் பாமர ஜனங்களை ஏமாற்றி மிரட்டிவெரட்டி வயிறு வளர்க்க வழிகாட்டிக் கொடுக்க வேண்டியது, இந்தக் கூட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜே போட வேண்டியது என்பதைத் தவிர வேறில்லை. ஆகவே மற்றவர்கள் எப்படி பட்டினியாய் எவ்வளவு இழிவாய் எவ்வளவு கொடுமையாய் வாழ்ந்தாலென்ன?

இன்று இந்த தலைவர்கள் போலவே புரோகிதர்களும் அர்ச்சகர்களும் வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு புரோகிதன் வயிறும் அர்ச்சகன் வயிறும் வண்ணான் தாழிபோல் இருக்கும். அவர்கள் பெண்ஜாதிமார்களுக்கு டபிள் பிரத்தில் 3 கஜம் துணி ஒரு ரவிக்கைக்கு வேண்டிய மாதிரி உடல் பெருத்திருக்கும். இவர்களுக்கும் மோட்சத்திற்குப் போக என்று காணிக்கை அழுகின்ற ஆட்கள் பாமர மக்கள் வயிறொட்டி, கண் குழிவிழுந்து, விலாவெலும்பு வெளியில் தெரிந்து கூட்டங்களில் மிதிபட்டு நசுங்குண்டு அலைந்து திரிந்து நோயுடன் வீடு வந்து சேர்வார்கள்.

வைதீக விஷயத்தில் இந்த நிலையுள்ள மக்கள் அரசியல் விஷயத்தில் மாட்டுவண்டி கட்டி ஓட்டுவது ஏன் சரியாகாது? எப்படியோ போய் தொலைந்தாலும் இன்றைய தலைவர்கள் என்பவர்கள் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்குக் கொண்டு போய்விட்டு மகாத்மாவாகவும் சமதர்ம வீரர்களாகவும் ஆகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதை குறிப்பிடுகிறோம்.

மற்றபடி முட்டாள்கள் கஷ்டப்பட்டு வருவதைப்பற்றி நாம் ஆத்திரப்படவில்லை. இமயமலை பனிக்கட்டியில் மூடப்பட்டு குளிரால் அவஸ்தைப்படுவதற்கு நாம் வருந்தி என்ன பயன் ஏற்படுத்த முடியும்? பித்தலாட்ட தேசியமும் வஞ்சக சுயராஜ்யமும் ஒழிந்து மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படும்போது தான் எல்லாம் சரியாய்விடும்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 17.01.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: