அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்

தலைவரவர்களே! தோழர்களே!

இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது "இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை" என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல் இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம் ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதானாலும் அன்றைய தினம் அந்த (ஆச்சாரியார்) கூட்டத்தில் பேசியவைகளுக்கு பதில் சொல்லவும் ஹிந்தியை எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் நடுநிலைக்காரர்களும் யாவரும் வந்து கேட்கவும் தங்கள் அபிப்பிராயங்களைக் கொடுக்கவும் போடப்பட்ட பொதுக்கூட்டமாகும்.

போலீசாருக்கு பாராட்டு

நாங்கள் இக்கூட்டத்திற்கு உண்மையிலேயே போலீஸ் உதவியையோ குதிரைப்படை உதவியையோ கோரவில்லை என்றாலும் இது மகா பிரம்மாண்டமான கூட்டமாயிருப்பதால் போலீசார் தங்கள் கடமையைச் செய்ய ஒரு சிலர் இங்கு நிற்பதைப் பார்க்கிறேன். அதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். என்றாலும் சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிப்பத்திரிகைகளும் முதல் மந்திரியார் (ஆச்சாரியார்) கூட்டம் போலீஸ் பந்தோபஸ்தில் நடக்க வேண்டி இருந்ததே என்கின்ற அவமானத்தையும், கேவல நிலையையும் போக்கிக் கொள்ள ஒரு நொண்டிச்சாக்கு தேடிக்கொள்வதற்காக நமது (இந்த) கூட்டமும் "போலீஸ் பந்தோபஸ்தில் நடந்தது" என்று எழுதுவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. போலீஸ் பந்தோபஸ்து இருப்பதை நான் எப்போதும் குற்றங் கூறுவதில்லை. போலீஸ்காரர்கள் நம் உண்மையான காவல்காரர்கள். நம் பணத்தைக் கொண்டே அவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் கனம் ஆச்சாரியாரின் வாழ்க்கைக்கு இன்று அவ்வளவு போலீஸ் காவல் தேவை இருப்பதானது அவரது வாழ்க்கை மிகக் கொடியது என்பதையாவது அல்லது அவர் பொது மக்கள் வெறுப்புக்கும், ஆத்திரத்துக்கும், அதிர்ப்திக்கும் ஆளாகி வாழ்கிறார் என்பதையாவது காட்டுகிறது.

அன்றியும் தன்னைப் பொதுஜன சேவகன் என்றும் ஜனநாயக முறைப்படி தான் பதவிபெற்றவன் என்றும், தனது எல்லா அக்கிரமமும் ஏதேச்சாதிகாரமும் கொண்ட காரியங்களுக்கு அடிக்கடி சமாதானம் சொல்லி ஏய்க்கப் பார்க்கும் அந்த ஒழுக்கம் கெட்ட காரியத்துக்கு இது ஒரு சரியான புத்தி கற்பிப்புமாகும்.

இன்றா நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம்

தோழர்களே! இன்றைய தினம் நமது மாகாணத்தில் உள்ள ஹிந்தி எதிர்ப்புக்கு காரணஸ்தர்களில் நானும் இன்று இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் தோழர் கலீபுல்லா சாயபுவும் முக்கியஸ்தர்கள் என்றும் நாங்கள் ஏதோ வேறு காரணம் கொண்டு இந்த எதிர்ப்புப்பிரசாரம் செய்கின்றோமென்றும் ஆச்சாரியாரும் அவரது சிஷ்யகோடிகளும் பத்திரிகைகளும் கூப்பாடு போட்டு மக்களை ஏய்க்கப் பார்க்கின்றார்கள். நான் ஹிந்தியை 1924, 1925ம் வருஷத்திலேயே எதிர்த்திருக்கிறேன். அதற்கு ஆதாரம் "குடி அரசு" பத்திரிகையில் பார்க்கலாம். அப்போது ஆச்சாரியார் எனக்கு முக்கிய நண்பராகவும் தலைவராகவும் கூட இருந்தார் என்று சொல்லலாம். தோழர் கலீபுல்லா சாயபு அவர்கள் ஆச்சாரியார் மந்திரி ஆவதற்கு முன்பே ஹிந்தி கட்டாயமாகுமுன்பே ஹிந்தி இஷ்டபாடமாகக்கூட இருக்கக் கூடாது என்று பிரசாரம் செய்து பண்டித ஜவஹர்லாலுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவர். இன்றைய ஹிந்தி எதிர்ப்புத் தோழர்களில் மற்றும் அநேகரும் வெகு நாளாகவே தமிழ்நாட்டிற்கு ஹிந்தி ஏன் என்று கண்டித்து வந்திருக்கின்றார்கள்.

இந்தி பார்ப்பன பாஷை

இந்தி என்றால் பார்ப்பன பாஷை என்று தான் அருத்தம். இதற்கு வேறு எந்த அருத்தமும் இல்லை. உங்களுக்கு யாருக்காவது சந்தேகமிருந்தால் வீட்டிற்குப்போய் டிக்ஷனரி (அகராதி)யை எடுத்துப் பாருங்கள். பார்ப்பன பாஷையை பார்ப்பனரல்லாதாருக்கு கட்டாயமாகப் புகுத்தினால் பார்ப்பனரல்லாதாருக்கு வீரமும், மானமும், அறிவும் இருந்தால் ஒப்புக்கொள்ள முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்தி பாஷையைப் பற்றியும் அதன் யோக்கியதையைப்பற்றியும் அதனால் தமிழ்மக்களுக்கு ஏற்படும் கெடுதியைப்பற்றியும் ஆச்சாரியார் இதைக் கட்டாயமாய்ப் புகுத்தும் சூழ்ச்சியைப் பற்றியும் இந்தி எதிர்ப்பு மேடைகளில் வண்டி வண்டியாய் பேசப் பட்டிருக்கின்றன. இதற்கு ஆச்சாரியாரோ மற்ற அவரது கூலிகளோ பத்திரிகைகளோ ஏதாவது சமாதானம் சொன்னார்களா? சொல்லுகிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். நாம் சொல்லும் காரணங்களைக் கூட சென்னை பத்திரிகைகள் பல வெளியிடும் கண்ணியமான குணமில்லாமல் இழிதன்மையில் நடந்து கொள்ளுகின்றன. ஆகவே இந்த ஒரு காரணமே ஹிந்தியை அயோக்கியத்தனமாகவும் அக்கிரமமாகவும் வஞ்சகபுத்தியோடும் நம் குழந்தைகளுக்கு ஒரு கூட்டத்தார் புகுத்தப் பார்க்கிறார்கள் என்பதற்குப் போதாதா என்று கேட்கின்றேன்.

இந்தி ஒழிந்துவிட்டது

தோழர்களே! இந்தி கெட்ட பாஷை - சூழ்ச்சி பாஷை என்பதையும் இந்தியைப் புகுத்தப் பார்ப்பது அக்கிரமமென்றும் நாம் ருஜú செய்து விட்டோம். அந்த ருஜúவை ஆச்சாரியாரும் ஏற்றுக்கொண்டதோடு இந்தியைக் கையும் விட்டுவிட்டார் என்கின்ற அளவில் நாம் வெற்றியும் பெற்றுவிட்டோம். நமது கிளர்ச்சி வெற்றியளித்துவிட்டதென்கின்ற நற்செய்தியை இன்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். எப்படியென்று கேட்பீர்கள். கவனமாய் கேளுங்கள். ஆச்சாரியார் இந்தியைக் கைவிட்டு ஒருமாத காலமாகி விட்டது. அவர் இப்போது எங்கும் இந்தி என்று பேசுவதில்லை. பத்திரிக்கைகளும் இந்தி என்று எழுதக் கூடாதென்பதாக பத்திரிகைகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு வேறு பெயர் கொடுத்து இந்துஸ்தானி என்று பேசுகிறார். அவரை ஆதரிக்கும் பத்திரிகைகளும் அப்படியே எழுதுகின்றன.

எனது கவலை

ஆச்சாரியார் உண்மையில் நம் மக்களை சம்ஸ்கிருதம் படிப்பிக்கச் செய்ய வேண்டும் என்று தான் முதன் முதல் கருதினார். ஆனால் அதற்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள எதிர்ப்பைக் கண்டு பயந்து அதற்கு மறுபெயர் கொடுத்து ஹிந்தி என்றார். அதை எதிர்த்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்தவுடன் அதை விட்டு விட்டு இப்போது இந்துஸ்தானி என்கிறார். இதையும் அதே மூச்சில் எதிர்த்தோமானால் அதையும் கைவிட்டு விடுவார் என்பது உறுதி. சூழ்ச்சிக்காரர்களுக்கு மானமும் வீரமும் நேர்மையும் இருக்காது. அவை இருந்தால் சூழ்ச்சி செய்ய அவசியமும் இருக்காது. ஆதலால் நாம் ஹிந்தி போய்விட்டதே என்று எதிர்ப்பைக் கைவிட்டு விடக்கூடாது. ஹிந்துஸ்தானியை ஆச்சாரியார் கைவிட்டு விட்டதாகச் சொன்னாலும் நம்பி விடக் கூடாது. நமது எதிர்ப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். நம்மை அறியாமல் நமக்கு எவ்வளவோ கேடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் மக்களுக்கு சரியாய் விளங்க வேண்டுமானால் ஆச்சாரியார் இன்னம் ஒன்று இரண்டு வருஷத்துக்காவது பதவியில் இருந்து ஹிந்தியையும் அல்லது ஹிந்துஸ்தானியையும் மாற்றாமல் பிடிவாதமாய் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். வந்தே மாதரப் பாட்டை நிறுத்தி விட்டதுடன் முஸ்லிம்களுக்கு காங்கரசின் முழு சூழ்ச்சியும் தெரியும்படியான அளவுக்கு நடைபெற வேண்டிய பிரசாரம் நின்று விட்டது. முஸ்லிம்களின் கொதிப்பு ஒரு அளவுக்குக் குறைந்து விட்டது. ஆதலால் ஹிந்திச் சூழ்ச்சியை ஆச்சாரியார் நிறுத்தி விட்டால் நம் மக்கள் கிளர்ச்சி அடங்கி விடுமே என்று உண்மையிலேயே நான் கவலைப்பட வேண்டியவனாக இருக்கிறேன்.

பட்டினியில் எனக்கு நம்பிக்கையில்லை

மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை.

அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான் ஆசைப்பட்டதில்லை. தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன் வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது. அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும் விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல் ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.

காந்தியார் விஷமத்தனம்

ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள் கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம் அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.

மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.

இதுதானா ராமராஜ்யம்?

ஹிந்தி கட்டாயத்திலிருந்து மக்களை மீள்விப்பதற்காக முயற்சித்த பலர் இதுவரை 100 பேர்கள் வரை சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். பலர் 3 மாதம் 4 மாதம் கடின காவல் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் மீது 2 வருஷம் 3 வருஷம் தண்டிக்கக்கூடிய சட்டப்படி குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதுதானா ராமராஜ்யம் அல்லது தர்மராஜ்யம் என்று கேட்கின்றேன். இந்த அக்கிரமத்தை சகிக்காமல் பார்ப்பனர்களிலேயே பலர் வெளிப்படையாய் ஆச்சாரியார் மீதும் அவரது ஆட்சி மீதும் குறைகூற வந்துவிட்டார்கள்.

பம்பாய் சோஷியல் ரிபார்மர் பத்திரிகை பார்ப்பனர்களால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பத்திரிகையாகும். அதன் பத்திராதிபரும் இந்திய பிரதான புருஷர்களில் ஒருவராய் கருதச் செய்யப்பட்டவருமான தோழர் நடராஜ அய்யர் அவர்கள் தனது பத்திரிகையில் "ஆச்சாரியார் ஹிந்திக் கிளர்ச்சியை நிறுத்த இவ்வளவு பெரிய அடக்கு முறையை ஆரம்பிக்கும்படியான அளவுக்கு ஆத்திரம்கொண்ட ஒரு காரணமே! இந்திக்கு சரியான எதிர்ப்பு இருக்கிறது என்பதை ருஜúப்படுத்திவிட்டது. இதனால் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் துவேஷத்தைக் கிளப்புகிறார்." ஆதலால் இனி இதை கைவிட்டு விட வேண்டியது தான் என்பது ஆக எழுதியிருக்கிறார்.

விசுவநாத சாஸ்திரியார் கண்டனம்

நமது மாகாண ஐகோர்ட் ஜட்ஜாயிருந்த தோழர் விஸ்வநாத சாஸ்தியார் ஹிந்தி கிளர்ச்சியை அடக்க ஆச்சாரியார் கையாண்ட முறை அக்கிரமமானதென்றும் "ஒருகாலத்தில் பொதுஜன பிரதிநிதிகள் என்கின்ற முறையில் ஆச்சாரியாராலேயே கண்டிக்கப்பட்ட சட்டத்தை தாங்கள் பதவிக்கு வந்த உடன் பொது ஜனங்கள் மீது பிரயோகிப்பது மாமியாள் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று கூறுகிற ஆதிக்கத்தைப் போலிருக்கிறது" என்றும் கண்டித்து "மெயில்" பத்திரிகையில் எழுதி இருக்கிறார். மற்றும் ஆச்சாரியார் ஆட்சியில் ஜெயிலில் செய்யப்படுகிற கொடுமை காதில் கேட்க முடியவில்லை.

பலாத்காரம் வேண்டாம்

இவ்வளவோடு இல்லாமல் காங்கரஸ்காரர்கள் கூலிக்கு சில ஆள்களைப் பிடித்து அனுப்பி ஹிந்தி கிளர்ச்சி பேரால் வேண்டுமென்றே சிறைபிடிக்கச் செய்து ஜெயிலுக்கு அனுப்பி மன்னிப்பும் நல்ல நடவடிக்கை ஜாமீனும் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியில் அழைத்து வருவதன் மூலம் அந்த முயற்சியை கேவலமானதாக செய்யப் பார்க்கிறார்கள். இந்த வேலையில் இரண்டொரு காங்கரசின் பேரால் வயிறுவளர்க்கும் ஆள்கள் மிகத் தீவிரமாய் ஈடுபட்டிருக்கிறார்கள். இது வரை சிறைசென்ற 100 பேர்களில் காங்கரஸ்காரர்களால் அனுப்பப்பட்டவர்களும் 10 பேர்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்ற தொண்டர்களையும் பல விதமாக நிர்ப்பந்தப்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. எந்தக் காரியம் எப்படியிருந்தாலும் எந்தக்காரணத்தைக் கொண்டும் பலாத்காரம் ஏற்படக்கூடாது என்பதும் செய்யக்கூடாது என்பதும் எனது கொள்கை. இதை ஹிந்தி தொண்டர்களுக்கு மிக வற்புறுத்திக்கூறுகிறேன். பலாத்காரம் ஏற்பட்டால் நான் பிரிந்து கொள்ளுவேன் என்பதையும் கூறி விடுகிறேன்.

காந்தீயத்தின் பலன்

ஆச்சாரியார் ஹிந்தியைக் கட்டாய பாடமாகப் புகுத்தி ஆணவமாகப் பேசிக் கொண்டு வர ஆரம்பித்த பின்பு அவருக்குச் செல்லுமிடங்களில் எல்லாம் பகிஷ்காரம் இருந்து வருகிறதை பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பார்க்கிறேன். இவற்றிற்குக் காரணம் தன்னுடைய அடாத செய்கை என்பதை மறைத்துக் கொண்டு யாரோ சில துவேஷக்காரர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றப் பார்ப்பது தன்னையே ஏமாற்றிக் கொள்ளத்தான் பயன்படப் போகிறது. சிற்சில இடங்களில் கூட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களையும் செருப்பு முதலியன வீசி எறியப்பட்டன என்பதையும் நான் பலமாக வெறுக்கிறேன். அது கண்டிக்கப்பட வேண்டியதேயாகும். ஆனால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் காந்தீயம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடமும் அதனால் காங்கரஸ்காரர்கள் மற்ற தலைவர்களுக்கும் மந்திரிகளுக்கும் நடத்தின மரியாதையும் இன்று காங்கரஸ் மந்திரிகள் அடைகிறார்கள். விளையின் பயன் மிக வழிமை உடையதல்லவா? இது இன்னும் எங்கு கொண்டுபோய் விடுமோ என நான் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

நிற்க,

தோழர்களே!

எனக்குப் பிறகு பலர் பேச வேண்டியவர்கள் இருப்பதால் நான் அன்றைய கடற்கரை கூட்டத்தில் தோழர்கள் முத்துரங்க முதலியார், ஆச்சாரியார், சந்தான அய்யங்கார் ஆகியவர்கள் பேசிய பேச்சுக்களுக்கு மாத்திரம் பதில் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.

ஆதரிப்பவர்களுக்குப் பந்தோபஸ்து ஏன்?

தோழர்களே!

1. அன்று தோழர் முத்துரங்க முதலியார் அக்கூட்டம் ஹிந்தி ஆதரிப்பவர்களுக்கு மாத்திரம் கூட்டப்பட்டது என்று சொன்னார். ஆதரிப்பவர்களுக்கு மாத்திரமென்றால் அவர்களுக்கு ஆக ஒரு கூட்டம் கூட்டுவானேன்? அதை கடற்கரையில் கூட்டி அவ்வளவு பந்தோபஸ்து வைப்பானேன்? பத்திரிகைகளில் அக்கூட்டத்தைப் பற்றி விளம்பரம் செய்து திரளான ஜனங்கள் வரும்படி வேண்டுகோள் விடுவானேன்? அவ்வேண்டுகோள்களிலும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களிலும் ஆதரிப்பவர்கள் மாத்திரம் வரலாம் என்று ஏன் போடவில்லை என்பவை களைக் கவனித்தால் ஹிந்தி எதிர்ப்புக்கு ஆச்சாரியாரிடம் சரியான சமாதானம் இல்லை என்பதும் பொதுஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் சுயநலம் கொண்டோ ஏதோச்சாதிகாரம் கொண்டோ ஹிந்தியைப் புகுத்துகிறார்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றேன்.

ஸர்.கே.வி. ரெட்டி எதிர்ப்பு ஆந்திர நாட்டுக்கும் உரியதே

2. சர். கே.வி. ரெட்டியாரும், சர். கிருஷ்ணன் நாயரும், தோழர் கலீபுல்லாவும் தங்கள் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு செய்யாமல் தமிழ்நாட்டில் செய்கிறதால் அதற்கு ஏதோ உள் காரணம் இருப்பதாக தோழர் முதலியார் சொன்னாராம். சர்.கே.வி. ரெட்டி நாயுடு பேசுவதும் எழுதுவதும் எல்லா நாட்டுக்கும் சேர்ந்துதானே ஒழிய ஆந்திரர்களை விலக்கவில்லை. சென்னையே ஆந்திராவின் ஒரு பாகம் கொண்டது என்பது முதலியாருக்குத் தெரியாதா? இதனால் ஆந்திராவில் இக்கிளர்ச்சி இல்லை என்று முதலியார் சொல்லுகிறாரா? ஆந்திராவுக்கு கனம் ரெட்டி நாயுடு போகவில்லை என்றதால் அவர் ஹிந்தி கூடாது என்கின்றதற்கு கூறும் காரணங்கள் செல்லுபடி அற்றதாகி விடுமா? இதிலிருந்தே தோழர் முத்துரங்க முதலியாருக்கு ஹிந்தியை ஆதரிக்கத் தகுதியான காரணம் இல்லை என்பது விளங்குகிறது.

ஸர். கிருஷ்ணன் நாயர் எதிர்ப்பை மலையாளிகள் மறுக்க வில்லையே?

மற்றும் சர். கிருஷ்ணன் நாயர் அவர்கள் ஹிந்தியை எதிர்த்து மலையாள நாட்டிலிருந்துதான் அறிக்கை விட்டார். அதை எந்த மலையாளியும் மறுக்கவில்லை.

தோழர் கலீபுல்லா சாயபு "தனது நாட்டுக்குப் போய் ஏன் பிரசாரம் செய்யவில்லை" என்று முதலியார் சொல்லுவதிலிருந்து தோழர் முதலியாருக்கு தோழர் கலீபுல்லா சாயபு எந்த நாட்டுக்காரர் எந்த நாட்டில் கிளர்ச்சி செய்கிறார் என்பது கூட தெரியவில்லை என்று புலப்படுகிறது.

இழிவான சமாதானம்

மறைமலை அடிகளும் தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்கு காரணம் ஆரியத் துவேஷம் என்று சொன்னாராம். கனம் ஆச்சாரியாரும் ஹிந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழுக்கு ஆரிய பாஷையைப் புகுத்துவதும் அது கூடாதென்றால் ஆரிய துவேஷம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் என்றால் இது மிக இழிவான சமாதானம் என்று தான் சொல்லுவேன். தோழர் மறைமலை அடிகளும் பாரதியாரும் வெகுகாலமாய் ஆட்சேபித்து வந்திருக்கிறார்கள். இதைக்கண்டித்து பல புஸ்தகங்கள் போட்டு இருக்கிறார்கள். அன்றியும் இந்த நாட்டு தமிழ் மக்களுக்கு ஆரிய துவேஷம் இருப்பது ஒரு அதிசயமா என்று கேட்கின்றேன். ஆரிய மதப்படி தமிழ் மக்கள் எவ்வளவு இழிவானவர்களாக கருதப்படக்கூடியவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமூகத்தை ஒரு சமூகம் கீழ் ஜாதியென்றும் தங்களுக்கு (ஆரியருக்கு) பாடுபட்டுப்போட்டு வாழ வேண்டியவர்கள் என்றும் சொல்லப்படுமானால் கருதப்படுமானால் சமூகத்துக்கு சமூகம் துவேஷமில்லாமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். தமிழ்மக்களுக்கு ஆரியபாஷை கட்டாயமாய் கற்றுக் கொடுத்தல் கூட துவேஷப்படாமல் இருக்கமுடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர் மீது பார்ப்பனர்கள் குறை கூறி அவர்களை ஓட்ட வேண்டுமென்று கூறியது குற்றமில்லை, துவேஷமில்லை என்று கற்றுக் கொடுத்த இவர்கள் கொடுமையைப் பார்த்து இவர்கள் செய்கையைக் கண்டிப்பது துவேஷமா என்று கேட்கிறேன். இன்று பார்ப்பனர்கள் நடத்தும் ராஜ்யபாரம் வெள்ளைக்காரர் ராஜ்யபாரத்தைவிட ஆயிரம் மடங்கு கொடுமையானதாகவும், எதேச்சதிகாரமாகவும் இருக்கிறதே இதை நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் நம் கதியா என்று நான் கேட்கிறேன்.

மனதறிந்த பித்தலாட்டம்

மற்றும் ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ் பழக்க வழக்கம் சுதந்திரம் மானம் ஆகியவைகளை உணர்த்தும் தமிழ் வார்த்தைகள் எங்கே? ஒரு தமிழ்மகன் தன் மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் செய்ய வேண்டுமானால் தமிழ்சொல் எங்கே ? தமிழ் கருத்தினால் வாழ்க்கைத்துணை நலம் என்பான். ஆனால் ஆரிய கருத்தில் பேசும்போது கல்யாணம் விவாகம் கன்னியாதானம் என்கிறான். வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. இதற்குத்தகுந்தபடி புரோகிதம் சடங்கு செலவு பார்ப்பான் பிழைக்க வழி ஏற்படுவதல்லாமல் வாழ்க்கைத்துணை என்பதில் சம உரிமையும் கன்னியாதானம் என்பதில் ஆண்டான் அடிமை தன்மையும் புகுத்தப்பட்டு விடுகிறது. இம்மாதிரியே ஆரியக்கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்கு தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது. அப்படியிருக்கும்போது இனியும் ஆரிய பாஷையை கட்டாயமாக்கினால் என்ன ஆகும்? ஆகையால் ஹிந்தியை ஆச்சாரியார் புகுத்துவது மத உணர்ச்சியாலேயே ஒழிய கல்வி உணர்ச்சியால் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 26.06.1938 ஆம் நாள் சென்னை கடற்கரையில் தோழர் கலீபுல்லா சாயபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் (சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்) இந்தி எதிர்ப்புக் குறித்து ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 10.07.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: