இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி “நமது” சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-1-எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.

மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம் பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3-வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். “இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங்கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடுவார்கள்?” என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக்கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி “நமது” தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் “இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக “தயாள” குணத்தோடு “இழகிய” மனம் கொண்டு பேசியிருக்கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.

மெயில் விளாசல்

அதாவது தோழர் சத்தியமூர்த்தியாரே! நீர் இந்தியை எதிர்க்கிறவர்களுடைய தலைகளையெல்லாம் வெட்டவேண்டும் என்று சொல்லுகிறீர்களே! அப்படியானால் சென்னை கடற்கரையில் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசும்போது 50000 ஐம்பது ஆயிரம் ஜனங்கள் கேட்டுக் கொண்டிருந்ததோடு தோழர் திருச்சி கே.எ.பி. விஸ்வநாதம் அவர்கள் சர்க்காரை கண்டித்து தீர்மானம் பிரேரேபித்ததற்கு அந்த 50000 பேர்களும் ஏகமனதாய் ஓட்டுக்கொடுத்திருக்கிறார்களே! ஆதலால் இந்த 50000 பேர்களுடைய தலைகளையும் தானே வெட்ட வேண்டும்! இது தானா உமது சுயராஜ்யம்? இது தானா காந்தியார் கூறும் “அன்பினால் ஆளப்படும்" “ராஜ்ய பாரம்?” என்று கேட்டிருக்கிறதே தவிர மற்ற எந்த பார்ப்பனப் பத்திரிகையும் எந்த காங்கிரஸ் பத்திரிகையும் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது மாத்திரமல்லாமல் அதைப்பற்றி இதுவரை எந்த காங்கிரஸ் தலைவர் என்பவர்களும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றால் இன்றைய சுயராஜ்யத்தில் தமிழ்மக்களின் தலை - உயிர் எவ்வளவு அற்பமாய் மதிக்கப்படுகின்றது என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

ஆச்சாரியாருக்கு மூர்த்தியார் உதவி

உண்மையில் தோழர் சத்தியமூர்த்திக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் ஒருவருக்கொருவர் தனிமையில் கண்டால் வெட்டிக் கொள்ளும்படியான ஆத்திரமும் குரோதமும் இருந்து வருவது யாவரும் அறிந்ததாகும். அதாவது சத்தியமூர்த்தியாருக்குக் கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை தோழர் ஆச்சாரியார் திடீரென்று திருச்சி டாக்டர் ராஜனுக்குக் கொடுத்துவிட்டதால் அன்று முதல் இன்றுவரை ஆச்சாரியாரை வைத வண்ணமாகவும் அவர்மீது எதிர்ப்புப் பிரசாரம் செய்த வண்ணமாகவும் இருந்து வருகிறார். அப்படிப்பட்டவர் ஆச்சாரியாரின் இந்தி கட்டாய நுழைப்பும் எதிர்ப்பும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற விஷயமாக இருந்து வருகிறது என்று தெரிந்தவுடன் இந்தியை எதிர்ப்பவர்களை ஆச்சாரியார் 6 மாதமும், 3 வருஷமும் தண்டித்தால் போதும் என்று சொன்னால் தோழர் சத்தியமூர்த்தியார் இந்தியை எதிர்ப்பவர்களை ஆயுள் பரியந்தம் தண்டிக்க வேண்டும் அல்லது தலையை வெட்ட வேண்டும் (தூக்கில் போட வேண்டும்) என்று பகிரங்கமாக ஒரு பொது மேடையில் பேசி ஆச்சாரியாருக்கு உதவி செய்கிறார்.

வேறு உதாரணம் வேண்டுமா?

100 க்கு 3 பேராய் உள்ள பார்ப்பனர்கள் மற்ற 100க்கு 97 பேர்களாக உள்ள மக்களை எப்படி அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்று கேட்கிறோம். பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலனுக்காக என்றாலும் தங்கள் சமூக நலனுக்குக் குறைவு வருகிறது என்றாலும் உடனே கன்யாகுமரி முதல் இமயமலை வரை உள்ள சகல மாதிரியான பார்ப்பனரும் ஒன்று சேர்ந்து ஒரே அபிப்பிராயம் கொண்டு விடுகிறார்கள். அவர்களில் யார் எவ்வளவு கொடுமையும் குற்றமும் செய்தாலும் ஒருவரையொருவர் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் ஆதரிக்கிறார்கள். எதிரிகள் மீது ஒரே மூச்சில் விஷமப்பிரசாரம் செய்து ஒழிக்க எக்கருமத்தையும் கையாளுகிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதாராகிய குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழ் மக்களோ இப்படிப்பட்ட சமயத்தில்தான் விபீஷணர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடாக வன்மனமாக தமிழ் மக்களை அடக்கி ஆதிக்கம் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பார்ப்பன ஆட்சிக்கு நமது தோழர் ராமநாதன் அவர்கள் மாட்டு வண்டி ஓட்டப்படவும் எதிரிகளை நல்லவர்களாகவும் நம்மக்களை அயோக்கியர் களாகவும் விளம்பரம் செய்யும் கேவலத் தொழிலுக்கு ஆளாகவும் துணிந்து விட்டார் என்றால் தமிழ் மக்கள் நிலைக்கு வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றோம்.

நமது மகிழ்ச்சி

இவைகளைப் பற்றி எல்லாம் உண்மையிலேயே நாம் சிறிதும் கவலைப்படவில்லை. மிக்க உற்சாகமே கொண்டிருக்கின்றோம். எப்படியெனில், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிவிட்டு வீணே முதுமைக்கும் நோய்க்கும் ஆளாகி நமக்கு இஷ்டமில்லாமல் சாவதைவிட இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சிறிய காரியத்திற்காகவாவது அல்லது இம்மாதிரியான ஒரு சிறிய நன்மை உடைய காரியத்திற்காகவாவது வாழ்ந்து மறைவது அறிவுடைய காரியம் என்பதாக கருதி இருப்பதால் அதை நாம் வெகுநாளாக எதிர்பார்த்த காரியம் கை கூடிற்றென்ற மகிழ்ச்சியிலேயே இருக்கிறோம். அவ்வளவு மாத்திரம்தானா? அல்ல! அல்ல!! இந்நாட்டு உண்மை தமிழ் மக்களுக்கு அவர்களுடைய வீரத்தையும் தன் மானத்தையும் காட்டுவதற்கும் அவர்களது வாழ்வும் செல்வமும் உயிரும் நற்கருமத்துக்குப் பயன்படுத்துவதற்குமான ஒரு கிடைத்தற்கரிய அரும் சமயம் கிடைத்திருக்கிறதென்றும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு கேள்வி

தமிழர்களே! நீங்கள் எத்தனை மேதாவிகளானாலும் அறிவாளி களானாலும் செல்வவான்களானாலும் மற்றும் யாராய் இருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாளில் முடிவெய்தப் போவது திண்ணம். ஆனால் இந்த அறிவையும் மேதாவித் தன்மையையும் செல்வத்தையும் மற்றதையும் இப்பொழுது எதற்கு செலவழிக்கிறீர்கள்? பொய்ப்புகழ் தேடுவதிலும் பின்னால் என்ன ஆகப் போகிறதோ என்றுகூட அறிய முடியாத காரியத்திற்காக பொருளைத் தேடிப் பெருக்கி வைப்பதிலும் பயன்படுத்துகிறீர்கள். இம்முயற்சியில் நீங்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைகிறீர்கள்? எவ்வளவு சங்கடம், கவலை, மன வேதனை, சரீரப் பிரயாசை அடைகிறார்கள்? இவை மாத்திரமா? இந்தக் காரியங்களுக்கு நீங்களே உங்கள் வாழ்வில் மனமார எவ்வளவு பொய் வஞ்சகம் பித்தலாட்டம் பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டியவர்களாக ஆகின்றீர்கள் என்பவற்றையும் நினைத்துப் பாருங்கள். ஆகவே மானம், வீரம், அறிவு பெற்ற மனிதன் தன் வகுப்பை மற்றொரு வஞ்சக அறிவு பெற்ற வகுப்பு சூறையாட அனுமதித்துக் கொண்டிருந்து விட்டு மறைவது அறிவுடைமையா? என்பதை யோசித்து பாருங்கள்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கொடிய நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இதை ஒழிக்க அழிக்க தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டவையல்ல. ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கலாம் என்று சொல்லலாம். ஆனாலும் இன்றுதான் எதிரிகளின் கொடுமைகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி வெளிச்சம் ஏற்பட்டு வருகிறது. மனிதன் மானத்துக்கும் அறிவுக்கும் வாழ வேண்டியவன் என்பது இன்றுதான் மக்களுக்கு விளக்கி வைக்க முடிகிறது. ஆதலால் இச்சமயம் செய்யப்படும் எவ்வித முயற்சியும் பயன்படக் கூடியதாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது தற்காலத் தேவை

இன்று இக்கொடுமையில் இருந்து தப்புவதற்கு தமிழ் மக்களுக்கு வேண்டியது முதலாவது ஒற்றுமையாகும். நிலைகுலைந்த தமிழ் மக்கள் முதலில் நிலை பெற வேண்டும்; ஒன்றுசேர வேண்டும்; சில்லறை அபிப்பிராய பேதங்களை அசூயை பொறாமையை விட்டு உடன் பிறப்பு (சகோதர) உணர்ச்சி கொள்ள வேண்டும். தங்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பாகத்தை இந்த அருமையான முக்கியமான காரியத்துக்கு உதவலாம் என்று கவலை கொள்ள வேண்டும். தங்களிடம் சவுகரியமாக உள்ள செல்வத்தில் சிக்கன உணர்ச்சி இல்லாமல் எவ்வளவு அளிக்கலாம் என்பதை தாராளத் தன்மையோடு யோசித்து உதவ முன்வர வேண்டும். எதிரிகளின் கொடுங்கோன்மையை ஒழிக்க தங்கள் தங்களைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் தியாகத்தை செய்யலாம் என்று நன்றாய் யோசித்து முடிவுக்கு வந்து வெளியில் புறப்பட்டு விட வேண்டும். இத்யாதி காரியங்கள் செய்யாவிட்டால் இந்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்குள் தமிழ்மக்கள் அடைந்துள்ள சுதந்திரம், மானம், சமத்துவம் எல்லாம் நாசமாகி பழய (வருண தர்ம) நிலைக்குப் போய் சேர்ந்துவிடுவோம் என்பதை நன்றாக உணருங்கள்.

இது எவர்மீதும் கொண்ட விரோதமல்ல, குரோதமல்ல, ஹிம்சையல்ல, பலாத்காரமல்ல. நமது உரிமையை நாம் பெற காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். இம்முயற்சியிலிலும் யாரிடமும் துவேஷமும் காட்டுவதில்லை. யாரிடமும் பலாத்கார செய்கைக்கோ ஹிம்சையைத் தரும் செய்கைக்கோ நாம் செல்வதில்லை - செல்லும்படியாகவும் யாரையும் தூண்டவும் வரவில்லை. அன்றியும் அப்படிப்பட்ட காரியம் செய்யக்கூடாதென்றும் வன்மையாகக் கூறுகிறோம்.

பணம்! பணம்!

தமிழ் மக்களே! இப்போது இந்த முயற்சிக்கு அவசரமாக அவசியமாக வேண்டியது பணம் - பணம் - பணமேயாகும். பணம் இல்லாவிட்டால் இம்முயற்சி உடனே செத்து மடிந்து நசுக்கப்பட்டு மறைந்தே போகும். பிறகு என்ன ஆகும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஒரு லட்ச ரூபாய் இருந்தால்தான் நாம் உண்மையில் ஒரு அளவு இக்கொடுமையிலிருந்து மீளலாம். கொடுமை என்றால் விளையாட்டுக் கொடுமையா? தமிழ்நாட்டில் உள்ள தமிழ் வீரர்கள் செல்வர்கள் மேதாவிகள் எல்லோரும் அடங்கி ஒடுங்கி நடை பிணங்களாக நடந்து திரியும்படி செய்யப்பட்டுவிட்ட கொடுமையாகும்.

உதாரணம் காட்டுகிறோம் பாருங்கள். தென்கோடியில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். திருநெல்வேலி ஜில்லாவில் தோழர்கள் மேடை தளவாய் குடும்பம், ஈஸ்வரம் பிள்ளை குடும்பம், சிவ சின்னக் கண்ணு பிள்ளை குடும்பம் முதலிய 20, 30, 50 லட்சம் செல்வமும் பாரிஸ்டர் பி.ஏ.பி.எல். முதலிய கல்வியும் பரம்பரை பெருமையும் மிட்டாவும் உள்ள குடும்பத்தார்கள் இன்று எவ்வளவு அடிமைநிலையில் அஞ்ஞாதவாசமாய் (தங்களைக் காட்டிக் கொள்ள முடியாத) நிலையில் இருக்கிறார்கள். ராமநாதபுரம் ஜில்லாவில் ராமனாதபுரம் ராஜா எங்கே? சிவகங்கை ஜமீன் எங்கே? சேத்தூர் எங்கே? எட்டயபுரம் எங்கே? கோடீஸ்வரர்களான செட்டி மக்கள் எங்கே? பல லக்ஷாதிகார வியாபாரிகளான நாடார் குல பெரியார்களெங்கே? இவர்கள் நிலை இன்று எவ்வளவு அடிமைத்தனமாகவும், பரிதாபகரமானதாகவும் இருக்கிறது பாருங்கள். மற்றும் மதுரை ஜில்லாவில் உத்தமபாளையம் குடும்பம் எங்கே? போடி ஜமீன் எங்கே? பெரியகுளம் எங்கே? சுப்பஞ்செட்டியார் குடும்பம் எங்கே? மற்ற பல மிராசுதார்களும் வியாபாரிகளும் பி.ஏ.பி.எல்., எம்.ஏ.க்களும் எங்கே? விலாசம்கூட அறியக்கூடாத அளவு மறைந்து கிடக்கிறார்களே? அது திருச்சி ஜில்லாவில் காட்டுப் புத்தூர், மீனாம்பள்ளி, உறையூர் ஜமீன்கள் கடவூர் சமஸ்தானங்கள் எங்கே? மற்ற பிரபல மிராசுகள் எங்கே? பத்து லக்ஷக் கணக்கான செல்வம் படைத்த செளகார்கள் எங்கே? தஞ்சை ஜில்லாவில் உடையார் எங்கே? வடபாதி மங்கலம் எங்கே? சீர்காழியார் எங்கே? இவர்கள் போன்ற மற்ற மேதாவிகளும் எங்கே? அது போலவே மற்ற சகல தமிழ் ஜில்லாக்களிலும் மற்றும் ஆந்திர, மலையாள ஜில்லாக்களில் உள்ள மேதாவிகளும், செல்வவான்களும், ஜமீன்களும், ராஜதந்திர நிபுணர்களும் அடக்கப்பட்டு விட்டனரே! இவை எதனால்? இந்த நாடு ஏதாவது பொது உடமை - அல்லது சமதர்ம நாடாக ஆகிவிட்டதா? சர்வாதிகார கொடுங்கோன்மை நாடாக திகழ்கின்றதா? அதாவது “இந்தி படிக்க மாட்டேன்” என்றால் ஒருவர் 6-N கடின காவல் போடச் சொல்லுகிறார். ஒருவர் 3-M போடச் சொல்லுகிறார். ஒருவர் தலையை வெட்டு என்கிறார். தொழிலாளிகள் தெருவில் திண்டாடி சோற்றிற்கு இல்லாமல் சொத்துப் பொத்தென்று மடிந்து விழுகிறார்களே! பசிக்குதே என்றால் ஒருவர் ஜெயில் என்கிறார். தட்டிக்கேட்டால் மற்றவர் சுடு என்கிறார். நாட்டு முன்னேற்றமோ ஆகாயக் கப்பலில் இருந்து கட்டை வண்டிக்கு வந்துவிட்டது. பார்ச்மெண்டு பேப்பரில் இருந்து பன ஓலைக்கு வந்துவிட்டது. சல்லா வேஷ்டியிலிருந்து கோணிரட்டுக்கு வந்துவிட்டது.

ஜாதி வித்தியாசமோ கூட இருந்து சாப்பிட்டதற்கு கட்டிவைத்து உதைத்து மொட்டை அடித்து சாணிப்பால் உத்சவம் நடந்ததாக கூப்பாடுகள் வானத்தைப் பிளக்கின்றது. உத்தியோகமும் அதிகாரமும் ஒரு தனிச் சாதிக்குத்தான் உண்டே ஒழிய மற்றவர்கள் நினைக்கவே தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

சமத்துவமோ சர்வகுண்டி தீர்த்தம்போல் வழங்கும் காப்பிக்கடையில் கூட சமத்துவம் கிடையாது. அங்கும் "பிராமணன், சூத்திரன்" பலகை தொங்கிக் கொண்டு “பஞ்சமரும் பெரும் வியாதிக்காரனும் நாயும் உள்ளே பிரவேசிக்கக்கூடாது” என்கின்ற அறிவிப்புப் பலகை வெளியில் வைக்கப்பட்டும் இருக்கிறது.

சமதர்ம ராஜ்யம் வந்துவிட்டதா?

மற்றும் பணக்கார ராஜ்யம் ஒழிந்து ஏழைகள் ராஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டதோ என்று சொல்லப்படுமானால் அப்படியும் இல்லாமல் காலிகள் குண்டர்கள் இழிகுண இழி பிறப்பு மக்கள் என்று கல்லுப் போல் ருஜúவு செய்யக்கூடிய மக்கள் பலரை சேர்த்துக்கொண்டு அவர்களது ஆதரவில் யோக்கியர்கள், தகுதியுடைய மேதாவிகள், கண்ணியமுள்ள நாணயஸ்தர்கள் துரத்தி அடிக்கப்பட்டுவிட்டார்கள். இவைகளை ஏன் சொல்லுகிறோமென்றால் இந்த நாட்டில் செல்வவான்கள், மேதாவிகள், அறிவாளிகள், ஒடுக்கப்பட்டார்கள் ஒழிக்கப்பட்டார்கள் என்று சொல்லுவதால் சிலர் “சமதர்மம் ஏற்பட்டுவிட்டது” என்று சொல்லி ஏமாற்ற வருவார்களோ என்னவோ என்று கருதி அந்த யோக்கியதையையும் மக்கள் உணரட்டும் என்பதற்கு எடுத்துக் காட்டுகிறோம்.

“இந்தக் காரியங்களை”ப் பற்றி எவ்வளவுதான் உணர்ந்தாலும் நம்நாட்டு செல்வவான்களில் பலருக்கு சுலபத்தில் மான உணர்ச்சி வராது என்பது நமக்கு தெரியும். ஏன் என்றால் இவ்வளவு இழிநிலை தங்களுக்கு ஏற்பட்டும் இன்னமும் பல செல்வவான்கள் எதிரிகளின் காலை “மோக்ஷ”த்திற்கு ஆகவும் பதவி வாழ்வுக்காகவும் நக்கிக் கொண்டு திரிகிறார்கள். நக்க தூது அனுப்புகிறார்கள்.

தமிழ் வக்கீல்களோ அவர்கள் பலருடைய அகராதியில் மானம் மனிதத்தனம் என்கின்ற வார்த்தைகளே கிடையாது என்று சொல்லலாம்.

ஆதலால் சாதாரண நடுநிலையிலுள்ள தமிழ் மக்களே தங்கள் சமூகத்துக்கு நேர்ந்த இந்த ஆபத்திலிருந்து தப்புவிக்க உதவி செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாட்டு தமிழ் வாலிபர்களே அடக்குமுறை ஆயுதத்தை மழுங்கச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இந்நாட்டுத் தமிழ் பெண்மணிகளே இவ்விரு கூட்டத்திற்கும் உற்சாக மூட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

வெளி நாட்டிலுள்ள “இந்து” முஸ்லிம் தமிழ் மக்களே இம்முயற்சிக்கு உதவி அளித்து இந்நாட்டு பணக்காரர்களுக்கு புத்தியும் மானமும் ஏற்படுத்தி தாராளமாய் உதவச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

ஆதலால் மேற்கூறிய ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மக்களும் இது சமயம் தைரியமாய் வெளிவந்து தன் தன் கடமையைச் செய்து தமிழ்நாட்டை உலகத்தில் இல்லாவிட்டாலும் பூகோள படத்திலாவது உருவிருக்கச் செய்வார்களாக.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 03.07.1938 

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: