காங்கரஸ் புரட்டு விளக்கம்

இப்பவும் காங்கரசில் நான் இல்லை என்று குறை கூறுகிறார்கள். நான் அங்கிருந்தால் தான் என்னவாகிவிடும்? நான் காங்கரசிலிருந்தால் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குக் கஷ்டம் குறைந்துபோகும். எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஹிந்தியை என் வாயைக் கொண்டே "ஹிந்தி நல்லது இந்தியாவெங்கும் அது பொதுப்பாஷையாகத்தானிருக்க வேண்டும்" என்று சொல்லச் செய்து விடுவார். அதற்கு நான் சம்மதித்தால்தான் எனது காங்கரஸ் பக்தி பயன்படும். இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியம் நடக்கக் கூடும்? சுதந்தரமாகவும் சுயமரியாதையாகவும் ஏதாகிலும் செய்ய முடியுமா? அங்கிருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதார் யோக்கியதை எப்படி இருக்கிறது? இப்போதையத் தொண்டிலும் அவர்கள் என்னை குற்றம் சொல்லவில்லை, என் சொந்த நாணயத்திலும் குற்றம் சொல்ல அவர்களுக்கு முடிவதில்லை. நாங்களும் தவறாக நடந்து கொள்வதில்லை. அதனாலேயேதான் "சுயமரியாதைக்காரர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றும் அவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலும் நன்றாக தொண்டு செய்வார்கள் என்றும் அவர்களும் காங்கரஸிற்கு வரவேண்டுமென்றும் பல தடவை ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார் மற்றும் பல காங்கரஸ்காரர் கூப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர் உயர்வுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாக பேசுவதைத் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார்.

"உலகம் புகழ்கின்ற" காந்தியாரையும், "எல்லோராலும் புகழப்படுகின்ற" காங்கரசையும் நான் குற்றம் சொல்வதன் காரணமென்ன? காங்கரஸை விட்டு வெளியே வந்தது முதல் காந்தியாரானவர் மக்களின் சுதந்திரத்திற்கு விரோதி என்றே சொல்லி வருகிறேன். நம்மிடமெல்லாம் சொன்னபடி வாக்குறுதி கொடுத்தபடி நடக்காததால்தான், காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பேன் என்பதாகச் சொல்லி விட்டுத்தான் காங்கரசிலிருந்து வெளியே வந்தேன். அப்போது என்கூட வெளியே வந்தவர்களில் ஒருவர்தான் இன்றைய விளம்பரமந்திரி தோழர் ராமநாதன்.

காங்கரசிடம் என்ன அபிப்பிராய பேதம்?

காங்கரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட அபிப்பிராயபேதம்தான் என்ன? தோழர் காந்தியார் 1920ல் காங்கரஸிலே அதிகாரத்தின் உச்சநிலைக்கு வந்தபோது "மக்கள் பட்டத்தை விரும்பக்கூடாது. உத்தியோகத்தை விரும்பக் கூடாது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி வருகிற பல சமூகங்களின் வேற்றுமைகளை ஒழித்து, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையை உண்டாக்குவது, தீண்டாமை என்னும் சாபத்தை இந்தியாவிலிருந்தே விரட்டுவது. இதல்லாமல் சுயராஜ்யம் வராது. அப்படி வந்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்" என்று சொன்னார். இந்தப் பணியானது இந்த நாட்டிற்கு மகா உத்தமமானது என்று கருதித்தான் நாம் காங்கரஸில் சேர்ந்தோம். இதல்லாமல் வேறெந்த பிரதி பிரயோஜனத்தையும் உத்தேசித்தல்ல. அப்படி நான் காங்கரசில் சேரும் போது வெறும் அன்னக் காவடியாகவோ வெறும் ஆளாகவோ வரவில்லை. நான் அப்போது வகித்திருந்த ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மன் பதவியை ராஜிநாமா செய்து காங்கரஸ் பாரத்தில் கையெழுத்திட்டேன். தேதி வேண்டுமென்றாலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் காங்கரஸில் சேர சேர்மென் ராஜிநாமா கொடுப்பதற்கு ஒரு 10 நாள் பின்பு இருக்கலாம். சர்க்காரால் அப்போது ஏற்படுத்தி இருந்த வருமான வரி இன்கம்டாக்ஸ் அப்பீல்கமிட்டி ஒன்றுக்கு என்னையும் தோழர்கள் தியாகராய செட்டியார், ஜமால்மகமது இவர்களையும் தினம் 100ரூ. படி இரட்டை முதல் கிளாஸ் பிரயாணச் செலவு கொடுத்து நியமித்தார்கள்.

இவைகளெல்லாம் ஒரே கால் கடுதாசியில் ராஜிநாமா செய்து விட்டேன். பின்னர் சண்டை ஏன் என்றால் பிறருடைய உழைப்பின் மீது, வயிறுவளர்த்து பிறர்மேல் ஆதிக்கம் செலுத்தி ஒரு சாராருக்கு ஆதரவு அளிக்கவே காங்கரஸ் ஸ்தாபனம் இருக்கிறதென்பதாக நான் கருதியதால் அதைவிட்டு வெளியே வந்துவிட்டேன். இப்படியிருந்தால் பல சமூகங்களும் எப்படி ஒன்றுபடுவது. ஒருவர்க்கொருவர் நேசம் எப்படி உண்டாவது என்பதாக கருதும்போது அதை விட்டுவிட்டு வருவதை தவிர வேறு வழியில்லை எனக் கண்டே வெளியே வந்தேன்.

காங்கரஸ் தோல்வி

காங்கரஸ் தான் ஏற்படுத்திக்கொண்ட ஒவ்வொரு திட்டங்களையும் சரிவர நிறைவேற்ற முடியாமல் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு திட்டங்களிலும் முன்னுக்குப்பின் முரணாகவே நடத்திருக்கிறது.

இத்துடனல்லாமல் காங்கரஸ் காரியத்தில் நடத்த எடுத்த திட்டங்களிலெல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறது. சுயராஜ்யத்துக்கு முன் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்றவர்கள் அதை ஏற்படுத்தினார்களா? தீண்டாமை இருக்கக் கூடாதென்றவர்கள் அதை இல்லாமல் செய்தார்களா? இதே வீரர்கள் அதுவும் ஏக இந்தியாவின் ஏக பிரதிநிதியாகிய தோழர் காந்தியார் லண்டன் வட்ட மேஜை மகாநாட்டில் போய் இது விஷயத்தில் சரியான குட்டிக்கரணம் போட்டார். அதாவது "இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை ஒழிவும் எல்லாம் சுயராஜ்யம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டார். இதை நான் சொல்லவில்லை. அப்போது சீமையில் இருந்து வந்த பத்திரிகைகளை பார்த்தீர்களானால் உங்களுக்கு தெரியவரும். எந்த தீண்டாதார்களை தீண்டாதார் பிரதிநிதி என்று அழைத்து கையெழுத்து வாங்கினாரோ அவர்களையே சர்க்கார் கூலி, சர்க்கார் அடிமைகள் என்றெல்லாம் முன்னும் பின்னும் சொன்னார். இவைகளை நீங்கள் இன்று பார்த்துக்கொள்ள வேண்டுமானாலும் சர்க்கார் ரிக்கார்டுகளில் பார்த்துக் கொள்ளலாம்.

கதர்

காங்கரஸ் எடுத்த திட்டங்களெல்லாம் தவறாகவும் தோல்வியாகவும் முடிந்தன என்று சொன்னேன். சாதாரணமாக கதர் திட்டத்தைத்தான் எடுத்துக்கொள்ளுங்கள். அது வருஷத்திற்கு ஒரு லக்ஷமோ இரண்டு லக்ஷமோ நஷ்ட பண்டு இல்லாமல் நடக்கமாட்டேன் என்கின்றது. 1920-ம் வருஷத்திலிருந்து 1938 வரை இந்த கதர் திட்டத்திற்கு ஒரு கோடி ரூ. செலவாயிருக்கலாம். இப்படி செலவு செய்தும் இன்றும் ஒரு ரூ. துணிக்கு இரண்டரை ரூ. கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் கோணிச்சாக்கு மாதிரி இருக்கிறது. இப்படியிருந்தாலும் 1000க்கு ஒருவர் கூட கதர் கட்டுவது கஷ்டமாகயிருக்கிறது. இப்போதும் காங்கரசிலும் ஸ்தாபனங்களிலும் அங்கத்தினராகவோ தலைவராகவோ இருக்க வேண்டியவர்கட்கு கதர் நிபந்தனை இருப்பதாலும் அவர்களே சர்க்காரை நிர்வகிப்பதாலும் ஏதோ ஒருவர் இருவர் கதர் கட்டுவது தெரிகிறது. ஆனால் உண்மையில் கதருக்கு செல்வாக்கில்லை. அது அரசியல் வேஷமாக ஆகிவிட்டது. காங்கரஸ் மறைந்தால் அதுவும் மறைந்து விடும். தீண்டாமை ஒழிப்பு விஷயமும் இன்று தீண்டாதார் தலைவர்கள் எல்லாம் தாங்கள் புனாவில் ஏமாந்தோம், அவ்வொப்பந்தம் ஒழிபட வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

இந்து முஸ்லீம்

இந்து-முஸ்லீம் பிரச்சினை சம்பந்தமாய் ஒற்றுமை வேண்டுமென்று கத்தியவர்கள், இப்போது வேற்றுமையைக் கிளப்பிவிட்டு கலகம் உண்டாக்கி விட்ட விஷயம் நீங்கள் அறிந்ததே. அத்துடன் ஜவஹர்லால் அவர்களும் "சுயராஜ்யம் வருவது இன்னும் 100 வருஷம் தடைபட்டால் கூட பரவாயில்லை. ஆனால் வகுப்பு வாதிகளுக்கு (அதாவது முஸ்லிம்களுக்கு) கொஞ்சம் கூட இடம் கொடுக்கவே மாட்டேன்" என்று சொன்னதினால் இந்து முஸ்லிம் நிலைமை இன்னும் மிகவும் மோசமாகப் போய்விட்டது.

ஆனால் காங்கரசிடம் வகுப்புவாதம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? வகுப்பு வாதம் வேண்டாம், வேண்டாம் என்று கூச்சல் போடும் கனம் ராஜகோபாலாச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களிடம் உண்மையிலேயே வகுப்பு வாதம் குடி கொண்டிருக்கிறதா? இல்லையா? என்கிற விஷயங்களைப் பற்றி நான் சொல்லுவதற்கு முன் காங்கரஸ்காரரே சொல்லுவதைக் கேளுங்கள். உதாரணமாக தோழர் சத்தியமூர்த்தி கார்ப்பரேஷன் கூட்டத்தில் பேசும்போது "ஜஸ்டிஸ் கட்சியையும் பொப்பிலியையும் கூட ஒழித்து விட்டேன். ஆனால் இங்கே காங்கரஸ் கட்சிக்குள்ளேயே அநேக பொப்பிலிகள் வகுப்புவாதிகள் தோன்றிவிட்டார்கள்" என்று சொன்னார். இதல்லாமல் அய்யர்-அய்யங்கார் சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாம் சிரிப்போமே என்றே யாருக்கும் தெரியாமல் வீட்டில் அடித்துக் கொள்கிறார்கள்.

வாக்குறுதி துரோகம்

மற்றும் தேர்தலில் ஓட்டர்களுக்கு அவர்கள் சொன்னதை ஏதாவது நிறைவேற்றினார்களா? வெற்றி வெற்றி வெற்றி என்றார்களே தவிர எதில் வெற்றி அடைந்தார்கள்? நாட்டிற்கு ஏதாவது நல்ல திட்டம் போட்டு அதில் வெற்றி அடைந்தார்களா? இல்லை. பின் எதில் வெற்றியடைந்தார்கள் என்றால் பார்ப்பனரல்லாதார் முயற்சியை ஒழித்து அவர்களுடைய முன்னேற்றத்தின் பல அம்சங்களை ஒழித்து பார்ப்பனர்களுடைய முன்னேற்றத்திற்கான திட்டங்களில் வெற்றியடையப் பார்க்கிறார்கள். இதைத்தவிர வேறென்ன சொல்லக்கூடும்?

கனம் ராஜகோபாலாச்சாரியார் கொள்கை என்ன? காங்கரஸ் கொள்கை என்ன? நிர்மாணத் திட்டம் என்ன? பஹிஷ்கார கூப்பாடு என்ன? இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் கேள்வி முறையில்லை. சட்டசபையில் உட்கார்ந்ததும் முதல் முதலாக வந்தேமாதரப் பாட்டைக் கொண்டு வந்து பாடி விட்டார்கள். இதிலே சகலருக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டது. முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஆத்திரம் என்று நினைக்காதீர்கள். பார்ப்பனரல்லாதாரும் தங்கள் தவறை சீக்கிரம் உணர்வார்கள். நேற்று மன்னார்குடியில் ஜனாப் கலீபுல்லா அவர்கள் வந்தே மாதரப் பாடலின் புரட்டை நன்கு விளக்கினார். அது எடுக்கப்பட்ட ஆனந்தமடம் நாவலிலிருந்து எடுத்த விபரத்தையும் சொன்னார். இப்போது அந்தப்பாட்டு தேசீயப்பாட்டு அல்லவென்றும் பிரார்த்தனை என்றும் தோழர் சாம்பமூர்த்தியே சொல்லுகிறார். மற்றும் இந்த கடன் மறுப்பு வீரர்கள் வந்தே மாதரப் பாட்டு பாடியவுடன் 1லீ கோடி ரூபாய் கடன் வாங்கினார்களே இதில் ஏதாவது யோக்கியதையோ நாணயமோ உண்டு என்று சொல்ல முடியுமா? சர்க்கார் ஏற்கனவே வாங்கிய தேசீயக் கடனாகிய 1000 கோடி ரூபாயையும் "ஒரேயடியாக கொடுக்க முடியாதென்று சொல்லி விடுவோம்" என்கிறார்களே இதைப்பற்றி இங்கிலாந்தில் கூட கூச்சல் எழுந்தபோது இந்தியா கவர்ன்மெண்டார் வாங்கிய கடனுக்கு தகுந்த டிபாசிட்டை பாங்கிலே கட்ட முயற்சித்தார்கள். சர்க்காருக்கு கடன் கொடுத்த தோழர் சேலம் ஸி. விஜயராகவாச்சாரியார் போன்றவர்களும் ஒரேயடியாய் கூப்பாடு போட்டார்கள். அதற்கு காந்தியார் நாங்கள் "ஒரே அடியாக சொல்லவில்லை. ஆனால் நாங்கள் ஒரு கமிட்டி நியமிக்கிறோம். அதில் வெள்ளையர்கட்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம். கடனில் லாபம் வரும் காரியத்திற்காக வாங்கியது எது பட்டாளத்துக்கும் அநாவசிய காரியங்கட்கும் வாங்கியது எது என்று விசாரித்து முடிவு செய்வோம்" என்றார். அப்போதும் இப்போதைய நமது சென்னை பிரதமமந்திரியார் ஒரேயடியாக எந்தக்கடனையும் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படிச்சொன்ன ஆச்சாரியார் அவர்களே இப்போது பதவி கிடைத்தும் 1லீ கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். போதாக் குறைக்கு இக் கடனுக்கு கவர்னர் அனுமதி கொடுத்த கையெழுத்திட்டதை பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார்கள். கவர்னர் இதற்கு கையெழுத்துப் போட்டதின் காரணம் என்ன என்பது யாருக்காவது தெரியுமா? கடன் விண்ணப்பம் வந்தபோதே அதிலே பழைய கடன் அந்தக் கடனின் வட்டி இப்போதைய கடன் கிடைத்தால் அதன் விவரம், அதற்கு வட்டி ஆக கூடுதல் கணக்குகள் எல்லாம் வெளிவந்தன. இந்தக் கடனுக்கு இவர்களை சரியாக சிண்டை பிடித்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதைப் பற்றித்தான் மகிழ்ச்சியாக கவர்னர் கையெழுத்திட்டாரே தவிர வேறல்ல (பலத்த கரகோஷம்) கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஆனால் ஒரு அரசாங்கம் கடன் வாங்குவதென்றால் மேட்டூர் திட்டம், ரயில்வே திட்டம் முதலிய பெரிய வட்டி கட்டி, வரும்படி வரும் திட்டங்களுக்கு வாங்க வேண்டியதுதான். இது அறிவாளிகள் செய்யக்கூடிய விஷயம். ஆனால் நமது கனம் ராஜகோபாலாச்சாரியாரோ சுகாதாரம், கிராமப்புனருத்தாரணம் முதலிய தினசரி நடப்பு, வாழ்விற்கே கடன் வாங்கியிருக்கிறார் என்றால் இந்தத் திட்டங்களினால் ஏதாவது வருமானம் வருமா? சுகாதாரத்துக்கும் கிராமப்புனருத்தாரணத்துக்கும் கடன் வாங்கினால் இது வரவுக்கு மிஞ்சின செலவல்லவா? எப்படி இக்கடனை திருப்பிக்கொடுப்பது அல்லது இந்த சாக்கை வைத்துக்கொண்டு நிறைய கடன் ஏற்படுத்திவிட்டு வெளியே ஓடவா? மேட்டூருக்கு வாங்கின கடனுக்கே தஞ்சை ஜில்லா மிராசுதாரர்கள் வட்டி கட்டும்படி வரி கொடுக்க முடியாமல் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். வரிச்சுமை தாங்கவில்லை என்கிறார்கள். இதற்கு இதுவரை ஒரு பரிகாரமும் காணோம்.

கல்வி

நமது நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கையோ 100க்கு 8 ஆகத்தான் இருக்கிறது. பழைய காலத்து அரசர்களோ ஆரிய ஆதிக்கத்திற்கே அடிமையாய் இருந்ததால் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கிற ஆரியக் கொள்கையை அப்படியே காப்பாற்றிக் கொடுத்தவர்கள். அதனால் கல்வி பயிலுவதற்கு ஆரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிரத்தையே யில்லை. கடவுள்களே அரசாண்ட காலம் என்னும் ராமன் கிருஷ்ணன் காலத்திலும், அதன்பிறகு அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் அதன் பிறகு பிரிந்து கிடந்த 56 தேச ஆட்சி இருந்த காலம் வரை பார்ப்பனர் தவிர மற்றவர்களுக்குக் கல்வியில்லை. வேதத்தை உச்சரித்தால் நாக்கையறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்கவேண்டும் என்பன போன்ற கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதை மேயோ அம்மையார் எழுதியதற்கு, அந்த அம்மையார் மீது நம் பார்ப்பனர்கள் பாய்ந்தார்கள். நமது தேசீய வீரர்கள் இதற்கு சமாதானம் சொல்ல வந்த தேசீய தியாகிகள் "படிக்கக் கூடாதென்கின்ற விதியானது வேதப்படிப்புக்கே தவிர வேறல்ல" வென்றார்கள். இதற்கு மறுபடியும் மறுப்பு சொன்னபோது "வேதத்தை படிக்காமல் அதன் புரட்டுகளையும், யோக்கியதைகளையும் எப்படி சொல்வது? அதிலும் அப்போது வேதத்தை தவிர புஸ்தகம் தான் ஏது?" என்றெல்லாம் கேட்டபோது ஒன்றும் பதில் இல்லை. வெள்ளைக்காரர்கள் ஆட்சி வந்த பிறகுதான் படிக்கக் கூடாதென்ற சமூகங்கள் படிக்க முன் வந்தது; இப்படி படிக்க முன் வந்ததன் பயனாக தாழ்த்தப்பட்டவர்களாக இதுவரை இருந்தவர்களும் பிற்போக்காகவும், கொடுமைப்பட்டவர்களாகவும், இருந்து வருகிறவர்களும் படிக்க முன் வந்து உத்தியோகத்துக்கு போட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள். இதைப்பார்த்த காங்கரஸ்காரர்கள் இதன் தலையில் கைவைக்க யுக்தி செய்து தந்திரமாக வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள். கல்லாமையைக் கொல்லவோ, அல்லது தற்குறிகளே யில்லாமல் செய்யவோ, இவர்கள் ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதாக காணோம். இப்போதுள்ள மந்திரிகளும் காலேஜ்களை ஒழிக்க வேண்டும், உயர்தர பாடசாலைகளை மூட வேண்டும், 60 பிள்ளைகளுக்கு குறைந்த பள்ளிக்கூடங்களை எடுத்துவிடவேண்டும். கட்டாய இலவசப்படிப்பு வேண்டியதில்லை, கல்வி மான்யம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆகவே இப்போதுள்ள காங்கரஸ் சர்க்கார் எந்த விதத்தில் நம்மை முன்னேற்றுவதற்கு உதவி செய்திருக்கிறது?

ஹிந்தி

இந்த லக்ஷணத்தில் ஹிந்தி திட்டம் எதற்காக? சுத்த தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவி தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு செளகரியமாக இருக்கும்போது அதிலும் படித்த மக்கள் 100க்கு 8-பேரே தான் இருக்கின்ற நிலையில் ஹிந்தியும் வந்தால் என்னவாகும்? ல, ழ, ள எழுத்துக்களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாக தெரியவில்லை. பள்ளிக்கு படிக்க வரும் நம் பிள்ளைகளைப் பார்த்து "உனக்கு படிப்பு வராது வீட்டுக்கு போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந்தால் வண்டியோட்டு, உழுகிறவன் மகனாயிருந்தால் உழு" என்றெல்லாம் சொல்லி விரட்டி விட்டு இப்போது மாத்திரம் இந்த ஹிந்திக் கல்வியை கொண்டு வந்து அதையும் சேர்த்து அதையும் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்? ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற ஹிந்தி உயர்வாயிருந்தாலும் அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4-சப்தமிருக்கிறது. உச்சரிப்பு கடினம். எழுத்துக்கள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷையைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மார்க் வாங்க முடியுமா? இந்த ஹிந்தி படித்து நன்றாய் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. ஒரு பட்டதாரியாக வந்து விடலாம்.

ஆங்கிலம்

இந்த இந்தி திட்டத்தைக் கொண்டு வருகிற சந்தர்ப்பத்திலே காரணம் சொல்லும்போது, "ஆங்கிலமானது அடிமைப் படிப்பு அதனால்தான் அதை ஒழித்து ஹிந்தியை புனருத்தாரணம் செய்கிறதாக" சொல்கிறார்கள். நமது காங்கரஸ்காரர்கள் தோழர் காந்தியார் முதற்கொண்டு மூர்த்தியார் வரை இப்போது ஆங்கிலம் அடிமைப்படிப்பு அடிமைப் படிப்பு என்று ஓலமிடுகிறார்கள். ஆனால் நாம் அந்தமாதிரி கருதி இருக்க முடியுமா? ஓட்டல்காரன் ஆங்கிலத்தில் பேசுகிறான், குச்சுக்காரத் தெருவில்கூட ஆங்கிலமே வழங்கப்படுகிறது. நாம் பார்ப்பனர்களுக்கும் நாம் உத்தியோகத்தில் போட்டி போட நினைக்காத வரை ஆங்கிலம் நல்ல பாஷையாய் இருந்து வந்தது. நாம் எப்போது போட்டிபோட ஆரம்பித்தோமோ அன்றே அவர்கள் ஆங்கிலம் அடிமை பாஷை, நீச பாஷை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தோழர் காந்தியாருக்கு இங்லீஷ் தெரியாமல் இருந்தால் மகாத்மா பட்டமேது? அவர் சொல்லிக் கொண்டிருக்கிற துளசிதாஸ் இராமாயணம் படித்ததால் வந்த கவுரவமா? (சிரிப்பு) தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குத்தான் இவ்வளவு கவுரவமேது? இவ்வளவு சூழ்ச்சிக் குணம் ஏது? இதெல்லாம் இங்கிலீஷ் தெரியாமலிருந்து வந்ததா? இது மற்றவர்கள் தலையில் கையை வைப்பதற்குச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரசாரமா, அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். முஸ்லீம்களும், தமிழர்களும் பங்கு கேட்கிறவரை இங்கிலீஷúக்கு ஒரு அனர்த்தத்தையும் காணோம். இங்கிலீஷைப் பற்றி காங்கரஸ் தலைவர்கள் எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள். செத்த தலைவர்களை விட்டு விட்டாலும், தோழர் மாளவியா இந்த ஆங்கிலக் கல்விக்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு நன்றி செலுத்தியிருக்கிறார். காங்கரஸ் பிரபல தலைவரான தோழர் தாதாபாய், சுரேந்திரநாத் பானர்ஜி, தோழர் சர்.சி. சங்கரன் நாயர் முதலியவர்கள் பல தடவைகளில் "எல்லாத் துறைகளிலும் நாம் முன்னேறியதற்கு காரணம் காருண்யமுள்ள இந்த வெள்ளைக்காரர்களின் கல்வியினால்தான்" என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே உங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில்தான் எந்த ஜில்லாவிலுமில்லாத அளவு பார்ப்பனர்கள் உயர்ந்த படிப்பு படித்து உங்கள் தலையை நன்றாய் அழுத்திவிட்டார்கள். இதற்குக் காரணம் இந்த ஜில்லாவிலிருக்கிற 2 காலேஜúகள் தான். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மணி ஐயர், முத்துஸாமி அய்யர், கிருஷ்ணசாமி அய்யர், சீநீவாச சாஸ்திரி, வெங்கட்ட ராம சாஸ்திரி முதலிய உங்கள் ஜில்லாக்காரர்கள் ஆங்கிலம் படித்த போது அது தேசீய பாஷையாய் இருந்தது. ஆனால் அதே படிப்பை நாம் படிக்கும்போது அது அடிமைப்படிப்பாம்; நீச பாஷையாம். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாமலிருந்ததனாலும், அவர்களுக்கே மைசூர், திருவாங்கூர் போன்ற இடங்களிலும் பணத்தை கொடுத்து கல்வியும் கொடுத்ததாலும், தப்பித்தவறி நம்ம ஆட்கள் படிக்கப் போனால் அவர்களை பார்ப்பனர்கள் "உனக்கு படிப்பு எங்கேயடா வரப்போகிறது. எங்காகிலும் மூட்டைத் தூக்கு போடா" என்பன போன்ற வார்த்தைகளால் தாழ்த்தி வந்ததாலும் நம்முடைய பெரிய செல்வ சீமான்களும் நம் சமூகத்தைப் பற்றிய கவலையேயில்லாமல் பார்ப்பனர்களுக்கே தங்கள் செல்வங்களை தானம் செய்ததாலும் பார்ப்பனர்கள் சமூகம் 100க்கு 100 பேர் படிக்க முடிந்திருக்கிறது. புரோகிதர் மகன் ஐ.சி.எஸ். படிக்க முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் சமூகம் ஐ.சி.எஸ். வர்க்கத்தில் 100க்கு 58 பேர் எப்படி இருக்க முடிந்தது? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு பணக்காரர்? பார்ப்பனரல்லாதார் என்ன அவ்வளவு அன்னக்காவடிகளா? ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தாங்கள் பதவியில் இருந்த போது எல்லா சமூகமும் படிக்கும்படியான வசதி செய்தார்கள். தோழர் நாடிமுத்து இந்தியை எதிர்க்கிறார், ராமலிங்கம் செட்டியார் ஆக்ஷேபிக்கிறார், தோழர் உ.வே. சாமிநாதய்யரும் ஆக்ஷேபிக்கிறார். இதையெல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ராஜகோபாலாச்சாரியார் இந்த ஹிந்தி விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் காட்டுவானேன்? இந்த காலத்தில் புராண நம்பிக்கை, வேத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை முதலியன குறைந்துவிட்டன. ஆகையால் அதைப் புனருத்தாரணம் செய்ய ஹந்தி உதவும் என்று கனம் ராஜகோபாலாச்சாரியார் கருதியே தான் இப்படி செய்கிறார். அல்லது ஹிந்தி பொது பாஷைகென்றால் பொது பாஷை இல்லாத தேசம் எது கெட்டு விட்டது? இந்த ஹிந்திப் பிரசாரத்திற்கு வட நாட்டிலேயிருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள். தோழர் காந்தியாருக்கு தமிழ் நாட்டிலே என்ன தெரியும்? என்ன செய்தார்? நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? (தொடரும்)

குறிப்பு: 16.01.1938 நீடாமங்கலம் சொற்பொழிவு 23.01.1938 தொடர்ச்சி

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 06.02.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: