திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா  மந்திரிக்கு வேண்டுகோள்

தலைவரவர்களே! தோழர்களே!

நான்* இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்க எழுந்ததில் எனக்கு உற்சாகமில்லை. மிகவும் சங்கடத்துடன் முன் வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சி நம் பழங்கால ஆட்சியைவிட மேலானது என்று எண்ணுபவர்களில் நான் ஒருவன். பிரிட்டிஷார் உலகில் உள்ள மற்ற மக்களைவிட யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்பதை நான் உலகம் சுற்றிப்பார்த்துப் பிரிட்டிஷார் வாழும் இங்கிலாந்து முதலிய நாடுகளில் கிராமங்கள் தோறும் சுற்றிப்பார்த்து நேரில் அறிந்தவன். இந்தியா நாடானது இந்தியர்களால் ஆளப்பட முடியாமல் அன்னிய நாட்டார்களால் தான் ஆளப்பட வேண்டும் என்கின்ற நிலைமை நிரந்தரமாக ஏற்பட்டால் நான் பிரிட்டிஷாருக்குத்தான் ஓட்டுக் கொடுப்பேன். ஏன்? மற்ற நாட்டார்களையும் அவர்களது ராஜரீகத்தையும் நான் அறிவேன். ராமராஜ்யம், சேர, சோழ, பாண்டியன், நாயக்கர் ராஜ்யம் ஆகிய கதைகளையும் புராணங்களையும் அவர்களது ராஜரீக முறைகளையும் பற்றி சிறிதாவது உண்மையை உணர்ந்திருக்கிறேன்.

ஏகாதிபத்தியத்து விரோதமல்ல

ஆதலால் இத்தீர்மானம் பிரிட்டிஷ் ராஜ்யபாரத்துக்கு விரோதமாக நான் இப்போது கொண்டு வந்ததாக நீங்கள் கருதாதீர்கள். அதற்கு அவசியம் வரும்போது வேறு யாரையும்விட குஷாலாக நானே பிரேரேபிப்பேன். அப்பேர்ப்பட்ட காலம் சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும் ஆகும். ஆனால் அது பிரிட்டிஷ் ராஜ்யம் என்பதற்காக அல்ல. மற்றபடி அது முதலாளிகளுடையவும், புரோகிதர்களுடையவும் ராஜ்யமாய் இருக்கிறதே என்பதற்காகவாகும். ஆனால் பிரிட்டிஷார் போய்விட்டால் ஆச்சாரியார் ராஜ்யமோ, நேருக்கள் ராஜ்யமோ, காந்திகள், சத்தியமூர்த்திகள் அல்லது 75 ரூபாய்க்குக் கை தூக்கும் ஜனநாயக ராஜ்யமோ வருவதாய் இருந்தால் என் உயிரைக் கொடுத்தாவது பல உயிர் அழிவதை லட்சியம் செய்யாமலும் தடுக்கக் கடமைப்பட்டவன். ஆதலால் இத் தீர்மானத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சி விருப்பு வெறுப்புக்கும் சம்பந்தமில்லை.

தற்கால நிலை

மற்றென்னவென்றால் நாம் எத்தனை நாளைக்கு நமக்குள்ளாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது? இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சண்டை சுலபத்தில் ஒழியக்கூடியதாயில்லை. நாளுக்கு நாள் வளருகிறது. பார்ப்பனர்களும் ஒரு வழிக்கு வருகிறவர்களாயில்லை. நாளுக்கு நாள் அவர்கள் ஆதிக்கத்துக்கு பூண் பலப்படுத்துகிறார்களே ஒழிய சமாதானம் அவர்களுக்கு லட்சியமில்லை. காங்கரஸ் - முஸ்லீம் தகராறு எங்கு போய் நிற்குமென்று முடிவு கட்ட முடியாத நிலையில் இருக்கிறது. மற்றும் இவைகளால் நம் நாட்டில் கலகமோ குழப்பமோ ஏற்பட்டால் பார்ப்பானுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. கை கலக்கும்படியான சமயத்தில் அவன் வீட்டுக்குள் புகுந்து கதவை தாழ்போட்டுக்கொள்வான். நாம்தான் ஒருவருக்கொருவர் குத்திக்கொண்டு வெட்டிக்கொண்டு சுட்டுக்கொண்டு சாக வேண்டும். ஆதலால் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற சண்டையால் லாபம் வந்தால் பார்ப்பானுக்கும், நஷ்டமும் அடியும் வந்தால் பார்ப்பனரல்லாதாருக்கும் தான் வந்து முடியும். அதனாலேயே அதை வளர்த்துக் கொண்டு போக எனக்கு இஷ்டமில்லை.

பலாத்காரம் வேண்டாம்

அது போலவே காங்கிரஸ் முஸ்லீம் சண்டையும் வலுத்தால் அந்த சமயத்தில் பார்ப்பான் முஸ்லீமிடம் சேர்ந்து கொண்டு நம்மை கைகாட்டிவிடுவான். நாமும் முஸ்லீமும் தான் மண்டை உடைத்துக்கொள்ள வேண்டிவரும். இந்தக் காரணத்தை முன்னிட்டே வகுப்புதுவேஷமும் பலாத்காரமும் கூடாது என்று சுமார் 20 வருஷகாலமாகவே பிரசாரம் செய்து வருவதோடு எவ்வளவோ கவலையாய் ஜாக்கிரதையாய் தடுத்தும் வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் சில பார்ப்பன காலிகள் சில பார்ப்பனரல்லா தார்களை தூண்டி விட்டு கூலி கொடுத்து என்னையும் நம் இயக்கத்தையும் கோபமும் ஆத்திரமும் வரும்படி வைய தூண்டிவிடுவதுண்டு. போலீசு இலாக்காவும் அதற்கு அலட்சியமாய் இருப்பதாக நான் கருதுவதுமுண்டு. எப்படியிருந்தாலும் நான் பதில் செய்ய எண்ணியதில்லை. எண்ணினால் எதிரிகளுக்கு உள்ள சவுகரியத்தை விட எனக்கு சற்று அதிக சவுகரியமே உண்டு. அப்படியிருந்தும் அடங்கித்தான் கிடக்கின்றேன். சுத்த ஆகாசங்கள் எல்லாம் நம்மூருக்கு வந்து மேடை மீது நின்று நம்மை வைவது தெரியும். ஆனால் வெகு ஜாக்கிரதையாக நமது ஆள்களை அக்கூட்டங்களுக்கு செல்லவிடுவதில்லை. சென்றாலும் கண்டித்து விடுவேன். ஏன்? கை கலந்தால் பார்ப்பனரல்லாதார்தான் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வைதுகொண்டு தொல்லைப்பட வேண்டும். மற்ற ஊர்களிலும் நான் இப்படியே தொல்லைப் படுகிறேன். இதற்கு பார்ப்பனர்கள் ஆக்கமளித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆனால் சர்க்கார் நிர்வாகத் தலைவராய் இருப்பவர்களுக்கு இம்மாதிரி காரியங்களில் கவலை இருக்க வேண்டாமா? இது நம்ம சொந்த காரியமா?

கவர்னர் நோக்கம் என்ன?

10 நாள்களுக்கு முன்பு ஒரு சிறிய விஷயத்தில் ஈரோட்டிலுள்ள பெரிய மனிதர்களுக்கு, சில பொறுப்பற்ற சாதாரண மக்களின் கூச்சலுக்கு ஆள்பட்டு ஜில்லாக் கலெக்டர் ஒரு பெரிய அவமானத்தை உண்டாக்கி வைத்தார். மக்களின் மன உணர்ச்சி தெரியாத கலெக்டர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நிர்வாக முறை அப்படி இருந்து வருகிறது. இதற்கு யார் பொறுப்பாளி? இவை போகட்டும். இன்று நாம் இங்கு கூடி இவ்வளவு கஷ்டத்துடன் நடத்தும் இம் மகாநாட்டிற்கு யார் பொறுப்பாளி? கவர்னர் பிரபுவுக்கு இந்நாட்டு மக்களின் உணர்ச்சி தெரியாதா? இதுவரை சுமார் 1000 கூட்டங்கள் கூடி ஹிந்தியைக் கண்டித்து இருக்கும் விஷயம் அவர் அறியாரா? சட்டத்தின் பெயரைச் சொல்லி தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? எப்படியாவது நாமும் பார்ப்பனர்களும் சண்டை பிடித்துக் கொண்டே இருந்தால் ஆட்டு சண்டையில் ஓநாய் ரத்தம் குடிக்கிற கதை போல் தனது ஆட்சியை சுலபமாய் நடத்திக்கொண்டு போகலாம் என்கின்ற எண்ணமும் பார்ப்பனர் தொல்லைக்கு நாம் ஏன் ஆளாக வேண்டும் என்று கருதி நழுவிக்கொள்ளும் தன்மையும் ஆகாதா என்று யோசித்துப் பாருங்கள். "ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய்விட்டது. பார்ப்பன ராஜ்யம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் நாம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருக்க வேண்டும்" என்று கருதி இருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன். பல தடவை கவர்னர் பிரபுவை பிரவேசிக்கும்படி கேட்டுக் கொண்டாய் விட்டது. அவர் மந்திரிகளை ஆதரிப்பதையே கருத்தாய் கொண்டிருக்கிறார்.

சட்டத்தின் மூலம் நமக்கு உள்ள பாதுகாப்பைப் பற்றி கவனிப்பதில்லை. மந்திரிகளுடன் ஒத்துழைக்கும்படி அதிகாரிகளுக்கு கட்டளை இட்டிருப்பதாய் தெரிகிறது. அல்லாத பட்சம் காங்கரஸ் காலித்தனங்களுக்குக் கலக்டர்கள் முதல் போலீசு வரை இவ்வளவு அலட்சியமாய் இருக்கமாட்டார்கள். ஆதலால்தான் நமக்கு மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதோடு அவர் இனியும் நம் நாட்டில் இருப்பதால் நிலைமை இனியும் மோசமாகும் என்றும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

பழைய கதை

முன்பு ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்த உடன் கனம் ஆச்சாரியார் ஸ்தானத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் இருந்து கொண்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் ஸ்தானத்தில் கோஷன் பிரபு அவர்கள் இருந்துகொண்டு விளைவித்த தொல்லைகள் கொஞ்சமா என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுதும் நான் தான் இதே மாதிரி மனம் தாளாமல் கோஷன்பிரபு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தேன். அதன் பிறகே கோஷன் பிரபு அவர்களுக்கு நன்றி அறியும் தன்மையும் உண்மை உணர்ச்சியும் ஏற்பட்டது. இப்பொழுதும் அதையே பின்பற்றுகிறேன் என்று கருதாதீர்கள்.

பின் என்னவென்றால் நாட்டில் குழப்பமும் சமாதானக் கேடும் ஏற்பட்டு விடும் என்று பயந்தே இந்தத் தீர்மானம் கொண்டு வருகிறேன். இந்தக் கவர்னர் பிரபுவிடம் எனக்குச் சொந்தத்தில் இவர் வந்த நாள் முதலே நம்பிக்கை இல்லை. காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மாட்டேன் என்று வேஷம் போட்ட காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு இந்த நன்றி கெட்ட அரசாங்கத்தில் மந்திரி பதவி ஏற்பது மானக்கேடு என்று தந்தி கொடுத்தேன். அது இன்று சட்டசபையில் உள்ள 2 மாஜி கவர்னர்களுக்கும் தெரியும். அந்த தந்தி இன்றும் ஜஸ்டிஸ் ஆபீசில் இருக்கிறது. ஆதலால் உண்மையிலேயே நான் கவர்னர் பிரபுவிடம் நம்பிக்கை அற்றுத்தான் இப்பிரேரேபணை கொண்டு வருகிறேன். நீங்கள் எனக்காக ஓட்டுக் கொடுக்காதீர்கள். விஷயம் சரி என்று பட்டால் ஆதரியுங்கள். இல்லாவிட்டால் நிராகரித்து விடுங்கள். நம்மவர்களுக்குள் உள் கலகம் ஒழிந்து நாம் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற துவேஷமும் பார்ப்பன சூழ்ச்சி காரியங்களில் பார்ப்பனர்களுக்கு வெற்றியும் ஏற்படாமல் செய்யவேண்டுமானால் இப்படிப்பட்ட வேடிக்கை பார்க்கும் கவர்னர் பிரபுக்களோ உதவியாக இருக்கும் கவர்னர் பிரபுக்களோ இருந்தால் ஒரு நாளும் முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீர்மானத்துக்கு ஆதரவு

தோழர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்தார்.

இத்தீர்மானம் பிரேரேபிக்கப் பட்டவுடன் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது.

உடனே தலைவர் தோழர் கருமுத்து தியாகராய செட்டியார் அவர்களை இத்தீர்மானத்தை எதிர்த்து பேச அழைத்தார்.

அவர் இரண்டு விஷயம் சொன்னார். அதாவது மக்கள் ஏமாந்து ஓட் செய்ததால் இக்கதி ஏற்பட்டதென்றும் இவைகளை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் மந்திரிகளுடன் வாதாடவேண்டுமென்றும் எல்லோரும் காங்கரசில் சேர்ந்து மந்திரிகளை கவிழ்க்க வேண்டும் என்றும் கவர்னரிடம் போவதற்கு அதற்குள் சமயம் வந்துவிடவில்லை என்றும் மந்திரிகள் செய்கை வாய்ப்பேச்சில் இருக்கிறதே ஒழிய காரியத்தில் இல்லை என்றும் சொன்னார்.

பிறகு தலைவர் எழுந்து அதை ஒட்டியே பேசினார். பொது ஜனங்கள் ஏமாந்துபோய் ஓட்டு செய்ததால் ஏற்பட்ட கெடுதியே ஒழிய கவர்னருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றும் இது விஷயமாய் கவர்னரை நாம் இன்னமும் முறைப்படி கேட்கவில்லை என்றும் சொன்னார். இதற்குள் சுமார் 10, 20 சீட்டுகள் பலபேர்களிடம் கையெழுத்து வாங்கி தீர்மானத்தை வாபீஸ் வாங்கக்கூடாதென்றும் எச்சரித்தும் தோழர் ஈ.வெ. ராவிடம் கொடுக்கப்பட்டன.

தலைவர் பேசியபின் தோழர் ஈ.வெ.ரா. எழுந்து எதிர்த்தவர்களுக்கு பதில் சொல்லும் முறையில் சில வார்த்தைகள் பேசினார்:- அதாவது நாம் ஓட்டு செய்தோம் என்று சொல்லுவது தகாது என்றும் பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு செய்த ஓட்டுக்களே என்றும் அவ்வோட்டுகளை ஓட்டு என்றும் அதன்மீது மெம்பராகி மந்திரியானவர்களை நமது பிரதிநிதிகள் என்றும் சொல்லிக்கொள்வது வெட்கக்கேடென்றும் அவர்கள் நம் பிரதிநிதிகள் என்று தோழர் செட்டியாரும், தலைவர் பாரதியாரும் உண்மையில் நம்பி இருப்பார்களானால் அவர்கள் இம்மகாநாட்டுக்கே வந்திருக்க மாட்டார்கள் என்றும் அரசியல் சட்டம் வேறு எந்த வழியில் மோசமானதாய் இருந்தாலும் இம்மாதிரி பாமரமக்களின் முட்டாள் தனத்தால் பதவிக்கு வந்து விட்டவர்களின் கொடுமையில் இருந்து தப்புவதற்கு இடம் இருக்கிறதென்றும் காங்கரசுக்குள் போய் காங்கரசைப் பிடித்து மந்திரிகளை வெளியாக்குவது கறுப்பு நாயை சாயம் அடித்து வெள்ளையாக்கும் கதை போன்ற தென்றும் அதெல்லாம் பார்த்தாய்விட்ட தென்றும் கவர்னருக்கு விஷயம் தெரியும்படி பல தடவை எழுதி ஆய்விட்ட தென்றும் பல விண்ணப்பங்கள் அனுப்பி தூது கோஷ்டி பேட்டிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பப்பட்டு ஆய்விட்டதென்றும் சொன்னார்.

தலைவர் சமாதானம்

இந்த சந்தர்ப்பத்தில் தலைவர் பாரதியார் அவர்கள் இந்த மகாநாட்டில் கவர்னரைப் பார்த்து விஷயங்களை விளக்க ஒரு கமிட்டி போட்ட பிறகு இத்தீர்மானத்தை நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றி அனுப்பலாம் என்று தெரிவித்ததுடன் மந்திரிகள் தந்தி விஷயத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிய வருவதாகவும் ஏதோ சில பள்ளிக் கூடங்களில் மாத்திரம் பரீக்ஷாதமாய் வைப்பதாகவும் அதற்கும் பரீøை வைக்கப்போவதில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் தோழர் ராமசாமி அவர்கள் கொண்டு வந்திருப்பதால் இத்தீர்மானம் ஓட்டுக்கு விட்டால் ஓட்டுத்தவிர மற்றபடி ஏகமனதாய் நிறைவேறிவிடும் என்றும் ஆதலால் தற்காலம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் தலைவர் என்கின்ற முறையிலும் எந்த முறையிலும் கேட்டுக் கொள்வதாக சொன்னார். தோழர் ஈ.வெ.ரா. எழுந்தார். கூட்டத்தினர் கூடாது கூடாது ஓட்டுக்கு விடுங்கள் என்று கோஷம் செய்தார்கள்.

ஈ.வெ.ரா. முடிவுரை

தோழர். ஈ.வெ.ரா. எழுந்து கவர்னர் பிரபுவை நேரில் காண கமிட்டி போட்டு அதன் முடிவு விரோதமாய் விட்டாலும் ஹிந்தி கண்டிப்பாய் பாடம் வைத்து பரீட்சை நடத்துவது என்பதை அனுபவத்தில் கொண்டு வந்து விட்டாலும் பிறகு எல்லோரும் ஏகமனதாய் இத்தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொல்வதாலும் எனக்காக என் செல்வாக்கில் நிறைவேற்ற நான் முனைந்திருப்பதாய்ச் சொல்லுவதாலும் நான் இதை நிறுத்திக் கொள்ள சம்மதிக்கிறேன் என்பதோடு தலைவர்களும் தோழர் செட்டியார் அவர்களும் பிறகாவது தாங்களும் கலந்து கொள்ளுகிறார்களா என்பதைப் பார்க்கலாம் என்றும் சொல்லி கவர்னர் பேட்டி தூதுக்கமிட்டியில் தன்னை ஒரு மெம்பராய் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

பிறகு ஒரு தூதுக்கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் தோழர் ஈ.வெ.ரா. பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் எழுந்து மறுத்து விட்டார். பிறகு தூதுக்கமிட்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேறிற்று.

குறிப்பு: திருச்சியில் 26-12-1937இல் சென்னை மாகாண 3ஆவது தமிழர் மாநாட்டில் சென்னை கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து பேசியது.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 02.01.1938

 * "தங்கள் சுயநலத்துக்கென்றே சர்க்காருடன் ஒத்துழைக்காமல் ஒத்துழையாமை என்னும் பேரால் அரசின் யந்திரத்திற்கு தொந்தரவு கொடுத்தும் பொதுஜன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் விரோதமாகவும் ஒரு சுயநலக் கூட்டத்தார் சண்டித்தனம் முதலிய தொல்லைகள் விளைவித்து வந்த நெருக்கடியான சமயத்தில் நல்ல ஆட்சியையும் பொதுஜன நன்மையையும் கருதி மனப்பூர்வமாக சர்க்காருடன் ஒத்துழைத்தும் அதனால் விளக்கமறியா பாமர மக்கள் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி வருவதையும் லட்சியம் செய்யாமல் அதற்காக தொண்டாற்றியும் வந்த தமிழ் மக்களுக்கு சிறிதும் நன்றி விசுவாசம் காட்டாமல் சுயநல புரோகித கூட்டத்தாருக்கு வசப்பட்டு நம்மை அவர்களது பழிவாங்கும் தன்மைக்கு ஆளாக்கி விட்டுக் கொண்டிருக்கும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் நடத்தைக்கு ஆக இம்மகாநாடு வருந்துவதுடன் அவரிடம் இம்மாகாண தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இடமில்லையென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

இம்மாகாண மக்களின் நன்மையையும் சாந்தியையும் சமாதானத்தையும் உத்தேசித்து மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா மந்திரியை கேட்டுக் கொள்கிறது." 

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: