சரணாகதி மந்திரிசபை தமிழ் நாட்டிலே, ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம், வர்ணாச்சிரமமாகிய விஷங் கலந்த இத் திட்டத்தைத் தமிழர் உண்டு மாள்வரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரிசபையின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்காதிருக்க வேண்டுமே என கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மைப் போன்றே தமிழ் உலகும் கருதிற்று. தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ் நாடு கொந்தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி பிரதி தினமும் ஹிந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. "தமிழ் மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்" என்ற முழக்கம் மூலை முடுக்குகளிலும் எழும்பிற்று. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்பு சங்கங்களென்ன, ஹிந்தி எதிர்ப்பு சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ் நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கரஸ் மீது காதல் கொண்டோரும், பிரபலஸ்தர்களும், வாலிபர்களும், பொது மக்களிடை நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள சு.ம. இயக்கத் தலைவரும், தோழர்களும் இத்திட்டத்தை கண்டித்துப் பலத்த பிரசாரத்தை இடைவிடாது தென்னாடு பூராவும் நடத்தினார்கள். இக் கிளர்ச்சியின் உருவாகவே பல பிரத்யேக மகாநாடுகள் நடைபெற்றன.

கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் "ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக" ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் "தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்" என்பதேயாகும். காங்கரஸ் திட்டமல்லாத தேர்தல் வாக்குறுதியில் காணப்படாத இத்திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கு மாறாக கொண்டு வரும் ஆச்சாரியாரின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து, திருச்சியில் தமிழ் மாகாண மகாநாடும் நடைபெற்றது, அதிலே மாஜி மந்திரிகளும், மற்றும் பொதுஜன அபிப்பிராயத்தை சிருஷ்டிக்கும் பிரபலஸ்தர்களும் பொது மக்களுமாக 5000 பேர்கள் கலந்து கொண்டனர்.

அது சமயம் அங்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சொன்னதாவது "இந்த ஹிந்தி பாடத்திட்டத்தை, மந்திரிமாரும் கவர்னரும் கலந்தே ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிகிறது என்றும் ஆதலால் கவர்னர் இதற்கு "ததாஸ்து" கூறத் தயாராகவே இருக்கிறார் என்றும் மற்றும் அவர் தமது அரசாங்கத்திற்குப் பழுது ஏதும் ஏற்படாத வகையிலே மந்திரிகள் காட்டிய இடத்தில் கையொப்பம் செய்துகொண்டு சரணாகதி மந்திரிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இயந்திரத்தில் கை வைக்காதிருக்கப் பார்ப்பதிலே கவலை கொண்டு தமக்கும் தம் வர்க்கத்தவருக்கும் மந்திரிகளால் துதிபாடச் செய்து மகிழ்ந்து இருக்கும்போது தமிழர் தலையில் ஆச்சாரியார் கை வைத்தாலும் அல்லது குரல் வளையைப் பிடித்து அழுத்தினாலும் அதற்காக, கவர்னர் சிறிதும் கவலைப்படவோ, அல்லது தமிழுக்காக பரிந்து பேசவோ, தமிழர் உரிமைகளைக் காப்பாற்றவோ முன்வரமாட்டார்" என்றுங் கூறினார். ஆச்சாரியாரை சட்டாம் பிள்ளையாகக் கொண்டு காங்கரஸ் ஜோதியில் கவர்னர் கலந்து விட்டார். ஆகவே அவரிடத்து நமக்கு நம்பிக்கைஇல்லை என்று கூறி தீர்மானமும் கொண்டு வந்தார். மகாநாட்டிலே சிலருக்கு இதனால் பயமும் கிலேசமும் ஏற்பட்டது. "நமது சத்தம் கவர்னர் செவிக்கு இன்னும் எட்டவில்லை. அது வரை நாம் பொறுப்போம்? என்றனர். தமிழருக்குத் தீங்கிழைக்கும் ஆச்சாரியாரின் போக்கை கவர்னருக்கு எடுத்துக் காட்டினால் அவர் நியாயம் வழங்குவார் என எண்ணி "கவர்னரைக் கண்டு விஷயத்தை விளக்க, ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்புவோம்" என்றனர். அதிலே தோழர் ஈ.வெ.ரா. கலந்து கொள்ள முடியாதென்பதை அப்போதே தெரிவித்தார். ஏன்? தமிழர் தூது கோஷ்டியை கவர்னர் மதிக்க மாட்டார் என்று தெரிந்தே தான். ஆச்சாரியாரின் ஹிந்தி திட்டத்திலே கவர்னர் குறுக்கிடமாட்டார். ஏனெனில், பிரிட்டிஷ் சர்க்காரை பொறுத்த வரையில் அந்தத் திட்டத்தால் ஒரு விதமான நஷ்டமும் இல்லை. மக்கள் மூடர்களானால் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு பங்கு பிரிட்டிஷாருக்கும் உண்டு அல்லவா? ஆகவே இந்த கவர்னர் மீது தமிழருக்கு நம்பிக்கை இருக்கக் காரணமே யில்லை என்றார். அவர் எண்ணியபடியே இன்று விஷயம் நடந்தது. இரண்டு மாஜி மந்திரிகளும், மற்றும் பல பிரபலஸ்தர்களும் கொண்ட தூது கோஷ்டியை பார்க்க முடியாதென கவர்னர் தெரிவித்துவிட்டார். தமது மொழி, வாழ்வு இவற்றிற்கு ஆபத்து வருகிறது, அதனைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்வதற்காக தமிழ் மாகாண மகாநாட்டுத் தூது கோஷ்டியார் பேட்டி கேட்டனர். இந்த மாகாண கவர்னர் கையை விரித்து விட்டார். தமிழர்கள் விஷயத்திலே மேன்மைதங்கிய கவர்னர் கொண்டுள்ள கருணை விளங்கிவிட்டது.

இந்த மாகாணத்திலே சட்டத்தை, சாந்தத்தை, சமாதானத்தைக் குலைத்து சண்டித்தனமும், காலித்தனமும் செய்து அரசாங்கத்திற்குத் தொல்லையும் அல்லலும் தந்து வந்தவர்களுடன் கைகோர்த்து விருந்துண்டு குஷாலாக வாழ்ந்து வரும் கவர்னருக்கு சாந்தமும் சமாதானமும் நிலவ வேண்டும் - சட்டங்கள் சரியாகத் துலங்க வேண்டும் என்று பாடுபட்டவர்களும் வீண் கிளர்ச்சிக்காரர்களின் கை வலுக்காதிருக்க வேண்டி, வேலை செய்து வந்தவர்களும் இன்று கவர்னருக்கு அலட்சியமாகக் காணப்படுவதை நோக்கினால் - அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் ஒரு பேட்டி அளிக்கவுங்கூட மனமில்லை என்று கவர்னர் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே சாந்தத்தை குலைத்து சட்டத்தை மீறி சர்க்காருக்குத் தொல்லை கொடுத்தால் தான் நியாயம் கொடுக்கப்படும் என்று கவர்னர் எண்ணுகிறாரென்றே தெரிகிறது. நேற்றுவரை சட்டத்தை உடைத்து, சண்டித்தனம் செய்தவர்கள், இன்று சரணாகதி சட்டாம் பிள்ளைகளானதால், கவர்னர் தமிழர் கொதிப்பையோ, கிளர்ச்சியையோ, லட்சியப் படுத்தமாட்டேன் என்று இறுமாப்பான பதிலளிக்கத் துணிந்து விட்டார் போலும். சட்டத்தை மீறி சதாகாலமும் சர்க்காருக்குத் தொல்லை கொடுப்பவர்களுடன், கூடிக் குலாவும் கவர்னர், தமது பதிலால் சாந்தத்தை விரும்பும் பெரும் பகுதியினரை சட்டத்தை மீறி சர்க்காருக்குத் தொல்லை கொடுக்கும் வேலையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டு வருகிறார், தூண்டுகிறார் என்றே எண்ணுகிறோம். தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரையில் நல்ல முறையிலேயே நடத்திக் காட்டினார்கள். தமிழர்கள் தமது அதிருப்தியையும் தெரிவித்து விட்டனர். இவ்வளவிற்குப் பிறகும், தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் "தூதுக் கோஷ்டியைப் பார்க்க முடியாது" என்பதுதான். தமிழர்களே! இது தான் உங்கள் நிலைமை. தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண்ணமும், தமிழர்களிடம் நடந்து கொள்ளும் போக்கும் இதுதான். இனி தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கின்றோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.01.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: