அக்கிரகார சரணாகதி மந்திரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் நெருங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சிறு அளவுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த உடன் அதை ஒடுக்குவதற்கு அவசியமான அடக்குமுறைகளைக் கையாள முதல் மந்திரி தோழர் கனம் ஆச்சாரியார், காரியக் கமிட்டியார் அதிகாரம் பெற்று வந்து விட்டாராம். மற்றும் எப்படிப்பட்ட கிளர்ச்சியாய் இருந்தாலும் அதற்கு வகுப்புவாதம் என்கின்ற பெயரைக் கொடுத்து அடக்கி விட அனுமதி பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதே சாக்கில் தன்னை ஆதரிக்காத பத்திரிக்கைகளையும் தங்களது உண்மையான நடத்தைகளையும் யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் வெளியிடும் பத்திரிகைகளையும் ஒழிப்பதற்கும் அனுமதி பெற்று வந்து விட்டார்களாம்.

தலைவர்கள் யோக்கியதை

இந்த "அனுமதி"களின் யோக்கியதை நாமறியாததல்ல காங்கரஸ் தலைவரின் யோக்கியதையையும், காரியக் கமிட்டியாரின் யோக்கியதையையும், காங்கரசின் சர்வாதிகாரியான காந்தியாரின் யோக்கியதையையும் பற்றி தனித்தனியாகவும், சேர்த்தும் பல தடவை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறோம். கனம் ராஜகோபாலாச்சாரியாரின் யோக்கியதையை அறிந்தவர்கள் காந்தியாரின் யோக்கியதையை தனியாக அறிவதற்கு முயற்சிக்க வேண்டிய அவசியம் இருக்காது. நம் நாட்டு தோழர்கள் சத்தியமூர்த்தி, வரதாச்சாரி, சந்தானம் ஆகியவர்கள் யோக்கியதையை உணர்ந்தவர்களுக்கு தோழர்கள் பண்டித நேரு, போஸ் போன்றவர்களின் யோக்கியதையை அறிய முயற்சிக்க வேண்டியதில்லை. அது போலவே தோழர்கள் முத்துரங்க முதலியார் பக்தவச்சலம் முதலியவர்களை உணர்ந்தவர்கள் தோழர் பஜாஜ் படேல் பிரசாத் முதலியவர்களின் யோக்கியதைகளை உணரக் கவலை யெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுபோலவே மற்றும் தோழர்கள் குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா, உபயதுல்லா, சுப்பிரமணியம், காமராஜ், முத்துச்சாமி முதலிய தோழர்களை உணர்ந்தவர்கள் வடநாட்டு மற்ற காரியக்கமிட்டி மெம்பர்களையும் மற்றத் தலைவர்களையும் பற்றி அறிய நினைக்க வேண்டியதில்லை.

இதில் ஏதாவது வித்தியாசம் இருக்காதா என்றால் மேலே குறிப்பிட்ட நம்நாட்டுத் தோழர்களுக்கு நம்மைப்பற்றியும், நம்நாட்டைப்பற்றியும், இங்கு பார்ப்பனர்கள் நம்மை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் மேலே குறிப்பிட்ட வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களுக்கு நம்மைப்பற்றியும் பார்ப்பனர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றியும் நன்றாய்த் தெரியாது.

தென்னாட்டைப் போன்றதே வடநாடும்

என்றாலும் நம்நாட்டு பார்ப்பனர்களின் நாணயத்திற்கும் யோக்கியப் பொறுப்புக்கும் நடத்தைக்கும் வடநாட்டு பார்ப்பனர்களின் நாணயத்துக்கும், யோக்கியதைக்கும், நடத்தைக்கும் சிறிது கூட வித்தியாசம் காணமுடியாது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

என்றாலும் நம்நாட்டு பார்ப்பனர்களின் குணம் அறிந்த அனேக பார்ப்பனரல்லாத தோழர்கள் வடநாட்டுப் பார்ப்பாரிடம் சற்று யோக்கியதையும், மரியாதையும் வைத்து இருப்பதாகக் காணப்படுவதற்குக் காரணம் வடநாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி நம்நாட்டுப் பார்ப்பனரும் அவர்களது பத்திரிக்கைகளும் செய்யும் பித்தலாட்டப் பிரசாரமும் நம்மவர்களைக் கூலிக்காரராகப் பிடித்து கூலி கொடுத்து கவிபாடும்படி செய்யும் பிரசாரமும் நம்நாட்டார்களைவிட வடநாட்டவர்கள் யோக்கியர்கள் என்றும் மாபெரும் தியாகிகள் என்றும் கருதும்படியாக ஆக்கிவிடுகிறது. இதைத்தவிர வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறுவதற்கில்லை. இப்படிப்பட்டவர்களைக் கொண்டு கூட்டிய கூட்டத்தில் ஆச்சாரியார் அடக்கு முறைக்கு "அனுமதி" பெற்று வந்து விட்டார் என்றால் அது ஏதோ ஒரு மகாபிரமாதமென்றோ அல்லது அந்தப்படி செய்து தீர வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறதென்றோ மலைக்கத்தக்க காரியம் என்றோ நாம் கருதவில்லை.

காரியக் கமிட்டி நாணயம்

தோழர் கனம் ஆச்சாரியார் தோழர் திருச்சி ராஜன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்ததை ஏற்றுக்கொண்ட காரியக் கமிட்டிக்கு எவ்வளவு நீதியும் நேர்மையும் இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அது போலவே சட்டசபை மெம்பர்கள் சர்க்கார் கோட்டைக்குள் போய் பொய்ச் சத்தியம் செய்வதால் பாதகமில்லை என்று உபதேசம் செய்த தோழர் பண்டிதருக்கு எவ்வளவு ஒழுக்கமும் ஞானமும் இருக்கும் என்பதைப் பற்றி நாம் கேட்க வேண்டியதில்லை. அதுபோலவே காங்கரஸ் விஷயத்திலோ சட்டசபை மெம்பர்கள் என்ன செய்ய வேண்டியது என்கின்ற விஷயத்திலேயோ பிரவேசிப்பது என்பது ஒரு சத்தியாக்கிரகியாகிய எனக்கு சிறிதும் நாணயமுடையதாகத் தோன்றவில்லை என்று சொன்ன காந்தியார் அப்படிச் சொன்ன 8 நாட்களுக்குள் சட்டசபை மெம்பர்களுக்கு கட்டளையும் உபதேசமும் விடுத்தாரானால் காந்தியாருக்கு எவ்வளவு யோக்கியதை இருக்கும் என்பது பற்றியும் அறிய யாரும் பிரமாதமாகப் பாடுபட வேண்டியதில்லை. தற்கால காங்கரஸ் தலைவரான தோழர் போஸ் அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு பச்சையாய் காங்கரஸ் மக்களை ஏய்க்கும் ஸ்தாபனமென்றும் காங்கரஸ் கொள்கை எப்படி மக்களை ஏய்ப்பது என்கிற சூழ்ச்சிதான் என்றும் காங்கரஸ் தலைவர்கள் மக்களைக் காட்டிக் கொடுத்து பதவி வேட்டையாடும் சுயநலமிகள் என்றும் கூறியவர் இப்போது தலைவரானவுடன் காங்கரஸ்தான் "கதிமோக்ஷம் அளிக்கவல்லது" என்று சொன்னால் அவரது யோக்கியதையைப் பற்றி நாம் சந்தேகப்பட இடமுண்டா இல்லையா? என்று கேட்கின்றோம். இவர்களுடைய இந்த யோக்கியதைகள் ஒரு சமயம் சொந்த யோக்கியதையாய் இல்லாமல் அரசியல் யோக்கியதையாக இருக்கலாம் என்று சொல்வதானால் அதை நாம் ஒப்புக் கொள்ளத் தடையில்லை. ஆனால் நாமும் இவர்களுடைய அரசியல் யோக்கியதையைப் பற்றியே தான் கூறுகிறோமேயல்லாமல், சொந்த யோக்கியதையைப்பற்றிக் கூற வரவில்லை. அது நமது வேலையும் அல்ல.

ஆச்சாரியாருக்கு சக்தி யிருந்தால்

அப்படிப்பட்ட அரசியல் யோக்கியதை உடையவர்கள் கூட்டத்தில் "அடக்கு முறை கையாள வேண்டியது அவசிய"மென்று தீர்மானம் செய்துவிட்டதினாலேயே அதற்கு அவசியமும், நீதியும் இருக்கிறது என்பதாக ஆகிவிடாது. ஆனால் அடக்குமுறை நடத்த வேண்டும் என்பது கனம் ஆச்சாரியாரின் ஆசை என்பதும், அதையும் செய்து பார்த்து விட ஆச்சாரியார் துணிந்து விட்டார் என்பதும் விளங்கிவிட்டது. மற்றும் அவருக்கு சக்தி இருந்து காரியமும் நடைபெறுவதாய் இருந்தால் ஒரே மூச்சில் தமிழர்களை அனுமார்களாக்கி தாம் ஒரு ராமனாக அவருக்கு ஆசை இருக்கலாம் என்பது தமிழர்கள் பூராவும் சதா சர்வகாலம் ராம பஜணையும், ராமபக்தியும், ராமர் தொண்டும் செய்யும்படி செய்துவிடுவார் என்பதும் தெரிந்து விட்டது. அதற்கு யோக்கியதை இல்லாததால் தான் இப்போது ஹிந்தியை புகுத்தி தமிழர்களை ராம பக்தராக்கப் பார்க்கிறார். அதை எதிர்ப்பவர்களை அடக்கப் பார்க்கிறார். இந்த அடக்குமுறையையும் தமிழ்மக்கள் எதிர்பார்த்துத்தான் ஒரு கை பார்க்கிறது என்கின்ற துணிவின்மீது இத் தொண்டில் இறங்கி இருக்கிறார்களே ஒழிய ஆச்சாரியார் பூச்சாண்டிக்கும் காரியக் கமிட்டியின் மிரட்டலுக்கும் பயந்து ஓடுகிற நிலையில் இங்கு எந்த தமிழனும் இன்று ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் இறங்கவில்லை என்பதை காரியக் கமிட்டியும் ஆச்சாரியாரும் உணர வேண்டுமாய் ஆசைப்படுகிறோம்.

காரியக்கமிட்டியார் பொறுப்புடையவர்களானால்

காரியக்கமிட்டிக்கு ஏதாவது கடுகளவு பொறுப்பாகிலும் கவலையாகிலும் இருக்குமானால் ஆச்சாரியார் அடக்குமுறைக்கு அனுமதி கேட்டவுடன் அப்படிப்பட்ட அனுமதி கேட்டும் காரியம் எதற்கு என்றும் அதற்கு அவசியம் என்ன என்றும் அறிய கவலை எடுத்து விஷயங்களை நன்றாய் உணர்ந்து பிறகு பரிகாரம் தேடி இருப்பார்கள். இந்தியாவில் அதிகாரவர்க்க ஆட்சி இருக்கிற காலத்தில் வகுப்பு துவேஷமும் வகுப்பு கலகமும் ஏற்படும்படியான காரியங்கள் நடக்கலாம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காங்கரஸ்காரர்களுடைய அதுவும் மாகாண ஆட்சி சுதந்திரத்துடன் கூடிய ஆட்சி நடக்கும்போது ஏன் வகுப்பு துவேஷமான காரியம் அவர்கள் எல்லைக்குள் நடக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

வகுப்பு துவேஷத்துக்கு காரணஸ்தர் யார்?

ஆச்சாரியாரைப் பற்றிக்கூட கவனியாமல் காரியக் கமிட்டியார் நடந்து கொள்ளும் யோக்கியதையை பார்த்தாலே கண்டிப்பாக வகுப்பு கலகங்களும் வகுப்பு துவேஷங்களும் ஒவ்வொரு இடங்களிலும் வலிய ஏற்படும்படியாக அவர்களே செய்து வருகிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

உதாரணமாக சென்ற 16ந் தேதி பம்பாயில் கூடிய அதே காரியக் கமிட்டியில் வந்தேமாதரப்பாட்டு விஷயமாயும் கொடி விஷயமாயும் ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதாவது:

"பள்ளிக்கூடங்களில் வந்தே மாதரப் பாட்டு பாடக் கூடாதென்றும் தேசியக் கொடியை பள்ளிக்கூடங்களில் கட்டக் கூடாதென்றும் கமிட்டி முடிவு செய்திருக்கிறது"

என்று 17-ந் தேதி சுதேசமித்திரன், இந்து முதலிய பத்திரிகைகளில் இருக்கிறது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு பிறகு

"இவ் விஷயத்தில் மாகாண கவர்ன்மெண்டுகள் தலையிட வேண்டியதில்லையென்றும் பள்ளிக்கூடங்களினுடையவும் ஸ்தல ஸ்தாபனங்களுடையவும் உள் நிர்வாகத்தில் மாகாண கவர்ன்மெண்டுகள் தலையிடக் கூடாது என்றும் கமிட்டி அபிப்பிராயப்படுகிறது"

என்றும் தீர்மானித்து இருக்கிறார்கள். இதுவும் 17 - தி சு.மி.ல் இருக்கிறது. இதன் கருத்து என்ன என்று கேட்கிறோம்.

பள்ளிக்கூடங்களில் வந்தேமாதரப் பாட்டு பாடக்கூடாது, தேசீயக் கொடி கட்டக்கூடாது ஆனால் பள்ளிக்கூட அதிகாரிகள் ஸ்தல ஸ்தாபனங்கள் பாடினால் கொடி கட்டினால் யாரும் கேட்கக்கூடாது என்றுதான் அர்த்தமா அல்லவா என்று கேட்கிறோம்.

காரியக் கமிட்டித் தீர்மானம்

வந்தே மாதரம் பாடும்போது குழப்பமும், காலித்தனங்களும் செய்யவும் கொடி கட்டும்போது மற்றொருவர் ஏறி தடுத்து பிய்த்து கிழிக்கவும் இத்தீர்மானம் இடம் கொடுக்கிறதா இல்லையா என்று கேட்கிறோம். ஏமாந்த சோணகிரிகள் இருக்கிற இடத்தில் காரியம் நடக்கட்டும் என்கின்ற கேவல உணர்ச்சியினாலேயே இத்தீர்மானம் செய்யப்பட்டிருப்பதாய்க் கருத வேண்டியிருக்கிறது.

இது போலவே கனம் ஆச்சாரியார் தனது சட்டசபை மெஜாரிட்டி பலத்தினால் என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காகவே காரியக்கமிட்டி ஆச்சாரியாருக்கு அடக்குமுறைக்கு உத்திரவு கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. என்றாலும், ஒரு கை பார்க்கும் எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இதில் பிரவேசிக்கிறார்களே ஒழிய அடக்குமுறை வராது என்று கருதி யாரும் பிரவேசிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தவிர சென்னையில் இந்த ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி விஷயமாய் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் அவர்கள் 1- ந் தேதியில் இருந்து உண்ணாவிரதமிருக்கிறார். மற்றும் தோழர் பல்லடம் பொன்னுசாமி அவர்கள் முதல் மந்திரி வீட்டு வாசலில் உண்ணாவிரதமிருக்கப் போனவரை சிலர் நிர்வாகக் கமிட்டி கூட்டம் கூடி திட்டம் தீர்மானிக்கும்வரை பொறுத்திருக்கும்படி நிறுத்தி இருக்கிறார்களாம். எப்படியும் தோழர் பொன்னுசாமி ஜüன் மாதம் முதல் தேதியில் இருந்து முதல் மந்திரி வீட்டின் முன் பட்டினி கிடந்து சாவதாக உறுதி கொண்டு இருக்கிறார் எனத் தெரிகிறது. இனி கல்வி மந்திரி வீட்டின் முன் மற்றொரு தோழர் பட்டினி கிடந்து சாகப் போகிறாராம். பல தோழர்கள் தடுத்தும் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் இணங்காமல் சாகப் போகிறார். இன்னும் பலர் இக்காரியத்தில் பிரவேசிக்கலாம் என்றாலும் எதிர்ப்பு கிளர்ச்சியின் திட்டம் இது மாத்திரமல்ல என்பதோடு அதில் இது முக்கியமானதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எதிர்ப்பு கமிட்டியார் பல திட்டங்கள் வகுப்பார்கள். பல இடங்களில் கிளர்ச்சி நடக்க வேண்டி இருக்கும். ஆதலால் இப்பொழுது முன் வந்துள்ள தொண்டர்கள் போல் இன்னும் பலர் வேண்டியிருக்கிறது.

வெளி நாட்டு நண்பர்கள் பலர் தங்கள் அனுதாபத்தை தெரிவித்து நம்மை ஊக்கி வருகிறார்கள். ஆனாலும் காரியத்திற்கு பொருளாதார உதவியும் வேண்டியிருப்பதால் இந்தியாவுக்கு வெளியிலும் நம் மாகாணத்துக்கு வெளியிலும் உள்ள தமிழ் மக்கள் தமிழ் அபிமானிகள் தகுந்த பொருளுதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம். பொருளுதவி செய்பவர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் காரியதரிசியான தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள் திருச்சி என்ற விலாசத்துக்கு அனுப்பிக் கொடுக்கக் கோருகிறோம். தொண்டர்கள் முன்வர வேண்டுமாய் கோருகிறோம். இதன் அவசியத்தைப் பற்றி முன்பு இரண்டு தடவை எழுதி இருக்கிறோம். இனி மேலால் எழுத செளகரியப்படுமா? அதுவரை நம் பத்திரிக்கைகளை விட்டு வைத்திருப்பார்களா? என்பன சந்தேகமாய் இருக்கிறதால் வெளிநாட்டு உள்நாட்டுத் தோழர்கள் இதை அலட்சியமாய்க் கருதாமல் சற்று மான உணர்ச்சியோடு கருதுமாறு வேண்டுகிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 22.05.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: