நான் பிரசாரத்திற்குப் புறப்பட்டுப்போகும் வழியில் இங்குள்ள பிரசாரகர்களுக்கு ஏதோ சில திட்டங்களை வகுத்து விட்டுப் போகலா மென்றுதான் வந்தேன். இது ஒருவர் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு பாராட்டு விருந்துக் கூட்டம். அதிலும் சமீபத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுத் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடிய எளிய அறிவுடையவர்களாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தோழர்கள் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் ஒரு நண்பரால் காண்பிக்கப்பட்ட "ஆனந்தவிகடன்" பிரதியை (7.2.37ந் தேதி) புரட்டிப் பார்த்ததில் அதில் சில விஷயங்கள் என் கண்களுக்குப் புலப்பட்டன. ஏதோ அவைகளைப் பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். "ஆனந்தவிகடன்" தனது தலையங்கக் குறிப்பில் 1920ம் வருஷத்தில் இம்மாகாணத்தில் எல்லா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் சேர்ந்து சம்பளம் நாலுகோடி ரூபாய்; 1934-ம் வருஷத்தில் அதே சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் பத்தரைக்கோடி ரூபாயென்றும், குறிப்பிட்டிருப்பதோடு, இவ்வளவு சம்பள உயர்வுக்கும் காரணம் ஜஸ்டிஸ் மந்திரிகளின் நிர்வாகம் தான் என்றும் ஜஸ்டிஸ் கட்சியின் மீது வரி செலுத்தும் விவசாயிகள் வெறுப்புக்கொள்ளும்படியான முறையில் எழுதியிருக்கிறது. வாஸ்தவத்தில் ஜஸ்டிஸ் மந்திரிசபைக்கும், இந்த சம்பளம் உயர்வுக்கும் எள்ளளவு சம்பந்தமுமில்லை. 1920ம் வருஷத்திய ஆரம்பகாலத்தில் தோழர் காந்தியார் ஆரம்பித்த சட்ட மறுப்புப் போர் நமது மாகாணத்தில் சிறிது வியாபகமாயிற்று. பள்ளிக்கூட பகிஷ்காரம், கள்ளுக்கடை பகிஷ்காரம் முதலியவைகளைப் போல உத்தியோக பகிஷ்காரமும் செய்வது என்ற பிரச்னை காந்தியார் திட்டத்தில் இடம் பெறப்போகிறது என்பதை சர்க்கார் கண்டார்கள். அந்த உணர்ச்சி சர்க்காருக்குப் பட்டதுதான் தாமதம். சாதாரணமாக 200ரூபாய் முதல் 400ரூபாய்க்குள் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்கட்கெல்லாம் 400, 500, 600 என்பதாகவும் 1000, 2000ரூ. சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சில உத்தியோகங்கட்கு 3000, 4000ரூ. என்பதாகவும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் சர்க்கார் வலுவில் கழுத்தைப் பிடித்து உத்தியோகஸ்தர்களைத் தள்ளினாலும் வெளியே போகாமல் உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்திலிருந்து ஊழியம் செய்ய வேண்டுமென்கிற கட்டாய எண்ணம் சர்க்காருக்கு ஏற்பட்டதால்தான் இம்மாதிரியான சம்பள உயர்வும், நிலவரி உயர்வும் ஏற்பட்டதற்குக் காரணம். இந்த ஏற்பாட்டிற்கும், ஜஸ்டிஸ் சபைக்கும் கொஞ்சங் கூட சம்மந்தமில்லை. இந்தச் சம்பளங்களைக் குறைக்கும் அதிகாரமும் மந்திரிகள் வசம் கிடையாது. நாளது மாதம் வரப்போகும் புதிய சீர்திருத்தத்தில் தோழர் சக்கரவர்த்தி ராஜாஜி அவர்களே தனது சிஷ்யர்களுடன் எட்டு மந்திரி பதவிகளையும் எட்டிப்பிடித்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உடைய உரக்கச் சத்தம் போட்டாலும், ஒருக்காலும் சம்பளக்குறைவு ஏற்படாது. சர்க்கார் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை நேரடியான நிர்வாகத்தில் வைத்து வருகிறார்கள். நிலத்தீர்வை வரிக்குறைப்பு ஏற்பாடுகளும் அப்படியே தான். மந்திரிகளால் செய்ய முடியாத விஷயம். சம்பள உயர்வுக்குக் காரணம், காங்கிரஸ்காரர்களே உயர்ந்த சம்பளத்தை வாங்கி பக்கா சர்க்கார் ராஜ விஸ்வாசியாக இருந்து, இப்பொழுது பதவி போனவுடன் காங்கரஸ் பக்தராகி சம்பளம் உயர்ந்து விட்டது என்று கூப்பாடு போடுவதும் காங்கிரஸ்காரர்களே. "ஆனந்த விகடன்" என்ற கேலிப் பத்திரிகை பாமர மக்களாகிய நம்மை அரசியல் ஞானமில்லாத முட்டாள்களாகப் பாவித்தே இம்மாதிரி தப்பு வியாக்கியானம் எழுதத் துணிந்திருக்கிறது.

குறிப்பு: 07.02.1937 இல் திருத்துறைப்பூண்டியில் ராவ்பகதூர் என்.ஆர். சாமியப்ப முதலியாருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 14.02.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: