ஹிந்திப்போர் ஆரம்பமாகி விட்டது. ஹிந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் ஸி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில், காங்கரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் ஹிந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று, ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் ஸி.டி. நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு தோழர் ஸி.டி. நாயகம் ஏற்கனவே பதிலனுப்பிவிட்டதாகவும் காங்கரஸ் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. தோழர் ஸி.டி. நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கரஸ் தலைவர் சென்னைக்கு வந்து ஹிந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டுமென்றும், இது விஷயமாக ஒரு முடிவு ஏற்படும்வரை ஹிந்தி கட்டாய பாட விஷயமாக எதுவும் செய்யக் கூடாதென்று கனம் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாக காங்கரஸ் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் இது விஷயமாக நமக்கு இன்று வரை ஹிந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியிடமிருந்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. எனவே பிரஸ்தாப விஷயமாக நாம் எதுவும் கூறமுடியவில்லை. தோழர் சுபாஷ்போஸ் மெய்யாகவே தோழர் ஸி.டி. நாயகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தால் சென்னை காங்கரஸ் சர்க்கார் ஹிந்தி எதிர்ப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா என்ற சந்தேகமும் நமக்கு உண்டாகிறது. காங்கரஸ் ராஜ்யத்திலே சர்வ ஜனங்களுக்கும் பூரணமான பிரஜா சுதந்திரங்கள் - இருந்து வரும் என காங்கரஸ்காரர்கள் விளம்பரம் செய்தனர்; செய்கின்றனர். ஆனால் அவர்களது பிரஜா சுதந்தரம் எத்தன்மையது என்பதை சென்னை மெயிலைப் போலவே நம்மாலும் உணர முடியவில்லை. ஒருக்கால் அவர்கள் கூறும் பிரஜா சுதந்தரம் காங்கரஸ்காரருக்கு மட்டும்தான் உண்டா? சமீபத்தில் சென்னையில் கிராம்பு மறியல் நடைபெற்றது. மாகாண காங்கரஸ் தலைவர் ஆதரவிலேயே அந்த மறியல் போர் நடைபெற்றது. விவசாய மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் அந்த மறியல் போரைக் கண்ணுற்றார்.

ஆனால் அந்த மறியல்காரர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே காங்கரஸ் சர்க்கார் பிரஜா சுதந்தரத்துக்கு வழங்கியிருக்கும் பொருள் நமக்கு மர்மமாகவே இருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் அனாவசியமாகவும், அக்கிரமமாகவும் தொடங்கப்பட்டதல்ல. காங்கரஸ் மந்திரிகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளை காங்கரஸ் காரியக் கமிட்டியே நிர்ணயம் செய்யுமெனச் சொல்லப்படுகிறது. பொதுபாஷை ஒரு அகில இந்தியப் பிரச்சினை. சென்னை மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. தேசீய பொது பாஷையைப்பற்றி அகில இந்திய காங்கரஸ் கமிட்டியார் இதுகாறும் முடிவு செய்யவே இல்லை. ஹரிபுரா காங்கரசிலும்கூட தேசீய பொதுப்பாஷை விஷயம் பரிசீலனை செய்யப்படவில்லை. சென்ற பொதுத் தேர்தலுக்கு முன், தேசீய பொது பாஷையைப்பற்றி காங்கரஸ்காரர் ஒரு வார்த்தையாவது பேசவுமில்லை. எனவே திடும் பிரவேசமாய் ஹிந்தியை தமிழ் நாட்டில் புகுத்தப் போவது நேர்மையே அல்ல. இது பல ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டு முடிவுகள் மூலம் சென்னை காங்கரஸ் சர்க்காருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹிந்திக்கு தென்னாட்டில் இருந்து வரும் எதிர்ப்பின் வன்மை காங்கரஸ் சர்க்காருக்குத் தெரியாததுமல்ல. ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாக சென்னை முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியாரும், கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்பராயனும் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு வந்திருப்பதே ஹிந்தி எதிர்ப்பின் வன்மையை சென்னை காங்கரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. ஈரோடு பொதுக் கூட்டத்தில் கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் பேசுகையில் ஹிந்தியில் பரீட்சை நடத்தப் போவதில்லையென்று கூறினார். சென்னை மாகாணம் முழுவதும் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கப் போவதாகக் கூறிய கனம் முதன்மந்திரி 125 பள்ளிக் கூடங்களிலே பரீக்ஷார்த்தமாக ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கப் போவதாகவும் ஹிந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மற்றப் பாடங்களில் போதிய அளவுக்கு மார்க்கு வாங்கியிருந்தால் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றும் இப்பொழுது கூறுகிறார். கல்வி மந்திரி ஹிந்தியில் பரீட்சையே நடத்தப்படமாட்டாது என்று கூறியிருக்கையில் ஹிந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என கனம் முதன்மந்திரியார் கூறுவதின் மர்மம் என்ன? இதனால் ஹிந்தி விஷயமாக பிரதம மந்திரிக்கோ, கல்வி மந்திரிக்கோ திடமான கொள்கை இல்லை என்பது விளங்கவில்லையா? சென்னை மாகாண மாணவ மாணவிகளின் க்ஷேமத்தைப் பாதிக்கக் கூடிய கல்வி விஷயத்தில் இம்மாதிரி வழவழாக் கொள்கையைக் காங்கரஸ் மந்திரிகள் பின்பற்றுவது நேர்மையாகுமா? தென்னாட்டு மக்களில் 100க்கு 93 பேர் எழுத்து வாசனை இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய் மொழிப் பயிற்சியிலேயே சென்னை மாகாணம் இவ்வளவு மோசமாக இருந்து வருகையில் ஹிந்தி கட்டாய பாடத்தைச் சென்னை மாகாண சிறுவர், சிறுமியர் தலையில் ஏற்றுவது என்ன நீதி? சென்னை மாகாணக் கல்வியின்மையைப் போக்க சென்னை பிரதம மந்திரி ஏன் முயற்சி செய்யவில்லை? கல்வியின்மையைப் போக்க வேண்டியதல்லவா பொறுப்புடைய ஒரு மந்திரியின் முதல் வேலை. ஐக்கிய மாகாணத்திலே கல்வியின்மையைப் போக்க 10 - லக்ஷம் ரூபாய் ஒதுக்கிவைத்து வேலைகள் நடைபெற்று வருவதை சென்னைப் பிரதம மந்திரி அறியாரா? கல்வி விஷயத்தில் ஐக்கிய மாகாண மந்திரி ஒரு விதமாகவும், சென்னை மாகாண மந்திரி வேறு விதமாகவும் நடப்பது காங்கரஸ் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறதா? முக்கியமான விஷயங்களில் காங்கரஸ் மாகாணங்கள் எல்லாம் ஒரே மாதிரிக் கொள்கையையே பின்பற்றும் எனக் கூறப்படுவது சென்னை மாகாணத்துக்கு மட்டும் பொருந்தாதா? எப்படிப் பார்த்தாலும் சரி, சென்னை முதல் மந்திரியார் போக்கு ஆதரிக்கக் கூடியதே அல்ல. ஆகவே சென்னை மாகாண தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் முடிவுகளை நிறைவேற்றி வைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே நிர்வாகக் கமிட்டியார் கட்டளைப்படி நடக்க தென்னாட்டார் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 05.06.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: