உலகில் எந்நாடாவது முன்னேற்றமடைந்திருக்க வேண்டுமானால் அந்நாடு கல்வித்துறையில் முன்னேற்றமடைந்திருக்கும் என்பதை சரித்திரம் நன்கு விளக்கும். எனவே, நமது நாடும் சமுதாயத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் முன்னேற்றமடைய வேண்டுமானால் கல்வித் துறையில் விருத்தியடைந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அந்தப்படி பார்த்தால் நம் நாடு கல்வியில் மிகப் பின்னணியில்தானிருக்கின்றது என்பது விளங்கும். ஏன், இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் மேல்நாடுகளில் படிக்காதவர்களின் தொகையே நம் நாட்டில் படித்தவர்களின் தொகையாக இருக்கிறது என்று சொல்லலாம். இவ்வளவு கேவல நிலையில் கல்வி கற்றவர்களின் தொகை இருப்பதேன் என்பதை ஒவ்வொருவரும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும். சிந்தித்துப் பார்ப்பார்களேயானால், உண்மைக் காரணம் புலப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏன் நாம் இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கக் கோருகிறோம் என்பதை பின்னால் வரும் விவரம் தெளிவுபடுத்தும்.

சென்ற வாரத்தில் இந்திய சர்க்கார் தங்களது 11ஆம் யதாஸ்தை  வெளியிட்டிருக்கின்றனர். இதில் 1932 முதல் 1937 வரை அதாவது 5 வருடத்திய கல்வி நிலையைக் குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அறிக்கையை சர்க்கார் 5 வருடத்திற்கொரு தடவை வெளியிடுவது வழக்கம். அதுபோலவே இந்தத் தடவையும் வெளியிட்டிருக்கிறார்கள். 1937ஆம் வருடத்தோடு முடிவாகிற அறிக்கை 1940 ஏப்ரல் மாதத்தில் வெளிவந்துள்ளது. இவ்வளவு காலதாமதமாய் வெளிவந்ததைக் குறித்து நாம் ஒன்றும் கூறப்போவதில்லை. ஆனால், ஒன்றுமட்டும் சொல்லப் பிரியப்படுகிறோம். அதாவது, இந்தியா முழுமைக்கும் சேர்த்து ஒரு அறிக்கை தயார்செய்து வெளியிடவேண்டியது இருந்ததினால்தான் இவ்வளவு தாமதமாயிற்று. நமது நாட்டை - திராவிடநாட்டைப் பொறுத்தமட்டிலிருந்தால் அறிக்கைகள் வெளிவர இவ்வளவு தாமதமாயிருக்காது என்பதேயாகும். இனி அடுத்தபடியாக அவ்வறிக்கையில் கண்டுள்ள சில புள்ளிவிவரங்களைக் குறித்து சிறிது கவனிப்போம். முதலாவது, கல்விக்காக இந்தியாவில், பிரிட்டிஷ் இந்தியாவில் 1936-37ஆம் வருஷத்தில் 28.05 கோடி ரூபாய் செலவு செய்யபட்டிருக்கிறது. இத்தொகையில் 12.36 கோடி ரூபாய் சர்க்கார் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது; ஸ்தல ஸ்தாபன நிதியிலிருந்து 234 கோடி ரூபாய் செலவாயிருக்கிறது. மாணவர்களிடம் பெற்ற சம்பளம் 7.11 கோடி ரூபாயும், இதர இனங்கள்  மூலமாக கிடைக்கப்பட்ட 4.24 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 5 வருடத்திய செலவைவிட இவ்வைந்து வருடத்திய செலவுத் தொகையில் 87 லட்ச ரூபாய் அதிகரித்திருக்கிறதென்பது அறிக்கையிலிருந்து தெரியக் கிடக்கிறது.

செக்கண்டரி பள்ளிக் கூடங்களுக்காக பிரஸ்தாப வருஷத்தில் ஏறக்குறைய 7-1/2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்பக் கல்விக்காக ஆண் பிள்ளைகளுக்கு 7 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. பெண் பிள்ளைகளுக்காக சற்றேறக்குறைய 2-3/4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, மொத்த செலவில் 28 கோடி ரூபாயின் மேலே கண்ட இனங்களுக்காக மொத்தத்தில் 17 கோடிக்கு மேல் செலவாயிருக்கிறது. மீதமுள்ள தொகை 11 கோடி ரூபாயும் அய்ரோப்பியர் கல்விக்காகவும், கைத்தொழில் கல்வி, இதர கல்விக்காகவும் செலவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

உண்மையிலே எல்லா மக்களும் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும், எல்லோரும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 30.31 கோடி மக்கள் (சமஸ்தானங்கள் நீங்கலாக) உள்ள ஒரு நாட்டில் ஆரம்பக் கல்விக்காக 7 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது கண்டு வருந்தாமலிருக்க மாட்டார்கள். மேல் நாடுகளில் ஆரம்பக் கல்விக்குத்தான் சர்க்கார் செலவு செய்கின்றனரேயொழிய, உயர்தரக் கல்விக்கு செலவு செய்கிறதில்லை. உயர்தரக் கல்வி பொதுமக்களின் நன்கொடையினால்தான் நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் ஆரம்பக்கல்வி அவ்வளவு  அதிகமாக பரவிவருகிறது. நம் நாட்டிலோவெனில் உயர்தரக்கல்வி முதல் ஆரம்பக்கல்வி வரை சர்க்காரே நடத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் கல்வி அபிவிருத்தியடையவில்லை தவிர, ஒரு கண்டத்திற்கு ஒப்பான பெரிய நிலப்பரப்பையும், உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய 5இல் ஒரு பகுதி மக்களையும் கொண்ட பரந்த நாட்டில் ஒரு சர்க்கார் மேற்கண்ட சகலவிதக் கல்வியையும் பரப்ப முயல்வதால்தான் கல்வி முன்னேற்றமடையாதிருக்கிறதென்று சொல்லலாம். அடுத்தபடியாக, நம் நாட்டில்  கல்வி முன்னேற்றமடையாதிருப்பதற்கு கல்வி கற்பிக்கும் முறையும், பாடத்திட்டங்களுமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்று இங்கு கற்பிக்கும் முறையும், பாடத்திட்டங்களுந்தான் மேல்நாடுகளிலும், கீழ்நாடுகளிலும் கையாளப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும், அங்கெல்லாம் 100-க்கு 80,90,92 விகிதம் கல்வி கற்றவர்களிருக்க, இந்நாட்டில் மட்டும் 100-க்கு 7,8 விகிதம் கல்வி கற்றவர்களிருக்கக் காரணம் என்ன என்று யோசிப்பவர்களுக்கு, உண்மையில் அவைகள் அல்லவென்பது நன்கு விளங்கும். ஆகவே, இந்நாட்டில் கல்வி பெருகவேண்டுமானால் கல்வி கற்பதின் நோக்கம் மாற்றப்பட வேண்டும்; பொருளாதார வாழ்வு உயர்வு அடைய வேண்டும்; கல்வி கற்பதின் கால அளவும், செலவின் தொகையும் குறைக்கப்படவேண்டும். உதாரணமாக மேல்நாடுகளில், நம் நாட்டில் செக்கண்டரி கல்லூரிக்கல்வி படிப்பதற்குச் செலவாகும் தொகையையும், காலத்தையும்கொண்டு பட்டம் தரும் கல்வியை ஒரு மாணவன் பெற்றுவிடுவான். உயர்தரக் கல்விப் பொறுப்பை தர்ம சிந்தையுள்ளவர்கள் கையில் ஒப்புவித்துவிட்டு ஆரம்பக் கல்வி பரப்புவதையே தனது முக்கிய கடமையெனக்கொண்டு சர்க்கார் அதற்கென திட்டம் வகுத்து, அந்தந்த கிராமத்தார்களைக் கொண்டு கிராம நிர்வாகத்தை நடத்துவதுபோல், அந்தந்த கிராமத்தார்களிலே சிலருக்கு பயிற்சியளித்து, குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்து கல்வியை பரவச் செய்தால் வெகுவிரைவில் கல்வி கற்றவர்களின் தொகை பெருகும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பப் பள்ளிக் கூடங்களின் தொகை பெருக வேண்டும். ஒரே ஆசிரியர் 4, 5 வகுப்புகளை வைத்துப் பராமரிப்பதை விட்டொழிக்க வேண்டும். அடுத்தபடியாக  பள்ளிக்கூடத்தின் நேரத்தையும் நாட்களையும் அந்தந்த இடத்திற்கும் மக்களின் தொழில் முறைக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். இவைகளில் எதையாவது 21/2 ஆண்டு ஆட்சிபுரிந்த காங்கிரஸ்காரர்கள் செய்தனரா என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்கக் கோருகிறோம். வேண்டாத இந்தி மொழியைக் கொண்டுவந்து கட்டாயப்படுத்தி அதற்கென வருடந்தோறும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய முன்வந்தனரேயல்லாது ஆரம்பக்கல்வி பெருகுவதற்கு யாதொரு திட்டமும் வகுக்கவில்லை என்பதையும் இருந்த பள்ளிக்கூடங்களையும் ஆயிரக்கணக்கில் மூடுவதற்கு உதவி செய்தனர் என்பதையும் பொதுமக்கள் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றோம். எனவே, திராவிட நாட்டில் திராவிடர் கலை, நாகரிகம், திராவிட மொழி வளப்பமடையவேண்டுமானால், திராவிடநாடு தனித்து பிரிந்துதான் ஆக வேண்டும். என்று அது தனித்துப் பிரிகிறதோ அன்று முதல் தான் அதன் கல்வி அபிவிருத்தியடைய முடியும். இதற்காக ஒவ்வொரு திராவிட மகனும் பாடுபட முன் வருவார்களாக.

குடிஅரசு - தலையங்கம் - 21.04.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: