ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் முஸ்லிம்கள் சம்மந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கரஸ் பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டன. இந்த பத்திரிகைகளுக்கு திடீரென்று இந்த ஞானம் உதயமானது நமக்கு ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை.

ஏனெனில் காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ள ஸ்தாபனம் என்பதும் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்கள் மீது இவ்வளவு ஆதிக்கம் அதாவது பார்ப்பனர்கள் 100 -க்கு 3 பேர்களாயிருந்தும் பாக்கி உள்ள மக்களை விட தாங்கள் பெரிய ஜாதி என்றும், மற்ற ஜாதி மக்கள் மோக்ஷத்திற்கு போவதற்குத் தாங்களே தான் வழிகாட்டிகள் என்றும், தங்கள் மூலமே தான் எவரும் மோஷத்திற்குப் போகமுடியும் என்றும் மற்றும் எவன் எப்படிப்பட்ட பாதகமான பாவகாரியங்களைச் செய்தாலும் தங்கள் மூலமாக மன்னிப்புக் கேட்டு கொண்டால்தான் மன்னிக்கப்படும் என்றும் சொல்லிக் கொண்டு - உலக மக்கள் பாவத்தை அகலச் செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்டு சரீரத்தால் பாடுபடாமல் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாங்கள் தவிர மற்ற மக்களை ஆயிரக்கணக்கான பிரிவுகளாகவும், நூற்றுக்கணக்கான உயர்வு, தாழ்வு படிகளாகவும் பிரித்து வைத்து அவற்றை வெகு பத்திரமாகக் காப்பாற்றி வருவதையே மத தருமமாகக் கொண்டு அதைப் பலப்படுத்தி பரிபாலிப்பதே கடவுள் தன்மையாக பிரசாரம் செய்து வருவதனால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இதை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதால் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் அடிமைகளான பார்ப்பனரல்லாத சில காங்கரஸ்காரர்களுக்கும் சுயமரியாதைக்காரர்கள் "ராட்சதர்"களாக "அசுரர்"களாக "அரக்கர்"களாக காணப்படுகிறார்கள். அதனாலேதான், சுயமரியாதைக்காரர்களோடு, மற்ற யாராவது கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ, ஆதி திராவிடர்களோ சேருகிறார்கள் என்றால் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஆத்திரம் பொங்கி அறிவில்லாமல் மானமில்லாமல் உளறி தங்களின் முட்டாள் தனத்தையும் அயோக்கியத் தனத்தையும் இழி பிறப்பையும் காட்டிக் கொள்ளுவதில் ஆச்சரியமில்லை.

சு.ம. காரர் ஹிந்தியை எதிர்க்கக் காரணம்

சுயமரியாதைக் காரர்களும் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது இன்று உலகறிந்த விஷயம். அதை அவர்கள் மறைக்கவில்லை. அவர்கள் ஹிந்தியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில் ஆங்கிலப் படிப்பினாலும் சுயமரியாதைக்காரர்கள் பிரசாரத்தினாலும் ஆடிப்போய் நெக்குவிட்ட பார்ப்பனீயத்தை மறுபடியும் பலப்படுத்தி நிலைநிறுத்தி பார்ப்பனர்கள் "ராம ராஜ்ய" காலத்து பூதேவர்கள் தன்மையை அடைவதற்காக வருணாச்சிரம முறையை பார்ப்பனரல்லாத சிறுவர்களுக்குள் புகுத்தச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும் மற்றும் பார்ப்பனரல்லாத குழந்தைகள் பொது-ஞானக்- கல்வியில் முன்னேற்றமடையாமல் "சூத்திரத்" தொழிலுக்கே அவர்கள் லாயக்காக வேண்டும் என்பதற்காகவே பார்ப்பன மந்திரியால் கட்டாயமாகப் புகுத்தப்படுகிறது என்றும் உண்மையாய் மனதாலும் வாக்காலும் மெய்யாலும் உணருவதால்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்.

இந்தக் கருத்தை முஸ்லிம் சமூக தலைவராகிய தோழர் ஜனாப் ஜின்னா அவர்களும் சொல்லி இருக்கிறார். அதாவது "காங்கரஸ்காரர்கள் பள்ளிக் கூடங்களில் ஹிந்தியை கட்டாயமாகப் புகுத்துவதானது முஸ்லிம் ஆண் பெண் குழந்தைகளுக்கு ஆரிய மததுவத்தை கட்டாயமாகப் புகுத்துவதாகும்" என்று சொல்லி இருக்கிறார்.

கிறிஸ்தவர், ஆதி திராவிடர் எதிர்க்க வில்லையா?

அதுபோலவே ஆதிதிராவிட சமூகத்தலைவர்களான தோழர்கள் திவான்பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல். சி., மாஜி மந்திரி ராவ்பகதூர் எம்.சி. ராஜா எம்.எல்.ஏ., ராவ்சாகிப், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., முதலியவர்களும் "காங்கரஸ்காரர்கள் ஹிந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதின் இரகசியம் ஆதி திராவிட குழந்தைகளின் கல்வியை தடுப்பதேயாகும் என்றும் கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர்களான தோழர்கள் ஜார்ஜ் ஜோசப், சர்.எ.டி. பன்னீர் செல்வம், ரெவரெண்ட் அருள் தங்கையா, ரத்தினசாமி முதலியவர்களும் அது போலவே கட்டாய ஹிந்தியைக் கண்டித்தும் எதிர்த்துப் பேசியும் அதிருப்தி காட்டியும் இருக்கிறார்கள்.

பார்ப்பனர், மடாதிபதிகள் எதிர்க்கவில்லையா?

மற்றபடி பார்ப்பனரல்லாதார்களிலும் காங்கரசில் இருப்பவர்கள் முதற்கொண்டு மற்றும் ஒவ்வொரு கட்சியில் துறையில் இருப்பவர்களும் ஏகோபித்து எதிர்த்து அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல பார்ப்பன பெரியார்களும் பார்ப்பன பண்டிதர்களும் எதிர்த்துப் பேசித் தங்கள் அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல மடாதிபதிகளும் சன்யாசிகளும் கூட எதிர்க்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் சுயமரியாதைக் காரர்கள் ஆனதால் அவர்களுடன் முஸ்லிம்கள் சேரக்கூடாது என்றும், மற்றவர்கள் சேரக்கூடாது என்றும் சில பார்ப்பனக் கூலிப் பத்திரிக்கைகள் எழுதுவதின் அருத்தம் என்ன? என்பதும் அதற்கு யோக்கியமான காரணங்கள் காட்டாமல் சு.ம. காரர்கள் சாமி இல்லை மதம் இல்லை என்று சொல்லுகிறவர்களாச்சுதே அவர்களுடன் சேரலாமா என்றெல்லாம் அயோக்கியத்தனமான காரணம் சொல்லுவதின் கருத்து என்ன நமக்கு விளங்கவில்லை. இந்துக்களை பல ஜாதியாய்ப் பிரித்து சின்னா பின்னமாக்கியது போல் முஸ்லிம்களையும் இந்துக்களுடன் சேராமல் பிரித்து தனிக் கூட்டமாக ஆக்கி அதிலும் சில கூலிகளைப் பிடித்து கலகமுண்டாக்கி கட்சி பிரித்து சிதறடித்து முஸ்லிம்களையும் ஆதிதிராவிடர்கள் போல் - மிலேச்ச ஜாதியாய் நடத்தலாம் என்கின்ற கருத்து அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நவாப் ஹக்கீம் சாயபு சொன்ன தென்ன?

தமிழ்நாட்டில் கொடை வள்ளலாயும் உண்மையிலேயே நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது இந்து முஸ்லிம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உத்தமரான காலம் சென்ற சொளகார் நவாப் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் தோழர் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் பேசும் கூட்டத்திலேயே தைரியமாய் எழுந்து "ஆச்சாரியாரை ஹிந்தியை கட்டாயபாடமாக வைக்கக் கூடாது" என்று தியாகராய நகர் கூட்டத்தில் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த சேதி காங்கரஸ் - பார்ப்பன பத்திரிக்கைகளிலேயே பிரசுரமாகி இருக்கிறது.

மற்றும் தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக் மாகாண தலைவரான தோழர் ஜமால் மகம்மது சாயபு அவர்கள் திருச்சியில் ஒரு ஆண்டு விழாவில் தலைமை வகித்துப் பேசிய தலைமைப் பிரசங்கத்தில் "ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்க மாட்டார்" என்று முஸ்லிம்களுக்கு உறுதி கூறினார். இவை தவிர இன்று தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து வீர கர்ஜனை புரிந்து வெற்றிக் கொடி நாட்டிவரும் தமிழ் நாட்டு முஸ்லிம் லீக்கின் உண்மையான தலைவரும் செல்வாக்குள்ளவருமான தோழர் பி. கலிபுல்லா சாயபு எம்.ஏ.பி.எல்., எம்.எல்.ஏ., மாஜி மந்திரி அவர்கள் ஹிந்தி எதிர்ப்பைத் தமிழ் நாட்டில் முதல் முதல் ஆரம்பித்தவர் என்பதோடு இன்றும் முஸ்லிம்களைத் தட்டி எழுப்பி ஹிந்தியை இஷ்டப்பாடமாகக் கூட வைக்க இடங் கொடுக்க கூடாது என்று சங்க நாதம் முழக்கி வருவது எவரும் அறியாததல்ல. ஆகவே முஸ்லிம்கள் ஹிந்தியை வெறுக்கிறார்கள் - எதிர்க்கிறார்கள் என்பதற்குக் காங்கரஸ்காரர்கள் இனி யாருடைய அத்தாட்சி வேண்டுமென்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

முஸ்லிம்களுக்குப் புகலிடம் எங்கே?

தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆகட்டும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக யார் இருக்கிறார்கள் என்று சொல்லட்டுமே பார்ப்போம். தோழர்கள் ஜனாப் உபயதுல்லா சாயபு அவர்களும் ராமாயண சாயபு என்று மறுபேர் வழங்கப்படும் ஜனாப் அல்ஹாஜ் தாவூத்ஷா சாயபுமல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள் என்பதோடு, இவர்கள் தவிர வேறு எந்த தெரிந்த முஸ்லிம் இருக்கிறார்கள் என்று கேட்கின்றோம். ஆகவே இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களின் ஏகோபித்த ஹிந்தி எதிர்ப்பைக் காட்டிக்கொள்ள இந்தக் காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் வேறு ஏதாவது ஒரு வழி காட்டிவிட்டு சுயமரியாதைக்காரர்களுடனோ அல்லது வேறு ஏதாவது இந்தி எதிர்ப்புக் கட்சியுடனோ சேராதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருந்தால், அதை ஒரு அளவுக்காவது நாணையமுடையது - யோக்கியமுடையது என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் ஹிந்தி தெய்வீக பாஷை - தேசீய பாஷை - சுயராஜ்யத்துக்கு (ராமராஜ்யத்துக்கு) அவசியமான பாஷை - வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓட்டப்பட்டு விட்டால் பிறகு ஆளப்படவேண்டிய - பாஷை - சர்க்கார் உத்தியோகம் வேண்டுமானால் யோக்கியதாம்சம் காட்டப்படவேண்டிய பாஷை- துளசிதாஸ் ராமாயணம் தெரிந்து கொள்ளக் கூடிய பாஷை - சமஸ்கிருத சாஸ்திரங்கள், புராணங்கள் தெரிந்து கொள்ள சவுகரியமான பாஷை - கல்வி பூர்த்தியாகக் கட்டாயமாக படித்தாக வேண்டிய பாஷை - மெஜாரிட்டி ஓட்டில் வெற்றி பெற்று பதவியேற்று சர்க்கார் ஆட்சியில் இருக்கும் ஒருவன் தான் நினைத்தபடி செய்ய முடிகின்றதா இல்லையா என்பதற்கு அறிகுறியாய் பரீøை பார்க்க வைத்திருக்கும் பாஷை - 10, 11, 12 வயதில் 1, 2, 3, வது பாரத்தில் மாத்திரம் படித்து பாஸ் பண்ணாமல் மார்க்கு வாங்காமல் 13வது வயதில் 4வது பாரத்தில் அடியோடு விட்டுவிட வேண்டிய பாஷை - ஹிந்தி கட்டாயமென்பது பேச்சில் தான் கட்டாயமே ஒழிய காரியத்தில் ஒன்றும் கட்டாயமில்லை என்று மழுப்பும் பாஷை - முதலில் ஹிந்தி என்று சொல்லிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு வலுத்தவுடன் ஹிந்துஸ்தானி என்று பெயர் கொடுத்து ஏமாற்றும் பாஷை - இந்தியா பூராவுக்கும் ஒரு தேசீய பாஷை வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் உருது எழுத்திலும் இந்துக்கள் சமஸ்திருத எழுத்திலும் படிக்கலாம். அதிலும் இரண்டு பேரும் ஒரே புராணக் கதை பாடத்தின் மூலம்தான் படிக்க வேண்டும் என்று சொல்லும் பாஷை. ஆகையால் இப்படிப்பட்ட பாஷையை கட்டாயமாகப் படிக்க வைத்தே தீருவேன், இதனால் என்ன ஆகிவிட்டாலும் சரி என்று மார்தட்ட ஆரம்பித்தால் முஸ்லிம்களுக்கு போக்கிடம் எங்கு என்று கேட்கின்றோம்.

நாஸ்தீக ராமநாதன் மட்டும் இனிப்பானேன்?

சுயமரியாதைக்காரர்கள் கடவுள் கூடாது மதம் கூடாது என்று சொல்லுகிறார்கள் என்று சிலர் சொல்லுவதாலேயே அவர்களுடன் யாரும் சேரக்கூடாதா என்று கேட்கின்றோம். சுயமரியாதைச் சங்கத்தில் காரியதரிசியாயிருந்து சாமிக்கூடாது மதம் கூடாது என்று பிரசாரம் செய்து வந்தவரும் இன்றும் முழு நாஸ்த்திகராயும் மதமற்றவராயும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளுவது மாத்திரமல்லாமல் மனித சமூகத்துக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கூடத் தேவை இல்லை என்கின்ற கொள்கை உடையவராய் இருந்தவரை தங்கள் கட்சியில் சேர்த்து எல்லா சமய சமூகத்தாருக்கும் பொதுவான அரசியலில் மந்திரியாக்கி முழு ஆஸ்த்திகர் என்று சொல்லிக் கொள்ளும் ஆச்சாரியார் தம்மை விளம்பரம் செய்ய விளம்பர அதிகாரம் கொடுத்து தனக்கு முன்னோடும் பிள்ளையாய் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய் முன்னிறுத்தி பின்னின்று வாழ்கின்றாரே இது குற்றமில்லையா என்று கேட்கின்றோம். ஆகவே இப்படிப்பட்டவர்களையெல்லாம் இந்த காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் படம் போட்டு, புகழ்ந்து, கவிபாடி அவரது சேதிகளை பிரசுரிக்கின்றனவே இவைகளுக்கு மானமோ ஈன உணர்ச்சியோ, நற்குடிப்பிறப்போ இருக்கின்றனவா என்று கேட்கின்றோம்.

ஜவஹர்லால் ஆஸ்திகரா?

சாமி இல்லை, சத்தியம் இல்லை என்று சொல்லி கோர்ட்டில் சத்தியம் செய்யக்கூட மறுத்த தோழர் ஜவஹர்லால் அவர்களை ஆஸ்திக உருவரும் "தினம் கடவுளுடன் பேசும் பக்த"ருமான தோழர் காந்தியார் (ஆச்சாரியார் கனம் ராமநாதனைப் பாவிப்பது போல்) பாவித்து பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு அவரை காங்கரசுக்கே தலைவராக்கி தலைமையில் உள்ள காங்கரசில் பல மெளலானாக்கள், மெளல்விகள், பல அஜாத்துக்கள், ஆலி ஜனாப்கள், அல் ஆஜ்ஜúக்கள் தலைவணங்கி பின்பற்றுபவர்களாக இருந்தார்களே இருக்கிறார்களே இதில் ஒன்றும் மானங்கெட்டுப் போகவில்லையா? ஒழுக்கம் கெட்டுப் போகவில்லையா? நாணையம் கெட்டுப் போகவில்லையா? கடவுள் மதபக்தி கெட்டுப் போகவில்லையா என்று கேட்கின்றோம். இன்னும் பல முஸ்லிம் வாலிபர்கள் காங்கரசிலுள்ள பொது உடமை - சமதர்ம நாஸ்திகர்களுக்கு சிஷ்யர்களாக சகாவாக பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களே இவர்களால் அச்சமூகத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்த எச்சிலைப் பத்திரிக்கை எப்போதாவது எடுத்துக் காட்டிற்றா என்று கேட்கின்றோம்.

எனவே இந்த எச்சிலைப் பத்திரிகை முஸ்லிம்களை எவ்வளவு பயித்தியக்காரர்கள் என்று கருதியிருந்தால் இவ்வளவு தைரியமாக முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருக்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிம் தோழரும் யோசித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 26.06.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: