மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்

காங்கரசுக்காரர்கள் பதவிக்கு வந்தது முதல் மனித சமூகத்துக்கும் அவர்களது முன்னேற்றத்துக்கும் பலவித தொல்லைகள் விளைவித்து முட்டுக்கட்டை போட்டு நாட்டை ஆரம்பகால காட்டுமிராண்டித் தன்மைக்கு கொண்டு போக வேண்டுமென்றே மனப்பூர்வமாய் பாடுபட்டு வருவதை அவ்வப்போது வெளியிட்டு வந்திருக்கிறோம்.

அவற்றுள் மிக்க அவசரமாகவும், அவசியமாகவும், கவனித்துப் பரிகாரம் தேடப்படவேண்டிய விஷயங்கள் மூன்று. அவையாவன 1. சட்டசபையில் வந்தே மாதரப் பாட்டுப்பாடுவது 2. கல்வித்துறையில் ஹிந்தி பாஷையை நம் மக்களுக்குக் கட்டாயமாகப் புகுத்துவது 3. காந்தியாரின் கல்வித் திட்டம்.

இம்மூன்றும் மனித சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் கேடானது என்பதற்காக எடுத்துக்காட்டி எதிர்த்து வந்ததோடு அவ்வெதிர்ப்பை காங்கரஸ் தலைவர்கள் லட்சியம் செய்யாததால் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கேட்டிற்கு உள்ளாகும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காங்கரஸ்காரர்களே கற்றுக் கொடுத்த பாடமாகிய சண்டித்தனத்தையும் காலித்தனத்தையும் கைக் கொண்டாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்து தீர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இதை அறிந்த காங்கரஸ்காரர்கள் "இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நாங்களா பயப்படுபவர்கள்?" என்று வீரப்பிரதாபம் பேசத்தலைப்பட்டார்களே ஒழிய, தங்களுடைய யோக்கியப் பொறுப்பற்றதும் முட்டாள்தனமானதுமான காரியத்தில் இருந்து விலக சம்மதிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் துணிவு

பாதிக்கப்படும் மக்களுக்கு வேறு வழி இல்லாததால் சண்டித்தனத்திலும் முடியாவிட்டால் மற்றதிலும் இறங்குவது என்ற முடிவுக்கு வந்து, அந்தப்படி காரியத்திலும் இறங்கத் துணிந்து அதற்கு ஆக வேண்டிய சகல முஸ்தீபுகளையும் செய்து கொண்டு நாளையும் குறிப்பிட்டு மந்திரிகளுக்கு இறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. அது என்னவெனில்

ஒவ்வொரு தடவையும் அதாவது சட்டசபை துவக்கும் போதெல்லாம் வந்தே மாதரம் என்னும் பாட்டுப் பாடுவது என்கின்ற விஷமத்தனமான காரியத்தை செய்யக் கூடாது என்று முஸ்லீம் தோழர்கள் காங்கரசை பல தடவை கேட்டுக் கொண்டார்கள். இதை காங்கரசார் லட்சியம் செய்யாமல் அடக்குமுறையின் மூலம் இவ்வேண்டுகோளை அடக்கப் பார்த்தார்கள். அதன் மீது மேலால் உள்ள இந்திய காங்கரஸ் தலைவர்கள் காதுக்கு இவ்விஷயத்தை எட்ட வைத்துப் பார்த்தார்கள். காங்கரஸ் தலைவர்கள் எல்லோரும் ஏகோபித்து வந்தே மாதரப் பாட்டைத் தேசியப் பாட்டாகப் பயன்படுத்தக் கூடாது என்று அபிப்பிராயப்பட்டார்கள். அப்படி இருந்தும் சென்னை காங்கரஸ் தலைவர்கள் அதை கை விடாமல் "வந்தே மாதரப் பாட்டு தேசீயப் பாட்டல்ல வென்றால் அதை பிரார்த்தனைப் பாட்டாக பாடுவோம்" என்று பிடிவாதம் செய்து பிரார்த்தனைப் பாட்டாக பாட ஆரம்பித்தார்கள். இதையும் முஸ்லீம்கள் முதலியவர்கள் ஆக்ஷேபித்து "இந்துக்களுடைய பிரார்த்தனைப் பாட்டுக்கு நாங்கள் தலை குனியோம், எழுந்தும் நிற்கோம்" என்று மறுத்தார்கள்.

காங்கரஸ் தந்திரம்

இதற்கு காங்கரஸ்காரர்கள் "ஒவ்வொரு மதஸ்தரும் அவரவர்கள் மத சம்பிரதாயப்படி பிரார்த்தனை பாடலாம், அதற்கு மற்ற வகுப்பாரும் தலை வணங்கலாம்; ஆதலால் எல்லோரும் எல்லா பாட்டிற்கும் எழுந்து நின்று தலைவணங்க வேண்டும்" என்று சொன்னார்கள். இந்துக்கள் தவிர மற்றவர்கள் இதற்கு இணங்கவில்லை. அதற்குப் பிறகும் காங்கரஸ்காரர் அதை மற்றவர்கள் லட்சியம் செய்யாததால் பிடிவாதமாய் பாட ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு மற்றவர்கள் அந்த சமயத்தில் வெளியே போக ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த தலைவர் "பாட ஆரம்பித்த பின்பு யாரும் வெளியில் போகக்கூடாது" என்று கூறியதுடன் சட்டசபை மண்டபவாயில் கதவும் மூட உத்திரவு போட்டார். இது சட்டத்துக்கு விரோதமென்றும் கதவை மூடி உள்ளே இருக்கும் மெம்பரை வெளியே போகாமல் தடுத்தால் அது கிரிமினல் குற்றமாகிவிடும் என்றும் கருதிய தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் "கதவை மூடவேண்டாம் இஷ்டமிருக்கிறவர்கள் இருக்கட்டும், மற்றவர்கள் வெளியே போகட்டும்" என்று தலைவர்க்கு யோசனை சொன்னார். இதன் பிறகு முஸ்லிம் அங்கத்தினர்களும் கிறிஸ்தவ அங்கத்தினரும் வந்தேமாதரப் பாட்டுபாடும்போது உள்ளே போகவும் வெளியே வரவுமான காரியங்கள் செய்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்த காங்கரஸ்காரர்கள் வந்தே மாதரப் பாட்டை சட்டசபை நடவடிக்கை துவக்குவதற்கு முன் பாடி முடித்துவிட்டு பின்னால் காரியம் துவக்கும் மணி அடித்த பிறகு மற்றவர்கள் உள்ளே வரலாம் என்று ஒரு குயுக்தி செய்து தனியாக தாங்கள் மாத்திரம் முதலில் வந்து பாடி விடலாம் என்று கருதினார்கள். சில முஸ்லீம்கள் அதே சமயத்தில் உள்ளே சென்று தாங்களும் தங்கள் இஷ்டப்படி ஏதாவது செய்வது என்றும் சட்டசபை நடவடிக்கை துவக்கப்படாததால் அங்கு அந்த சமயத்தில் யார் என்ன செய்தாலும் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லி வாத்தியத்தோடு பிரார்த்தனை பாடலாம் என்று துணிந்தார்கள். இதனால் மூளைக் குழப்பமடைந்த காங்கரஸ்காரர்கள் முஸ்லிம் முதலியவர்களை தனித்துவிட்டு எப்படியாவது அப்பாட்டை பாடி விட வேறு பல குயுக்த்தி வழி தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சாரியார் ஆணவம்

இந்த சந்தர்ப்பத்தில் கனம் ஆச்சாரியார் அவர்களைச் சந்திக்க நேர்ந்த தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் "வந்தே மாதரப் பாட்டால் முஸ்லிம்கள் மிக்க அதிருப்தி அடைந்திருக்கிறார்களாதலால் தாங்கள் தயவுசெய்து அதை விட்டு விடக் கூடாதா" என்று சிநேக முறையில் தயவாய் கேட்டுக் கொண்டார். அதற்கு ஆச்சாரியார் "பாட்டின் கருத்து எப்படி இருந்தாலும் அது எந்த சமயத்தில் என்ன எண்ணத்தில் யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பாட்டு இந்தியாவில் 30 M காலமாய் தேசியப் பாட்டாக பயன்படுத்தப்பட்டு வந்து விட்டதால் அதை நிறுத்துவது என்பது தேசியத்தையே விட்டு கொடுத்ததாகும். ஆதலால் அதைப் பற்றி மாத்திரம் பேசாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். அதன் பிறகே தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் திக்கு விஜயம் செய்யத் தொடங்கினார். தமிழ்நாடு முழுவதும் வீரகர்ஜனை செய்து போர் முரசடித்து வந்தார். முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தார்கள். சண்டித்தனப் போருக்கு நாள் குறிப்பிட்டார்கள். மேலே சொன்னதுபோல் இறுதிக் கடிதம் அனுப்பினார்கள். அப்புறமேதான் ஆச்சாரியார் சுரம் படிப்படியாய் இறங்க ஆரம்பித்தது. கலகலத்தார்! விடவிடத்தார்!! நடுநடுங்கினார்!!! ஞானோதயம் ஏற்பட்டது, நியாயம் தோன்றிற்று, ஆணவம் அடங்கிற்று. "வந்தே மாதரப் பாடலால் நாட்டில் தப்பபிப்பிராயம் சில வகுப்பாருக்கு ஏற்பட்டிருப்பதாய் தெரிவதால் அந்த தப்பபிப்பிராயம் விலகி மக்கள் ஒன்றுபடும் வரை வந்தே மாதரப் பாட்டை சட்டசபையில் பாடுவதை நிறுத்தி வைக்க வேண்டியது" என்று சட்டசபை கூடிய உடனே எழுந்து சொல்லிவிட்டார்.

தலைவர் முட்டுக்கட்டை

"இந்தப் புத்தி இத்தனை நாள் எங்கே போயிற்று" என்று கேட்டு, இப்போதாவது ஆச்சாரியாருக்கு நல்ல புத்தி வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சொல்ல தோழர் அமீத்கான் எழுந்தார். தலைவர் அதை தடுத்து விட்டார்.

இந்த கதையோடு ஒரு தொல்லை ஒழிந்தது. இதன் பெருமை தோழர்கள் கலிபுல்லா சாயபுக்கும் லால்ஜான் சாயபு அவர்களுக்கும் உரியதாகும். மற்ற இரண்டு முக்கிய தொல்லைகளும் இது போலவே ஒழிய வேண்டியிருக்கிறது. நியாயமான, மரியாதையான, யோக்கியமான முறையில் இத் தொல்லைகளை அதாவது ஹிந்தி, காந்தி கல்வித்திட்டம் என்பவற்றை ஒழித்துக் கொள்ள முடியாது என்பதாகவே காணப்படுகிறது. காங்கரஸ்காரர்கள் வெள்ளையர்களிடம் நடந்து கொண்ட முறையை கையாண்டாலொழிய காங்கரசுக்காரர்களுக்கு நல்ல புத்தியோ நியாய உணர்ச்சியோ தோன்றப் போவதில்லை என்கின்ற முடிவுக்கே நாம் வரவேண்டி இருக்கிறது.

நம் முயற்சிகளை காங்கரஸ்காரர்கள் "சாமி இல்லை என்று சொல்லுகிறவர்கள் முயற்சி" என்றும் "வெள்ளையர்களின் அடிமைகளுடைய முயற்சி" என்றும் "வகுப்புவாதிகள் முயற்சி என்றும்" "மந்திரி பித்து பிடித்தவர்கள் முயற்சி" என்றும் "காங்கரஸ் மந்திரிகளை கவிழ்த்துவிட்டு அப்பதவியில் அமருவதற்காக பாடுபடும் சுயநலப்புலிகள் முயற்சி" என்றும் கூறி பாமரமக்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். இதற்கு காங்கரசின் 75ரூ பிரதிநிதிகளும் விஷமப் பிரசாரம் செய்வார்கள். மற்ற காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகளும் காங்கரஸ் காலாடிக் காலிகளும் விஷமப் பிரசாரம் செய்து தொல்லை விளைவிக்கக் கூடும். ஆனால் இன்றைய காங்கரஸ் ஆட்சி இந் நாட்டில் தமிழ் மக்கள் மனிதர்களாய் இருப்பதா, மலம் தின்னும் நாய், பன்றிகளாக பார்ப்பனர்களின் அடிமைகளாக இருப்பதா என்கின்ற விஷயத்தைப் பொறுத்ததாக இருப்பதால் அதற்கென்றே ஹிந்தி, காந்தி கல்வித் திட்டம் புகுத்த முயற்சிப்பதால் இதை ஒழிக்கும் விஷயத்தில் தமிழ் மக்கள் சற்றும் முன்பின் யோசனையோ தர்க்கமோ இல்லாமல் ஹிந்தியும், காந்தி கல்வித்திட்டமும் ஒழிவதா தமிழ் மக்கள் பூண்டோடு அழிவதா என்கின்ற இரண்டிலொன்றுக்கு தங்கள் உடல் பொருள் ஆவியை ஒப்படைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு

காங்கரஸ்காரர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) முன் யோசனை கிடையாது. அவர்களுக்கு சுயநல ஆத்திரத்தால் தோன்றியதைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பாமர மக்களை ஏமாற்றும் சக்தி தங்களுக்கு உண்டு என்னும் காரணத்தாலும் தமிழ் மக்கள் பலரை தமிழ் மக்களின் பத்திரிகைகள் பலவற்றை கூலிக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்னும் ஆணவத்தாலும் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள். "பட்டால் தான் தெரியும் பார்ப்பானுக்கு" என்கின்ற நமது பாட்டன்மார்களது பழமொழி போல் கடிக்க ஆரம்பித்து விஷம் ஏற ஆரம்பித்த பிறகு தான் திரும்பிப் பார்ப்பார்கள். ஆதலால் தமிழ் மக்களுக்கும் அவர்களது பரம்பரை வீரத்துக்கும் சுயமரியாதைக்கும் ஒரு நல்ல சோதனைகாலம் ஏற்பட்டிருப்பதை பயன்படுத்திக் கொண்டு உலகத்துக்கு வீரத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

பிரித்தாளும் சூழ்ச்சியா?

இந்த சந்தர்பத்தில் வந்தே மாதர பாட்டு நிறுத்துவதற்கு ஏற்பட்ட அவசியத்தைப் பற்றி அதாவது இப்பாட்டை நிறுத்திவிட்டதால் காங்கரஸ்காரர்கள் மக்களை பிரித்து வைக்க ஒரு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டதாக மனப்பால் குடித்து வருகிறார்கள். அதாவது வந்தே மாதரம், ஹிந்தி, காந்தி கல்வித் திட்டம் ஆகியவைகளை எதிர்ப்பதில் தமிழ் நாட்டில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சி செய்வதால் பலம் அதிகரித்து விடுகின்றது என்று கருதி முஸ்லிம்களை எப்படியாவது பிரித்துவிட்டால் இக்கிளர்ச்சி பலமற்றுப் போகும் என்கின்ற சூட்சி மீது முஸ்லிம்களுடைய காரியத்தை மாத்திரம் கவனித்து அவர்களுக்கு இணங்கி வந்தேமாதரப் பாட்டை நிறுத்திவிட்டதாக அதுவும் தற்கால சாந்தியாய் நிறுத்தி இருப்பதாகச் சொல்லி முஸ்லிம்களை பிரிக்கப் பார்க்கிறார்கள். ஒரு சமயம் முஸ்லிம்களும், இதுவே போதும் என்று கருதி இனி மேலால் நடக்க வேண்டிய காரியத்துக்கு அலட்சியமாய் இருந்தாலும் இருந்துவிடலாம். அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை, முஸ்லிம்கள் நலத்துக்கு என்று நாம் ஒரு காரியமும் செய்யவில்லை. ஆதலால் முஸ்லிம்கள் ஹிந்தி, காந்தி கல்வித்திட்டம் ஆகியவற்றின் கிளர்ச்சிக்கு மற்ற தமிழ் மக்களுடன் ஒத்துழைக்காததற்காக குறை கூற இடமில்லை.

தமிழர்கள் நோக்கம்

அந்தப் பாட்டானது இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அஸ்திவாரத்தை பெயர்த்தெறிவதாய் இருப்பதாலும் இந்து முஸ்லிம் கலகம் ஏற்படில் பொது மக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் கேடுண்டாகும் என்றும் கருதியதாலுமே மற்ற தமிழ் மக்களும் அதில் கலந்து கொண்டார்கள். அது போலவே ஹிந்தியும், காந்திகல்வியும் அமுலுக்கு வருமானால் இந்து முஸ்லிம் உள்பட சகல மக்களுடைய முன்னேற்றமும் சுயமரியாதையும் பகுத்தறிவும் அடியோடு பாழ்படுத்தப்பட்டுவிடும் என்று கருதியே அதில் இவ்வளவு தீவிரமாய் இறங்கி இருக்கிறோம். இந்து, முஸ்லிம் உள்பட பொது ஜனங்களுக்கு வந்தே மாதரப் பாட்டை விட ஹிந்தியும், காந்தி கல்வியுமே அதிக தீங்கையும், வேற்றுமையையும் சதா சர்வ காலம் போரும், கலகமும் உண்டாக்கக் கூடியதாகும்.

ஆதலால் காங்கரசின் இந்த சூழ்ச்சியால் அதாவது வந்தே மாதரப் பாட்டை தற்கால சாந்தியாய் நிறுத்தி முஸ்லிம்களை திருப்தி செய்து விட்டதாய் மனப்பால் குடித்தால், ஹிந்தி கிளர்ச்சிக்கு வலுக்குறைந்து விடும் என்று எண்ணுவது முட்டாள்தனமான எண்ணம் என்றே சொல்லுவோம். எதிரிகள் பிரிக்கப்பட்டு கிளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது என்று தோன்றியவுடன் ஏதோ ஒரு தகரப் போகணி சாயபை தங்களோடு சேர்த்துக்கொண்டு "வந்தே மாதரப் பாட்டு தப்பிதமானதல்ல. அதில் முஸ்லிம்களுக்கு விரோதமானதொன்றுமில்லை. ஆதலால் எங்களுக்கு விபரம் விளங்கி விட்டது. எனவே வந்தே மாதரப் பாட்டு "இனிமேல் பாடலாம்" என்று அறிக்கை போட்டு "இந்துக்களும், முஸ்லிம்களும் ராஜியாய் போய் விட்டோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த வந்தே மாதரப் பாட்டை பாடலாம்" என்று ஆச்சாரியார் சொல்ல எவ்வளவு நேரம் செல்லும் என்று கேட்கின்றோம். ஆகையால் இந்த தந்திரத்தினால் அல்லது வேறு காரணத்தினால் ஹிந்தி கிளர்ச்சியை தமிழ் மக்கள் விட்டு விடுவார்கள் என்று யாரும் கருதிவிடக்கூடாது என்பதோடு உண்மை தமிழ் மக்கள் கிளர்ச்சிக்கு தயாராய் இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

காஞ்சி மகாநாடு

இதற்கென்றே சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரத்தில் தோழர்கள் கந்தசாமி முதலியார், ரத்தின முதலியார் முதலியவர்கள் முயற்சியினால் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மகாநாடு இக்கிளர்ச்சியில் முக்கியஸ்த்தம் வகித்தவர்களுக்கு மிக்க தைரியத்தையும், ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அம்மகாநாட்டுக்கு மொத்தத்தில் 10000 பேர்கள் கலந்து கொண்டதும், கொட்டகையில் 3,4 ஆயிரம் பேருக்கே இடமிருந்தும், பாக்கி பேர்கள் ஒலிபரப்பும் கருவியிடம் காலை முதல் இரவு 7லீ மணி வரையும் காத்திருந்ததும் காங்கரஸ் காலிகள் ஒலிபரப்பும் கருவியிடம் நின்றுகொண்டு உள்ளே நடக்கும் காரியத்தையும், பேசும் பேச்சையும் அறியவும் கேட்கவும் முடியாமல் செய்ய எவ்வளவோ வெகு தூரம் "காந்திக்கு ஜே" "வந்தேமாதரம்" "சத்தியமூர்த்திக்கு ஜே" என்று கூப்பாடு போட்டு ஜனங்களை நெருக்கியும் ஜனங்கள் கொஞ்சமும் அசையாமல் நின்று கவனித்ததும் கொட்டகைக்குள் டிக்கட் உள்ளவர்களையே அனுமதித்ததும் 4000 பேர்களுக்கு மேலாகவே ஜனங்கள் கூடியிருந்ததும் இவர்களில் பெண்கள் சுமார் 1000 பேர்களுக்கு மேலாக வந்திருந்ததும் காங்கரஸ் சூழ்ச்சியையும் கொடுமையையும் மக்கள் நன்றாய் உணர்ந்துவிட்டார்கள் என்பதையே காட்டிற்று. அம்மகாநாட்டு தீர்மானங்களும், அத்தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்படுத்தப்பட்ட கமிட்டியும் நாம் உத்தேசித்த காரியம் கண்டிப்பாய் வெற்றி பெறும் என்பதையே வலியுறுத்துவதாய் இருந்தது. காங்கரஸ்காரர்கள் ஜüலை மாதத்தில் ஹிந்தியை பள்ளிக்கூடங்களில் புகுத்த வேண்டியதுதான் பாக்கி. அதன் மீது தமிழ் நாட்டில் நடக்கும் காரியம் என்ன என்பது மிகமிக ஆச்சரியப்படத்தக்கதாகவும், அக்காரியம் நிரந்தரமாய் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் முக்கிய இடம் பெறக் கூடியதாய் இருக்கும் என்பதிலும் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.

காஞ்சி மகாநாடு நடந்த இந்த ஒரு வாரத்திற்குள் பல ஊர்களிலிருந்து பல வாலிபத்தோழர்கள் கமிட்டி இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நடத்துவதாக 100க் கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பியிருப்பதுடன் பொருளுதவி செய்ய பல பெரியோர்கள் தாங்களாகவே முன்வந்தும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆதலால் "தமிழன்னை" (தமிழ் பாஷை) ஒவ்வொரு தமிழ் மகனையும் தன் கடமையைச் செய்ய அழைப்பதை தமிழ் மக்கள் உணர்வார்களாக.

வெற்றி நமதே - நிச்சயமாய் வெற்றி நமதே!

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 06.03.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: