சென்னை மந்திரிசபை தனது நிஜமான நிறத்தோடு வெளிக்கிளம்ப துணிந்து முன் வந்து விட்டதாகத் தெரிகிறது.

இன்றைய அரசியல் கொள்கையில் காங்கிரசுக்கும் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களுக்கும் இதுவரை இருந்து வந்த பேதங்களில் முதலாவதாக இருந்தது வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்னும் கொள்கையாகும். இது இன்று இந்தியா முழுவதற்குமாக அரசியல் கொள்கைகளில் முக்கிய ஸ்தானம் பெற்றிருப்பதை மத்திய அரசாங்கத்தின் இடைக்கால சர்க்கார் அமைப்பில் உள்ள தகராறுகளைக் கொண்டு தெரியலாம்.

இப்போது நமது மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்பட்டதும் அது புதிதாக எவ்வித அனுகூலமும் இத்துறையில் செய்யவில்லை. ஆனாலும் முன் இருந்து வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை ஒழிக்கச் சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டது. இது தோழர் ஆச்சாரியாரின் முன்னைய மந்திரிசபை நடவடிக்கையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதானால் இந்த மந்திரி சபை தொல்லைக்கு ஆளாக வேண்டி வரும் என்று எச்சரிக்கை செய்கிறோம். பல காரணங்களால் எவ்வித தகராறுமில்லாமல் சமாதானமான தன்மையில் மந்திரிசபை நடைபெறப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களின் ஆசையைப் பங்கப்படுத்தும் காரியம் மிகவும் வெறுக்கத்தக்கதாகும். சுகாதார ஆரிய மந்திரி, பழைய சுகாதார மந்திரி டாக்டர் ராஜன் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது போலவே தெரியவருகிறது. இதற்கு மந்திரிசபையில் உள்ள திராவிட மந்திரிகள் இடம் கொடுப்பது பெரிதும் அவமானமானதும் கோழைத்தனமானதுமாகும்.

முன்னைய காங்கிரஸ் மந்திரிகள் பள்ளிக்குப் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்பாடு செய்திருந்த காலேஜ் கமிட்டி முறையை  எடுத்துவிட்டார்கள். பிறகு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவுகளுக்குத் தப்பு வியாக்கியானம் செய்து அதை பயனற்றதாக்க வேலை செய்தார்கள். இப்போதும் அதுபோலவே பதவிக்கு வந்தவுடன் அதே வேலையில் பிரவேசித்து இருப்பது நல்ல காரியமல்லவென்றே சொல்லுவோம்.

அதென்னவெனில், வைத்தியக் கல்லூரியில் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்க்கப்படவேண்டும் என்கின்ற உத்திரவைப் பாழாக்கவென்ற ஒரு புதிய முறை கண்டுபிடித்து இருப்பதேயாகும். அந்த முறையாவது - சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் 3-இல் 1 பாக மாணவர்களை வகுப்பு பிரிவு பார்க்காமல் தகுதி பார்த்து அதாவது அதிக மார்க்கு வாங்கின மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு மூன்றில் இரண்ட பாகமுள்ள எண்ணிக்கையை வகுப்புப்படி கொடுப்பது என்பதாகும்.

கீழ் பரீட்சையில் தேறி, வைத்திய வகுப்பில் சேர்க்கப்படத் தகுதியாக சர்ட்டிபிகேட் பெற்ற பிறகு மற்றொரு முறை தகுதி பார்ப்பது என்பது எதற்கு என்று கேட்கின்றோம். இதில் திராவிடப் பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு, ஆரியப் பிள்ளைகளுக்கு இடம் தருவது என்பதல்லாமல் வேறு என்ன கருத்து இருக்க முடியும்?

வைத்திய வகுப்புக்கு சேர்க்கப்பட மாணவருக்கு வேண்டிய தகுதி சட்டப்படி அவர்கள் இன்டர்மீடியேட் என்றும் F.A வகுப்பில் தேறி இருக்கவேண்டும் என்பதுதான்.

அப்படி இருக்க அதிக மார்க்கும் வாங்க வேண்டுமென்றால் அதற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவு தேவையில்லை என்றே சொல்லலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு தகுதியும் வேண்டுமானால் தகுதியானவர்கள் ஏராளமாக இருந்தால் அந்தந்த வகுப்புக்கு வந்த விண்ணப்பங்களில் அதிக தகுதி உள்ளவர்களை எடுக்க முயன்றால் அப்போது அந்த உத்திரவுக்குக் கேடில்லாத தகுதி கிடைக்கப் பெறலாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்குக் கேட்டை உண்டாக்கும் எந்த தகுதியையும் இந்த ஆரிய ஆதிக்கத்தில் ஒழித்தே ஆக வேண்டும் என்போம். ஏனெனில் அது திராவிடர்களை ஒதுக்கவும் ஆரியர்களை நிரப்பவும் வேண்டுமென்றே வஞ்சக எண்ணத்தின் மீதே தகுதி கற்பிப்பதாகும் என்பது நமது அனுபவபூர்வமான கருத்து.

ஆகவே, இந்தப் பார்ப்பன மந்திரியாகிய ருக்குமணி லட்சுமிபதி அம்மாள் இது விஷயத்தில் செய்யும் சூழ்ச்சி நிறைந்த அநீதியை ஆங்காங்குள்ள திராவிட மக்கள் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கண்டித்துத் தீர்மானம் செய்து மந்திரிக்கும், பிரதமருக்கும், காந்தியாருக்கும், கவர்னருக்கும், பத்திரிகைகளுக்கும் தந்தியும், ஏர்மெயிலில் கடிதமும் எழுதி அனுப்ப வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

காலேஜ் திறப்பதற்குள் இந்த உத்திரவு மாற்றப்பட வேண்டியதாதலால் மாணவர்களும் இதில் பங்கு கொண்டு கூட்டத்திற்கு முதலில் ஊர்வலமாய் நடத்திச் சென்று கூட்டம் போட்டுத் தீர்மானிக்க வேண்டுகிறோம்.

இந்த உத்திரவு மாற்றப்படாவிட்டால் இனி ஒவ்வொரு வகுப்புக்கும் இந்த கதியே வந்து சேரும் என்பதோடு வைத்திய உலகம் ஆரியர்கள் கைக்கே போய்ச் சேர்ந்து விடும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

குடிஅரசு – தலையங்கம் - 22.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: