• சித்திரபுத்திரன்

தேசிய பத்திரிகை நகரத்தில், பார்ப்பன நிருபர்கள் பந்தலில், பூதேவர்கள் கழகச் சார்பில் விஷமப் பிரசார கோஷ்டிப் படையின் சதியாலோசனை மாநாடு நடவடிக்கைகள்.

விஷயாலோசனைக் கூட்டம்

தலைவர்: நம் மாநாட்டு ஊர்வலம் வெகு வெற்றிகரமாக முடிந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

வரவேற்புக் கழகத் தலைவர்: ஆம், ஆம் மிகமிக வெற்றிதான். யாவரும் அறியாமல் ஒருவருக்கும் தெரியாமல் நாம் தனித்தனியாய் எங்கேயோ போகிற யாரோ ஒரு அனாமதேயம் போல் நடித்து மெள்ள மெள்ள வந்து இத்தனை பேர் இந்த சதியாலோசனைக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தது நமக்கு மாபெரும் வெற்றிதான்.

தலைவர்: சரி சந்தோஷம், மாநாட்டிற்கு முதல் தீர்மானம் என்ன?

காரியதரிசி: அதிகாரத்திலிருக்கும் பூதேவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியதாகும்.

தலைவர்: சரி அவர்களுக்கு ஆகத்தானே நாம் பாடுபடுகின்றோம். இதற்கு நன்றி செலுத்த வேண்டுமா? அவர்கள் கடமையைத் தானே அவர்கள் செய்கிறார்கள்.

காரியதரிசி: இருந்தாலும் நாம் நன்றி செலுத்தினால் இன்னும் அதிகமாக அக்கிரமங்கள். அநியாயங்கள் செய்து நமக்கு உதவி செய்வதோடு நல்ல யோசனையும் சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். நம் ஆதரவு பூரணமாக இருக்கிறது என்ற எண்ணமும் செய்து நம் எதிரிகளை அழித்து விடுவார்கள். அந்தக் காலத்தில் நமக்கு விஷ்ணு, இந்திரன் இருந்தது போல் தானே இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியும், நம் அதிகாரிகளும் இருந்து வருகிறார்கள். ஆதலால் செய்யும்யாகம், எக்கியம் என்பவைகளான பத்திரிகை பித்தலாட்டம், விஷமத்தனம் ஆகியவைகளால் அரசாங்கத்தாரும் நம் அதிகாரிகளும் வாழுகிறார்கள். ஆதலால் அவர்களுக்கு நம் ஆதரவு காட்டும் முறையில் நன்றி காட்ட வேண்டியது முதல் தீர்மானமாகும்.

தலைவர்:- சரி இதை நானே பிரேரேபித்து விடுகிறேன். இனி அடுத்தத் தீர்மானம்?

காரியதரிசி:- பத்திரிகைக்காரர்கள் கட்டுப்பாடாய் எதிரிகள் நடவடிக்கைகளை அவர்கள் அனுப்பும் சேதிகளை அறவே பிரசுரிக்கக்கூடாது. அப்படி மீறி பொது ஜனங்களுக்குப் பயந்து பிரசுரித்தாலும் நம் எதிரிகள் இதை ஏண்டா இவன் போட்டான் என்று அவர்கள் வருத்தப்படும் மாதிரியில் அவர்களுக்குக் கேடுவரும் மாதிரியில் பிரசுரிக்க வேண்டும் என்று பத்திராதிபர்களை கேட்டுக் கொள்வதாகும்.

தலைவர்:- இப்படித்தானே இப்போது நடக்கிறது. இதை மறுபடியும் அவர்களுக்குச் சொல்லுவதற்கு? ஒரு சமயம் அவர்கள் இதுவரை செய்த வருவதை நாம் அறியாமல் இருக்கிறோம் என்று நினைத்து இதனால் வருத்தப்பட்டால் என்ன செய்வது?

வர - தலை:- வருத்தம் ஒன்றும் ஏற்படாது. இன்னும் சிறிது சுறுசுறுப்பாய் வேலை நடக்கும். எதிரி நடவடிக்கைகளைக் கொன்று தீர்த்து விடுவார்கள். அனுமதியுங்கள்.

தலைவர்:- சரி இதை வரவேற்புத் தலைவர் பிரேரேபிக்கட்டும், காரியதரிசி ஆதரிக்கட்டும். இனி அடுத்த தீர்மானம்.

ஆலவாய் கதை தேவர்:- அடுத்த தீர்மானமாக நான் “பத்திரிகை நிருபர்கள் நம் நோக்கங்களுக்கு, நலன்களுக்கு ஏற்பவும், நம் எதிரிகளுக்குக் கேடுகள், கெட்ட பெயர்கள் ஏற்படவும், கலகம் விளைவிக்காத நம் இயக்கத் கோழைகள் இருக்கும் இடத்திலும் கலகம் நடக்கும்படி தூண்டிவிடவும், எங்கும் காலித்தனம் தாண்டவமாடவும், அதுவே பாரதமாதாசேவை, தேசியத் தொண்டு, காங்கிரஸ் பக்தர்கள் கடமை என்று கருதும்படியாகவும் அவ்வளவு திரித்து, கற்பித்துச் சேதிகள் விட வேண்டும். பிரசுரிக்க வேண்டும் என்று ஆசிரியர், நிருபர், ஏனைய ரிபோர்டர்களை கேட்டுக்கொள்ளுகிறது” என்ற தீர்மானமாகும். இதன் மீது நான் சிறிது பேசுகிறேன். அதாவது இந்தக் காரியத்தால் அல்லாது தேவர்களாகிய நாம் இனி வாழ முடியாது. எதிரிகள் வலுத்துவிட்டார்கள். அவர்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டார்கள். தனிப்பட்ட முறையில் எதிரிகள் எதுவும் செய்ய சக்தி உடையவர்கள் ஆகிவிட்டார்கள். நாம் தனியே நடக்க பயப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்போதைய விபீஷணர்களும் அனுமார்களும் கூட முன் காலத்தவர்களைப் போல் அல்ல, நம்மை ஏய்த்துப் பலன் அடைவதற்கே நம்மிடம் பக்தி காட்டுகிறவர்கள் போல் நடக்கிறார்கள். எனவே, நம்மை இனி நம் பத்திரிகைக்காரர்கள் தான் காப்பாற்ற வேண்டும். நம் தந்திரங்கள், சூழ்ச்சிகள் தான் நமக்குக் கதி மோட்சம் கொடுக்கக் கூடியவை. ஆகவே இதை அவர்கள் உணர வேண்டும்.

தலைவர்:- இதை நீங்களே பிரேரேபியுங்கள். ஆசிரியர், நிருபர், பத்திரிகைச் சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்களா?

காரியதரிசி: ஆம்

தலைவர்:- சரி அடுத்தது.

கணநாதர்:- நம் அதிகாரிகள் சிறிதும் தயவு தாட்சண்யம் பார்க்காது கல் நெஞ்சத்துடன் காரியம் பார்த்து நம் எதிரிகளின் ஸ்தாபனங்களை அழிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தை நான் பிரேரேபிக்கிறேன்.

தலைவர்:- இனி இப்படி தனித்தனித் தீர்மானம் வேண்டாம். நம்மவர்கள் அதிகாரிகள் மனுதர்ம சாஸ்திரம், பாராஸரர் ஸ்மிருதி, இராமாயண பாரதம், புராணம் ஆகியவைகளில் இராட்சதர், அசுரர் என்பவர்களை அழிக்கப் பிராமணர்கள், தேவர்கள் என்பவர்கள் எப்படி எப்படி நடந்தார்களோ அப்படி அப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டால் போதும்.

மற்றவர்கள் ஏகோபித்து: சரி சரி ரொம்பவும் விளக்கமாகிவிட்டது. இது பத்திரிக்கைகாரர், அதிகாரிகள் ஆகியவர்களுக்கு மாத்திரம் அல்ல தேவர்கள் யாவருக்குமே பொருந்தியதாகும்.

தலைவர்:- சரி விஷயலோசனை கமிட்டி கூட்டம் ஒத்தி போடப் போடப்பட்டது. இவை பொது மாநாட்டில் முடிவு செய்த பின் மற்றவை.

குடிஅரசு – கற்பனை – உரையாடல் - 15.06.1946

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: